Published:Updated:

காலபைரவாஷ்டமி: பைரவ முகூர்த்தத்தில் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன!

காலபைரவாஷ்டமி
News
காலபைரவாஷ்டமி

இவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் ஈசனில் இருந்து தோன்றினார் என்கின்றன புராணங்கள். அதன்படி 27-11-2021 சனிக்கிழமை காலபைரவாஷ்டமி விழா வருகிறது.

எந்த குணமும் இல்லாத 'நிர்குணன்' என்று போற்றப்படும் சிவபெருமானே எண் குணத்தான் என்றும் போற்றப்படுகிறார். வேறொரு வகையில் சைவம் 'பஞ்ச குண வடிவினன்' என்றும் குறிப்பிடுகிறது. உக்கிர மூர்த்தி - ஸ்ரீபைரவர், சாந்த மூர்த்தி - ஸ்ரீதட்சிணாமூர்த்தி, வசீகர மூர்த்தி - ஸ்ரீபிட்சாடனர், ஆனந்த மூர்த்தி - ஸ்ரீநடராசர், கருணா மூர்த்தி - ஸ்ரீசோமாஸ்கந்தர் என்று சைவ நூல்கள் போற்றுகின்றன. அட்டவீரட்ட செயல்களையும் ஆக்ரோஷமாக செய்து முடித்த உக்கிர வடிவமே காலபைரவர் என்கிறது சைவம். இவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் ஈசனில் இருந்து தோன்றினார் என்கின்றன புராணங்கள். அதன்படி 27-11-2021 சனிக்கிழமை அன்று (நாளை) காலபைரவாஷ்டமி விழா வருகிறது.

காலபைரவர்
காலபைரவர்

இந்த பூமி காலம், தூரம் என்ற இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும் மகாவடிவமே காலபைரவ மூர்த்தி. சனீஸ்வரனின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம், தூரம், மனித மனம் யாவையும் கட்டுப்படுத்துபவராக காலபைரவர் போற்றப்படுகிறார். இந்த ஆண்டு சனிக்கிழமை, அதாவது பைரவரின் சீடருக்கான நாளில் பைரவரின் ஜன்மாஷ்டமி வருவதால் இரட்டிப்பு விஷேசம். இன்று காலபைரவரை வழிபட சனியின் அருளும் நமக்குத் தானாகவே கிடைத்துவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பைரவர் அவதரித்த காலபைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் அச்சங்கள் நீங்கி, தைரியம் உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அபிசேகப்பிரியான ஈசனின் அம்சம் என்பதால், காலபைரவருக்கு சந்தன அபிஷேகம் விருப்பமானது என்கின்றன சாஸ்திரங்கள். உக்கிர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் உகந்தது என்பார்கள். இந்நாளில் சந்தனம், பன்னீர், புனுகு, ஜவ்வாது, குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, பச்சை கற்பூரம் போன்றவை கலந்தும் அபிஷேகிக்கலாம். முந்திரி பருப்பு, சுண்டல், கற்கண்டு, வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பைரவர்
பைரவர்

வீண் அச்சங்கள், கடன் தொல்லை, வம்பு-வழக்குகள், சாப-தோஷப் பிரச்னைகள், குடும்ப சிக்கல்கள், காரியத் தடைகள், தரித்திரம் போன்ற பிரச்னைகளால் துன்பப்படும் யாரும் இந்நாளில் காலபைரவரை மனம் உருகி வழிபட துயரங்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. அமர்தகர் என்றால் அகங்காரத்தினை அழிப்பவர் என்று பொருள். மனதில் உள்ள வீண் அகங்காரம் நீங்கினாலே பல நன்மைகள் உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள். அதேபோல் பாப பக்ஷணர் என்றால் மக்கள் அறியாமல் செய்யும் பாவங்களை நீக்குபவர் என்று பொருள். அமர்தகராகவும், பாப பக்ஷணராகவும் விளங்கும் காலபைரவரை இந்நாளில் வணங்கி நலமும் வளமும் பெறுவோம். சிவாலயத்தின் காவலராகவும் சிவனடியார்களின் தூதுவராகவும் இருக்கும் காலபைரவர் எளியரோக்கு எளியோர். எதிர்ப்போர்க்கு யமன் போன்றவர் என்கிறது புராணம். காலபைரவரை வணங்க ஏற்ற நாள் மற்றும் நேரம் என்பது காலபைரவாஷ்டமி நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாள் காலையிலும் பைரவ முகூர்த்தம் என்று ஒரு காலம் உண்டு என்கிறது ஞான நூல்கள். அதைப்பற்றியும் அறிந்துகொண்டு தகுந்த முறையுடன் பைரவரை வழிபட்டு பலன் பெறுவோம்.

ஞானிகளால், ஒரு நாள் பொழுது பல முகூர்த்த வேளைகளாகப் பிரித்து வைத்து, அந்தந்த முகூர்த்தங்களில் அதற்கான காரியங்கள் பார்க்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பைரவ முகூர்த்தம் பல காரிய ஸித்திகளை அளிக்கும் அமோக வேளை எனப்படுகிறது. ஒவ்வொரு நாள் சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள 4 நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் எனப்படுகின்றது. அதாவது இன்று காலை சூரிய உதயம் 6 மணி 10 மணிக்கு நிகழ்ந்தால் அதற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நான்கு நிமிடங்கள் கொண்ட எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த நித்திய பைரவ வேளையில் பைரவ வழிபாடு சிறப்பானது எனப்படுகிறது.

பைரவ முகூர்த்தம்
பைரவ முகூர்த்தம்

இந்த வேளையில் பைரவரை மனதார தியானித்து வழிபட்டால் அந்த நாளில் நடைபெற இருக்கும் எதிர்பாராத துன்பங்களை, ஆபத்துக்களை பைரவர் நீக்கிவிடுவார் என்பது நம்பிக்கை. மேலும் அன்று நடைபெற இருக்கும் அனைத்து காரியங்களையும் சுபமாக்கி மனமகிழ்ச்சியை உருவாக்குவார் என்பதும் நம்பிக்கை. உதாரணமாக நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள், கடன் வசூலிக்க செல்பவர்கள், புதிய காரியங்களைத் தொடங்க இருப்பவர்கள் என அனைவருக்கும் சாதகமான சூழலே உருவாகும் என்கின்றன புனித நூல்கள்.

புண்ணியம் தரும் இந்த காலபைரவாஷ்டமி திருநாளில் மகாலட்சுமியின் 8 வடிவங்களும் பைரவரை துதிப்பதாக ஐதிகம். எனவே இந்த நாளில் சொர்ண கமலரேகையுடன் காட்சி தரும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவது சிறப்பானது எனலாம். ஸ்ரீஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு நலம் சேர்க்கும் ஒரு சிறந்த பரிகார வழிபாடு. நம்பினோரைக் காவல் காக்கும் இந்த பைரவ மூர்த்தியை இந்நாளில் (27 - நவம்பர் 2021) வழிபட்டு எண்ணியவை யாவும் நிறைவேற வணங்குவோம்!