Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - தொடர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - தொடர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

``இன்று இரவு இறைவனைச் சாட்சியாக வைத்து சில சுவாரஸ்யமான காரியங்கள் இந்த மடத்தில் நிகழப் போகின்றன’ என்று மகா யோகி காலக்ஞானி ஸ்வாமி வீரபிரம்மேந்திரர் சொன்னபடியே அன்றிரவு அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

சீடர்கள் உறங்கச் சென்றனர். மடத்தின் கதவுகள் சாத்தப்பட்டன. பக்தர்கள் கூட்டத்தில் கலந்து மடத்துக்குள் புகுந்துவிட்டிருந்த கொள்ளையன் ஒருவன், பொழுது நடுநிசியை நெருங்கியதும் மற்ற கொள்ளையர்களுக்கு மடத்தின் நிலவரம் குறித்து ரகசியத் தகவல் அளித்தான். சூழல் சாதகமாக இருப்பதை அறிந்ததும் மற்ற கொள்ளயர்கள் ஒன்பதுபேரும், மடத்தின் பின்புறமாக மிகப் பெரிய துளையை ஏற்படுத்தி உள்ளே புகுந்தனர்.

காலம் தாழ்த்தாமல் மடத்திலிருந்த விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடித்தனர். பின்னர், அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டினார்கள். அதை, தங்களில் பலசாலியான ஒருவன் தலையில் ஏற்றிச் சுமந்துவரப் பணித்தனர். பின்னர் அனைவரும் வந்த வழியே வெளியேற முற்பட்டனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பேரொளி ஒன்று தோன்றிட, அதன் பிரகாசத்தால் கொள்ளையரின் பார்வை பறிபோனது. அதேநேரம் மூட்டையைச் சுமந்து சென்றவனுக்கு, தலையில் பாரம் ஏறிக்கொண்டே போனது. அதற்குமேல் ஒரு விநாடி கூட மூட்டையைச் சுமக்கமுடியாத நிலையில், மூட்டையைக் கீழே போட்டான். கொள்ளையர் அனைவரும் பரிதவித்தனர். எப்படி, எந்த திசையில் வெளியேறுவது என்று தெரியாமல், மடத்திலேயே அமர்ந்துவிட்டனர்.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்

பொழுது விடிந்தது. சீடர்கள் மூலம் கிராமத் தலைவர் மற்றும் கிராம சபை உறுப்பினர்களை அழைத்து வரச்செய்தார் வீரபிரம்மேந்திரர். அனைவரும் மடத்துக்குள் கொள்ளையர்களைக் கண்டு அதிர்ந்தனர். அவர்களிடம் கொள்ளையர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கிராமத்தவர்கள் அவர்களைத் தண்டிக்க முற்பட்டபோது, ``நீங்கள் தண்டிக்க தேவையில்லை. ஏற்கெனவே எங்களுக்கான தண்டனை கிடைத்துவிட்டது. நாங்கள் அனைவரும் பார்வையைப் பறிகொடுத்துவிட்டோம்’’ என்று கூறிய கொள்ளையர், ஸ்வாமியிடமும் மன்னிப்பு வேண்டினார்கள்.

ஸ்வாமி சிறிதளவு விபூதியை எடுத்து கொள்ளையரின் கண்களில் படும்படி தூவினார். தொடர்ந்து ஸ்வாமியின் உத்தரவுப்படி கொள்ளையர் அனைவரும் மெள்ள கண்களைத் திறந்தனர். என்ன ஆச்சர்யம்... அனைவருக்கும் பார்வை திரும்பியது. அவர்கள் ஸ்வாமியின் திருவடியில் விழுந்து கதறினார்கள்.

அவர்களை எழச் செய்த வீரபிரம்மேந்திரர், ``நீங்கள் அனைவரும் இன்னும் ஐந்து நாள்கள் எங்கள் விருந்தினராக மடத்தில் தங்க வேண்டும்’’ என்றார். அதன்படியே கொள்ளையர்கள் மடத்தில் தங்கினார்கள். அவர்களின் மனதில் வக்ர எண்ணங்கள் மறைந்து போயின. ஸ்வாமியின் உபதேசத்தைக் கேட்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களுக்கும் அன்போடு ஞானத்தைப் போதித்தார் வீரபிரம்மேந்திரர். கொள்ளையர்கள் தீய எண்ணங்களைத் துறந்து, இறைப் பணியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

நாள்கள் நகர்ந்தன. ஶ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கலியுகத்தில் அவதரித்த ஶ்ரீவீரபிரம்மேந்திரர், தான் ஜீவ சமாதி அடையும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். முன்னதாக தனது மடத்துக்குத் தலைவர் ஒருவரை நியமிக்க நினைத்தார்.

ஒருநாள் தன் மனைவி-மக்களை அழைத்தார். மனைவியிடம் ``என் இடப்பக்கத்தை அலங்கரிக் கும் சக்தியான தேவி பார்வதியே, இன்று முக்கிய நிகழ்வை உனக்கு உரைக்கப்போகிறேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டாம். நான் இன்னும் சில நாள்களில் ஜீவ சமாதி அடையப்போகிறேன். முன்னதாக இந்த மடத்துக்கு நம் புதல்வன் கோவிந்தா சார்யாவைத் தலைவராக நியமிக்கவுள்ளேன்’’ என்றார்.

வீர பிரம்மேந்திரர்
வீர பிரம்மேந்திரர்

அவரின் மனைவி கலங்கினார். ``ஆத்மாவாகிய என்னைவிட்டு, தாங்கள் மட்டும் தனியே செல்லலாமா? நீங்கள் சர்வேஸ்வரரின் அவதாரம் என்பதை அறிவேன். மக்கள் தங்கள் கவலைகளை உங்களிடம் சமர்ப்பித்துவிட்டு, நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆகவே, `நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்’ என்று ஒருபோதும் நான் கருதியதில்லை. ஆனால், இப்போது எனது சிறு கோரிக்கையை மட்டும் ஏற்கவேண்டும். என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்’’ என வேண்டினார்.

ஸ்வாமி சிரித்தபடி சொன்னார் ``நீ சக்தியின் அவதாரம். ஆயினும் உனக்குச் சில பொறுப்புகளை அளிக்கவுள்ளேன். அதை நீ ஏற்றுத்தான் ஆகவேண்டும். முன்னதாக கோவிந்தாசார்யாவை மடத்தின் தலைவராக நியமிக்கிறேன்’’ என்றார்.

அவரின் மகன் கோவிந்தாசார்யாவோ, ``தந்தையே மன்னிக்கவும். நான் சாமான்யன். இதுவரையிலும் தாங்கள் தங்களின் மேலான உபதேசங்களையும், யோக மார்க்கத்தையும், சாஸ்திர சம்பிரதாயங் களையும் சித்தய்யாவுக்கே அளித்தீர்கள். அவரும் தங்களின் குழந்தையா கவும், பிரதம சீடராகவும் திகழ்பவர். தங்களுக் குச் சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டவர். மகாஞானியான அவருக்கு இந்தப் பதவியை விட்டுவிட்டு என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று கேட்டான்.

ஸ்வாமி தன் மகனிடம், ``நீ சொல்வது சரிதான். சித்தய்யா மகாஞானி. ஆனால் அவன் பிறந்ததன் நோக்கம் வேறு. அவனை ஓரிடத்தில் அமர்த்தி கட்டிவைக்க இயலாது. எனது உபதேசத்தை உலகமெங்கும் கொண்டு செல்லும் பணியைச் செய்யப்போகிறான்.

அதைக் காட்டிலும் மடத்தின் தலைவர் எனும் பொறுப்பு பெரியதல்ல. மடத்தின் நிர்வாகத்தை எவர் வேண்டுமானாலும் கவனிக்கலாம். ஆகவே இந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். அத்துடன் தன் மைந்தருக்கு `சம்சார மஹா ஆரண்ய ஸ்வரூபம்’ குறித்து உபதேசித்தார்.

வனத்தை இல்லற வாழ்வுடன் ஒப்பிட்டு அறத்தைப் போதிக்கும் உபதேசம் அது.

``தாமரை இலைத் தண்ணீர் போன்று வாழ்தல் வேண்டும். பொருள் சேர்ப்பதையே இலக்காகக் கொண்டு வாழ்தல் கூடாது. அருளைத் தேடுதலும் அவசியம். தன்னையே சர்வேஸ்வரரிடம் முழுமையாகச் சமர்ப்பித்து வாழும் ஆத்மா நிச்சயமாக தன்னிலையை அறியும் முக்தியைப் பெறும்’’ என்று உபதேசம் செய்தார்.

மேலும் கோவிந்தாசார்யா, சித்தய்யா இருவருக்கும், உடற் கூறுகளில் பொதிந்துள்ள ரகசியங்களைச் சொல்லும் `ஹம்ச ஸ்வரூபம்’ குறித்தும் விளக்கினார். நாடிகளைக் கொண்டு கணிக்கும் பலாபலன்கள் குறித்தும் விவரித்தார் வீரபிரம்மேந்திரர்.

பின்னர் கோவிந்தாசார்யா கேட்டுக்கொண்டபடி, சாயா புருஷ லக்ஷணம், மரண சூசக லக்ஷணம் பற்றியும் யோக ரகசியங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். இருவரும் அவரை வணங்கிப் பணிந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் வசித்த கண்டிமல்லய்யா பள்ளி கிராமம், குலதேவதையான பொலேரம்மா வழிபாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

அந்தக் கிராமத்தில் அம்மை நோய் பெரிதும் பரவியது. ஆகவே பொலேரம்மாவை வழிபட்டு அருள் பெற கிராமத்தவர்கள் முடிவு செய்தனர். ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் மனைவியும் வழிபாட்டுக்குத் தயாரானார். அனைவரும் அந்தத் தெய்வத்துக்குத் தயிர் சாதமும் பொங்கலும் படைத்து வேண்டினார்கள்.

மூன்று செங்கல்லை முக்கோணமாக வைத்து, மஞ்சள் குங்குமம் பூசியபின்னர், கோலமிட்டு அதன் மீது வாழை இலையை விரித்து வைக்கவேண்டும். பழைய சாதத்தில் தயிர் ஊற்றிப் பிசைந்து வாழை இலையில் படைத்து, பொலேரம்மாவை வேண்டிக் கொள்வார்கள். ஸ்வாமியின் மனைவி அவ்வாறு உணவைப் படைக் கும் நேரத்தில், வெளியூர் சென்றிருந்த வீரபிரம்மேந்திரர் வந்து சேர்ந்தார்.

மனைவியிடம் ``இதென்ன வழிபாடு?’’ என்று கேட்டார். அவரின் மனைவியோ ``கிராம மக்கள் நலனுக்காக மற்ற பெண்களைப் போன்று நானும் வழிபட விரும்பினேன். தங்களிடம் அனுமதி பெறாத தற்கு மன்னியுங்கள்’’ என்றார் பதற்றத்துடன்.

கருணையே உருவான ஸ்வாமி ``மன்னிப்பு எதற்கு? கிராம நலனுக்காக வழிபாடு செய்வது பாராட்டுக்குரியது அல்லவா. அதற்குப் பரிசாக, கிராமதேவதையான பொலேரம்மாவை இன்று நம் வீட்டு விருந்துக்கு அழைக்கிறேன். அவள் வந்து விருந்துண்டு கிராமத்தை ஆசீர்வதிப்பாள்’’ என்றார்.

இந்த விஷயம் கிராமம் முழுக்க பரவியது. குறிப்பிட்ட நேரத்தில் ஊரே ஸ்வாமியின் வீட்டில் திரண்டு நின்றது.

ஆனால், ஸ்வாமி கூறியபடி அவரின் வீட்டுக்கு கிராமதேவதை பொலேரம்மா வந்தாளா?

- தொடரும்...

அழகர் யார் தெரியுமா?

அழகர்
அழகர்

பெருமாள் அழகர் என்ற பெயரில் அருளும் தலங்கள் மூன்று. அவை: அழகர் மலை, மதுரை கூடலழகர் கோயில், அன்பில் வடிவழகிய நம்பி கோயில். இவற்றில் அன்பில் தலம் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

`வைகுண்டத்தில் அருளும் அழகிய பெருமாளுக்கு ஒப்பான திருமேனி பூவுலகில் எங்குள்ளது' என்று வால்மீகி முனிவருக்கும் பிரம்மனுக்கும் எழுந்த ஐயத்தைப் போக்கும் விதம், அன்பில் வடிவழகிய நம்பியே மிக அழகானவர் என்று பெருமாளே எடுத்துச் சொன்ன தலம் இது.

அமாவாசை நாளில் இந்தத் தலத்தில் உள்ள கொள்ளிடம் நதியில் நீராடி, பெருமாளுக்கு அப்பம், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அதை பத்து பேருக்கு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

- கி.குரு, கரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism