Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: ‘திருவாசகம் எங்கள் தெய்வ நெறி!’

ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்மிகம்

எங்களைப்போல இன்னும் 60, 70 பேர் அந்தக் குழுவில் இருந்தனர். அனைவரும் சேர்ந்து, செட்டிநாட்டைச் சேர்ந்த 96 ஊர்களில் உள்ள சிவாலயங்களில் முற்றோதுதல் செய்திருக்கிறோம்.

ணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமும் கனவும் பலருக்கும் பல்வேறாக இருக்கும்.

ஆனால், காரைக்குடிக்கு அருகே இருக்கும் கல்லல் என்னும் ஊரைச் சேர்ந்த நாச்சியப்பன், ஓய்வுபெற்றபின் செய்துவரும் பணி மகத்தானது மட்டுமல்ல; மகேசனுக்கானது.

பெங்களூருவில் பணியிலிருந்த நாச்சியப்பன் ஓய்வுபெற்ற பின், தன் சொந்த ஊருக்கு அருகிலேயே இருக்க விரும்பி, மனைவி மணிமேகலையுடன் காரைக்குடியில் செட்டிலானார். அதற்குப் பிறகு தான் அவர்களை இறைப்பணியில் இணைத்துவிட்டார் இறைவன்.

‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்னும் பெருமையை உடைய திருவாசகத் தேனை தினம் தினம் படிக்கவும் கேட்கவும் கொடுத்துவைத்த தம்பதி இவர்கள். ‘மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி போற்றி’ என்று மனமுருகித் துதித்து, திருவாசக முற்றோதுதலை இதுவரையிலும் சுமார் 600 இடங்களில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கின்றனர். அந்த அனுபவம் குறித்து நாச்சியப்பனிடம் கேட்டபோது, ‘சிவாய நமஹ’ என்றபடி சிவன் தாள்பணிந்து, மிக நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார், தங்களின் திருப்பணி குறித்து...

‘‘பெங்களூரிலிருந்து 2004-ல் காரைக்குடிக்கு வந்தோம். ஒரு நாள் யதேச்சையாக பிள்ளையார்பட்டிக்குப் போயிருந்தோம். அங்கே காசி ஸ்ரீ அரு.சோ போன்ற சில பெரியவர்கள் சேர்ந்து, ‘திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்கள். அதன் முக்கிய நோக்கம் திருவாசக முற்றோதுதல்தான். சரியான நேரத்தில் கற்பக விநாயகர் எங்களை அங்கே வரவழைத்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்தேன். அந்த அமைப்பில் நாங்களும் இணைந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எங்களைப்போல இன்னும் 60, 70 பேர் அந்தக் குழுவில் இருந்தனர். அனைவரும் சேர்ந்து, செட்டிநாட்டைச் சேர்ந்த 96 ஊர்களில் உள்ள சிவாலயங்களில் முற்றோதுதல் செய்திருக்கிறோம்.

கோயில்களில் மட்டுமன்றி திருமணம், மணிவிழா, கிரகப்பிரவேசம், வளைகாப்பு போன்ற விசேஷங்களிலும், தலை திதி போன்ற நிகழ்ச்சிகளிலும் முற்றோதுதல் நடத்தித் தருமாறு எங்களுக்கு அழைப்பு வருகிறது. அதுபோன்ற வைபவங்களிலும் திருவாசகம் முழுமையும் படிக்கிறோம். காரைக்குடி, தேவகோட்டை போன்ற செட்டிநாட்டு ஊர்கள் மட்டுமன்றி, திருச்சி, சிவகங்கை, சிதம்பரம், திருவாரூர் போன்ற பல நகரங்களிலும் முற்றோதுதல் செய்திருக்கிறோம்.

எங்கள் ஆன்மிகம்: ‘திருவாசகம் எங்கள் தெய்வ நெறி!’

‘திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றத்’தினருடன் 400 இடங்களில் திருவாசகம் படித்திருப்போம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, நானும் என் மனைவியுமே எங்களைப் போல சிவபக்தர்கள் சிலருடன் இணைந்து, ஒரு குழுவாக திருவாசக முற்றோதலுக்குச் செல்ல ஆரம்பித்தோம். தற்போது வரையிலும் நாங்களும் எங்கள் குழுவினரும் சுமார் 200 இடங்களுக்குச் சென்று முற்றோதுதல் நடத்திவிட்டோம். எல்லாம் அந்த சிவ பெருமானின் அருள் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது?’’ என்று கூறும் நாச்சியப்பனுக்குத் திருவாசகத்தில் கால்வாசிக்கு மேல் மனப்பாடம்.

அவர் மனைவி மணிமேகலை, ‘‘இது ஆண்டவன் இட்ட பணி. பெங்களூரிலிருந்த எங்களை இந்த ஊருக்கு வரவழைத்து, இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, மனம் நிறைய நிறைய மாணிக்கவாசகத் தேனை பருகச் சொல்லியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனுஷ நட்சத்திரம், மாணிக்கவாசகரின் நட்சத்திரமான மகம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் கண்டிப்பாக ஏதேனும் கோயில் அல்லது இல்லத்தில் திருவாசகம் படிப்போம். வெளியில் எங்கும் போகும் வாய்ப்பு இல்லையென்றாலும் வீட்டிலேயே நாங்கள் இருவருமாகப் படித்துவிடுவோம். இப்போது ஊரடங்கு என்பதால் வீட்டில்தான் படிக்க முடிகிறது. திருவாசகம் படிக்கவில்லையென்றால் ஒரு வேலையும் ஓடாது எங்களுக்கு. எதையோ இழந்தது போல தவிப்பாக இருக்கும்’’ என்கிறார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே திருமணமாகி அயல்நாடுகளில் வசிக்கின்றனர். கடமைகளை முடித்துவிட்ட நிறைவில் இவர்கள் இருவரும் கயிலாயநாதனின் சேவையில் நிச்சிந்தையாக ஈடுபட முடிகிறது.

‘‘திருவாசகம் உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘எனக்கு 73 வயது. திருவாசகம் என்னைப் பல நிலைகளில் பக்குவப்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து படிக்கப் படிக்க ‘நான்’ என்ற ஆணவம் போய்விட்டது.

‘மனிதனைப் பார்த்து மரணம் அஞ்சும் நிலைத்த தெய்வம் திருவாசகம்’ என்று அதைச் சொல்வார்கள்.

அத்தகைய பெருமைக்குரிய திருவாசகத்தின் பாடல்களைப் பாடிப் பாடி, மரணத்துக்கு அஞ்சாத நிலை வாய்த்துவிட்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால், உயிர் முன்னேற வழிகாட்டும் தெய்வநெறிதான் திருவாசகம்’’ என்று கண்கள் கசியக் கூறினார் நாச்சியப்பன்.

பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் நாச்சியப்பன் குழுவினர் முற்றோதுதல் நடத்தியபோது, அங்கிருந்த முதியோர்கள் பலரும் இவர்களுடன் இணைந்து பாடியதுடன், ‘குடும்பத்தைப் பிரிந்து, இல்லத்தில் இருக்கும் எங்களுக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கு... மாதம் ஒரு முறை இதுபோல வந்து நீங்க பாடணும்’ என்று வேண்டுகோள் வைத்ததை நினைவுகூர்கிறார் மணிமேகலை.

காலையில் திருவாசகம் படிக்கத் தொடங்கினால், மதியம் மஹேஸ்வர பூஜை நடத்தி, ‘அன்னம் பாலிக்கும்..’ பாடல் பாடி, உணவு உண்ட பிறகு மீண்டும் தொடர்கின்றனர். முழுவதையும் நிறைவு செய்ய மாலை ஆகிவிடுமாம்.

‘‘நாங்கள் போகும்போது நால்வர் படமும் தொட்டிலும் எடுத்துச் செல்வோம். இடையே ‘பொன்னூஞ்சல்’ பாடல் வரும்போது, திருமணம் முடிய வேண்டுவோரும் குழந்தை வரம் வேண்டுவோரும் அந்தத் தொட்டிலைச் சில நிமிடங்கள் ஆட்டிவிடுவார்கள். தம்பதியாக வந்து தொட்டிலை ஆட்டுவோருக்கு, விரைவில் குழந்தை வரம் கிடைக்கிறது. தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டி, திருவாசக முற்றோதுதலை தங்கள் இல்லத்தில் நடத்தும் பலருக்கு, அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. அப்படி, நல்ல விஷயங்கள் நடந்ததாக அவர்கள் கூற கேட்கும்போது, எங்கள் மனம் அடையும் மகிழ்ச்சியும் திருப்தியும் தனிதான்!’’ என்றார் நாச்சியப்பன்.

சிதம்பரம் கோயிலில் இத்தம்பதிக்குத் ‘திருவாசக மணி’ என்னும் பட்டம் வழங்கியிருப்பது சிறப்பு. மேலும் இவர்கள் இருவரும் சைவ சித்தாந்தம் கற்றதால், திருவாவடுதுறையில் ‘சித்தாந்த ரத்தினம்’ என்னும் பட்டமும் பெற்றுள்ளனர்.

‘திருவாசக ஈடுபாடு நாளும் வளர்ந்து வருகிறது. ஆனால், முதியவர்கள் மட்டுமே ஆர்வமுடன் படிக்கும் இந்த திருவாசகத்தைப் படிக்க இளைஞர்களும் முன்வர வேண்டும்’ என்பதுதான் இவர்களின் அடுத்த ஆசை, வேண்டுகோள்.

அனைத்தையும் ஆட்டுவிக்கும் அந்த ஈசனே, இந்தத் திருவாசகக் காதலர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றுவான்!

மனக்குறையைத் தீர்த்தது முற்றோதுதல்!

பொதுவாகவே நகரத்தார்கள் சைவத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். தீவிர சிவபக்தர்கள். பட்டினத்தார் பிறந்த குலம் அல்லவா! அத்தகைய பெருமைக்குரிய நகரத்தார்கள் அனைவருமே திருவாசகத்தின் மீதும் பற்றுள்ளவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையபட்டியில் இருக்கும் ராதா நாராயணன் குடும்பமும் அவர்களுள் ஒன்று. சகோதரர்களின் குடும்பங்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இருக்கும் இவர்கள், ‘லாக் டெளன்’ தருணத்தில் திருவாசகம் படிக்க முடிவு செய்தனர்.

எங்கள் ஆன்மிகம்: ‘திருவாசகம் எங்கள் தெய்வ நெறி!’

அதுகுறித்துக் கூறும்போது, ‘‘வழக்கமாக எங்கள் ஊர் மலையாண்டி கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதுதல் நடக்கும். 40, 50 பெண்கள் கொண்ட திருவாசகக் குழுவினர் படிப்பார்கள். இப்போது, ஊரடங்கு காரணமாக மூணு மாதங்களாகக் கோயிலில் திருவாசகம் படிக்கமுடியலை. எங்கள் குடும்பத்தில் லாக் டெளன் ஆரம்பத்திலேயே பிள்ளைகள் எல்லாரும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று வீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டில் ஒரு பையனுக்குத் திருமணம் முடியணும், திருமணமான பேரப்பிள்ளைகளுக்குக் குழந்தை பிறக்கணும், உடல்நிலை சரியில்லாமல் போனதால் குழந்தைகளைப் பிரிந்திருக்கும் எங்கள் உறவினர் பெண் சீக்கிரம் குணமாகணும்... இப்படி பல பிரார்த்தனைகள். அவற்றைவிட முக்கியமாக எல்லாரையும் கலவரப்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து உலகமும் நம்ம நாட்டு மக்களும் மீண்டு வரணும்கிற சிறப்புப் பிரார்த்தனை... இதையெல்லாம் முன்வைத்து வீட்டிலேயே திருவாசகம் படிக்கலாம்னு முடிவு செய்தோம்.

போன வாரம் பிரதோஷ தினத்தில், மதிய உணவுக்குப் பின், எங்கள் வீட்டுக் கூடத்தில் நால்வர் படத்தின் முன்னே நாங்களே சமூக இடைவெளிவிட்டு உட்கார்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலை 7.30 மணி அளவில் நல்லபடியாக நிறைவு செய்தோம். அவரவர் பிரார்த்தனையை மனமுருகி வேண்டிக்கொண்டு, ஆரத்தி காட்டி முடிச்சோம். பாசிப்பயறு சுண்டல் நிவேதனம் செய்து, எல்லோருக்கும் கொடுத்தோம். அந்த நாளே அர்த்தமுள்ளதாக ஆயிடுச்சு! இத்தனை நாட்கள் கோயிலுக்குப் போகாத குறையைத் தீர்த்து வைத்தது எங்க குடும்பத்தின் திருவாசக முற்றோதுதல்!’’ என்றார் அவர்.

நம்பிக்கையும் பக்தியும் போதும்... பிரார்த்தனைகள் நிறைவேறும்!