ஜோதிடம்
Published:Updated:

`ஒரு துளி கடல்!'

ஒரு துளி கடல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு துளி கடல்

சிந்தனை விருந்து

ஒரு கலைஞர் இசையில் ஒன்றிப்போய், உருகி உருகி வயலின் வாசிக்கும்போது நாம் அதில் கரைந்துபோகிறோம். ஒரு மகத்தான கலைஞன் தன்னை மறந்து, லயித்து நடிப்பதைப் பார்க்கும்போது `அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டாரே’ என்று வியந்து போகிறோம். ஆக, ஒன்றிப்போய் எந்தக் காரியத்தைச் செய்தாலும் உலகமே கொண்டாடும்.

இது, `இரண்டறக் கலத்தல்’ என்ற நிலை. இதையும் தாண்டி எதை விரும்புகிறோமோ, அதுவாகவே மாறி விடுகிற நிலையும் உண்டு. அது ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மட்டுமே கிடைத்த பேறு!

கபீர்தாசர் அந்த நிலையை அடைந்தவர். அதிகாலை சூரிய ஒளியில், ஓர் இலையில் மிதக்கும் பனித்துளி, சறுக்கிச் சென்று கடலில் கலப்பது போன்ற நிலை. அதை அடைந்தபோது, அந்த அனுபவத்தை அவர் இப்படி எழுதிவைத்தார்... `நான் என்னையே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னைக் கண்டுபிடிப் பதற்கு பதிலாக, நான் கடலுக்குள் மூழ்கி மறைந்து விட்டேன். பனித்துளி, கடலுக்குள் மறைந்துவிட்டது.’

இதை அவர் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் கடந்தன. மரணப் படுக்கையில் கிடந்தார் கபீர்தாசர். ஒருநாள் தன்னுடைய மகன் கமாலை அழைத்தார்.

``கமால், நான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை எடுத்து வா.’’

``எதற்கு தந்தையே?’’

``நான் இறப்பதற்கு முன்பு ஒன்றைச் சரிசெய்தாக வேண்டும்.’’

கமால் குறிப்புகளை எடுத்து வந்தான். கபீர்தாசர், அவர் எழுதிய குறிப்புகளிலிருந்து ஒன்றைத் தேடி எடுத்தார். அதை கமாலிடம் கொடுத்தார். ``இதிலிருப்பதை நான் சொல்வதைப்போல் திருத்தி எழுது. `பனித்துளி, கடலுக்குள் மறைந்துவிட்டது’ என்று எழுதியிருக்கிறேன் அல்லவா... அதை, `கடல், பனித்துளிக்குள் மறைந்து விட்டது’ என்று எழுது'' என்றார்.

இந்த அனுபவத்தை, `ஒரு ஞானி மாணவனாக இருந்து குருவாக மாறும் நிலை’ எனக் குறிப்பிடுகிறார் ஓஷோ.

ரண்டறக் கலத்தல் நிலை இருக்கட்டும். இப்போதெல்லாம் பல ஆண்கள் வீட்டிலிருந்து விலகல் நிலையையே கடைப்பிடிக்கிறார்கள். மனைவி, கணவருக்கு போன் செய்தார்... ``மணி எட்டாகப்போகுது. ஆபீஸ் முடிஞ்சு எங்கே போய்த் தொலைஞ்சீங்க?’’

``ஒண்ணுமில்லம்மா... நாம ஒருநாள் ஷாப்பிங் போயிருந்தோமே... அப்போகூட ஒரு நகைக்கடையில உனக்குப் பிடிச்ச டிசைன்ல தங்க செயின் ஒண்ணு பார்த்தோமே...’’

``ஆமாம். சொல்லுங்க.’’

``நான்கூட உன்கிட்ட `இப்போ காசு இல்லைம்மா. காசு வந்ததும் உனக்கு அதை வாங்கித் தர்றேன்னு சொன்னேனே...’’

``ஆமாமா. சொல்லுங்க, சொல்லுங்க.’’

``அந்த நகைக்கடைக்கு நாலு கடை தள்ளி என் ஃபிரெண்டோட ஜூஸ் கடை இருக்கு. அங்கே உட்கார்ந்து பொழுதுபோகாம பேசிக்கிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன்!’’