ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

பாரியின் மலையில் வடுக பைரவர்!

கால பைரவ அஷ்டமி
பிரீமியம் ஸ்டோரி
News
கால பைரவ அஷ்டமி

நவம்பர்-16: கால பைரவ அஷ்டமி

தநு என்று ஒருவன். தொடக்கத்தில் நல்லவனாகத்தான் இருந்தான். பிரம்மாவையும் சிவபெருமானையும் எண்ணி, தவங்கள் பல செய்தான். அதன் பலனாக பலம் பெற்று அந்தகாசுரன் என்று பெயர் பெற்றான். அவ்வளவுதான்... அனைவரையும் கொடுமை செய்ய ஆரம்பித்தான்.

கால பைரவ அஷ்டமி
கால பைரவ அஷ்டமி


அவனால் துன்பத்துக்கு ஆளான முனிவர்களும், தேவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர். அவர்களைக் கருணைப் பார்வை பார்த்த சிவனார், மெள்ளக் குனிந்து தமது நெஞ்சையே நோக்கினார். அங்குகுடிகொண்டிருந்த காலாக்னியானது, அண்ணலின் பார்வையைப் புரிந்துகொண்டதுபோல் சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதிலிருந்து ஓர் உருவாகி ஓங்கி நின்ற ஸ்வரூபமே, பைரவநாதர்.

பைரவரை அந்தகாசுரனுடன் சண்டையிடப் பணித்தார் சிவனார். போர் நடந்தது. அந்தகாசுரன் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். கொடுமைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட தேவர்கள், தமது நன்றிக் கடனைத் தெரிவிக்க, ஆளுக்கு ஒரு ஆயுதத்தையோ திறனையோ, பைரவருக்குக் கொடுத்தனர்.

‘சர்வ ஆற்றல்களையும் தமக்குள் ஒடுக்கிக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் ஆக்கிக் கொண்டவர் பைரவர்’ என்று சிவ சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சக்திகளைத் தம்மிடத்தில் கொண்டிருந்தாலும், அந்தந்தத் தருணத்துக்கு ஏற்ப, அஷ்ட சக்திகளில் ஒருவரைத் தம் துணையாகக் கொண்டு, எட்டு விதமான வாகனங்களோடும், எட்டு விதமான தன்மைகளோடும் பைரவர் அருள்கிறார் என்கின்றன ஞானநூல்கள். அப்படியான அவரின் தன்மைக்கு ஏற்ப திருப்பெயர்கள் கொடுக்கப்பட்டு, அஷ்ட பைரவராக வணங்கப்படுகிறார்.

பைரவரைப் பற்றி இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு. பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தவர் பைரவர் என்கின்றன் புராணங்கள். தட்ச யாகத்தோடு தொடர்புப்படுத்திப் பேசும் கதைகளும் உண்டு.

வடமொழியில் பைரவர் என்றும், தமிழில் வைரவர் என்றும், வட மாநிலங்களில் பைரோன், பைரத்யா என்றும், நேபாளத்தில் பைராய் என்றும் வழங்கப்படுகிறார் பைரவர். இவர், சிவனாரின் உக்கிர மூர்த்தமாவார். அஷ்ட பைரவர்களிலிருந்து ரூப பேதங்கள் (வடிவங்கள்) பிரிந்து, 64 யோகினிகளுடன் கூடிய அஷ்டாஷ்ட (அதாவது எட்டு எட்டு... அறுபத்துநான்கு) பைரவர்களாகவும் சில சாத்திரங்களில் வணங்கப்படுவதுண்டு.

‘சிவப்பராக்கிரமம்’ எனும் நூல், சிவபெருமானின் 64 வடிவங்களில், பைரவ மூர்த்தம் ஒன்று என விவரிக்கிறது. இதன்படி, இரண்யாட்சதனின் மகனான அந்தகாசுரனை வென்ற மூர்த்தம் என்பதால் பைரவருக்கு, ‘அந்தஹாரி’ என்பது சிறப்புப் பெயர்.

அசிதாங்க பைரவராக- அன்னம், குரோதன பைரவராக- கருடன், ருரு பைரவராக- ரிஷபம், உன்மத்த பைரவராக- குதிரை, சண்ட பைரவராக- மயில், கபால பைரவராக- யானை, பீஷண பைரவ ராக- சிங்கம் ஆகியவற்றை வாகனங்களாகக் கொண்டவருக்கு, கால பைரவர், சம்ஹார பைரவர் போன்ற நிலைகளில் நாய் வாகனம். அந்தஹாரிக்கும் நாய் வாகனமே. சொல்லப்போனால்... சிவ அம்சம், பைரவரான போது, வேதங்களே நாய் வடிவம் பெற்றன.

பைரவ மூர்த்தம்
பைரவ மூர்த்தம்

நாய் வாகனம் கொண்டு, காதுகளில் குண்டலங்களாகவும் கைகளில் வளையணியாகவும் கால்களில் சதங்கைகளாகவும் பாம்புகளை ஆபரணங்களாக அணிந்து, பாசம், அங்குசம், திரிசூலம், இடி, கபாலம், உடுக்கை என்று வெவ்வேறு விதமான ஆயுதங்கள் ஏந்தி, சிவன் கோயில்கள் பலவற்றில், தனிச் சந்நிதியில் கால பைரவர் காட்சி கொடுப்பார்.

தமிழகத்தில் பைரவரால் சிறப்புப் பெற்ற பல தலங்கள் உண்டு. அவற்றில் ஒன்று பிரான்மலை. வள்ளல் பாரியின் பரம்பு மலை இதுவே என்பர். இலக்கியத்தில் ‘திருக்கொடுங்குன்றம்’ என்று வழங்கப்படும் இந்த திருத்தலத்துக்கு, இப்போது பிரான்மலை என்று பெயர். திண்டுக்கல் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது இந்தத் தலம். திண்டுக்கல்-கொட்டாம்பட்டு-சிங்கம்புணரி வழியாக பிரான்மலை செல்லலாம்.

பிரான்மலை
பிரான்மலை


பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளிலும் கோயில்களைக் கொண்ட தலம் இது. மலையின் அடிவாரத்தில் `பூமி’ கோயிலில் உள்ளது. இங்கே அருள்மிகு கொடுங்குன்றீசரும் அம்பாள் குயிலமுத நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோயிலை தரிசித்துவிட்டு மலைப் பாதை படிகளில் ஏறிச் சென்றால், `சொர்க்கம்’ என்று போற்றப்படும் மங்கைபாகர் அருளும் குடைவரைக் கோயிலை அடையலாம்.

ஸ்வாமி-உமாமகேஸ்வரர்; அம்பாள்- தேனாம்பிகை அல்லது தேனம்மாள். அகத்தியருக்குத் திருமணக் காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. அம்பாள் பாதம் பற்றிக் கொண்டுள்ள இந்தத் திருக்கோலம், ‘தேவ ரகசிய கோலம்’ என்றும் வழங்கப்படுகிறது.

ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் முன்னால், ஒரு சிவலிங்கம். ‘உடையவர்’ என்று திருநாமம் கொண்ட சிவலிங்கனார். இவருக்கே அபிஷேகம். ஸ்வாமி-அம்பாளுக்குப் புனுகுக் கவசம். இங்கு வந்து தரிசித்தால், கல்யாணப் பிராப்தி விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.

இங்கிருந்து `அந்தரங்கம்’ என அழைக்கப்படும் பைரவர் கோயிலை அடையலாம். பெரிய மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி , உள்ளே கருவறையில்... சுமார் ஐந்தடி உயரத்தில், தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன், நிர்வாண நிலையில், வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வள்ளலாகத் திகழ்கிறார் பைரவர்.

இவர் வடுக பைரவர். அப்படியென்றால்? ‘வடு’ என்பதற்கு, ‘இளமை’ என்று பொருள். வடுகன் என்றால் வாலிபன். பரம் பொருள் எப்போதும் இளமையானவர் என்பதைக் குறிக்கும் விதமாக சிவனாருக்கு வடுகன் என்றும் துர்கைக்கு வடுகி என்றும் திருநாமங்கள் உண்டு. சிவனாரின் அம்சமான பைரவர், இளமை யானவராகக் காட்சி தரும்போது, ‘வடுக பைரவர்’ ஆகிறார். பட்டாக் கத்தியும் சூலமும் இவருக்கான ஆயுதங்கள். தன்மையின்படி, இவர் சம்ஹார பைரவராம்.

பக்தர்கள் இவருக்குப் புனுகு சார்த்தியும் வடைமாலை இட்டும் வழிபடுகிறார்கள். தேய்பிறை அஷ்டமி எப்போதுமே பைரவருக்குச் சிறப்பான நாள். இந்த நாளில் இவருக்கு அபிஷேகம் உண்டு. ஜெயந்தன் விழா, சம்பகா சஷ்டி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, மகாதேவ அஷ்டமி என்றும் கால பைரவ அஷ்டமி என்றும் வழங்கப்படும் கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமி (இந்த வருடம் நவம்பர் 16) வெகு சிறப்பானது.

பிரான்மலை பைரவர், பிரார்த்தனா அதிபதி. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்கள், வேலை தேடுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இவருக்கு நேர்ந்துகொண்டு வணங்கினால் விரைவில் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

பிரான்மலை பைரவர்
பிரான்மலை பைரவர்

சில பிரார்த்தனைகள்...

திருமணம் நடைபெற: வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவருக்கு ருத்திராட்சம் மற்றும் விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும்.

சந்தான பாக்கியம் பெற: திருமணமாகியும் வெகுநாட்களாக குழந்தைச் செல்வம் வாய்க்காமல் வருந்துவோர், தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வறுமை நீங்க: வெள்ளிக் கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

நோய்கள் தீர, யமபயம் நீங்க: பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள்-ராகுகாலம், மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தனம் அபிஷேகம் செய்து , எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்யவேண்டும்.

பைரவருக்கான நைவேத்தியங்கள்!

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால் சாதம், , எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள். மேலும் சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன் அடை, எள்ளுருண்டை, பாயசம், தேன்குழல், அதிரசம் ஆகியவையும் பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும்.சிவனாரின் அம்சமான பைரவர், இளமை யானவராகக் காட்சி தரும்போது, ‘வடுக பைரவர்’ ஆகிறார்.