Published:Updated:

பதம பாதம் சரணம்!

மகாபெரியவர் ஜயந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாபெரியவர் ஜயந்தி

ஜுன் 13 காஞ்சி மகாபெரியவர் ஜயந்தி

பதம பாதம் சரணம்!

ஜுன் 13 காஞ்சி மகாபெரியவர் ஜயந்தி

Published:Updated:
மகாபெரியவர் ஜயந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாபெரியவர் ஜயந்தி

`விநாயகர் அகவலில் விக்னேச்வரனே குருவாக வந்தார் என்கிறாள் ஒளவை. கந்தர் அநுபூதியில் `குருவாய் வருவாய்’ என்று முருகனை வேண்டிக்கொண்டு முடிக்கிறார் அருணகிரிநாதர்.

மகாபெரியவர்
மகாபெரியவர்


மாணிக்க வாசகரும் திருபெருந்துறையில் குருந்த மரத்தடியில் குரு ஸ்வரூபமாக வந்து பரமேச்வரன் தம்மை ஆட்கொண்டுவிட்ட பரம கருணையினைப் பல இடங்களில் உருகி உருகிச் சொல்லியிருக்கிறார்.

காளிதாசன் தமது நவரத்ன மாலிகையில் அம்பாள் குரு ரூபத்திலே வந்து உயர்ந்த ச்ரேயஸ்களைக் காட்டினாள் என்கிறான்.

நாமாக நம் கர்மாவைக் கழித்துக் கொள்வது கஷ்டம். குருவுக்கு ஈச்வரன் கொடுத்திருக்கிற விசேஷ சக்தியால் அவர் நம் கர்மாவிலே எவ்வளவோ பங்கு கழிந்துபோவதற்குச் சகாயம் செய்கிறார். ஆக, ஈச்வரனும் குருவும் வேறு இல்லை. இந்த நம்பிக்கையோடு ஒருவரைக் குருவாக வரித்துச் சரணடைந்துவிட்டால் பலன் நிச்சயம்!' - காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு இது.

நாமும் வைகாசி அனுஷம் - மகாபெரியவரின் ஜயந்தி திருநாளை முன்னிட்டு, அவரின் பத்ம பாதத்தைச் சரணடைவோம்; குருவருள் பெறுவோம். அவ்வகையில் அவரின் திருவருள் கடாட்சத்தில் நாம் திளைத்து மகிழ, அவர் சொன்ன திருக்கதையும் சில அருள்சம்பவங்களும் அடுத்து வரும் பக்கங்களில் உங்களுக்காக...

‘லீலாவதி கணிதம்!’

`பதறிய காரியம் சிதறும்!’ அனுபவம் வாய்ந்த இந்தப் பொன் மொழியின் உண்மையை நாம் எல்லோருமே ஏதாவது ஒரு தருணத் தில் நேரிடையாக உணர்ந்திருப்போம். அதனால்தான், எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவெடுக்கப் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்ட விதி பற்றி ஓர் உண்மை நிகழ்வைச் சொல்கிறார்.

‘எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது.

அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார்யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து, அதிலே புத்திரிக்கு விவாஹம் செய்துவிட்டால், அவளை தீர்க்கஸுமங்கலியாக இருக்கச் செய்துவிடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போதுபோல் கடிகாரம் கிடையாது. ஆனாலும், வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம்.

அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம் ஒரு துவாரம் வழியாகக் கீழ் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ்மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக் கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம், இன்ன கோடு வரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒரு நாளில் அறுபதில் ஒரு பங்காகும். ‘நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘நாடிகா’ என்பதோடு ‘கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. ஜலமானது, சீதோஷ்ணத்தைப் பொறுத்து ஆவி ஆவதால், இதில் ஏதாவது கணக்குப் தப்பு வரும் என்று, பின்னர் மணல் கடிகாரம் பண்ணினார்கள்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை, மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து, ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியில் இருந்து ஒரு சின்ன முத்து, கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனால், விழுகிற துளி சின்னதாகிவிடும் அல்லவா? இப்படி, இருக்கவேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்தச் சுப நேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்துவிட்டது. அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்துவிட்டாள்.

காஞ்சி மகா பெரியவர்
காஞ்சி மகா பெரியவர்


முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காத தால், இத்தனைப் பெரிய விபரீதம் நடந்து விட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்த போது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்.

கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசார்யார் ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித் தம்மிடம் வந்துவிட்ட லீலாவதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே தம் புஸ்தகத்தை எழுதினார்.

சாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி, முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து, அவர்களுடைய நினைவை நீடிக்கச் செய்கிறார்கள் அல்லவா? பாஸ்கராசார்யார் என்ன பண்ணினார் என்றால், குழந்தையே பெறாத தம்முடைய குழந்தையை, கணித மாணாக்க பரம்பரை முழுவதற்கும் ஓர் ஆதிப் பாட்டியாகச் சிரஞ்சீவித்துவம் பெறும்படியாகத் தம்முடைய புஸ்தகத்துக்கே ‘லீலாவதி கணிதம்’ என்று அவள் பேரை வைத்துவிட்டார்.

அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக் கணிதங்கள் இருக்கின்றன. ‘லீலாவதி கணக்கு’கள் கதை மாதிரியும், விடுகதை மாதிரி யும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும்.

காஞ்சி மகா பெரியவர்
காஞ்சி மகா பெரியவர்`ரசவாத வித்தை!’

காஞ்சி மகா பெரியவர் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார். அங்ஙனம் அவர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கியிருந்தபோது நடந்த சம்பவம்...

திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று மணி ஆயிற்று கிரிவலம் வந்து முடிக்க.வழியில் சில செடிகளைக் கிள்ளி, ‘`பாரு, இதில் ஏலக்காய் வாசனை வரதா?’’ என்று கேட்பார். இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, ‘`இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்!’’ என்று நீட்டுவார். இதுமாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார்.

‘`இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே!’’ என்று சிரித்தார் பெரியவா.


பண்டரிபுரத்தில் நிகழ்ந்த அற்புதம்!

பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு கிடந்த காலம் அது. ஆற்றில் அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த தருணத்தில்தான் காஞ்சி மகாபெரியவர் பண்டரிபுரத்துக்கு எழுந்தருளினார். ஆற்றங்கரையில் அமைந்திருந்த பழைய மண்டபம் ஒன்றில் மகா பெரியவர் தங்கியிருந்தார். ஊரின் வறட்சியான நிலைமை காஞ்சிமுனிவரின் மனதை வாட்டியது போலும். ஒருநாள் மாலை 5 மணியளவில் ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

அவரின் ஜபம் ஒருமணி நேரம் நீண்ட நிலையில், வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்திலேயே பெருமழை பொழிய ஆரம்பித்தது. நெடுநேரம் பெய்து தீர்த்தது அடைமழை. ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு.

நள்ளிரவில் ஓரளவு வெள்ளம் குறைந்ததும் பரிசல் மூலமாக மண்டபம் இருந்த கரையிலிருந்து ஊர் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தார் மகாபெரியவர். அதற்குள் அங்கு கூடி விட்டிருந்த பெருங் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு வணங்கி மகிழ்ந்தது. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகினார்கள்.

மகாபெரியவரோ, ``என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரி நாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிச் சிரித்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism