Published:Updated:

கார்த்திகை 1 - மாலையிட்டோர் எல்லோருமே ஐயப்ப சாமிதான்... தத்வமஸியை நிரூபிக்கும் ஸ்ரீஐயப்பன் வழிபாடு!

'நீயே அதுவாக இருக்கிறாய்' என்பதை வலியுறுத்தத்தான் மாலை அணிந்து கொள்ளும் ஒவ்வொரு பக்தர்களையும் நாம் 'சாமி, கன்னி சாமி, மணிகண்ட சாமி' என்றெல்லாம் ஐயப்பனின் அம்சமாகவே அழைத்துப் பெருமைப்படுத்துகிறோம்.

ஐயப்ப பக்தர்களுக்கு நாளை பொன்னான நாள். கார்த்திகை 1-ம் தேதி மாலை போட்டு 48 நாள்கள் விரதம் இருந்து மண்டல மற்றும் மகர பூஜைக்கு சபரிமலை செல்வது வழக்கம். கண்கண்ட தெய்வமாம், கலியுக வரதன் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் பெருகியபடியே உள்ளனர். ஒருமுறை சென்று தரிசித்தவர் தனது ஆயுள் முழுக்க மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் புனிதத் தலமாக சபரிமலை உள்ளது. அதன் காரணம் மிகவும் எளியது. காந்தமலை ஜோதியாம் சபரிமலை ஐயப்பன் யோக வடிவில் அமர்ந்து ஞான மழைப் பொழிவதே என்கிறார்கள் பெரியோர்கள்.
தத்வமஸி
தத்வமஸி

தத்துவத்தில் உயர்ந்ததான 'தத்வமஸி' இங்கு தாரக மந்திரமாக உள்ளது. அதுவே இங்கு வரும் சகல ஆன்மாக்களையும் கட்டிவைத்து இயக்கி வருகிறது. தத்வமஸி என்றால், 'நீயே அதுவாக இருக்கிறாய்' என்று பொருள் பொருள். சாந்தோக்ய உபநிடதத்தின் 6-ம் அத்தியாயத்தில், ஆன்மா மற்றும் பிரம்ம தத்துவத்தை உபதேசிக்கும் வரிகளில் 'தத்வமஸி' என்பதை சொல்லுகிறது. இது உத்தாலக முனிவர் தனது மகனும் சீடனுமான சுவேதகேதுவிற்கு உபதேசித்த அற்புதமான திருமந்திரம். நீயே அதுவாக இருக்கிறாய் என்பதை எதுவாக இருக்கிறாய்! என்று நம்முள் ஆத்ம விசாரணையை மேற்கொண்டால், நாமே பிரம்மமாகவும் இருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆன்மாவும் பரமாத்மாவின் அம்சம் என்பதை வலியுறுத்தவே ஸ்ரீஐயப்பனின் அவதாரம் நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீசாஸ்தாவின் கடைசி எட்டாவது அவதாரமான ஸ்ரீஐயப்பனின் அவதாரம் மானிடனாக அவதரித்தும் வெல்ல முடியாத தீய சக்திகளை சத்தியத்தால் வெல்ல முடியும் என்பதை நிரூபித்தது.

ஸ்ரீஐயப்பன்
ஸ்ரீஐயப்பன்

'நீயே அதுவாக இருக்கிறாய்' என்பதை வலியுறுத்தத்தான் மாலை அணிந்து கொள்ளும் ஒவ்வொரு பக்தர்களையும் நாம் 'சாமி, கன்னி சாமி, மணிகண்ட சாமி' என்றெல்லாம் ஐயப்பனின் அம்சமாகவே அழைத்துப் பெருமைப்படுத்துகிறோம். இது வேறு எந்த வழிபாட்டிலும் வேறு எந்த தெய்வத்திடமும் காணாத சிறப்பு கொண்டது. 48 நாள்கள் ஐயப்பனுக்காக விரதம் இருப்பது என்பது வெறும் சடங்கு அல்ல. தன்னுள் இறைவனை அறிந்து கொள்ளும் ஒரு உள்முகப் பயணம் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே விரத காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டனர்.

திருச்சி கோயில்கள் - 21: கர்ப்பிணிகளைக் காக்கும் குங்குமவல்லி சமேத   தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு!

வெறும் சடங்குகளால் இறைவனை உணரவே முடியாது என்பதை நமது தர்மம் உணர்ந்துள்ளது. சடங்குகளைப் பற்றிக்கொண்டு தனித்து இருக்கும் தவ நிலையில் ஞானத்தை அடையலாம் என்பது நியதி. 'காடு, மலை, மேடு எல்லாம் தாண்டி கடினமான பாதைகளில் பயணித்து என்னை நாடி வரும் பக்தனே, உன்னுள்ளேயே நான் இருக்கிறேன். நீயாகவே நான் இருக்கிறேன்' என்பதற்கு உணர்த்தியபடியே ஐயன் ஐயப்பன் இருக்கிறான் என்பதற்கு சாட்சியே 'தத்வமஸி'. 48 நாள்கள் விரதமிருந்து சாமி என்ற நிலைக்கு உயர்ந்த பக்தனே, ஒவ்வொரு நாளும் சத்தியத்தையும் விரதத்தையும் நீ கடைப்பிடித்து வாழ்ந்தால் நீயே நானாக மாறிவிடுவாய்!' என்பதுவே ஸ்ரீஐயப்பன் கூறும் அருள்நெறி. நீர் தெளிவாக இருந்தால் பிம்பம் அறியலாம். மனம் தெளிவாக இருந்தால் இறைவனையும் உணரலாம். எனவே பக்தர்களே ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று விரும்புவதைப்போலவே அவனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புங்கள்! அதுவே பக்தியின் உச்சம்.

சபரிமலை
சபரிமலை

ஆண்டுதோறும் சபரிமலை சந்நிதானத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 15-11-21 அன்று மாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டது. இந்த நடை திறப்பு விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளை நடத்தினார். இந்த ஆண்டுக்கான சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜை வரும் டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்றும், ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 25000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்து மட்டுமே வரவேண்டும். தரிசனத்துக்கு வரும் நாளில் ஒவ்வொருவரும் 48 மணி நேரத்துக்கு உள்பட்ட கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கும் சான்றிதழைக் கொண்டு வரவேண்டும். சந்நிதிதானத்தில் தங்கக் கூடாது. பம்பையில் கடும் வெள்ளம் காரணமாக குளிக்க அனுமதி இல்லை. ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் நிலக்கல்லில் வந்து முன்பதிவு அனுமதி ஆன்லைனில் பெறலாம். இந்த ஆண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். தகுந்த சமூக இடைவெளி வேண்டும். எனவே சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அவ்வப்போது நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகளை கவனித்துக் கொண்டு அங்கு செல்வது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு