Published:Updated:

‘வினைகள் தீர்க்கும் வேலே போற்றி...’ - கந்த சஷ்டிப் பெருவிழா சூர சம்ஹாரம் இன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருச்செந்தூர் கந்த சஷ்டிப் பெருவிழா
திருச்செந்தூர் கந்த சஷ்டிப் பெருவிழா

அடுத்த கணம் ஜயந்திநாதர் தன் கோயிலிலிருந்து வெளியே எழுந்தருள வேட்டுகளின் சத்தம் விண்ணைப் பிளந்தது. அடுத்த நொடி எழும் ‘முருகா முருகா’ என்னும் கோஷம் எழுந்து வேட்டுகளுக்கே போட்டியாகி வெடித்து ஒலித்தது.

சூரசம்ஹாரம்... செந்தூரின் கடற்கரை எங்கும் மணற்பரப்பு மறைந்து மனிதப் பரப்பென விரிந்திருந்தது. இந்த நாளுக்கு இந்த நேரத்துக்காகத்தான் ஆண்டுதோறும் காத்திருந்து ஆறுநாள்கள் விரதமிருந்து அற்புதமாய்த் திரண்டு வரும் இந்த பக்தர்களின் கூட்டம்.

எப்போது வேண்டுமானாலும் அந்த செந்திலாண்டவன் தன் கை வேலோடு இந்தக் களத்துக்கு வந்துவிடக்கூடும். அவன் வருகையைத் தவறவிடக்கூடாது என்னும் தணியாத ஆர்வத்தில் நோக்கும் பல லட்சம் கண்களின் அணிவகுப்பு காத்திருந்தன. கந்தன் வரும் நேரம் கஷ்டங்கள் தீரும் என்பதைக் கட்டியம் கூற வானில் வட்டமிட்டான் கருடன் .

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

அடுத்த கணம் ஜயந்திநாதர் தன் கோயிலிலிருந்து வெளியே எழுந்தருள வேட்டுகளின் சத்தம் விண்ணைப் பிளந்தது. அடுத்த நொடி எழும் ‘முருகா முருகா’ என்னும் கோஷம் எழுந்து வேட்டுகளுக்கே போட்டியாகி வெடித்து ஒலித்தது. வேதியரும் ஞானியரும் முருகனின் சேவகரும் சூழ வேல்ப்படையோடு கந்தன் கடற்கரைக்கு வந்தான். கோபம் அவன் முகத்தில் கொப்பளிக்கிறது.

உண்மையில் சூரனை சம்ஹரித்து எத்தனை யுகங்களாகிவிட்டன? இன்னும் எதற்கு முருகனுக்கு இந்த ஆவேசம் என்று தோன்றும். ஆனால் அந்த ஆவேசத்தைக் கண்டவர்கள் அனைவரின் மனத்திலும் இருக்கும் அறியாமையும் ஆணவமும் அந்த தரிசனத்தில் அகன்று ஓடிவிடும். பார்ப்பவர்கள் பார்வைகள் தூய்மையாகும். மன இருள் விலகும். அவர்கள் நெஞ்சில் இருந்த துயரங்கள் விலகும்.

இந்த உலகில் தம் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்க யார் இருக்கிறார்கள் என்னும் திமிரோடு உலாவரும் மனிதர்களைப்போல ஆணவத்தோடு சூரனும் அவன் படைகளும் செந்திலின் முன்னே வந்து நிற்கின்றனர். தெய்வம் உண்டென்று சொல்பவர்கள் ஒருபுறமும் இல்லை என்று சொல்பவர்கள் மறுபுறமும் இந்த உலகில் இருக்கலாம். அது பிழையில்லை. ஆனால், தெய்வம் இல்லை என்ற தருக்கில் மற்றவரை வாட்டும் அநீதிதான் பிழை. அந்த அநீதியை விரும்பிச் செய்தான் சூரன். தெய்வத்தைக் கண்டு வரம் பெற்றவன், அந்த தெய்வமே நேரில் வந்தபோதும் அதை ஏற்க மறுத்தான். அந்த அகந்தைதான் இந்தக் கடற்கரையை அவனுக்கு அழிவின் கரையாக மாற்றியது.

சூரர்கள் ஒவ்வொருவராகக் கந்தனிடம் மோதுகின்றனர். அதற்கு சாட்சியாக ஒவ்வொருவராக மும்முறை முருகனை வலம் வருகிறார்கள். பின்பு அவன் வெல்லமுடியாதவன் என்று உணர்ந்து பின்னோக்கி ஓடுகிறார்கள். பயந்து ஓடினார்களே தவிர பதம் பணிந்து ஓடவில்லை. கந்தனைக் கண்டு பணியாமல் சென்றவனின் சிரம் அறுக்கப் புறப்படுகிறது வேல் .

காக்கக் காக்க கனவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட

பக்தர்கள் மனம் கவசம் பாட அதை அறியாதவர்கள் அரோஹரா போட... பாய்ந்து சென்ற வேல் சூரர்களின் தலையை கொய்து திரும்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று தேவர்கள் ஆசுவாசம் கொண்டதுபோலவே பக்தர்களும் ஆசுவாசம் கொண்டனர். ஒவ்வொரு தலையாக அறுபட அறுபட வேலின் பெருமை விளங்கிக் கொண்டிருந்தது. வேலின் வேகம் கண்டு அலைகடல் கூடக் கொஞ்சம் அடங்கி ஒடுங்கியது. பக்தர்களின் ஆரவாரம் பெருகியது.

அக்கிரமக்காரர்களுக்கு இறுதியில்கூட அச்சம் வருகிறதே தவிர அறிவு வருவதில்லை. சூரன் தன் மாயச் சித்துகளால் குமரனோடு மறைந்து போரிட்டான். மால்மருகன் அறியாத மாயமா... அத்தனை வித்தைகளையும் முறித்து வீழ்த்தினான் ஆறுமுகன்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

இறுதியில் மாமரமாகி உருமாறி நின்றான் சூரன். வேல் அதையும் துளைத்து வெற்றிவேலாகி அவன் கை சேர்ந்தது. அரோகரா கோஷம் திசையெங்கும் ஒலித்தது. அது செந்தில் ஆண்டவன் செவிகளில் சேர்ந்தது. பக்தர் குரல் கேட்டு அவன் முகம் மலர்ந்தது. அதுவரை சூரியன்போலச் சூடாய் இருந்தவன் முழுமதிபோல குளுமை வீசினான். பார்க்கும் பக்தர்கள் பக்தியில் திளைத்தனர். தம் பாவங்கள் நீங்கின என்று பரவசம் உற்றனர். உள்வாங்கிய கடல் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் கரையாடியது. முருகபக்தர்கள் கூட்டம் அதில் இறங்கி நீராடியது. அலையடித்து பக்தர்களை ஆசீர்வதித்தது கடல்.

பரமாத்மாவைச் சேர்வதுதானே எந்த ஆத்மாவுக்கும் லட்சியம்... பலரும் தவம் செய்து சேரும் திருவடியை சூரன் போர் செய்து பெற்றுவிட்டான். சேவலும் மயிலுமாகி சேயோனின் கை சேர்ந்துவிட்டான். அழிக்க நினைத்திருந்தால் அக்கணமே அழித்திருப்பான் அழகன். ஆனால் தன் திருக்கை சேர்ந்தவரைக் காப்பதுவே அவன் கடமையல்லவா... இந்த அற்புதத்தைச் சொல்வதுதானே சூரசம்ஹாரத் திருக்காட்சி.

என்றோ கண்ட அந்தத் திருக்காட்சி இன்றும் சிந்தையில் ஆடுகிறது. இறைவனின் சந்நிதியை நாடுகிறது. அப்படி ஓர் அற்புதமான கந்த சஷ்டித் திருநாள்தான் இன்றும். ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை.

அதனால என்ன... அகக்கண்ணால் தரிசிப்போம். இருக்கும் இடத்திலிருந்து அவன் திருவடியை சேவிப்போம். அடுத்த ஆண்டுக்குள் அவன் அருளால் அல்லல்கள் நீங்கிவிட்டால் சூரசம்ஹாரத்தை சூழ்ந்திருந்து தரிசிப்போம். அந்த நாளுக்காய் இன்றைக்கே வேண்டிக்கொள்வோம். ஆறுமுகன் காத்தருள்வான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு