Published:Updated:

நாகர்களின் தெய்வமான நாகராஜா கோயில்! வியக்க வைக்கும் புராணமும் வரலாற்றுத் தகவல்களும்!

நாகராஜா கோயில்

1950 வரையிலான காலகட்டத்தில் இக்கோயில் முழுவதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் காரணமாக பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் கேரள பகுதியை சேர்ந்த தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வழி வழியாக மேல் சாந்தி மற்றும் கீழ் சாந்திகள் நியமனம் செய்யப்பட்டனர்.

நாகர்களின் தெய்வமான நாகராஜா கோயில்! வியக்க வைக்கும் புராணமும் வரலாற்றுத் தகவல்களும்!

1950 வரையிலான காலகட்டத்தில் இக்கோயில் முழுவதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் காரணமாக பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் கேரள பகுதியை சேர்ந்த தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வழி வழியாக மேல் சாந்தி மற்றும் கீழ் சாந்திகள் நியமனம் செய்யப்பட்டனர்.

Published:Updated:
நாகராஜா கோயில்
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை எண்ணிலடங்காத புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் இம்மாவட்டத்தின் தலைநகருக்கு ‘நாகர்கோவில்’ என்று பெயர் வரக் காரணமாக இருந்த நாகராஜா கோயில் மிகவும் சிறப்பானது. தமிழ்நாட்டிலேயே நாகத்தை மூலக்கடவுளாக வைத்து வழிபடுவது இக்கோயிலின் மிக முக்கிய அம்சமாகும்.
நாகராஜா கோயில்
நாகராஜா கோயில்

வெகு காலத்துக்கு முன்பு கோவில் அமைந்துள்ள பகுதியானது புதர்மண்டி கிடந்துள்ளது. அப்போது தன் ஆடு மாடுகளின் உணவு தேவைக்காக ஒரு கிராமத்து பெண் புல்லறுத்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் புற்கள் அதிகம் இருந்த பகுதியில் வெட்டிக் கொண்டிருந்தபோது அதில் மறைந்திருந்த நாகப்பாம்பு மீது வெட்டு விழுந்தது. சீறிப் பாய்ந்த ரத்தத்தை கண்டு பயந்த அப்பெண் கிராமத்து மக்களை அழைத்து அந்த இடத்தை பார்க்கும் போது ஐந்து தலை நாகத்தின் சிலையிலிருந்து ரத்தம் வழிந்தோடியதை கண்ட மக்கள் அச்சிலையை எடுத்து ஓலைக் குடிசை அமைத்து பாலாபிஷேகம் செய்து மஞ்சள் பூசி தெய்வமாக வழிபட்டனர். அவ்வாறாக இக்கோயில் உருவானதாக சுற்று வட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கோயிலின் பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் மலையாள தேசத்து நம்பூதிரிகளே மேற்கொள்கின்றனர். கேரள வழக்கத்தின் படி நம்பூதிரி என்பவர் ‘தந்திரி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் கோயிலின் மேல் சாந்தி எனப்படுகிறார். தமிழக கோவிலான நாகர்கோவில் நாகராஜா சுவாமிக்கு பூஜைகள் செய்பவர் திருச்சூர்”பாம்பு மேக்காட்டுமனா” குடும்பத்தை சேர்ந்த தந்திரி ஆவார். ஏனெனில் 1950 வரையிலான காலகட்டத்தில் இக்கோயில் முழுவதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் காரணமாக பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் கேரள பகுதியை சேர்ந்த தந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வழி வழியாக மேல் சாந்தி மற்றும் கீழ் சாந்திகள் நியமனம் செய்யப்பட்டனர். அதற்குப் பிந்தைய காலத்தில் நிர்வாகம் முழுவதும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இக்கோயிலில் கேரள முறைப்படியே தந்திரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பாம்பு மேக்காட்டு மனா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆதி காலத்தில் இருந்தே நாகத்தை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

நாகராஜா கோயில்
நாகராஜா கோயில்

இந்தக் கோயிலில் அனந்தகிருஷ்ணன் கிருஷ்ண பரமாத்மாவின் சந்நிதியும், ஈசனின் சந்நிதியும், மூன்றாவதாக நாகராஜா சந்நிதியும் உள்ளது. இதில் நாகராஜா சந்நிதியில் பெரிய பாம்பு சிலையும் அனந்த கிருஷ்ணன் சந்நிதியில் ஒரு சிறிய பாம்பின் மேல் கிருஷ்ணன் வீற்றிருப்பது போன்ற சிலையும் உள்ளது. 1589-ம் ஆண்டின் முந்தைய காலத்தில் இக்கோயிலில் நாகராஜாவிற்கு மட்டுமே சந்நிதி இருந்ததாகவும் 1589-1644-ம் ஆண்டிற்கு பிறகு இங்கு வீற்றிருந்த நாகத்தை திருஅனந்த ஆழ்வார் என்று அழைக்கப்பட்டு 1644-க்கு பிற்பட்ட காலத்தில் அனந்த கிருஷ்ணனாக வழிபடப்பட்டு வருகிறார்கள்.

கேரள கோயில்களில் பக்தர்கள் உள்நுழையும் போது ஆண்கள் தனது மேல் சட்டையை அகற்றி விட்டு தான் செல்ல வேண்டும். அந்த முறை தான் இக்கோயிலிலும் மேற்கொள்ளப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக நாகராஜா சுவாமி இருந்தாலும் அனந்த கிருஷ்ணன் சந்நிதியின் வெளியே தான் கோயிலின் கொடிமரம் உள்ளது. இந்த கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தைப்பெருந்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த 10 நாள் நடக்கும் திருவிழாவில் 9-ம் நாளன்று தேரோட்ட வைபவம் நடைபெறும்.

நாகராஜா கோயில்
நாகராஜா கோயில்

அந்த தேரில் அனந்தகிருஷ்ணன் பாமா ருக்மணியுடன் வீதி உலா புரிந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலின் கொடி மரத்திற்கு மிகப்பெரிய விசேஷம் உண்டு. காரணம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிருஷ்ணர் ஸ்தலத்திலும் கோயில் கொடி மரத்தின் உச்சியில் கருடனின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இக்கோயிலில் கொடிமர உச்சியில் ஆமையின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், இது நாகங்கள் வசிக்கக்கூடிய ஆலயமாக இருப்பதால் கருடன் நாகத்திற்கு எதிரியாக இருப்பதாலும் இங்கு ஆமை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சேர நாட்டின் சிற்றரசாக இருந்த வேணாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த உதய மார்த்தாண்டவர்மா என்ற மன்னருக்கு இருந்த ஸர்பதோஷம் மற்றும் தோல் நோய்கள் குணமாகியதன் மூலம் இக்கோயிலை மிகப்பெரிய ஸ்தலமாக உருவாக்கினார். இக்கோயிலின் அனைத்து பகுதிகளும் கற்களால் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் மூலவரான நாகராஜாவின் கருவறையின் மேற்பகுதி ஓலை குடிசையால் பின்னப்பட்டிருக்கும். மூலவரின் கருவறைக்கு விமானம் கிடையாது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோயில் நம்பூதிரிகள் இந்த ஓலை கொட்டகையை மாற்றி அமைத்துக் கொடுப்பர். இந்த ஓலை குடிசை மாற்றி அமைக்கும் போது ஒரு நாகப்பாம்பு காட்சியளித்து செல்வது ஐதீகம். இக்கோயிலை சுற்றி எண்ணிலடங்காத வகையில் பாம்புகள் வாழ்ந்து வருவதாகவும், பாம்புகள் இக்கோயிலின் பாதுகாவலர்களாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இக்கோயிலின் தலவிருட்சமாக ஓடவல்லிக்கொடி என்னும் செடி உள்ளது. இந்த இலை தோல் வியாதிகளுக்கு உகந்ததாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்த இலை பிரசாதமாக வழங்கப்பட்டது.

நாகராஜா கோயில்
நாகராஜா கோயில்

இக்கோயிலின் வெளிப்புறம் நாகலிங்க மரம் உள்ளது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் நாகராஜாவின் அம்சமாக கருதப்படுகிறது. இங்குள்ள பாலமுருகனின் அருகில் துர்க்கை அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மன் விக்ரஹம் 1968-ம் ஆண்டு இக்கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரும்போது கிடைக்கப்பெற்றதாகும். நாகராஜா சுவாமி வீற்றிருக்கும் பகுதி மணல் நிறைந்த பகுதி, இந்த மண் சந்தனம், மஞ்சளுடன் வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மணலானது 6 மாதத்திற்கு கருமணல் ஆகவும், 6 மாதம் வெண்மையான மணலாகவும் மாறுதல் அடைகிறது என்பது கூடுதல் அதிசயம்.

- ஸ்ரீகணேஷ்