Published:Updated:

வினைகள் நீங்கிட வழிபாடுகள் அவசியமா?

வழிபாடுகளின் மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
வழிபாடுகளின் மகிமைகள்

ஆன்மிகக் கேள்வி - பதில்கள்

வினைகள் நீங்கிட வழிபாடுகள் அவசியமா?

ஆன்மிகக் கேள்வி - பதில்கள்

Published:Updated:
வழிபாடுகளின் மகிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
வழிபாடுகளின் மகிமைகள்

வினைகள் நீங்கிட என்னென்ன வழிபாடுகள் செய்யவேண்டும், முன்வினைகள் மூவிதம் உண்டா, ஒவ்வொரு நட்சத்திரக் காரர்களும் வழிபடவேண்டிய நட்சத்திர தேவதைகள் யார், யார்... இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார், காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீசண்முகசிவாசார்யர்

வினைகள் நீங்கிட 
வழிபாடுகள் அவசியமா?
VSanandhakrishna

? வினைகள் என்றால் என்ன? மூன்றுவித வினைகள் உண்டு என்கிறார்களே, அவை என்னென்ன?

! மனிதன் தன் வாழ்வை நன்றாக அமைத்துக்கொள்ளவே விரும்பு கிறான். எனினும் ஒவ்வொருவரும் பிறந்து, வளர்ந்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதற்கு, அவர்களின் பூர்வஜன்ம வினைகளே காரணமாக இருக்கின்றன. வினைகளை மூவிதமாகச் சொல்லலாம்.

ஸஞ்சிதம்: இதுவரையிலுமான நம்முடைய பிறவிகளில் நாம் சேர்த்துவைத்த வினைகள் ஸஞ்சிதம் எனப்படும்.

ஆகாமி: இனி வரக்கூடிய பிறவிகளில் ஏற்படும் கர்மவினைகள் -ஆகாமி ஆகும்.

ப்ராரப்தம்: இந்தப் பிறவியை எடுத்திருக்கிறோம் அல்லவா அதற்குக் காரணமான கர்மவினைகள் ப்ராரப்தம் ஆகும்.

? பரிகாரங்களால் இந்த வினைகள் நீங்குமா?

இந்த உடலில் உயிர் உள்ளவரையிலும் இந்த ப்ராரப்த கர்ம வினை தொடர்ந்து இருக்கும். ஒரு மாமனிதருக்கு அவரின் 16 வயதிலேயே ஆன்மஞானம் கிடைக்கப் பெற்றாலும், இந்தப் பிறவிக்குரிய காலம் கழியும் வரையிலும் அவர் வாழ்ந்தாக வேண்டும். இதையே `பிராரப்த கர்மா’ என்று கூறுவார்கள். இத்தகைய கர்ம வினைகளை எப்படிக் களைந்து, எல்லாம்வல்ல சிவபெருமானை எப்படி அடைவது என்று அறிந்து செய்வதே `சாந்திகள்’ எனப்படும்.

பொதுவாக பரிகாரங்கள் என்றால் நாம் செய்த பாவத்துக்குக் கழுவாயாக - பிராயச்சித்தமாக செய்யப் படுவது என்று பொருள். நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி எழுவது உண்டு. நாம் நன்மை களையே செய்து வருகிறோம்; ஆனாலும் துன்பப்படுகிறோம். சிலரோ தவறுகளையே செய்துவருகிறார்கள்; அவர்களோ நன்றாக வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன என்று நாம் யோசிப்பது உண்டு. அனைத்துக்கும் முன்வினையே காரணம் என்பார்கள் பெரியோர்கள்.

நமது சனாதன தர்மம் இதுபோன்று கர்மவினைகளைப் பிரித்துத் தெளிவுபடுத்துகிறது. எவரொருவர் இந்தத் தன்மையைத் தெரிந்து கொள்கிறாரோ, அவர் மகிழ்ச்சி-இகழ்ச்சி, இன்பம்-துன்பம் ஆகிய நிலைகளில் சமமாகவே இருப்பார்கள். அறியாதவர்களே மனச் சலனத்துக்கு ஆளாகிறார்கள்.

ஆக, நமக்குக் கிடைத்துள்ள இந்த இந்த மனிதப் பிறவியில், நற்செயல்களைச் செய்து, எளிய வழியில் வழிபாடுகளைச் செய்து, அவற்றின் மூலம் சித்த சுத்தி அடைந்தால் கர்மவினைகள் அழியும். இங்ஙனம் வினைகளை அழித்து எல்லாம்வல்ல ஈசனை அடைய நமக்கு வழிகாட்டியாய் திகழ்வன வையே பரிகாரங்கள்.

பரிகாரம் என்ற சொல் விட்டுவிடுதல், நிராகரித்தல், விடுபடல், அப்புறப்படுத்துதல் என்று பல அர்த்தங்களை உடையது. இங்கு நாம் எதை விட்டுவிடுகிறோம், எதை அப்புறப் படுத்துகிறோம் என்றால்... தினமும் நீராடி உடம்பின் புற அழுக்கை நீக்குவது போன்று, தற்போது செய்யும் வினைகள், பூர்வ ஜன்மங்களில் செய்த வினைகள் போக்கும் கடமையும் நமக்கு உண்டு. ஆக, பரிகாரங்களால் வினைகளை விட்டுவிடுகிறோம்!

வினைகள் நீங்கிட 
வழிபாடுகள் அவசியமா?
nilanewsom

? வினைகளிலிருந்து விடுபட வேண்டும் எனில், பெரியளவில் வழிபாடுகள் செய்ய வேண்டுமா?

அப்படியல்ல. அடிப்படை அறநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வதே ஒருவகையில் நல்லதொரு வழிபாடுதான். ஆம், முதலில் நாம் செய்யவேண்டியது ஒழுக்கமான வாழ்க்கை நெறியைக் கடைப் பிடித்தல் ஆகும். அதிகாலையில் துயிலெழுவது அவசியம். எழுந்ததும் காலைக்கடன்களை நிறைவேற்றி நீராடி, வழிபாடுகளை சூரிய உதயத்தின்போது பூர்த்திசெய்யவேண்டும். நம்மால் இயன்ற பாராயணங்களை அனுதின மும் குடும்பத்தாருடன் செய்வது நலம்.

எப்படி ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ செல்வதற்குக் காலம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று நாம் செய்யும் வழிபாடுகளுக்கும் காலம் முக்கியமானது.

குறிப்பாக சூரிய உதயத்தின்போதும் அஸ்தமனத்தின் போதும் நாம் தூங்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவேதான் சூரிய உதயத்துக்கு முன் எழுந்து வழிபாடு களைத் தொடர்ந்து செய்யவேண்டும். அஸ்தமன நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் (அலுவலகம் செல்பவர்களால் முடியாதுதான்), கடவுளைக் குறித்த தோத்திரங்களைச் சொல்லி வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

வழிபாடு மட்டுமன்றி, பெரியோர்களை மதித்துப் பாதுகாத்தல், குருவைப் போற்றுதல், கடவுளிடம் அளவற்ற பக்திகொள்ளுதல், தூய்மையாக இருத்தல், வீட்டைத் தூய்மையாக வைத்திருத்தல், உண்மையே பேசுதல், நல்லவற்றையே நினைத்தல், நன்மையே செய்தல், இயன்ற தான - தர்மங்களை வழங்குதல், எவருக் கும் தீங்கு நினையாமை, கடுமையாக உழைத்தல், சோம்பல் தவிர்த்தல்... இவை போன்ற அடிப்படை நற்குணங்கள் மூலமாகவே நம் வினைகளை எளிதில் போக்கிக்கொள்ளலாம்.

? இப்பிறவியில் அவசியம் செய்ய வேண்டிய சாந்திகள் என்னென்ன?

நாம் பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நக்ஷத்திரத்தில் செய்யும் சாந்தியாக ஆயுஷ் ஹோமத்தைச் சொல்வார்கள். வருடம்தோறும் இந்த ஹோமத்தைச் செய்யலாம்.

அதேபோல், 54 வயது நிறைவுற்று 55 வயது ஆரம்பிக்கும்போதும் `உக்ர சாந்தி’ செய்யவேண்டும். 60 வயது ஆரம்பிக்கும்போது உக்ர ரத சாந்தியும்; 60 வயது பூர்த்தி யானதும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்வது மரபு.இப்படி ஒவ்வொரு காலகட்டங்களிலும் சாஸ்திரம் வழிகாட்டி யபடி உரிய சாந்திகளைச் செய்துகொள்வதால், நமக்கு நல்ல ஆரோக்கியமும், புத்தி சக்தியும் ஏற்படும். மட்டுமன்றி, இது போன்ற சாந்திகளால் குடும்ப ஒற்றுமையும் சுபிட்சமும் ஏற்படும்.

அவரவர் நக்ஷத்திரப்படி கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகார வழிபாடுகள் ஏதேனும் உண்டா?

உண்டு. ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் உரிய தேவதைகளை நாம் அறிந்து அந்த நக்ஷத்திர தேவதைகளுக்கு உரிய மந்திரங்களையும் திரவியங் களையும் கொண்டு நாம் ஹோமம் செய்தும் பயன் பெறலாம். அல்லது எளிமையான வகையில் அந்தந்த தேவதைகளின் பெயர்களை அனுதினமும் உச்சரித்தும் அருள் பெறலாம்.

வினைகள் நீங்கிட 
வழிபாடுகள் அவசியமா?

? 27 நட்சத்திரத்துக்கும் உரிய அதிதேவதைகள் யார் யார்?

வழக்கத்தில் நாமறிந்த 27 நட்சத்திரங்கள் தவிர, அபிஜித் என்றொரு விசேஷ நட்சத்திரமும் உண்டு. ஆக 28 நட்சத்திரங்களுக்கான அதிதேவதைகளை அறிந்துகொள்வோம்.

1. அச்வினி - அச்வினீ தேவர்கள்

2. பரணி - யமதர்மர்

3. கிருத்திகை- அக்னிதேவர்

4. ரோஹிணி - ப்ரஜாபதி

5. மிருகசீர்ஷம் - சந்திரன்

6. திருவாதிரை - ருத்ரர்

7. புனர்பூசம் - அதிதிதேவீ

8. பூசம் - ப்ருஹஸ்பதி

9. ஆயில்யம் - நாகதேவர்

10. மகம் - பித்ருக்கள்

11. பூரம் - அர்யமா

12. உத்தரம்- பகர்

13. ஹஸ்தம் - ஸவிதா

14. சித்ரை - த்வஷ்டா

15. ஷ்வாதி - வாயு தேவர்

16. விசாகம் - இந்திரன் மற்றும் அக்னி தேவர்

17. அனுஷம் - மித்ரர்

18. கேட்டை - இந்திரன்

19. மூலம் - நிருருதி

20. பூராடம் - ஆபதேவர்கள்

21. உத்தராடம் - விச்வே தேவர்கள்

22. அபிஜித் - ப்ரம்மதேவன்

23. திருவோணம்- விஷ்ணு

24. அவிட்டம் - அஷ்டவசுக்கள்

25. சதயம் - வருணன்

26. பூரட்டாதி - அஜர்

27. உத்தரட்டாதி - அஹிர்புத்னியர்

28. ரேவதி - பூஷா?

- பதில்கள் தொடரும்...