இரணியல் அரண்மனையில் ஆங்காங்கே ஏற்றிவைக்கப்பட்டிருந்த தீபங்களும் தீபப் பந்தங்களும் வேண்டும் அளவுக்கு ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன.
ஆயினும் பெரும்பாலான தீபச்சுடர்கள், வெளியேயிருந்து உட்புகுந்த காற்றின் அலைக்கழிப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அணைந்தே விட்டிருந்தன.

அதிகாலையில் மெள்ள தொடங்கிய மழை இப்போது நன்கு வலுத்துவிட்டிருந்தது. மாலை சந்தியகாலம் தாண்டியும் மழை விட்டபாடில்லை. வள்ளி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தின் ஆரவாரம் அரண்மனையின் தாழ்வாரம் வரையிலும் கேட்டது.
உப்பரிகையுடன் கூடிய தனி மாடத்தில் தனக்கான ஆசனத்தில் அமர்ந்திருந்த மன்னர், மெள்ள எழுந்து உப்பரிகைக்கு நகர்ந்தார். புறச்சூழலைக் கவனிக்கும் ஆர்வம் அவருக்குள்.
`ஹோ’வெனும் பெருமழையின் இரைச்சல், விண்ணைப் பிளப்பது போன்று ஒலித்த இடியோசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் வெட்டு... அனைத்தும் சேர்ந்து மகாதேவனாம் ஈசனின் பிரளயகாலத்து ஊழித் தாண்டவத்தை நினைவூட்டின!
அண்ணாந்து நோக்கினார். ஆகாயத்தில் விண்மீன் ஒன்றையும் காணோம். இரணியலின் வான்பரப்பு இருள்பூசித் திகழ்ந்தது. காற்று வலுத்தால் மழை நகரும் என்பார்கள். ஆனால், சிறிது நேரத்துக்கு முன்பு வரையிலும் சுழன்றடித்த பெருங்காற்று, ஏதோ கட்டளைக்குக் கட்டுப்பட்டதுபொன்று சட்டென்று தடைப்பட்டுப்போக, மழையின் ஆளுமை இன்னும் அதிகரித்திருந்தது.
எனினும் அன்றைய பொழுதில் அரசாங்க நடவடிக்கைகளில் குறை வைக்கவில்லை மன்னர்பிரான். ஆனால், காலையிலிருந்து நீர்கூட பருகாமல் காத்திருந்தார். ஆம்! தன் உயிரைவிடவும் மேலாக நேசிக்கும் சிவகிரி ஈசனை தரிசிக்காமல் அவர் உணவில் கை வைத்தது இல்லை. இரணியல் அரண்மனையிலிருந்து சிறிது தூரத்தில் ஆழ்வார்கோவில் எனும் இடம் உண்டு. அந்தப் பகுதியில் உள்ள சிவகிரி ஈஸ்வரனை அனுதினமும் தரிசித்து வணங்கி வழிபட்டு வந்தபிறகே உணவு அருந்துவார் மன்னர்.




இன்று தரிசனம் சாத்தியப்படவில்லை. ``இறைவா! ஏன் இந்தச் சோதனை...’’ மெள்ள தனக்குள் முணுமுணுத்த மன்னர், மீண்டும் வந்து ஆசனத்தில் சோர்வுடன் அமர்ந்தார். `மழை அடுத்தடுத்த நாள்களும் நீடித்தால் என்ன செய்வது... என் இறைவனைக் காணாமல் எப்படி இருப்பது’ என்ற சிந்தனை அவருக்குள். சிவ தரிசனத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யலாமா என்றும் யோசித்தார். இப்படியே அமர்ந்திருந்தவர், அவரையும் அறியாமல் உறங்கிப்போனார்.
அற்புதமாய் ஒரு கனவு விரிந்தது. சாட்சாத் சிவகிரி மகாதேவனே கனவில் தோன்றினார். ‘மன்னா வருந்தற்க! உன் அரண்மனைக்கு அருகிலேயே நான் கோயில் கொள்ளப் போகிறேன். விடிந்ததும் அரண்மனைக்கு வெளியே பசு சாணம் இட்டுவைத்திருக்கும் இடத்தில் கோயில் எழுப்புக!’ என்று அருள்பாலித்தார்.
இறை ஆணைப்படியே அனைத்தும் நடந்தன. இரணியல் அரண்மனைக்கு அருகில் மிக அற்புதமாக எழுந்தது, மகாதேவர் ஆலயம்.
சரித்திரம் சொல்லும் இரணியல்!
இரணியல் - கன்னியாகுமரி மாவட்டத்தின் பழமைவாய்ந்த இடம் இரணியல். வேணாடு மன்னர்கள் இரணியலை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இவ்வூருக்கு இரண சிங்கேஸ்வரம், படப்பாணாட்டு ரணசிங்கபாடி, இரணியசிங்கநல்லூர் ஆகிய பெயர்களும் உண்டாம். இத்தகவலை 1815-ம் ஆண்டு பொறிக்கப்பட்ட புன்னார்குளம் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இரணியசிங்கநல்லூர் என்ற பெயரே இரணியல் என மருவியதாகவும் சொல்கிறார்கள்.
இன்றைக்கும் இரணியலில் பழைமையான அரண்மனையைக் காணலாம். அருகில் மார்த்தாண்டேஸ்வரர் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. எதிரில் வள்ளியாறு பாயந்து செல்ல, வலப்புறமும் இடப்புறமும் குளங்கள் அமைந்திருக்க எழில்சூழத் திகழ்கிறது மகாதேவர் ஆலயம். இங்கே ஈசன் கிழக்குநோக்கி அருள்கிறார்.
விநாயகர், சண்டிகேஸ்வரர், நாகர், வனசாஸ்தா ஆகியோரும் கோயிலில் சந்நிதி கொண்டுள்ளனர். கோயிலுக்கு வெளியே கன்னிமூலை கணபதி ஆகியோரையும் தரிசிக்கலாம். வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்த கிணற்று நீரே அபிஷேகம் முதலான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மகாதேவர் கோயிலுக்குப் பின்புறம், வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது.
கோயிலுக்கு இடப் புறம் உள்ள குளத்தை ஆராட்டுக் குளம் என்கிறார்கள். முன்பு இந்தக் குளத்தில்தான் இறைவர்க்கு ஆராட்டு வைபவம் நிகழ்ந்ததாம். ஆற்றில் வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது சுவாமியின் கருவறை. கலைநுட்பம் மிகுந்த சிற்பங்களும் நம் கருத்தைக் கவர்கின்றன.


கல்வெட்டு தரும் தகவல்கள்!
13-ம் நூற்றாண்டில், வேணாட்டு அரசர் கீழப்பேரூர் வீர ரவி கேரளவர்மா மகாராஜாவால் கட்டப்பட்ட ஆலயம் இது. அவர் காலத்தில் இந்தக் கோயிலில் உஷத் பூஜை, அத்தாள பூஜை நடை பெறும் பொருட்டு நிறைய நிலங்களையும் சொத்துகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
`அந்தச் சொத்துகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, பூஜைக்குத் தேவையான நெல், பூ, நெய் ஆகியவற்றை வழங்க வேண்டும்’ எனும் தகவலை பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.’’ என்று விவரிக்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.
நம்மை இந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற அன்பர் சுரேஷ், மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “இந்தக் கோயிலின் மூலவர் சிவலிங்கம் கங்கையிலிருந்து கொண்டு வரப் பட்டது என்கிறார்கள். சூரியனுக்கு மார்த்தாண்டன் எனும் பெயர் உண்டு. சூரிய வம்சத்தைச் சேர்ந்த சேர மன்னர்களின் பரம்பரைக் கோயில் என்பதால், இந்த ஈசனுக்கு மாத்தாண்டேஸ்வரர் என்று பெயர் வந்திருக்கலாம். கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, இறுக்கி கோயிலின் கட்டுமானத்தைச் செய்திருக் கிறார்கள். சாந்து போன்ற இணைப்பு ஒட்டல் ஏதுமில்லை.
பிற்காலத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகத் திருப்பணியின்போது இடை வெளிகளில் சிமெண்ட் பூச்சு கொடுத்திருக்கிறார்கள். நாகர், கோயிலுக்கு வெளியே நாகர், கணபதி, வனசாஸ்தா மூர்த்தங்கள் பிற்கால பிரதிஷ்டையே. இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருந்தாலும் பொதுமக்கள் பங்களிப்பு அதிகம்’’ என்கிறார் சுரேஷ்.
காரியத் தடை நீக்கும் பிரார்த்தனை!
சகல காரியங்களிலும் ஏற்படும் தடைகளைத் தகர்க்கும் தலமாக விளங்குகிறது, இரணியல் மார்த் தாண்டேஸ்வரர் மகாதேவர் கோயில். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், காரியஸித்தி ஏற்படவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இங்குள்ள சுவாமிக்கு வெண்பொங்கலும், பழங்களும் படைத்து வழிபாடுகள் நடத்துகிறார்கள். கோயிலில் சந்தனமும் திருநீறும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.
எப்படிச் செல்வது?: நாகர்கோவிலிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரணியல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. காலை 5 முதல் 10 மணி வரையிலும் மாலை 5 முதல் 7 மணி வரை யிலும் கோயில் நடைதிறந்திருக்கும்.
அதிசய கல் கட்டில்!


கோயிலின் அருகிலேயே இரணியல் அரண்மனை உள்ளது. இதையும் இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் திகழ்ந்த அரண்மனையைப் பழைமை மாறாமல் புனரமைக்க சுமார் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அரண்மனையின் மேடாகத் திகழும் பகுதியை வசந்த மண்டபம் என்கிறார்கள். அங்கு ஒற்றைக் கல்லால் ஆன கட்டில் போன்ற அமைப்பு உள்ளது. இந்தக் கல் கட்டில் மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்குமாம்! மன்னர்கள் இதில்தான் படுத்துறங்குவார்கள் என்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, `இந்தக் கட்டிலில் மகாவிஷ்ணு அனந்த சயனத் தில் அருள்வதாக பாவித்து வழிபட்டனர்’ என்கிறார்கள். இன்றும் இந்தப் பகுதி மக்கள் வசந்த மண்டபம் பகுதிக்கு செருப்பு அணிந்து செல்வது இல்லை!