தொடர்கள்
Published:Updated:

சமணர் வாரணாசி!

சமணர் வாரணாசி
பிரீமியம் ஸ்டோரி
News
சமணர் வாரணாசி

– ச.பிரசாந்த், படங்கள்: க.தனசேகரன்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது மூடுபித்ரி கிராமம். இங்கு ‘துளு’ மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

திரிபுவன திலக சூடாமணி கோயில்
திரிபுவன திலக சூடாமணி கோயில்

எண்ணற்ற பழங்காலச் சுவடுகளையும் 18 சமண சமய ஆலயங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது மூடுபித்ரி. ஆம், சமண சமய புண்ணிய ஸ்தலங்களில் குறிப்பிடத் தக்கது இந்தக் கிராமம் என்கிறார்கள்.

இங்குள்ள ஆலயங்களில், திரிபுவன திலக சூடாமணி கோயில் சுமார் 600 ஆண்டுகள் பழைமையானதாம். இந்த ஆலயம் சாவிர கம்பத பசாதி, சந்திரநாதா கோயில், ஆயிரங்கால் கோவில் எனப் பல பெயர்களுடன் போற்றப்படுகிறது.

கட்டடக் கலை, வரலாறு, வழிபாடுகள் என இந்த ஆலயம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் நம்மை வியக்கவைப்பன. கோயிலுக்குள் நுழைந்ததும் சுமார் 50 அடி உயரத்துடன் கூடிய தூண் ஒன்றைக் காணலாம். யானை, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களுடன் கூடிய இந்தத் தூணைத் துளு மொழியில் `மான ஸ்தாம்ப’ என்று அழைக்கிறார்கள். பெருமையின் தூண் என்பது பொருள். தூணின் உச்சியில், நான்கு திசை நோக்கியும் சந்திரபிரபா சுவாமியின் சிற்பமும் மணிகளும் உள்ளன. இந்தத் தூணின் அருகிலேயே கொடி மரமும் உள்ளது.

இவற்றைக் கடந்தால் இரண்டு யானைச் சிற்பங்களுடன் கூடிய நுழை வாயில். உள்ளே நுழைந்தால் ஒற்றைக் கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபங்கள். கோயில் ஏழு சிறு மண்டபங்களுடன் திகழ்கிறது. கோயிலின் கீழ்த் தளம் கற்களால் ஆன கட்டுமானம். மேலேயுள்ள இரண்டு தளங்கள் மரத்தாலான கட்டு மானம். தூண்கள் ஒவ்வொன்றிலும் யானை, எருது, சரஸ்வதி, அனுமன் எனப் பல சிற்பங்கள் பொலிவுடன் திகழ்கின்றன. அதேபோல் மண்டப விதானங்களிலும் கூரைகளிலும் கூட கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன.

திரிபுவன திலக சூடாமணி கோயில் மண்டபங்கள்
திரிபுவன திலக சூடாமணி கோயில் மண்டபங்கள்
கோயில் மண்டபங்கள்
கோயில் மண்டபங்கள்

அனைத்தையும் ரசித்தபடியே மெள்ள நகர்ந்தால் மூலக் கருவறை. உள்ளே விளக்கு வெளிச்சத்தில் சுமார் எட்டு அடி உயர ஐம்பொன் சிலா திருமேனியராக நின்ற நிலை அருள்பாலிக்கிறார், சமண தீர்த்தங்கரர் சந்திரநாத சுவாமி. இங்கு பக்தர்களுக்குப் பிரசாதமாக குங்குமம் மட்டுமே வழங்கப்படுகிறது.

இத்தலத்தின் மகிமைகள் குறித்து ஆலயத்தை நிர்வகிக்கும் ஜகத்குரு எஸ்எஸ் சாருகீர்த்திபட்டாரக்கா சுவாமி முதலானோரிடம் கேட்டறிந்தோம்.

``சமணத்தின் திகம்பரப் பிரிவைச்சேர்ந்த முனிவர் ஒருவர், தியா னத்தை முடித்துத் திரும்பும் வழியில் மூடுபித்ரியை அடைந்தார். மூங்கில் காடுகள் நிறைந்த இந்தப் பகுதியில், பசுவும் புலியும் ஒற்றுமையாக நீர் அருந்தும் அதிசயத்தைக் கண்டார். `ஏதோ அற்புதம் உள்ள பகுதி இது’ என்பதை உணர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்தவரின் கண்களில், தீர்த்தங்கரர் சந்திரநாத சுவாமியின் சிலை தென்பட்டது. அந்தச் சிலையை நிறுவி வழிபட்டார் முனிவர். அந்த இடமே தற்போது கோயிலாகத் திகழ்கிறது’’ என்கிறார்கள்.

கி.பி. 1430-ம் ஆண்டு இந்தப் பகுதியை ஆண்டுவந்த தேவராய வாடியர் என்ற மன்னர் இங்கே இந்தக் கோயிலைக் கட்டினார். சுமார் 31 ஆண்டுகளாக பலருடைய கடும் உழைப்பில் உருவானதாம் இந்த ஆலயம். இதனுடன் சேர்த்து மொத்தம் 18 ஆலயங்கள் உள்ளதால் மூடுபித்ரியை `சமணர்களின் வாரணாசி’ எனப் போற்று கிறார்கள்.

சமணர்களின் வாரணாசி
சமணர்களின் வாரணாசி

இக்கோயிலை `திரிபுவன திலக சூடாமணி’ என்று அழைக்கிறார்கள் எனப் பார்த்தோம் அல்லவா? அதற்கு ‘மூலோகத்தின் மணி மகுடம்’ என்பது அர்த்தம். இங்கு வரும் பக்தர்கள், அமைதி, நிம்மதி, குடும்ப நலனுக்காக வேண்டிச் செல்கின்றனர்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாக பஞ்சமி, யுகாதியையொட்டி ஒரு மாதம் சிறப்பு பூஜைகள், விஜயதசமியில் சிறப்பு பூஜை, தீபாவளித் திருநாள், டிசம்பரில் `தீபோத்சவா’ எனும் தீபத் திருவிழா ஆகியவை இங்கே விசேஷமாக நடைபெறுகின்றன.

அதேபோல், மஹாவீர் ஜயந்தி அன்றும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மறுநாள் சிறிய ரத உற்சவம் நடைபெறுகிறது. சித்ரா பெளவுர்ணமித் திரு நாளில் பெரிய ரத உற்சவம் நடைபெறுகிறது. இப்படியான விழாக் காலங்களில் நாடு முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடு கிறார்கள்.

நீங்களும் ஒருமுறை வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு மூடுபித்ரி கிராமத்துக்குச் சென்று வாருங்கள்; `திரிபுவன திலக சூடாமணி’ ஆலயத்தைத் தரிசித்து வழிபடுங்கள். அங்கு நீங்கள் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் இதுவரை அனுபவத்திராத அமைதியை யும் ஆனந்தத்தையும் உணர்ந்து சிலிர்ப்பீர்கள். அதனால் உண்டாகும் நிம்மதி உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்!