Published:Updated:

சகல வளங்களும் அருளும் ஷட்கோணக் கோலம் - கந்த சஷ்டியில் வழிபாடு செய்வது எப்படி?

ஷட்கோணக் கோலம்

பொதுவாக யந்திர ரூபமான கோலங்களை ஏதேனும் பீடத்தில் அல்லது பூஜைக்கு உரிய தட்டுகளில் வரைவது நல்லது. ஷட்கோணக் கோலத்தில் ஆறு முக்கோணங்களிலும் சரவணபவ என்று எழுதி அதில் ஒவ்வொரு மலர் வைக்க வேண்டும்.

சகல வளங்களும் அருளும் ஷட்கோணக் கோலம் - கந்த சஷ்டியில் வழிபாடு செய்வது எப்படி?

பொதுவாக யந்திர ரூபமான கோலங்களை ஏதேனும் பீடத்தில் அல்லது பூஜைக்கு உரிய தட்டுகளில் வரைவது நல்லது. ஷட்கோணக் கோலத்தில் ஆறு முக்கோணங்களிலும் சரவணபவ என்று எழுதி அதில் ஒவ்வொரு மலர் வைக்க வேண்டும்.

Published:Updated:
ஷட்கோணக் கோலம்
'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்கிறது நம் தமிழ் வழக்கு. தமிழ்ச்சமூகத்தின் ஆதி வழிபாடுகளில் ஒன்று முருக வழிபாடு. அப்படிப்பட்ட முருகக்கடவுளை வழிபட உகந்த தினங்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டித் திருநாள். பொதுவாக ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி முருக வழிபாட்டுக்கு ஏற்றது என்பார்கள் பெரியோர்கள். அந்த நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி, வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சஷ்டி திதிகளில் எல்லாம் தலையாயது கந்த சஷ்டி என்பார்கள். ஐப்பசி மாதம் அமாவசையைத் தொடர்ந்து வரும் வளர்பிறை சஷ்டி திதியே கந்த சஷ்டி எனப் போற்றப்படும். ஓர் ஆண்டில் வரும் 24 சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி எனப்படும் ஆறு நாள் விரதம் இருந்தாலே ஆண்டு முழுவதும் சஷ்டி விரதம் இருந்த பலனைப் பெறலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

பெரும்பாலும் தீபாவளிக்கு அடுத்துவரும் தினத்தில் கந்த சஷ்டி விரதம் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சஷ்டி விரதம் தொடங்கியது. அதன் உச்சமாக நாளை 30.10.22 அன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. சூரசம்ஹாரம் நடைபெறும் சஷ்டி திதியோடு கந்த சஷ்டி விரதமும் முடிவுக்கு வரும்.

கந்த சஷ்டி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. பகைவர்களின் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள், வறுமையில் வாடுபவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண வரம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் என வாழ்க்கை செழிக்க உதவும் அனைத்து வேண்டுதல்களும் கந்த சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலனாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் ஆறுநாள்களும் விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். சிலர் ஆறாம் நாளான சஷ்டி அன்று மட்டும் விரதம் இருந்து வழிபடுவார்கள். முதல் ஐந்து நாள்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் ஆறாம் நாள் விரதம் இருப்பது வழக்கம். ஆறாம் நாளே சூர சம்ஹார தினம். எனவே அந்த நாளில் விரதம் இருப்பதும் மிகவும் விசேஷம்.

கந்த சஷ்டி 6 ம் நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி?

நாளை (30.10.22) காலை சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். சூரியனை தரிசனம் செய்யும்போது முருகக் கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். பிறகு வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் கந்த சஷ்டிக் கவச பாராயணம் செய்வது சிறப்பு. ஒரு நாளில் முப்பத்தாறு முறை கந்த சஷ்டிக் கவசம் பாராயணம் செய்தால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக வேகமாக வாசித்தால் கந்த சஷ்டிக் கவசத்தை 10லிருந்து 12 நிமிடங்களுக்குள்ளாக முடித்துவிடலாம். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் 5 அல்லது ஆறுமுறை பாராயணம் செய்ய இயலும். சத்தமில்லாமல் மெல்லிய குரலில் அல்லது மனதுக்குள்ளாகவே பாராயணம் செய்தால் போதுமானது. காலை ஆறுமணிக்குப் பாராயணம் தொடங்கினால் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்தில் 36 முறை பாராயணம் செய்துவிட முடியும். இடைவேளை எடுத்துக்கொண்டு செய்தாலும் மாலை சூர சம்ஹார நேரத்துக்கு முன்பாக முடித்துவிட முடியும். பொதுவாக சூரசம்ஹாரம் மாலை 4 மணிக்குத் தொடங்கும் (திருச்செந்தூர் வழக்கப்படி). எனவே அதற்கு முன்பாக நிச்சயம் 36 முறை பாராயணம் செய்ய அனைவருமே முயலலாம்.

ஷட்கோணக் கோலம்... சிறப்புகள் என்ன?

சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் விசேஷமானது. அவனுக்கு உகந்த கோலமும் ஷட்கோணக் கோலம்தான். முருகனின் யந்திரமாகவே திகழும் இந்தக் கோலத்தைப் படத்தில் காட்டப்பட்டவாறு வரைந்துகொள்ளுங்கள். பொதுவாக யந்திர ரூபமான கோலங்களை ஏதேனும் பீடத்தில் அல்லது பூஜைக்கு உரிய தட்டுகளில் வரைவது நல்லது. ஆறு முக்கோணங்களிலும் ச,ர,வ,ண,ப,வ என்று எழுதி அதில் ஒரு மலர் வைக்க வேண்டும். நடுவே ஓம் என்று எழுதி அதில் ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். சுற்றி ஆறு எழுத்துகளிலும் ஆறு அகல் விளக்குகளையும் ஏற்றலாம். பின்பு மலரும் அட்சதையும் கையில் எடுத்துக்கொண்டு முருகப்பெருமான் அந்த தீபத்தில் எழுதருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உடனே தீபத்துக்கு ஒரு நிவேதனம் (ஏதேனும் பழம் அல்லது உலர் திராட்சை) சமர்ப்பிக்க வேண்டும். பிறகு நம் அர்ச்சனைகள், பாராயணங்கள் அனைத்தும் அந்த விளக்கின் முன்னே செய்ய வேண்டும்.

ஷட்கோணக் கோலம்
ஷட்கோணக் கோலம்

விளக்கை அணையாமல் பராமரிக்க முடியும் என்றால் அந்த நாள் முழுவதும் அதை அப்படியே வைத்திருக்கலாம். இல்லை என்றால் நாம் அருகே இருந்து அர்ச்சனை செய்தபின்பு கொஞ்ச நேரம் கழித்து சாந்தப் படுத்திவிடலாம். நம் அர்ச்சனைகள் முடிந்த பின்பு சுவாமியை யதாஸ்தானம் செய்ய வேண்டும். அதாவது எழுந்தருளியமைக்கு நன்றி சொல்லி வழியனுப்புதல் செய்ய வேண்டும். இதற்குரிய மந்திரங்கள் அறியவில்லை என்றால் கவலையில்லை. மனதார நினைத்து வேண்டிக்கொண்டு சொன்னாலே போதுமானது. அர்ச்சனை முடிந்ததும் தீபாராதனைக்கு முன்பாகக் கட்டாயம் இரண்டு நிவேதனங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

கந்த சஷ்டி
கந்த சஷ்டி

இவ்வாறு ஷட்கோணக் கோலமிட்டு வழிபடுவதன் மூலம் நம் கவலைகள் யாவும் தீரும் என்கிறார்கள். குடும்பத்தில் நிம்மதியில்லாமல் எப்போதும் சண்டை சச்சரவு என்று இருப்பவர்கள், உறவினர்களால் பெரும் தொல்லைகளை சந்திப்பவர்கள், எவ்வளவு பொருள் வந்தாலும் சேமிக்க முடியாமல் திண்டாடுபவர்கள், வாழ்வில் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் என அனைவரும் இந்த ஷட்கோணக் கோல வழிபாட்டைச் செய்யலாம். இதை கந்த சஷ்டி அன்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு சஷ்டி திதி அன்றும் மேற்கொள்ளலாம். கந்த சஷ்டி அன்று செய்தால் பலன் அதிகம் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் ஷட்கோண தீபமிட்டு கந்த சஷ்டி அன்று கந்தனை வழிபடுங்கள். வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்றிடுங்கள்.