Published:Updated:

கந்தன் திருவிளையாடல்

கந்தனின் திருவிளையாடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தனின் திருவிளையாடல்கள்

ஓவியம்: ம.செ

திருவிளையாடல்... தெய்வம் மனிதர்களுக்கு அருளத் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு. பக்தியின் பெருமையை, பக்தர்தம் அருமையை இந்தப் பாருக்கு விளக்கும் பரமனின் அருளாடல். அப்படி ஈசன் நடத்திய லீலைகளே திருவிளையாடல்கள் ஆனது. அதையே புராணமாகவும் செய்தார் பரஞ்சோதி முனிவர்.

சிவனும் செவ்வேளும் வேறுவேறல்ல. முருகனை ஆறுமுகச் சிவம் என்றே ஞானநூல்கள் போற்றுகின்றன. அவ்வகையில், சிவனின் திருவிளையாடல்களுக்கு நிகராக முருகப்பெருமானும் அருளாடல்கள் பல நிகழ்த்தியிருக்கிறான். அன்பர்க்கு இரங்கி, ஆபத்தில் உதவி, அவர்தம் துயர் நீக்கி, அருட்காட்சி தந்து, ஆணவம் அகற்றி, அடியவரை உயர்த்தி ஆறுமுகன் செய்த திருவிளையாடல்கள் அநேகம்.

அவற்றில் சில முருகு திருவிளையாடல்களை இங்கு தியானிப்போம். அந்த ஆண்டவன் திருவடியை சேவிப்போம்.

thiruvannamalai
thiruvannamalai

தூணில் வெளிப்பட்ட கந்தன்!

றைவன் ‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.’ இதை மெய்ப்பிக்கும் வண்ணம் தூணிலிருந்து வெளிபட்டு அருளியவர் இருவர். ஒருவர், பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கத் தூணைப் பிளந்து வந்தவர். மற்றொருவர் பக்தனைப் பெருமைப்படுத்தத் தூணிலிருந்து வெளிப்பட்டவர். முதலாமவர் நரசிம்மர்; இரண்டாமவர் முருகக் கடவுள். கந்தக் கடவுள் நிகழ்த்திய இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது திருவண்ணாமலையில்.

திருவண்ணாமலை மன்னர் ப்ரபுடதேவன். நல்லோரின் நட்பை நாடிப் பெறுபவர். அவ்வகையில் அருணகிரிநாதரும் இவருக்கு நண்பர்.முருகனை நேரில் கண்டவர் அல்லவா அருணகிரி... அதனால் அவரை வேண்டினால், ஒருநாள் அந்த முருகனைக் காணலாம் என்பது மன்னரின் எண்ணம்.

ப்ரபுடதேவன் அவையில் சம்பந்தாண்டான் என்னும் அம்பாள் உபாசகர் இருந்தார். அவர் இறையருள் பெற்றவர் ஆனாலும் உள்ளமெல் லாம் ஆணவ இருள். மன்னனுக்கும் அருணகிரிக்கும் இருந்த நட்பை சம்பந்தாண்டான் விரும்பவில்லை. அருணகிரியை அவமானப்படுத்த விரும்பிப் போட்டிக்கு அழைத்தார்.

தன் சக்தியால் தேவியை சபையில் எழுந்தருளச் செய்வதாகவும், முடிந்தால் அருணகிரி முருகப்பெருமானை அழைத்து நிறுத்தட்டும் என்றும் சவால் விட்டான். அண்ணாமலையின் சிவகங்கைத் தீர்த்தக் கரையில் மன்றம் கூடியது. சம்பந்தாண்டான் தேவியை துதித்தான். வேண்டி அழைத்தால் ஓடி வருபவள், வேண்டுமென்றே அழைத்தால் எப்படி வருவாள்? சம்பந்தாண்டான் தன் முயற்சியில் தோல்வி அடைந்தார். இப்போது அருணகிரியின் முறை. தீர்த்தக்குளத்தில் மூழ்கி நீராடி முருகனை மனமாரத் துதிக்கத் தொடங்கினார்.

அம்பாள் சிறு விளையாட்டை நிகழ்த்த விரும்பினாள். முருகனைத் தன் மடியில் அமர்த்தித் தன் கரத்தால் அணைத்துக்கொண்டாள். அருண கிரியின் பாடலுக்கு எழுந்தோடி வரமுடியாமல், அன்புக்கும் பக்திக்கும் இடையில் அல்லாடினான் முருகப்பெருமான். இந்த எழில்காட்சி அருணகிரியின் மனக்கண்ணில் தெரிந்தது. தன் பாடலின் முறையை மாற்றினார்.

‘முருகா! உன் இருபுறமும் வள்ளியும் தெய்வானையும் அமர்ந்திருக்க, அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பதால், என் முறையீடு உனக்குக் கேட்கவில்லையா? உன் சந்நிதியை அடைய முடியாமல் முனிவர்களும் தேவர்களும் பிரமன் முதலானவர்களும் அடியவர்களும் முருகா முருகா என்று அழைக்கும் இரைச்சலில் என் குரல் கேட்காமல் போய்விட்டதா? எனக்காக உன்னிடம் பரிந்துபேச ஒருவர்கூட இல்லையா? மயில் ஆடி வர அதில் நீ ஏறி எனை வந்து காக்கவேண்டும்’ என்று பொருள்படுமாறு அருணகிரி பாடினார்.

இதைக்கேட்டதும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல முருகன் ஆடுவதற்கு முன்பே மயில் ஆடத் தொடங்கிவிட்டது. உருக்கமான விண்ணப்பமும் சிலிர்ப்பான மயில் நடமும் கண்ட அன்னைக்கு, மனமும் கரமும் ஒருசேர நெகிழ்ந்தது. மெள்ள விடுத்தாள்... முருகனைச் செல்லவிடுத்தாள்.

மயில்மீதேறி அமர்ந்த முருகன், ஒரு கணமும் தாமதிக்கக்கூடாது என்று அங்கிருந்த மண்டபத் தூணிலிருந்து வெளிப்பட்டார். அருணன் உதிப்பதை எப்படி அகிலத்தில் உள்ளோர் எல்லாம் காணமுடியுமோ, அதுபோன்று அங்கு முருகன் உதித்ததை, அண்ணாமலையில் மன்னவரிலிருந்து மக்கள்வரை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.

அருணகிரியாருக்காகத் திருவண்ணாமலையில் தூண் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த காரணத்தால், அங்கு அருளும் முருகனுக்கு கம்பத்து இளையனார் என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் நாம் அந்தச் சந்நிதியை தரிசிக்கலாம்.

thirupparangundram
thirupparangundram

சிறை மீட்பான் கந்தன்!

வா
ழ்வில் முடங்கிப்போக நேரிட்டால் புலம்பிப் போவோம். ஆனால் புலவர் ஒருவரோ கலங்காமல் தன் புலமையால் முருகனைத் துதித்து துயரை வென்றார்.

நக்கீரர் சங்ககாலப் புலவர். ஈசனோடு நேருக்கு நேராக வாதம் செய்தவர். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட பொறிகள் பட்டதால் அவரின் முன்வினை தீய்ந்தது. ஆனாலும் அவரின் மேனியில் கொஞ்சம் காயங்களும் உண்டாயின. உடல் நலம் பெறவும் உள்ளம் வளம் பெறவும் அவர் சிவபூஜை செய்யத்தொடங்கினார்.

ஒருமுறை அவர் திருப்பரங்குன்றத்தின் பொய்கைக் கரையில் அமர்ந்து சிவபூஜையைத் தொடங்கினார். அப்போது ஒரு மாயக்காட்சி. மரம் ஒன்றிலிருந்து பழுப்பு இலை ஒன்று உதிர்ந்தது. காற்றில் இலை வீழும் அழகில் நக்கீரரின் மனம் லயித்தது.

கந்தன் திருவிளையாடல்
கந்தன் திருவிளையாடல்

இலையில் ஒருபாதி நீரிலும் மறுபாதி தரையிலும் வீழ்ந்தது. மாயத்தின் அடுத்த கட்டமாக, நீரிலிருந்த இலைப்பகுதி மீனாகவும் தரையிலிருந்த பகுதி பறவையாகவும் மாறின. மீன் நீருக்குள் செல்ல, பறவையோ விண்ணுக்குச் செல்லத் துடித்தது. இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி. சிவபூஜை மறந்து நக்கீரர் ரசித்த கணத்தில் அங்கு பூதம் ஒன்று தோன்றியது. அதன் பெயர் கற்கிமுகி. சிவபூஜையில் கவனம் பிசகியதால் நக்கீரரைப் பிடித்துச் சிறையிலடைத்தது பூதம். அந்தச் சிறையில் அதுவரை 999 பேர் இருக்க, நக்கீரர் ஆயிரமாவதாகச் சேர்ந்தார்.

ஆயிரம்பேர் சேர்ந்ததும் அனைவரையும் தின்று தீர்ப்பது பூதத்தின் திட்டம். அத்தனை பேரும் அலறிப் புலம்பினர். நக்கீரரோ மனம் கலங்காமல் மருகனை நினைத்தார். அருந்தமிழ்ப் பாடல்களால் அவனைத் துதித்தார். முருகன் மகிழ்ந்தான். அடியவர்களைக் காக்கத் தன் வேலினை விடுத்தான். வேல் பூதத்தை வதம் செய்தது. ஆயிரம் பேரும் அவன் அருளால் சிறையிலிருந்து விடுதலை பெற்றனர்.

இந்தத் தருணத்தில் நக்கீரர் பாடியருளிய அந்த ஒப்பற்ற நூல்தான் திருமுருகாற்றுப்படை!

thiruchendhoor temple
thiruchendhoor temple

பதக்கம் தந்தான் பாடல் கேட்டான்

து 15-ம் நூற்றாண்டு. ராமநாதபுரம் மாவட்டம் சன்னாசி கிராமம். பகழிக்கூத்தர் அங்குதான் பிறந்தார். வில் அம்புகள் செய்யும் கொல்லர் குலத்தில் பிறந்தாலும் சொல் அம்புகள் தொடுத்துக் கவி செய்ய வல்லவர் கூத்தர். (இவரை வைணவ சமயம் சார்ந்தவர் என்று சொல்வதும் உண்டு)

‘ஏனோ, யார் மீதும் பாடல்கள் பாட மாட்டேன்’ என்று உறுதியாய் இருந்தார் கூத்தர். தமிழ்க் கடவுள் அல்லவா முருகன். நற்றமிழ் பாடல்கள் கேட்க விரும்பினான். ஒரு விளையாடலை மேற்கொண்டான்.

உறங்கிக்கொண்டிருந்தார் பகழிக் கூத்தர். கனவில் தோன்றினான் கந்தன். திருச்செந்தூர் என்றாலே இலை விபூதிதானே. ‘நானே திருச் செந்தூர் வாழ் கந்தன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அருட்பிரசாதமாக இலை விபூதியையும் ஓர் ஓலையையும் அவர் கையில் தந்தான். பகழிக்கூத்தருக்கு மேனி சிலிர்த்தது. உணர்வுப் பெருக்கில் கண்ணீர் பெருகியது. உறக்கம் கலைந்து எழுந்தார். கந்தன் வந்துபோன தடமாய் விபூதியும் ஓலைச் சுவடியும் அருகில் இருந்தன. திருநீற்றை எடுத்து இட்டுக்கொண்டார். ஓலையில் இருந்ததைப் படித்தார்.

‘பூமாது போற்றும் புகழ்ப் பகழிக்கூத்தா - உன்

பாமாலை கேட்கயாம் பற்றேமா - ஏமம்

கொடுக்க அறியேமா கூற்றுவன் வாராமல்

தடுக்க அறியோமா தாம்?’
என்ற பாடல் இருந்தது.

முருகனே வந்து அருந்தமிழ்க் கவிதை சொல்லித் தன்னைப் பாடச் சொல்கிறான் எனில், அது முன்வினைத் தவப்பயன் அன்றி வேறில்லை என்று தெளிந்த கூத்தர் ‘திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலை எழுதினார். அதை எடுத்துக்கொண்டு அரங்கேற்றம் செய்யத் திருச்செந்தூர் சென்றார். அங்கு தனக்கு நிகழ்ந்த அற்புதத்தைச் சொல்லி அரங்கேற்ற அனுமதி கேட்டார்.

அற்புதங்கள் எல்லாம் அவற்றை அனுபவித்தவர்க்கே புரியும்; அற்பர்களுக்கு என்ன தெரியும். ஆகவே, அனுமதி மறுத்தனர். ஆனால், அரங்கேற்றம் செய்யாமல் ஊர் திரும்பப்போவதில்லை என்ற உறுதியோடு திருச்செந்தூரில் ஒரு மூலையில் அமர்ந்து முருகனை வேண்டத் தொடங்கிவிட்டார் பகழிக்கூத்தர்.

தானே பாடச் சொல்லி எழுதிய பாடல்களைக் கேட்க வழியில்லாமல் செய்பவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் செந்திலாண்டவன். தன் மார்பை அலங்கரித்த தங்கப்பதக்கத்தை அடியவரான கூத்தர் மார்பில் தவழ்ந்திட ஆணையிட்டார். அடுத்தகணம் பதக்கம் பகழிக்கூத்தரை அலங்கரித்தது.

இறைவனின் ஆபரணம் காணாமல் போனால் என்னாகும்?! ஆலயம் பரபரப்பானது. அப்போது மூப்பனார் என்கிற அடியவர் ஆலயம் வந்தார். முருகன் தன் கனவில் வந்ததாகவும் ‘பகழிக்கூத்தரின் பாடல்களை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என்று கட்டளை யிட்டதாகவும் கூறினார்.

இதற்கும் பதக்கம் தொலைந்ததற்கும் தொடர்பிருப்பதுபோலத் தோன்றியது. அனைவரும் திரண்டு பகழிக்கூத்தரைப் போய்ப் பார்த்தனர். அவரோ சிவபாலனைத் துதித்தபடி சிந்தை மறந்திருந்தார். மார்பில் பதக்கம் மிளிர்ந்தது. அனைவருக்கும் இது அற்புதம் என்பது புரிந்தது.

பகழிக்கூத்தரின் பாதங்கள் பணிந்து மன்னிப் புக் கேட்டனர். திருச்செந்தூர் பிள்ளைத் தமிழை அரங்கேற்றம் செய்யச் சொல்லி அழைப்பு விடுத்தனர்.

அவரும் அற்புதத் தமிழ் நூலை அரங்கேற்றம் செய்து முருகப் பெருமானை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழ்ப்பற்றினால் முருகன் செய்த சிலிர்ப்பூட் டும் திருவிளையாடல் அல்லவா இது!

அருள்மிகு கொளஞ்சியப்ப சுவாமி
அருள்மிகு கொளஞ்சியப்ப சுவாமி

ஆடு மேய்த்தவன் பாட்டு பாடினான்!

துரையில் பாணபத்திரருக்காக விறகு சுமந்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கினார் சிவன். அவர் மகன் முருகனோ, குணசீலர் என்பவருக்காக ஆடுமேய்த்து அருந்தமிழ்க் கவிபாடி விளையாடினான்!

திருச்செங்கோடு, உமையொருபாகனாய் ஈசன் அருளும் தலம். அங்கு குணசீலன் என்னும் முருகப்பெருமானின் பக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். புஷ்ப கைங்கர்யமே அவரின் திருப்பணி.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு பண்டிதன் வந்தான். ஊரின் மத்தியில் நின்று, “என்னோடு வாதம் செய்து வெற்றிபெற இங்கு பண்டிதர்கள் யாரேனும் உள்ளனரா?” என்று ஆணவத்தோடு கேட்டான். அந்தச் சொற்கள் குணசீலரின் காதுகளிலும் விழுந்தன.

அவர் அந்தப் பண்டிதரை அணுகி, “ஐயா, கற்றது கையளவு கல்லாதது உலகளவு அல்லவா?” என்றார். அதைக் கேட்டு வெகுண்ட பண்டிதன், “பண்டாரம் போலிருக்கும் நீ என்னை எதிர்த்துப் பேசலாமா...” என்று கோபமாகக் கேட்டான்.

குணசீலன் “ஐயா! பேசுவதும் கேட்பதும் அந்தச் செங்கோட்டு வேலவனின் செயலல்லவா...” என்றார் பணிவோடு.

“அப்படியானால், நாளை மறுநாள் என்னோடு நீர் வந்து வாதம் செய்யும். அந்தச் செங்கோட்டு வேலவனின் செயலால் நீர் வெற்றி பெறுகிறீரா என்று நான் பார்க்கிறேன்” என்று வம்புக்கு இழுத்தார்.

குகனையே நினைத்துக்கொண்டிருக்கும் குணசீலன், “அதுதான் அவன் விருப்பம் என்றால் அப்படியே நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

எல்லோரும் குணசீலரிடம் சென்று, “உமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை...” என்று பதறினர். ஆனால் அவரோ வேலவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

மறுநாள் அந்த ஆணவப் பண்டிதர் ஊரைச் சுற்றிவந்தார். திருச்செங் கோட்டுக்குச் சர்ப்ப கிரி என்ற பெயரும் உண்டு. பண்டிதருக்கு செருக்கில் ஒரு கவி செய்யத் தோன்றியது.

`சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயில

மென்ன அமரில் படம் விரித்து ஆடாதது ஏன்?’


- என்று பாடினார்.

சர்ப்பம் என்றால் படம் எடுத்து ஆடவேண்டுமல்லவா. சர்ப்ப கிரி என்றால் அது ஆடாமல் இருப்பது ஏன் எனும் பொருளில் பாடினார். ஆனால் அந்தப் பாடலை எப்படி முடிப்பது என்று அவருக்குத் தெரிய வில்லை. அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பதிலுரைத்துப் பாடினான்.

‘அஃதாய்ந்திலையோ

நமரன் குறவள்ளி பங்கன்

எழுகரை நாடுயர்ந்த

குமரன் திருமருகன்

மயில்வாகனம்

கொத்துமென்றே!’


இதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர் ஆடிப் போய் விட்டார். அந்தச் சிறுவனை அழைத்து நீ யாரிடம் தமிழ் கற்றாய் என்று விசாரித்தார்.

அதற்கு அந்தச் சிறுவன், “இந்த ஊரில் குணசீலர் என்னும் மகா பண்டிதர் உண்டு. அவரிடம் பாடம் கேட்கப் போய் புத்தியில் ஏறாமல் அவரால் விரட்டப்பட்ட கடை மாணவன் நான்” என்று பதிலுரைத்தான்.

அவ்வளவுதான் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது பண்டிதருக்கு. கடைமாணவனே இவ்வளவு திறம் வாய்ந்தவர் என்றால், குணசீலர் எவ்வளவு ஞானம் உடையவராக இருப்பார் என்று நினைத்தார். சொல்லிக்கொள்ளாமல் அந்த ஊரை விட்டு ஓடினார். அக்கணமே சிறுவனும் மறைந்தான்.

மறைந்தவன் - மறை அவன், அந்தச் செங்கோட்டு வேலவன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இக்கட்டில் சிக்கியவரைக் காக்கக் கந்தன் எக்கோலத்திலும் வந்து காப்பான் என்பதை விளக்கும் திருவிளையாடல் இது!

ஸ்ரீசக்ர தரிசனம்!

கந்தன் திருவிளையாடல்

ம்பாள் ஆலயங்கள் சிலவற்றில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை அறிவோம். ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே மேலான பலன்கள் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

பௌர்ணமி தினத்தில் ஸ்ரீசக்ரத்துக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெறும் பூஜைகளில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்குப் பூஜைகள் நடக்கும். இதை தரிசனம் செய்தால் கோடிப்புண்ணியம் என்கின்றனர் அடியவர்கள்.

மேலும் ஸ்ரீசக்ரத்தைச் சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்ரத்துக்குச் சாத்தப்பட்டுப் பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு என்கிறார்கள்.

மேலும் ஸ்ரீசக்ர தரிசனமும் வழிபாடும் செல்வச் செழிப்பை நம் வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

- ஏ.குமார், கடலூர்

`தோள் மாலை சேவை!'

tirupathi perumal
tirupathi perumal

திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெறும் சேவைகளில் தோமாலை சேவாவும் ஒன்று.

தோள்மாலை சேவையே பின்னாளில் மாறி தோமாலை ஆனது. முதல் நாள் பெருமாளுக்கு அணிவித்த மாலைகளைக் கோயிலுக்கு பின்னால் உள்ள பூக்கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் கொண்டு வரப்படும். பூ கட்டுவதற்கு என `யமுனாதுறை' என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு `தோமாலை சேவை' ஆரம்பமாகும். சந்நிதிக்குப் பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தைச் சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை செய்வார்கள். காலையில் தோமாலை சேவாவில் பெருமாளை தரிசிப்பதென்பது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக விளங்கும்.

- சி.கோகிலா, மேலூர்