Published:Updated:

ஈசன் நெற்றியில் ராகு... அம்பாள் ஒட்டியாணத்தில் கேது!

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

அ.பாலாஜி

பிரம்ம சாபமும்

நாக தோஷமும் நீக்கும்

துர்வாச க்ஷேத்திரம் -

கரிசூழ்ந்த மங்கலம்!

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதி முன்னிலையில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் அமர்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். அப்படி ஒருமுறை வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, துர்வாச முனிவருக்கு ஓரிடத்தில் ஸ்வரம் பிசகிவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதைக் கேட்டு வாக்தேவியான சரஸ்வதிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதனால் துர்வாசர் கோபம் கொண்டார்.

“வேதத்தில் எவ்வளவு பெரிய சமர்த்தர்களாக இருந்தாலும் சில தருணங்களில், அவர்களுக்கும் ஸ்வரம் பிசகுவது இயல்புதான். வாக்குகளுக்கெல்லாம் தேவதையான நீ, இதை அறிந்தும் என்னைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரித்ததால், பூவுலகில் மானிடப் பெண்ணாகப் பிறப்பாய்!” என்று சாபம் கொடுத்தார்.

அம்பாள்
அம்பாள்

இதைக்கண்ட பிரம்மா துர்வாசரைப் பார்த்து, “நீ உன் தபஸை இழக்க கடவது” என்று சபித்தார்.

தவசக்தியை இழந்தால் சத்திய லோகத்தில் இடம் கிடையாது. துர்வாசர் பிரம்மனைப் பணிந்தார்; தவசக்தியை மீண்டும் பெற பரிகாரம் கேட்டார். “பூலோகம் சென்று கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால், தவசக்தி மீண்டும் கிடைக்கும்” என்றார் பிரம்மா.

அவர்களின் கோபமும் சாபமும் உலகுக்கு நன்மையே தந்தன. துர்வாசரின் சாபத்துக்கு இணங்க சரஸ்வதிதேவி, ஸோனா நதிக்கரையில் விஷ்ணுமித்திரர் என்பவரின் மகளாகப் பிறந்தாள். பிரம்மதேவர் மண்டனமிஸ்ரர் என்ற பெயரில் அவதரித்து, குமரிலபட்டரின் முதன்மையான சீடராக விளங்கி வந்தார். பின்னர், விஷ்ணுமித்ரரின் பெண்ணாகப் பிறந்த சரஸ்வதிதேவியை மண்டனமிஸ்ரர் மணம் புரிந்துகொண்டார். ஆதிசங்கரரின் வரலாற்றில் இவர்களின் பங்களிப்பைக் காணலாம்.

பூலோகம் வந்த துர்வாசரின் தவப் பயணத்தால் காலத்துக்கும் பலன் தரும் புண்ணிய தலங்களும் பாவம் போக்கும் தீர்த்தக்கட்டங்களும் உண்டாயின. துர்வாசர், பிரம்மன் குறிப்பிட்ட புண்ணிய நதிகளில் நீராடி, மேலும் தன் வழிபாடுகளையும் தவத்தையும் தொடர்ந்தார். ஆந்திராவில் உள்ள ஸ்வர்ணமுகியில் நீராடி ஸ்ரீகாளகஸ்தி ஈஸ்வரனை ஒரு வருடம் பூஜித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈஸ்வரன் துர்வாசரிடம் ஒரு லிங்கத்தைக் கொடுத்து, ``இங்கே பூஜை செய்த பூக்கள் தாமிரபரணி தீரத்தில் எங்கு விழுகின்றனவோ, அங்கே இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு'' என்று வழிகாட்டியருளினார். அதன்படி, தாமிரபரணி தீரத்துக்கு வந்துசேர்ந்தார் துர்வாசர்.

ஈசன்
ஈசன்

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஓரிடத்தில் பூஜைப்பூக்கள் விழுந்தன. அங்கு காளகஸ்தி ஈஸ்வரன் தந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீஞானாம்பிகை என்றும் திருநாமம் சூட்டினார். தாமிரபரணி நதியில் நீராடி, 72 ஸ்லோகங்களை இயற்றி ஒரு வருடம் வழிபாடு செய்தார். அப்படி அவர் நீராடிய இடமே துர்வாச தீர்த்தம்.

தாமிரபரணி பொதிகையில் உற்பத்தியாகி 130 கி.மீ தூரம் பயணித்து கடலில் சங்கமிக்கிறது. அதில், 65-வது கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தீர்த்தக் கட்டம். அவர், லிங்க பிரதிஷ்டை செய்த சிறப்புக்குரிய இந்தத் தலம் கரிசூழ்ந்த மங்கலம். ராகு தோஷத்தை நீக்கும் தென்னகத்து காளகஸ்தியாக இந்த ஆலயம் திகழ்கிறது.

லிங்க பிரதிஷ்டைகளில் பல வகை உண்டு. அவற்றில் மகா முனிவர்கள் ஸ்தாபிதம் செய்யும் லிங்க மூர்த்தங்கள் உள்ள ஆலயங்கள் அதீத சாந்நித்தியத்துடன் திகழும். இந்த ஆலயமும் அப்படியே!

துர்வாசர் தனிச்சிறப்பு கொண்டவர். அத்ரி மகரிஷி - அனுசுயாதேவியின் தவப் புதல்வனாக - சிவனின் அம்சமாகத் தோன்றி வளர்ந்தவர். இவரின் சாபங்களும், வரமும் சிறப்பானவை. இவரால் வழிபடப்பட்ட ஆலயம் என்பதால் கரிசூழ்ந்த மங்கலம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயமும் சிறப்புற்று திகழ்கிறது.

பக்தர்கள் சனி, ராகு தோஷ நிவர்த்தி வேண்டி அதற்கான நேரங்களில் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் எப்போது வழிபட்டாலும் சனி மற்றும் ராகு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

இங்கே, சிவனாரின் நெற்றியில் ராகுவும், அம்மையின் இடுப்பில் ஒட்டியாணமாக கேதுவும் காணப்படுகிறார்கள். சனி பகவான் நாகம் குடை பிடிக்க அமர்ந்துள்ளார். இவரின் சிரசிலும் ராகு - கேது உள்ளன. வடக்கே காளகஸ்திக்கு சென்று வணங்க முடியாத அன்பர்கள், இந்த காளகஸ்தி நாதரை வழிபட்டு பலன் அடையலாம்.

ஈசன் நெற்றியில் ராகு... அம்பாள் ஒட்டியாணத்தில் கேது!

பிரம்மாவின் சாபம் தீர, துர்வாச முனிவர் இத்தலத்தில் பிரம்மசாப நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார். நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால் பிரம்ம சாபம் ஏற்படும். அதன் காரணமாக படிப்பு, வேலை, தொழில்களில் இடையூறுகளும் தடங்கல்களும் ஏற்படும். இந்தப் பிரச்னைகள் தீர இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடலாம். இங்கு பிரம்ம சாபம் தீரும்.

இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ‘மவுத்திகவாகிணி’ என்று சிறப்பிக்கப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் நிறைய தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்தப் பகுதி துர்வாச க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி, காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால், துர்வாச முனிவரின் ஆசியோடு சிவனருளையும் ஒருங்கே பெறலாம்.

கி.பி. 1842-ம் ஆண்டில் திருநெல்வேலி அருட்கவி நெல்லையப்பக் கவிராயர் எழுதிய திருநெல்வேலி தலபுராணத்தில் 30-வது சருக்கமாக அமைந்துள்ளது ‘துர்வாசேஸ்வர சருக்கம்.’ இதன் முதல் 36 பாடல்களில், தாமிரபரணிகரையில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் என்னும் கிராமம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் துர்வாச முனிவர் தாமிரபரணி நதியை மிகவும் புகழ்ந்து பாடியுள்ள வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

`தாமிரபரணி பெருமையுள்ள நதி. நித்ய மங்கல சுமங்கலி.

என்றென்றும் மகிழ்வுடன் மங்கலங்களை அளிக்கும் சுமங்கலியே, மலையத்தின் நிலவே, மலையில் தவழும் தென்றலுடன் பிறந்த நாயகியே, சீரும் சிறப்புமிக்க ஆற்றலுடன் வந்த தாமிரபரணி தாயே, பொருணை நதியே... புத்தம் புதிய அமிர்தத்தைக் கொண்ட வானுலக நதியாக விளங்குபவளே, உன்னிடம் அடைக்கலம் அடை கிறேன்' என்று போற்றுகிறார்.

ஈசன் நெற்றியில் ராகு... அம்பாள் ஒட்டியாணத்தில் கேது!

தாமிரபரணி நதிக்கஐயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆலயம்.இறைவன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், அம்பாள் ஞானாம்பிகையும் விரப்பிரசாதியாகத் திகழ்கிறார்கள். நந்தி மண்டபத்தின் இரு புறமும் கீழ்ப்புறத்தில், சிவனுக்குத் தன் கண்ணைக் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் சிற்பம் உள்ளது.

அம்மன் கருவறை விமானத்தில் துர்வாச முனிவர் சிவனை பூஜிப்பது போன்ற சிற்பம் உள்ளது. கோயிலுக்கு உள்ளே சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சனி பகவான், ராகு- கேது ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், ஆவணி மாதம் வருஷாபிஷேகம், மாசி சிவராத்திரி முதலான விழா வைபவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் சர்ப சாந்தி பூஜை நடைபெறுக்கிறது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, துர்வாச முனிவர் தீர்த்தக் கட்டத்தில் மூழ்கி எழுந்தால், தோஷங்கள் நீங்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் ராகு - கேது கிரகங்களால் பாதிப்பு உடையவர்கள், இந்த நாளில் இங்கு வந்து வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

நீங்களும் அடுத்தமுறை தாமிரபரணி தீரத்துக்கு - நெல்லைச் சீமைக்கு வரும்போது, அவசியம் இந்த ஆலயத்துக்கும் சென்று வழிபடுங்கள்; உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்!

பக்தர்கள் கவனத்துக்கு

தலம்: கரிசூழ்ந்தமங்கலம்

ஸ்வாமி: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீஞானாம்பிகை

தலச் சிறப்பு: துர்வாச முனிவரால் போற்றப்பட்ட தலம். நாக தோஷத்துக்குப் பரிகாரம் வேண்டி காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு பலன் பெறலாம். ஞாயிறு தோறும் நிகழும் சர்ப்பசாந்தி பூஜை விசேஷமானது.

அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ளது பத்தமடை. இங்கு பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் கரிசூழ்ந்தமங்கலம் உள்ளது. பத்தமடையிலிருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 9 மணி வரை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளையிலும் 4 முதல் 5.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும் (ஆலயத் தொடர்புக்கு: 94427 25977).