Published:Updated:

எரிமலைக் குழம்பில் உருவான சுயம்பு லிங்கங்கள்!

காஞ்சனகிரி அதிசயங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

கடும் கோபத்தில் ஆழ்ந்திருந்தான் காஞ்சனன். ஆணவம் தலைதூக்கும் இடத்தில் அன்பு நிலைப்பதில்லை. அன்பு இல்லாத இடத்தில் சிவமும் இருப்பதில்லை.

மிகப் பெரிய சிவபக்தனான இருந்த போதிலும், `தான்' என்ற அகங்காரம் அவனைச் சிவத்திடமிருந்து தள்ளிவைத்து விட்டது. உடல் பலமும் புத்தி பலமும் மிகுந்திருந்த காஞ்சனன், ஆன்ம பலத்தை இழந்துவிட்டிருந்தான். அதனால் ஞானம் அழிந்து, தானே சகலமும் என்ற மாயையில் சிக்கிக்கொண்டான்.விளைவு, ஈசனையே இகழத் தொடங்கினான்.

யார் இந்த காஞ்சனன்? இவன் கதையைத் தெரிந்துகொள்ள திருவல்லம் மலைக்குச் செல்வோம் வாருங்கள்!

காஞ்சனகிரி முருகன்
காஞ்சனகிரி முருகன்திருவல்லம் (தற்போது `திருவலம்' என்கிறார் கள்). இவ்வூர் சென்னை - பெங்களூரு பிரதான சாலையில், ஆற்காடு கூட்ரோடில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. புராணக் காலத்தில் இவ்வூரும் சுற்றுப் பகுதியில் அமைந்த மலைப்பகுதிகளும் பெரும் தபோ வனமாகத் திகழ்ந்தன.

இந்தப் பகுதியின் மகிமையை அறிந்த காஞ்சனனும், இங்கே தவம் செய்ய வந்தான். கந்தர்வனான காஞ்சனன், சிவனடியார்களை இகழ்ந்ததால் உண்டான சாபத்தால் அசுரனாகப் பிறப்பெடுத்திருந்தான்.

முற்பிறவிப் பயனால் நடந்ததை உணர்ந்து திருவல்லம் உறையும் வில்வவனேஸ்வரரை தஞ்சம் அடைந்தான். அபயம் என்று வந்தவரை காக்கும் ஈசன், அவனைத் திருவல்லம் மலை யில் தவமியற்றி ஜன்மசாபல்யம் பெற அறிவுறுத்தினார். அதன்படி இப்பகுதிக்கு வந்து தவமியற்றி, அதன் பலனால் எண்ணற்ற வரங்களைப் பெற்று வானவரும் தானவரும் போற்ற வாழ்ந்து வந்தான்.

காஞ்சனகிரி ஈசன்
காஞ்சனகிரி ஈசன்உயர்வு வரும்போது சிலருக்கு ஆணவம் தலைதூக்கும் அல்லவா? காஞ்சனனும் ஆணவத்தால் அறிவிழந்தான்.

ஈசனைப் போன்று தானும் அழிவில்லாத நிலையை அடையவேண்டும் என விரும்பி, தவமியற்றினான். தவத்தால் சிவம் மகிழ்ந்தது. அசுரன் முன் காட்சி தந்தது.

“அஷ்டமா ஸித்திகளில் எட்டாவது நிலையான ஈசத்துவ நிலையை அடைந்த நீ, சித்தர்களைப் போல் என்றென்றும் சூட்சும உருவில் வாழ்ந்திருப்பாய். எனினும் உடலோடு அழிவில்லாமல் நீடித்து வாழும் சாகா நிலையைப் பெற முடியாது.

தலையில் சுழியோடு பிறந்த எதுவும் இறக்கத் தான் வேண்டும். எனவே, சாகாத வரத்தை நான் அளிக்கமாட்டேன்! உன் தவத்தை கலைத்துவிடு, சகலருக்கும் நல்லவனாக வாழ்!” என்று அறிவுறுத்தி மறைந்தார்.

விநாசகாலே விபரீத புத்தி அல்லவா? வரம் கொடுக்க மறுத்ததால் ஈசனை வெறுத்து, இகழத் தொடங்கினான். காலம் நகர்ந்தது.

ஒருநாள் திருவல்லத்து ஆலய அர்ச்சகர் ஒருவர், சுவாமியின் அபிஷேகத்துக்காக திருவல்லம் மலையில் உள்ள சர்வ தீர்த்தத்தில் நீரெடுக்க வந்தார்.

கண்கள் சிவக்க அர்ச்சகரைத் தடுத்த அசுரன், “என் ஆளுகையில் உள்ள இந்த மலை யில் உன் சிவனுக்கு நீர் எடுக்க உரிமையில்லை” என்று கூறி, அந்த அர்ச்சகரை அடித்து வதைத்து, அவமானப்படுத்தி அனுப்பினான்.

அசுரனிடமிருந்து தப்பித்து வந்த அர்ச்சகர், தீனதயாளரான வில்வவன நாதரைச் சரண் புகுந்தார். ‘இறைவா! அந்தக் கொடியவனுக்குத் தண்டனை தரவேண்டும். அடியார்களின் மீது கை வைப்போருக்கு என்ன கதி, என்பதை நீ உணர்த்த வேண்டும்” என்று கதறினார்!

சிவம் கொதித்தது. முற்பிறவியில் செய்த தவற்றின் பலனாக மீண்டும் பிறப்பெடுத்த காஞ்சனன் இன்னும் திருந்தவில்லையே என்று சினந்தது. அதேநேரம், ஒரு காலம் வரையிலும் அவன் சிவ பக்தி கொண்டிருந்தவன். அவனை, தான் தண்டிக்கக் கூடாது என்று கருதினார்.

ஆகவே, அசுரனைத் தண்டிக்க நந்திதேவரை அனுப்பிவைத்தார். முதலில் அவனுக்கு நல்லுபதேசம் செய்து திருத்த எண்ணம் கொண்டார் நந்தி. ஆனால் அவரிடமே வம்பு செய்தான் காஞ்சனன்.

ஈசனைப் புகழும் வேத மந்திரங்களைக் கேட்ட காதால், ஈசனைத் தூற்றும் சொற் களைக் கேட்டார் ரிஷபமூர்த்தி. அவ்வளவு தான்... காளை காஞ்சனனுக்குக் காலனானது. அசுரனை 8 துண்டுகளாக்கி எட்டுத் திக்கிலும் பிய்த்தெறிந்தார் நந்திதேவர்.

தெங்கால், வடகால், மணி(க்கை) யம்பட்டு, அவரக்கரை (ஈரக்குலை), லாலாபேட்டை (இதயம்), சிகைராஜபுரம்(தலை), குகையநல்லூர் (இடுப்பு), மாவேரி (மார்பு) என எட்டு ஊர் களில் போய் விழுந்தன காஞ்சனின் உடல் பாகங்கள். அசுரனின் ஆன்மா உண்மையை உணர்ந்தது. ஈசனிடம் மன்றாடி மன்னிப்புக் கோரியது. ஈசனும் குளிர்ந்தார்.

காஞ்சனன் வேண்டியபடி தானே அவனுக்கு மகவாகி, தைத் திங்கள் 10-ம் நாளன்று, காஞ்சனின் உடல் பாகங்கள் விழுந்த 8 ஊர்களுக்கும் சென்று அவனுக்குத் திதி கொடுப்பதாக அருள்புரிந்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

அசுரனின் உடல் அழிந்தாலும் சூட்சும வடிவில் அதர்மவாதியாக அவன் மீண்டும் வந்துவிட்டால் எதிர்கொள்ள வசதியாக, இன்றும் திருவல்லம் கோயிலில் நந்தி திரும்பிப் பார்த்தபடியே அமர்ந்துள்ளார்!

காஞ்சனன் தவம் இருந்த திருவல்லம் மலையே தற்போது அவன் பெயரால் காஞ்சன கிரியாக அமைந்துள்ளது. இப்போதும் காஞ்சனன் சூட்சும வடிவில் இங்கு உலா வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில், லாலாபேட்டைக்கு அருகில் உள்ளது காஞ்சனகிரி. இயற்கை எழிலும் மூலிகைகள் பலவும் நிறைந்த மலை இது. உச்சி வரைக்கும் வாகனத்தில் செல்லும் விதம் பாதை அமைத்துள்ளார்கள். எனினும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளுடன் திகழ்கிறது. `வடக்கு வால்பாறை' என்று சிறப்பிக்கிறார்கள் இம்மலையை!

முருகன் கோயில் தீர்த்தகுளம்
முருகன் கோயில் தீர்த்தகுளம்வழியெங்கும் கரும்பாறைகள்... இந்த மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது என்பதை நிரூபிப்பதுபோல் காணப்பட்டன. வாகனத்தில் சென்றால் 20 நிமிடங்களில் உச்சியை அடைந்துவிடலாம்.

மேலே, நுழைவாயிலில் இடப்புறமாக அமைந்திருக்கும் சில படிகளைக் கடந்ததுமே அந்த அதிசயத்தைக் காணலாம். ஆம்! நூற்றுக் கணக்கான சின்னஞ்சிறு சிவலிங்கங்களும், நந்தி சிலைகளும் வரிசையாகத் திகழ்கின்றன.

சுயம்புலிங்கங்கள்
சுயம்புலிங்கங்கள்

காஞ்சனனை அழித்தும் கோபம் தணியா மல் நந்தி செய்த ஹூங்காரத்தால், மலையே எரிமலையாக வெடித்து உருக ஆரம்பித்ததாம். அந்த எரிமலைக் குழம்பு சிதறி, இப்படிச் சுயம்பு வடிவிலான லிங்கத்திருமேனிகளாகவும் நந்தி வடிவங்களாகவும் உருவாயின என்கிறார்கள். இந்த வடிவங்களில் பிரதானமாக வீற்றிருக்கும் காஞ்சனகிரீஸ்வரரும் சுயம்புதான். எதிரில் ஸ்ரீலஸ்ரீசிவஞான ஸ்வாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

சிவஞான ஸ்வாமி
சிவஞான ஸ்வாமி

இங்குள்ள முருகன் கோயில், திருக்குளம், சப்த கன்னியர் கோயில், ஆஞ்சநேயர் சந்நிதி, சுயம்புலிங்க சந்நிதி ஆகிய அனைத்தையும் நிர்மாணித்த மகான் இவர் என்கிறார்கள். இங்கே பற்பல அற்புதங்களை நடத்திக் காட்டியவர். இவரின் சிஷ்யையான கெங்கம்மாள் என்பவரின் வம்சாவளியினரே இந்த மலையில் அமைந்துள்ள கோயில்களை நிர்வகித்து வருகின்றனர்.

முருகன் கோயில்
முருகன் கோயில்

சுயம்பு லிங்கத் திருமேனிகளை தரிசித்து விட்டு நகர்ந்தால், சற்றுத் தள்ளி ஒற்றையடிப் பாதை ஒன்று அருகிலுள்ள மலைச்சிகரத்துக்கு இட்டுச் செல்கிறது. இருமருங்கிலும் அமைந்த ஆயா, ஆச்சாள், செந்தூரம், சரக்கொன்றை, மயில்கொன்றை என்று பலவகை அபூர்வ மரவகைகள் வளர்ந்து திகழ, மரங்களுக்கு இடையே பயணித்து சிகரத்தை அடைந்தோம்.

சிகர உச்சியில் விநோத பாறைகள்! தரிசனத் துக்காக வந்திருந்த சிலர், சிவநாமம் கூறிய படியே சிறு கற்களைக் கொண்டு பாறைகளின்மீது தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். பாறைகளிலிருந்து வெளிப்பட்ட வெண்கல நாதம் திசையெங்கும் எதிரொலித்து.அந்தப் பாறைகளை மணிப் பாறைகள் என்கிறார்கள். அசுரனின் கண்டப்(கழுத்து) பகுதியின் சிதறல்களே இந்தப் பாறைகள் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பாறை யைத் தட்டினால் வெளிப்படும் வெண்கல மணிச் சத்தம், திருவலம் வில்வநாதஈஸ்வரர் கோயிலில் கேட்கும் என்கிறார்கள்!

மணிப் பாறைகள்
மணிப் பாறைகள்

இந்த வகைப் பாறைகளே, மணிச் சத்தம் எழுப்பும் சிற்பங்களாக சோழ நாட்டில் பல கோயில்களில் திகழ்கின்றன போலும் என்று வியந்தபடியே சிகரத்திலிருந்து கீழே இறங்கினோம். காஞ்சனகிரீஸ்வரர், மகானின் ஜீவசமாதி, மணிப்பாறை ஆகியவற்றோடு, சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட லிங்கத் திருமேனி, சுமார் 600 ஆண்டுகளைக் கடந்த ஆலமரம், அதன் அருகில் சப்த கன்னியர், ஆஞ்சநேயர் சந்நிதிகள், முருகன் திருக்கோயில், விநாயகர், நாக மூர்த்தங்கள் ஆகியவற்றையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

சப்த கன்னியர்
சப்த கன்னியர்
காஞ்சனகிரி 
 கோயில்
காஞ்சனகிரி கோயில்
காஞ்சனகிரி முருகன்
காஞ்சனகிரி முருகன்

காஞ்சனகிரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் திருவலம் வில்வவன நாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். இந்த ஊர் முன்பு திருவல்லம் என்ற பெயரில், வாணர் களின் தலைநகரமாக இருந்து வந்தது.

சோழர்களுக்கு முன்பு இந்த பகுதியை சிறப்பாக ஆண்டுவந்த இந்த வாணர் குலத்தின் புகழ்பெற்ற இளவரசனே வல்லவரையன் வந்தியத்தேவன். `வாணர்கள் மகாபலியின் வம்சத்தவர்; மலையை ஆட்சி செய்யும் குடியினர்' என்கிறது வரலாறு.

காஞ்சனகிரி அனுமன்
காஞ்சனகிரி அனுமன்
காஞ்சனகிரி முருகன் கோயில்
காஞ்சனகிரி முருகன் கோயில்

இவ்வாறு புராணப் பெருமைகளும் சரித்திரப் புகழும் கொண்ட காஞ்சனகிரி, தமிழகத்தின் வியப்புக்குரிய அற்புத மலை என்றே கூறலாம். நீங்களும் ஒருமுறை காஞ்சன கிரிக்குச் சென்று தரிசியுங்கள்.

ஈசனின் சாந்நித்தியம் கொட்டிக் கிடக்கும் இந்த அற்புத மலையையே மகேசனாக தரிசித்து, தியானித்து, அந்தப் பரம்பொருளில் லயித்து அருள்பெற்று வாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு