Published:Updated:

கஷ்டங்கள் தீர்க்கும் காலபைரவாஷ்டமி - ஶ்ரீ சொர்ணபைரவர் மகாலட்சார்ச்சனையில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

காலபைரவாஷ்டமி
காலபைரவாஷ்டமி

பகைவர்கள் பற்றிய பயம், வாழ்க்கை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், வறுமை பற்றிய பயம் என எந்த வித பயம் என்றாலும் நாம் வணங்க வேண்டியது கால பைரவரையே. சிவாலயத்தின் காவலரான கால பைரவரே சிவனடியார்களின் காவலரும் ஆவார்.

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில்தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக கால பைரவரைத் தோற்றுவித்தார். அகந்தையை அழிந்து உலகில் நன்மையை நிலைநாட்டும் சக்தியாகக் காலபைரவர் இன்றும் அருள்கிறார் என்பது ஐதிகம். பொதுவாக பைரவ வழிபாடு என்பது பயமகற்றும் வழிபாடு.

பகைவர்கள் பற்றிய பயம், வாழ்க்கை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், வறுமை பற்றிய பயம் என எந்த வித பயம் என்றாலும் நாம் வணங்க வேண்டியது கால பைரவரையே. சிவாலயத்தின் காவலரான கால பைரவரே சிவனடியார்களின் காவலரும் ஆவார்.

கால பைரவர்
கால பைரவர்

கஷ்டங்கள் தீர்க்கும் காலபைரவர்

காலபைரவாஷ்டமி நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதிகம். இந்த நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு - கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதிகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லாரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

காலபைரவர்...
காலபைரவர்...

தேங்காய் விளக்கேற்றினால் சிறக்கும் வாழ்வு

விளக்கேற்றி இறைவனை வழிபடுவது நம் மரபு. அதிலும் தேங்காய் விளக்கேற்றி வழிபடுவது பைரவருக்கு உகந்த வழிபாடு. மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. இவ்வாறு விளக்கேற்றி வழிபட பைரவரின் பேரருள் கிடைக்கும்.

கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் விசேஷம்.

பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள்

வீட்டில் பைரவரை வழிபடுபவர்கள் எளிய நைவேத்தியங்களைச் செய்து வழிபடலாம். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள். மேலும் சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன் அடை, எள்ளுருண்டை, பாயசம், தேன்குழல், அதிரசம் ஆகியவையும் பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும்.

இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்து வழிபட்டாலே போதுமானது.

காலபைரவர்! #Kalabairavashtami
காலபைரவர்! #Kalabairavashtami

பைரவ மூர்த்தியை வழிபட உகந்த தியான ஸ்லோகம்

ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம் |

டக்கா சூல கபால பாசகதரம்

ரக்ஷாகராம் பைரவம் ||

நிர்வாணம் ஸுநவாஹனம்

த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்

வந்தே பூதபிசாச நாதவடுகம்

க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||

இதன் கருத்து சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்குத் தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையும் மாலையும் சொல்லிவரலாம். அதேபோல

ஓம் கால காலாய வித்மஹே

கால தீத்தாய தீமஹீ

தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" என்னும் பைரவ காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம்.

பைரவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே செல்லும்போது வழியில் பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி நாளை கொண்டாடப்படுகிறது. எனவே நாளை குறைந்தபட்சம் சிவப்பு நிற மலர்களையேனும் பைரவருக்கு சாத்தி சகல நன்மைகளையும் பெறலாம்.

பைரவர்
பைரவர்

கார்த்திகையில் ஶ்ரீசொர்ணபைரவருக்கு மகாலட்சார்ச்சனை மற்றும் 108 சங்காபிஷேக விழா!

சிவசுந்தரி கலைக்கூடம் சார்பில் திரு பூசை. ச. ஆட்சிலிங்கம் அவர்கள் 12.12.20 முதல் 14.12.20 வரை ஶ்ரீ சொர்ணபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

12.12.20 சனிக்கிழமை அன்று மகாகணபதி ஹோமமும், 13.1.20 ஞாயிறு அன்று மகாலட்சார்ச்சனையும் 14.12.20 திங்கள் கிழமை அன்று 108 சங்காபிஷேகமும் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சங்கல்பமும் பிரார்த்தனையும் செய்யப்படும். சங்கல்பிக்க விரும்பும் வாசகர்கள், தங்களின் பெயர், நட்சத்திரம், சங்கல்பத்துக்கான பிரார்த்தனை ஆகியவற்றைக் கீழ்க்காணும் படிவத்தில் நிரப்பினால் தங்கள் பெயரில் அந்த வைபவத்தில் சங்கல்பம் செய்யப்படும்.

இடம்: ஶ்ரீபைரவர் மணிமாடம்

சென்னை - திருச்சி நெடுஞ்சாலை

அச்சிறுபாக்கத்தை அடுத்த தேன்பாக்கம் மதுரா அண்ணாநகர்

நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த கட்டுரைக்கு