Published:Updated:

அத்திவரதரை தரிசித்த 45 லட்சம் பேர்! - சயனக் கோலத்திலிருந்து நின்ற நிலைக்கு மாறுகிறார்

JAYAVEL B

கடந்த 31 நாள்களாக சயனக் கோலத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிற பட்டாடையிலும் பூ, துளசி, வெட்டிவேர் போன்ற அலங்காரத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துவருகின்றனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். கடந்த 31 நாள்களாக ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிற பட்டாடையிலும், பூ, துளசி, வெட்டிவேர் போன்ற அலங்காரத்திலும் அத்திவரதர் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சயனக் கோலத்தின் கடைசி நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடையில் மல்லிகை மற்றும் துளசி மாலை அணிந்து காட்சியளித்தார். `அத்திவரதர் வைபவத்தில் 24 நாள்கள் சயனக் கோலத்திலும், 24 நாள்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிப்பார்' எனத் தகவல் பரவியது. ஆனால் கடைசி 17 நாள்களே நின்ற கோலத்தில் காட்சியளிக்க இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 23, 24 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அத்திவரதரை தரிசனம் செய்வார் எனத் தகவல் பரவியது. இதையடுத்து, அன்று வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் தரிசனத்தை தவிர்த்திருந்தனர்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

அதுபோல், சயனக் கோலத்தின் கடைசி நாளான இன்று மோடி வருவார் எனக் கடந்த சில நாள்களாகவே சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் இன்றும் காலையில் இருந்தே கூட்ட நெரிசலின்றி தேவராஜ பெருமாள் கோயில் காட்சியளித்தது. மோடி வருவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நின்றகோலத்தில் அருள்பாலிக்க இருக்கும் அத்திவரதர்! - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

சயனக் கோலத்தின் கடைசி நாளான இன்று காலையிலிருந்தே பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். பல லட்சம் மக்கள் மணிக்கணக்காகக் காத்திருக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறிச் சென்றுவிடுகின்றனர். இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். இன்று மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைவதால் கோயிலில் இன்று முழுவதும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அத்திவரதரை தரிசிக்கக் கூடிய மக்கள்
அத்திவரதரை தரிசிக்கக் கூடிய மக்கள்

வழக்கம்போல நாளை காலையிலிருந்து அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும். நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க அதிகளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களிலிருந்து கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று இரவு முழுவதும் கோயில் பகுதிகளில் தூய்மைப் பணி மற்றும் கட்டமைப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.