Published:Updated:

"தியேட்டர்ல முறுக்கு வித்த அனுபவத்துலதான் சினிமாவுக்கு வந்தேன்" - கதாசிரியர் கலைஞானம்

கலைஞானம்
கலைஞானம்

``என்னோட இஷ்ட தெய்வம் முருகன். உட்கார்ந்த இடத்திலிருந்து 'சட்'டுனு எந்திரிக்கணும்னாகூட 'முருகா'னு சொல்லிட்டுத்தான் எந்திரிப்பேன். எங்க தாத்தா காலத்திலிருந்தே முருகனைக் கும்புடுற பழக்கம் எங்க குடும்பத்துக்கு வந்துடுச்சு.''

கலைஞானம்... தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை கண்ட கதாசிரியர். திரைக்கதையில் தொய்வு என்றாலோ சரியான திருப்பம் இல்லையென்றாலோ லாஜிக் இடித்தாலோ இவரைத்தான் முதலில் கூப்பிடுவார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தொடங்கி, சாண்டோ சின்னப்பா தேவர், கே.பாக்யராஜ் வரை திரைக்கதை விவாதத்தில் தொடர்கிறது இவரின் கலைப்பயணம். 'நடிகராக' இருந்த ரஜினியை 40 ஆண்டுகளுக்கு முன் 'பைரவி' படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர். 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தும் இருக்கிறார். 16 படங்களைத் தயாரித்திருக்கிறார். 4 படங்களை இயக்கியுள்ளார். 80 ஆண்டுகளாக இவரின் சுவாசமே சினிமாதான். ஆசி பெறுவதற்காகப் புதிய இயக்குநர்கள் வந்து அவரைச் சூழ்ந்திருந்த வேளையில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்

''உசிலம்பட்டி பக்கத்துல இருக்கிற எழுமலைதான் எங்க ஊர். என்னோட இஷ்டதெய்வம் முருகன். உட்கார்ந்த இடத்திலிருந்து 'சட்'டுனு எந்திரிக்கணும்னாகூட 'முருகா'னு சொல்லிட்டுத்தான் எந்திரிப்பேன். எங்க தாத்தா காலத்திலிருந்தே முருகனைக் கும்புடுற பழக்கம் எங்க குடும்பத்துக்கு வந்துடுச்சு. எங்க தாத்தா ராமசாமி, கோடங்கி அடிச்சு குறி சொல்லுவார். ஜமீன்தார் குடும்பத்துக்கும் அவர்தான் குறிசொல்லுவார். அவர் 'இன்ன நாள்ல மழை வரும்'னு சொன்னார்னா அன்னிக்கு மழை வரும். ஜமீன்ல அவர் புலவராகவும் குறி சொல்றவராகவும் இருந்ததால அவரை 'ஜமீன் கோடங்கி'னுதான் கூப்புடுவாங்க.

கலைஞானம்
கலைஞானம்

ஊருக்கே குறிசொன்னாலும், அவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாமலே இருந்துச்சு. 'கண்டமநாய்க்கனூர்ல ஒரு சாஸ்தா கோயில் இருக்கு. அங்க உள்ள குருக்கள்கிட்ட போய் விபூதி புடிங்க'னு சில பெரியவங்க சொல்லியிருக்காங்க. எங்க தாத்தாவும் கிளம்பிப் போனாராம். நடந்தே போயிருக்கார். அந்தக் குருக்கள், 'உனக்கு பையனும் உண்டு, பொண்ணும் உண்டு. கவலைப்படாத, ஆனா பையனுக்கு முத்தையானு முருகன் பேரைத்தான் வைக்கணும்'னு சொல்லியிருக்கார். அதேமாதிரி மூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க பிறந்திருக்காங்க. பசங்களுக்கு 'முத்தையா'னே பேரு வெச்சார். பெரிய முத்து, நடுமுத்து, சின்னமுத்துன்னே அவங்களைக் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

எங்க அப்பா இரண்டாவது பையன். அவரும் முருகனையே கும்புடுவார். நான் 1930-ல பெறந்தேன். எங்க அப்பாவுக்கும் மூணு பசங்க, ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. அப்பா ஒரு நாள் சேவிங் பண்ணிக்கிட்டு இருக்கும்போது தெரியாம விஷப்பருவையும் சேர்த்து மழிச்சிட்டார். விஷப்பருங்கிறது நரம்புல வர்ற முகப்பரு. அதுல கையே வைக்கக்கூடாது. அதை அறுக்கவும் உடம்பு முழுக்க விஷம் பரவி அப்பா இறந்துட்டார். அப்போ எனக்கு ஏழு வயசு. அன்னிக்குத்தான் 'ரெண்டாவது பாஸ் பண்ணிட்டேன்'னு சொல்றதுக்கு வீட்டுக்கு ஒடியாறேன். அப்பா இறந்துட்டார்.

கலைஞானம்
கலைஞானம்

அம்மா எங்கேயும் வேலைக்கெல்லாம் போகலை. வீட்டுலயே இட்லி சுட்டு வித்தாங்க. எனக்கு அதைப்போய் வித்துட்டு வர்ற வேலை. அஞ்சு புள்ளைங்களையும் வளர்க்கணுமே. ஒரு நாள் நான் வீட்டுலேருந்து காசை எடுத்துக்கிட்டு சினிமாவுக்குப் போயிட்டேன். அன்னிக்கு வாங்கின அடி கொஞ்ச நஞ்சமில்ல. அதே தியேட்டர்க்காரர்கிட்ட போய் வேலை கேட்டேன்.

இன்டர்வெல்ல எனக்கு முறுக்கு விக்கிற வேலை கிடைச்சுது. அதன்மூலமா ஐந்நூறு படங்களுக்கு மேல பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. கிடைச்ச காசை அம்மாகிட்ட கொடுத்துடுவேன். அதை அவங்க முருகன் படத்துக்கிட்ட வெச்சுதான் செலவு பண்ணுவாங்க.

வளர்ந்து வாலிபனானதும் 1952-ல மெட்ராஸுக்கு வந்துட்டேன். இங்க வந்துதான் எழுதப் படிக்க கத்துக்கிட்டேன். சினிமா நிறைய பார்த்திருந்ததால நிறைய கதைகளை என்னால சொல்ல முடிஞ்சுது. கம்பெனி கம்பெனியா போய் கதை சொல்லுவேன். அட்ரஸ் வாங்கி வெச்சிக்கிட்டு 'கூப்பிடுறோம்'னு சொல்லுவாங்க. அப்படிச் சொன்னாலே 'இங்க வேலை இல்ல. நீ கிளம்பு'னு அர்த்தங்கிறது பின்னாடிதான் தெரிஞ்சுது.

கலைஞானம்
கலைஞானம்
க.பாலாஜி, விகடன்

'இவன்பாட்டுக்கு சினிமா சினிமான்னு இருக்கான். பொறுப்பாவது வரட்டும்'னு எங்க அக்கா மகளை எனக்கு கல்யாணம்கட்டி வெச்சாங்க. ரெண்டு புள்ளைங்களும் பிறந்துச்சுக. மயிலாப்பூர் காரணீஸ்வரர் தெருவுல வீடு. ஒரே ரூம். வருமானம் பெருசா இல்ல. ஒவ்வொரு பொருளையா வித்து செலவு பண்ண வேண்டியதாயிடுச்சு. வறுமையில கஷ்டப்பட்டேன்.

அண்ணன், மதுரையிலேருந்து கிளம்பிவந்து தகப்பன் மாதிரி எனக்கு புத்தி சொன்னார். மூணு மாசமா கொடுக்காமலிருந்த வாடகை பாக்கியைக் கொடுத்துட்டு, 'இருக்கிற சாமான் செட்டை கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு மதுரைக்குக் கிளம்பு'ன்னார். நான், என் மனைவி, ரெண்டு புள்ளைங்கனு எல்லாரும் கிளம்பினோம்.

எழும்பூர்ல ரெயிலுக்கு டிக்கெட் எடுக்கும்போது எங்கண்ணன்கிட்டே, 'இன்னும் 10 நாள் வாடகையும் சேர்த்துதானே கொடுத்திருக்கோம். நான் ஒரு பத்து நாள் இருந்து பார்த்துட்டு வர்றேன்'னு சொன்னேன். அண்ணன் தலைதலையா அடிச்சிக்கிட்டு 'உன்னை திருத்தவே முடியாது'னு திட்டிட்டு விட்டுட்டார். அக்கா மகள் தானேங்கிறதால அவரே பொறுப்பேத்துக் கூட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிட்டார். 'சாப்பிட்டியா, கையில காசிருக்கா'னு கேட்டார். கையில காலணாகூட கிடையாது, நானும் ரொம்ப ஜபர்தஸ்தா 'காசு இருக்கு'ன்னுட்டேன்.

கலைஞானம்
கலைஞானம்
க.பாலாஜி, விகடன்

ரெயில்கிளம்பிப் போச்சு. ஸ்டேஷனே வெறிச்சோடிக் கிடந்தது. அங்கே இருந்து நடந்தே வீட்டுக்கு வந்தேன். வீட்டுல ஒரேயொரு 25 வாட்ஸ் பல்பு மட்டும் எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. வழக்கமா, தினமும் நான் காலையில எழுந்திரிச்சதும் கும்புடுற, முருகன் காலண்டர் மட்டும்தான் இருந்துச்சு. முருகனை 'அவனே' 'இவனே'னு வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தேன். 'முருகா முருகானு உன்னை மட்டுந்தானே நானும் எங்க வம்சமும் கும்பிட்டுக்கிட்டிருக்கோம். இப்படிச் சோதிக்கிறியே. உனக்கு மனசாட்சியே கிடையாதா? பொண்டாட்டி புள்ளைங்களைப் பிரிச்சி நடுத்தெருவுல என்னை விட்டுட்டியே'னு திட்டித்தீர்த்துட்டு படுத்தேன். நல்ல பசி மயக்கம்... அப்படியே தூங்கிப்போயிட்டேன்.

காலையில 5 மணிக்கெல்லாம் என் கூட்டாளி ஏ.எஸ்.முத்து வந்து என்னை எழுப்பினான். அவன் எப்போ வந்தாலும் அவனுக்கு நான்தான் காப்பி வாங்கிக் கொடுப்பேன். அன்னிக்குப் பார்த்து 'என் கையிலையும் காசில்லே'னு சொன்னேன். 'வா நான் பார்த்துக்கிறேன்'னு கூட்டிக்கிட்டுப்போய் வாங்கிக் கொடுத்தான். 'கமால் பிரதர்ஸ், ஜோசப் தளியத்தை இயக்குநரா வெச்சிப் படம் எடுக்கிறாங்க. கதை இருக்கா?னு என்னைக் கேட்டாங்க. அதான் உன்கையில வந்து சொல்றேன். நீ வேணும்னா சொல்லிப்பாரு'னு சொன்னான். ஓடிப்போய், ரெண்டு கதை சொன்னேன். ரெண்டும் ஓ.கே ஆயிடுச்சு. 'உடனே பிடி அட்வான்ஸை'னு 500 ரூபாயைக் கொடுத்தாங்க. 10 ரூபாய் வீட்டுவாடகைய கொடுக்க முடியலை. காலையில டீ குடிக்க காசில்ல. இப்போ என் கையில 500 ரூபாய். தகவல் தெரிஞ்ச அடுத்த நிமிஷம் என் பொண்டாட்டி புள்ளைங்க புறப்பட்டு வந்திட்டாங்க.

கலைஞானம்
கலைஞானம்
Vikatan

முருகனுடைய அற்புதத்தை நெனைச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டேன். அன்னிக்கு பிடிச்ச முருகன் அருள்தான்,' 40 படங்களுக்கு கதை, 16 படங்கள் தயாரிப்பு, 4 படங்கள் இயக்குநர்'னு சினிமா என்னைப் பிடிச்சிக்கிச்சு. நான் அதைப் பிடிச்சிக்கிட்டேன். அன்னிக்கு நான் வணங்கின, ,'காலண்டர்' பாலமுருகனும் திருசெந்தூர் செந்திலாண்டவரும்தான் எனக்கு இன்னிக்கும் துணை'' என, கை காட்டுகிறார். அங்கே அவர் காட்டிய திசையில் பாலமுருகன் சிரித்துக்கொண்டிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு