Published:Updated:

40 ஆண்டுகள், 48 நாள்கள்... அத்திவரதரின் ஆச்சர்யமூட்டும் 2019 டைம்லைன்! #VikatanRewind2019

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. சராசரியாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மக்கள் வெள்ளம்

அத்திவரதர் வைபவம்...

தமிழகம் முழுவதும் இதே பேச்சாக இருக்க, பக்தர்களின் வருகையால் திக்குமுக்காடிப்போனது காஞ்சிபுரம். 48 நாள்களில், ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் தரிசித்துச் சென்ற அத்திவரதர் வைபவம்... ஒரு ரீவைண்ட்!

2
Kanchi Varadaraja Perumal Temple

ஜூலை 1-ம் தேதி முதல் தரிசனம்!

2019 ஜூன் 28-ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட அத்திவரதருக்கு அபிஷேகம் மற்றும் தைலக்காப்பு சாத்தப்பட்டது. ஜூலை 1 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். தொடங்கிய சில நாள்களிலேயே நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் சென்றனர். 48 நாள்கள் பொதுமக்கள் தரிசனத்துக்கு அருள்பாலித்தார் அத்திவரதர்.

3
Entry for the Devotees

2 கிலோ மீட்டர் முன்பாகவே கார்கள் நிறுத்தப்பட்டன!

ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதலே காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஆரம்பத்தில் ரங்கசாமி குளம்வரை இயக்கப்பட்ட பேருந்துகள், பின்னர் காந்தி ரோட்டிலேயே திருப்பிவிடப்பட்டன. காந்தி ரோடு வரை மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்பட்டன. காந்தி ரோட்டில் கார்களும் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்தே பக்தர்கள் சுமார் 2 கி.மீ தொலைவு நடந்தே கோயிலுக்குச் சென்றனர்.

4
Devotees waiting for Dharshan

ஒரே நாளில் 4 லட்சம்பேர் தரிசனம்!

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. சராசரியாக ஒரு நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூலை 10-ம் தேதி முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமானதையடுத்து, காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

5
Varadharaja Perumal Temple, Kanchipuram

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம்!

ஜூலை 12-ம் தேதி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் தரிசனம் செய்தார்.

6
Public crowd

கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு!

ஜூலை 18-ம் தேதி, அத்திவரதரை தரிசிக்க 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

7
Athivaradar

ஜீயர் சடகோப ராமாநுஜர் தந்த யோசனை!

ஜூலை 22-ம் தேதி, ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமாநுஜர் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார். ``அத்திவரதரை மீண்டும் அனந்த சரஸ் குளத்துக்குள் வைக்காமல், ஆலயத்திலேயே வைத்து வழிபட வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். இதற்கு, ஆதரவும் எதிர்ப்புமான கருத்துகள் வலம்வந்தன. கோயில் நிர்வாகம், இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை.

8
Edappadi K. Palanisamy and O. Panneerselvam

தமிழக முதல்வர் தரிசனம்!

ஜூலை 23-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 31-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

9
Athivaradar

அத்திவரதர் நின்ற கோலம்...

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்றகோலத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

10
அலைமோதிய மக்கள் கூட்டம்

கலெக்டரின் சர்ச்சைக்குரிய பேச்சு!

ஆகஸ்ட் 7-ம் தேதி, வி.ஐ.பி வரிசையில் நின்ற சில பக்தர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் அங்கு மேடை அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரி ஒருவரைத் திட்டிய வீடியோ பரவ, அது சர்ச்சையானது.

11
Varadharaja Perumal Temple, Kanchipuram

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அத்திவரதர்!

அத்திவரதர் தரிசனம் தொடங்கிய தினத்திலிருந்து தினம்தோறும் ஏதேனும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. எதிர்பாராமல் சில அசம்பாவிதங்களும் நடந்தன. அதன் காரணமாக, பக்தர்கள் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, பக்தர்கள் அதிக அளவில் வந்து குவிந்தனர்.

நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அத்திவரதர் சிலையை சேதப்படுத்துமா? - நிபுணர் சொல்வது என்ன?
12
Devotees

திருக்குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிலெடுக்கப்பட்ட அத்திவரதர் பெருமாள் சிலையைத் திருக்குளத்தில் மீண்டும் வைப்பதற்கு முன் தைலக்காப்பிடப்பட்டு வைக்கப்பட்டது. பச்சைக் கற்பூரம், லவங்கம், ஏலக்காய், சாம்பிராணி, ஜாதிக்காய், வெட்டிவேர், சந்தனாதி திலம் ஆகியவற்றைக் கலந்து காய்ச்சி தைலம் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தைலத்தைப் பூசி அதன் பிறகே மீண்டும் குளத்தில் வைப்பார்கள்.

செங்கல் தரையில் வைக்கப்படும் அத்திவரதரின் தலைப்பகுதி மட்டும் கருங்கல்லின் மேல் இருக்கும்படி செய்வார்கள். அத்திவரதர் சிலையைச் சுற்றிலும் நாகர் சிலைகளை வைப்பார்கள். அத்திவரதர் சிலையின் மீதும் நாகர் சிலை ஒன்றை வைத்து மூடிவிடுவார்கள். பாம்புகள், மீன்கள், தவளைகள் ஆகியவை சிலையை சேதப்படுத்தாமல் தடுப்பதற்காகவே தைலக்காப்பிடப்படுகிறது.

13
Devotees

1,00,07,000 பேர் வரை தரிசனம்!

பொதுமக்களுக்கான தரிசனம் முடிந்தநிலையில் ஆராதனைகள் முடிந்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட்டார். அத்திவரதர் வைபவம் 2019 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 16 வரை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஒரு கோடியே ஏழாயிரம் பேர் வரை தரிசனம் செய்தனர். அத்திவரதர்... தமிழகத்தில் இரண்டு மாதங்களாக இதுவே பொது மந்திரமாக இருந்தது. மக்கள், பக்தர்கள், ஊடகங்கள் என எங்கெங்கும் அத்திவரதரே நிறைந்திருந்தார்.

14
Kanchipuram Bus

உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள்!

அத்திவரதரைக் காண தினந்தோறும் வந்துசென்ற லட்சக்கணக்கான பக்தர்களால் உள்ளூர்வாசிகளுக்கு அசௌகர்யங்கள் ஏற்பட்டன. இன்னொரு பக்கம், இந்தத் திடீர் மக்கள் வெள்ளத்தால் அங்கு சில வணிகங்கள் ஜோராக நடந்தன.

இனி 2059-ம் ஆண்டில்தான் அத்திவரதர்

காஞ்சிபுரம் மிகவும் சிறிய நகரம். அந்த நகரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்திருக்கும். அத்திவரதர் தரிசனம் அதை மெருகூட்டி, காஞ்சிபுரம் ஓர் ஆன்மிக பூமி என்பதை மெய்ப்பித்தது. இப்படிப்பட்ட அபூர்வ தருணம், தரிசனம் இனி 2059-ம் ஆண்டில்தான் வாய்க்கும்.

பெரும்பண்டிகையின் நிறைவு!

ஆரம்பத்தில் அசௌகர்யங்களால் திணறிய காஞ்சிபுரம் மக்கள், போகப்போக, இது அவர்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்பதை உணர்ந்தனர். தினந்தோறும் மக்களின் காலடிச்சத்தம் இரவும் பகலும் நிறைந்திருந்தன. 48 நாள்களுக்குப் பின்னர், ஒரு பெரும் பண்டிகையின் நிறைவுக்குப் பின் வீட்டில் அடையும் வெறுமை போன்றதோர் அமைதியைக் காஞ்சிபுரம் கண்டது.

15
அத்திவரதர்

பாஸ் விநியோகத்தில் வேட்டை!

ஒவ்வொரு நாளும் பாஸ் விநியோகம் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்குக் குறையாமல் நடந்ததாகவும், பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்பிலும் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அத்திவரதர் வைபவத்தில் ரூ.1,000 கோடி 'வேட்டை'... சுருட்டல் நடந்தது எப்படி?

அத்திவரதர் குறித்த பொக்கிஷ நினைவுகள்!

அத்திவரதரை தரிசித்தவர்கள், வைபவத்தை முன்னிட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபட்டவர்கள், நிர்வாகத்தினர், காவல்துறையினர், அதிகாரிகள், இரவு பகலாக உழைத்தவர்கள் என அனைவரின் நினைவுகளிலும் அத்திவரதர் குறித்த நினைவுகள் பசுமையாக நிறைந்தன. தங்கள் வாழ்க்கையின் பெரும் பாக்கியமாக, பொக்கிஷமாக அந்த நினைவுகளை அவர்கள் பாதுகாப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு