திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

காய்ச்சல்கார அம்மன்! - பிணிக்கு மருந்தாகும் ரசம் சாதம் - சுண்ட வத்தல் நைவேத்தியம்!

காய்ச்சல்கார அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
காய்ச்சல்கார அம்மன்

படம்: முத்துராசு

விஜயநகர ஆட்சிக்குப் பின், மதுரையைச் சுற்றிலும் இருக்கும் பகுதிகள் நவாபுகள், கிழக்கிந்திய கம்பெனி, சேதுபதி மன்னர்கள், பாளையக்காரர்கள் என ஆங்காங்கே யார் யார் கை ஓங்கியிருந்ததோ அவரவர் ஆட்சியின் கீழ் இருந்து வந்தன. அவற்றில் ஒன்று சிவகாசி.

14 மற்றும் 15-ம் நூற்றாண்டில் தென் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் ஆட்சியில் தென்காசியும் சிவகாசியும் பெற்றிருந்த செல்வாக்கு அபாரமானது. குறிப்பாக ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சியின் கீழ் ஒரு முக்கிய வணிகப் பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. வடகாசியைப்போல தென்காசியில் ஒரு பிரமாண்ட ஆலயம் கட்ட வேண்டும் என்று விரும்பிய பாண்டியன், வடகாசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்தான். மதுரையைத் தாண்டி வரும் வழியில்... தற்போது சிவகாசி நகரம் அமைந்துள்ள இடம் அப்போது வில்வ வனமாக இருந்தது. அங்கே ஓர் இரவு தங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்தான் பாண்டியன். மறுநாள் காலையில் சிவலிங்கத்தைச் சுமந்து வந்த மாடு அந்த இடத்தைவிட்டு நகர மறுத்ததால் பயணம் தடைப்பட்டது.

ஈசனின் திருவுளம் அறிந்த பாண்டியன், தென்காசி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிவலிங்கத்தை அங்கேயே (சிவகாசியில்) பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அதுவே தற்போது அருள்மிகு விஸ்வநாத சுவாமி ஆலயத்தின் நடுநாயகமாக விளங்கும் காசிலிங்கம். காசியிலிருந்து வந்த சிவன் கோயில்கொண்ட இடம் என்பதால், ஊரின் பெயர் `சிவன் காசி' என்றாகி, அதுவே பின்னாளில் சிவகாசி என்று மருவியதாம். வடக்கே வடகாசி, தெற்கே தென்காசி, நடுவே சிவகாசி என்பதால் இந்த ஊர் பிரபலமாகி வளர்ச்சியடைந்தது.

திருமலை நாயக்கர் ஆட்சியில் சிவகாசி ஆலயம் பெரிதாக எழும்பியது. 1736-ல் நாயக்கர் ஆட்சி முடிந்ததும் சிவகாசியும் நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியார் மோதலில் சிக்கித் தவித்தது. அதனால் மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவேயில்லை. இந்த வேளையில்தான் சிவகாசியில் ஏதோ மர்மக்காய்ச்சல் வேகமாகப் பரவி மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

காய்ச்சல்கார அம்மன்
காய்ச்சல்கார அம்மன்

இது தெய்வக் குற்றம் என்று எண்ணியும், காய்ச்சலுக்குக் காரணமான வெம்மையைப் போக்கவும் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலை நாடி வந்து வேண்டினர்; அம்மனுக்கு விதவிதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும் அந்த வேப்பிலைக்காரி, மக்களைக் காக்க மண்ணகம் வர எண்ணினாள். அதன் பொருட்டு அவளே நேரில் வர வேண்டுமா என்ன... தன்னை எப்போதும் அண்டியிருக்கும் பக்தர்கள் வழியாகவும் அவள்தானே பிரசன்னமாகிறாள். அப்படி பஞ்சம் பிழைப்பதற்காக வடக்கிலிருந்து கிளம்பி வந்து சிவகாசியில் வாழ்ந்து வந்த அண்ணன், தங்கை வழியாக மக்களைக் காக்க எண்ணினாள். தன்னலமில்லாத அந்த இரு குழந்தைகளின் தியாகத்தையும் பக்தியையும் சகலருக்கும் காட்ட விரும்பினாள் பஞ்சம் பிழைக்க வந்த அந்த அண்ணன், தங்கையின் பெயரோ, ஊரோ யாருக்கும் தெரியவில்லை. சிறு வயதிலேயே சிவகாசிக்கு வந்த அவர்கள் கடுமையான உழைப்பாளிகள். கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்து தாமும் பசியாறி, தம்மைச் சுற்றியிருப்போரின் பசியையும் ஆற்றி வந்தார்கள். அந்த ஊருக்கு வந்தபோது அவர்கள் முதலில் வணங்கிய காளியம்மனே அவர்களுக்குத் தாயாகவும் குலதேவியாகவும் விளங்கினாள்.

இந்த நிலையில்தான் அந்த பொல்லாத காய்ச்சல் வந்தது. அம்மனும் அவர்களைக் கருவியாக மாற்றினாள். அந்த ஏழைப் பெண்ணின் மீது காளி வந்து இறங்கினாள். ‘நான் காளி... தட்சிணத்து காளி...’ என்று கால் உதைத்து ஆடினாள். ‘என் மக்கள் எல்லாம் தவிக்குதே! என்னை மறந்து போயி தவிக்குதே’ என்று அலறினாள். அண்ணன் புரிந்து கொண்டான்.

`அம்மா உன்னை நாங்கள் மறக்கமாட்டோம். அவர்களுக்காக நாங்கள் வணங்குகிறோம். எங்கள் வழியே அவர்களைக் குணப்படுத்து' என்று வேண்டினான். அம்மன் குளிர்ந்தாள். அவர்கள் வழியே காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தொடங்கினாள். எல்லோரையும் தொட்டுத் தொட்டு ஆசீர்வதித்தாள். வேப்பிலை அடித்து வெம்மை நீக்கினாள். ஊருக்கே அந்தப் பெண் அம்மன்போல ஆனாள். அவள் வழியே அம்மனை தரிசித்தார்கள். எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் அவர்களின் தெய்வ நம்பிக்கையும் அக்கறையான கவனிப்பும் மக்களைக் குணப்படுத்தின.

ஒரு விளக்கிட்டு வழிபட்டாலே குளிர்ந்து போகும் அந்த மகமாயி, பக்தர்களுக்குக் குளிர் நிலவாவாள். அப்படியே இந்தக் காளியம்மனும் மகாமாரி என்று மாறினாள். `மாரி' என்றால் மழை என்றும், அருளை மழையாகப் பொழியும் அம்பிகை என்றும் பொருள் சொல்வார்கள் பெரியோர்கள். வேறொரு பொருளும் அந்தப் பெயருக்கு உண்டு. உலகையெல்லாம் மாராசுரன் என்பவன் மர்ம நோயால் பீடித்து ஆட்டுவித்து வருகையில், அவனை சம்ஹாரம் செய்து மக்களை நோயிலிருந்து காத்தாள் அன்னை (மாராஸுர வதம் பூர்வம் மஹாமாரீதி நாமத: ||). அன்றிலிருந்தே மகாமாரி என்றானாள். இதை உத்தர காரணாகமத்தின் 95-வது படலமான ‘மஹாமாரி ஸ்தாபனா விதி படலம்’ கூறுகிறது. மாரியம்மன் சாதாரணர்களின் எளிய தெய்வம் மட்டுமல்லள்; அவள் சகல நோய்களையும் தீர்க்கும் வேதநாயகியும் ஆவாள்.

அப்படியே, அந்தப் பெண்ணிடம் அருளாக வந்து இறங்கி வாக்கு சொல்லத் தொடங்கினாள். அதைக் கேட்க ஊர் மக்கள் கூடினர். ஊர் முழுக்கப் பரவிய தொற்றுநோயை விரட்ட அந்தப் பெண் வழிகாட்டினாள். சுத்தமாக இருக்கவும், வெளியூர் மக்கள் வராமல் இருக்கவும், உள்ளூர் மக்கள் வெளியே செல்லாமல் இருக்கவும் அம்மன் பெயரைச் சொல்லி கோயிலுக்குக் காப்பு கட்டினாள். மஞ்சளும் வேப்பிலையும் தெளித்து ஊரைச் சுத்தமாக்கினாள். கோயிலிலேயே அமர்ந்துகொண்டு தீர்த்தம் கொடுக்கவும், வரும் பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தாள். அவள் கொடுத்த தீர்த்தம் நோயை விரட்டியது. ஒருபக்கம் நோய் தீர்ந்தாலும் மறுபக்கம் பஞ்சம் வாட்டியது.

காய்ச்சல்கார அம்மன்! - பிணிக்கு மருந்தாகும் ரசம் சாதம் - சுண்ட வத்தல் நைவேத்தியம்!

பசி எனும் நோயும் பொல்லாதது என்பதைச் சிறு வயதிலேயே கண்டிருந்த அண்ணனும் தங்கையும் தங்களிடமிருந்த பொருள்களைக் கொண்டு அதைத் தீர்க்க முன்வந்தனர். ஆம், கோயிலுக்கு வந்த அனைவருக்கும் சாதமும் ரசமும் சுண்ட வத்தலும் கொடுத்தனர். மிளகு, சீரகம், பூண்டு உள்ளிட்ட 12 வகை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ரசம் மக்களின் நோய் தீர்த்தது. நோய் வராமல் இருக்கத் தடுப்பு சக்தியாக உதவியது. எல்லாம் காளியம்மன் அருள் என்று தொடர்ந்து சேவை செய்தார்கள். மேலும், `நோய் வந்த பிறகு சிகிச்சைக்கும் தடுப்புக்கும் செலவு செய்வதைவிட, நம் உடலில் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்ள வழி தேட வேண்டும். அதுவே இந்நோய்களிலிருந்து நிரந்தரமாக மீள வழி' என்று அண்ணனும் தங்கையும் ஊரெங்கும் சொன்னார்கள். மக்கள் புரிந்துகொண்டார்கள். சுத்தமாக இருக்கத் தொடங்கினார்கள்.

குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்றால், இவர்கள் ஊருக்கே அளித்தால் குன்றாமல் இருக்குமா என்ன... அவர்களின் செல்வம் முழுக்கத் தீர்ந்தது. அப்போதும் தொடர்ந்து மக்கள் சேவையை அந்த மங்கல நாயகிக்குச் செய்யும் சேவையாகத் தொடர்ந்தனர் இருவரும். தொடர்ந்த உழைப்பு, தங்களைக் கவனித்துக்கொள்ள இயலாத நிலை என எல்லாமும் சேர்ந்து அந்த இருவரையும் மர்மக் காய்ச்சலில் தள்ளின. சுற்றி இருந்தோர் எல்லாம் துடித்தனர். காளியம்மனை வேண்டினர். அந்தப் பெண்ணுக்குள் காளியம்மன் அருள் வந்து பேசினாள்.

`இவர்கள் வந்த வேலை முடிந்தது. கவலை வேண்டாம். எந்த நிலையிலும் உங்களைக் கைவிட மாட்டேன். இவர்கள் மூலம் உங்களுக்குத் துணையாக இருப்பேன்' என்று மக்களுக்கு அருள்வாக்கு சொன்னாள். தொடர்ந்து அண்ணனும் தங்கையும் இப்போது கோயிலாகவிருக்கும் கீரைத் தோட்டத்துக்கு வந்தனர். அங்கு ஓர் இடத்தில் விளக்குத்தூண் வைத்து முப்பிடாரி எனும் அம்மனை வணங்கிவிட்டு, இருவரும் அங்கேயே படுத்த நிலையில் அடங்கினர். அப்போது பத்ரகாளியம்மனிடம், `ஒரு காலத்தில் எங்களை ஆதரித்த இந்த ஊர் மக்களை எந்நாளும் காக்க வேண்டும்' என்று வரம் கேட்டார்கள்.

அதன்படி காளியும் `எந்தக் காய்ச்சல் வந்தாலும் மக்கள் இங்கு வந்து உங்களை வேண்டினால் அதைத் தீர்த்து வைப்பேன். மாசற்ற உங்கள் தியாகம் உங்களை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்று விட்டது. எனவே, என் அம்சமான நீங்கள் இங்கேயே படுத்த நிலையில் சந்நிதி கொண்டு, நாடி வரும் பக்தர்களைக் குணப்படுத்துங்கள். நீங்கள் வழங்கிய ரசம் சாதமும் சுண்ட வத்தலும் இங்கு நைவேத்தியம் ஆகும். அவை, தீராத காய்ச்சலையும் தீர்க்கும்' என்று வரமருளினாள்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் காளியம்மன் அளித்த வாக்கு இன்றும் பலிக்கிறது. தியாக தீபமாக மக்களுக்காக சேவை செய்த அண்ணனும் தங்கையும் இன்றும் காளியை வேண்டிப் படுத்த நிலையில் தவமிருக்கிறார்கள். காய்ச்சல்கார அம்மனாக காளியும் வீற்றிருந்து மக்களைக் காத்து வருகிறாள். எங்கே இருந்தாலும் இந்த சிவகாசி காய்ச்சல்கார அம்மனை ஒரு நிமிடம் மனத்தில் நிறுத்தி வழிபடுங்கள். எந்த வகைத் தொற்றுநோயும் அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.

தற்போது விரிவடைந்து காய்ச்சல்கார அம்மன் கோயிலில் முப்பிடாரியம்மன் (துர்கை), லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் இணைந்த திரிசக்திகளாக மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்கள். ஒரு செவ்வாய்க்கிழமை இவர்களை நினைத்து சாதம், ரசம், சுண்டவத்தல் வைத்துப் படைத்து வணங்கினால், எவ்வித நோயும் நீங்கிவிடும்; சகல நன்மைகளும் உண்டாகும்; அண்ணன் - தங்கை தெய்வங்களின் ஆசியும் காளிதேவியின் திருவருளும் நம் குலத்தைக் காக்கும்.