பிரீமியம் ஸ்டோரி

தங்கமென

மின்னும் கந்தனின்

அங்கமெல்லாம்

அண்டபகிரண்டமும்

கண்டாள் வள்ளி!

முக்திக்கு வித்தாகும்

முருகனின் மேனியில்

விண்ணைக் கண்டாள்

மண்ணைக் கண்டாள்;

நிறைவில் தன்னையே

கண்டாள்!

அடியவர் சிந்தையில்

வைத்துப் போற்றும்

கந்தனின் மலர்ப்பதம்

பணிந்தாள்; கண்ணீர்

உகுத்தாள்!

கந்தன் வந்தான்!

வள்ளிக் குறத்தியை

அள்ளியெடுத்த வேலன்,

விழிநீர் துடைத்தான்;

வழித்துணை

நானென்றான்!

அவ்வேளை

வேடர்ப்படை

மீண்டும் வந்தது.

மாற்றான் பிடியில்

குலமகளைக் கண்டு

நம்பி மனம் கொதித்தது;

சினம் கொண்டு

வேடர்ப்படை

குதித்தது. அவர்கள்,

வில் தொடுத்தனர்;

வேல் விடுத்தனர்;

சிலர் வளரி

எய்தனர்; பலர்

களறி ஆடினர்.

எனினும் பலனற்றுத்

திகைத்தனர்!

கந்தன் வந்தான்!

அந்த

விளையாட்டுச்

சமரை விரைவில்

முடிக்க எண்ணி,

திருக்கரத்தில்

வேலெடுத்தான்

முருகன்.

மயூரங்கள் அகவ

சேவல்கள் கூவ

வெள்ளிடி முழங்க

திசையெட்டும் நடுங்க

சக்திவேல் ஒளிர்ந்தது;

வேடர்க்கு,

வந்தது யாரென்று

புரிந்தது!

குலதெய்வமாம்

குமரனைக் கண்டு

உள்ளம் சிலிர்க்க,

ஊனுடம்பு குலுங்க

மண்விழுந்துப்

பணிந்தனர்;

முப்பத்துமுவர்க்கத்

தமரரும் பேணுமடி

வேணுமெனத்

தொழுதனர்!

கந்தன் வந்தான்!

தாள் பணிந்த

வேடர்க்கு

வாழ்வளித்தான்

வேலன்.

அவர்களுக்கு

மட்டுமா?

நமக்கும்தான்...

அவனருளால்

அகத்தியர் தந்தார்

இலக்கணம். நக்கீரர்

தந்தார் ஆற்றுப்படை.

ஒளவை தந்தாள்

பக்திச் சுவை.

பிணிக்கு நன்மருந்தைத்

தந்தது, போகரின் கலை!

இன்னும்...

மருதமலையின்

பாம்பாட்டிச் சித்தரும்

சென்னிமலையின்

பிண்ணாக்குச் சித்தரும்

ஞானமலையின்

பாலைச் சித்தரும்

தோரணமலைத்

தேரையரும்

ஊதிமலைக்

கொங்கணரும்

எழிலார்ந்த

பண்பொழிலின்

சிவகாமி அம்மையும்

பாம்பன் சுவாமிகளும்

பாலதேவராயரும்

சிதம்பரம் சுவாமிகளும்

வள்ளிமலை சுவாமிகளும்

வள்ளல் பெருமானும்

வாரியார் தாத்தாவும்

என...

கந்தனின் வரலாறு

புகழும் அருளாளர் பலரும்,

கந்தனின் கதை

சிந்தைக்கு விருந்து;

வாழ்வுக்கு

மருந்தென்பர்!

அவர்தம்

அருள்வழியில்

சிந்தையில் கந்தனை

வைத்தால், விந்தைகள்

நிகழும்; வாழ்க்கை

வரமாகும்!

எண்ணத்தில் சிறப்பு

வண்ணத்தில் சிவப்பு

வாரத்தில் செவ்வாய்

மாதத்தில் சஷ்டி

விண்மீனில் விசாகம்

வினை தீர்க்கும்

கார்த்திகை

கந்தனுக்கு உவப்பு.

என்றாலும் நாளும்

வழிபடலாம் நம்

நாயகனை!

செவ்வரளிப்

பூ சூட்டி

நெய்யில்

தீபமிட்டு

சர்க்கரைப்

பொங்கலிட்டு

கந்தனை

தினம் துதிக்க

நாளும் கோளும்

நன்மை செய்யும்;

வேலும் மயிலும்

துணையாகும்!

(நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு