Published:Updated:

சொக்கநாதா சோமசுந்தரா!

சொக்கநாதா சோமசுந்தரா
பிரீமியம் ஸ்டோரி
News
சொக்கநாதா சோமசுந்தரா

பி.சந்திரமௌலி

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். தமிழில் சந்திரனைத் திங்கள் என்று அழைப்பார்கள்.கார்த்திகை மாதம் வளர்பிறை அஷ்டமி அன்றுதான் சந்திரன் தோன்றினான். தன்னுடைய ஷயரோகம் (காசநோய்) நீங்குவதற்காக சந்திரன், சிவபெருமானை பூஜை செய்து நவகிரகங்களுள் ஒருவனாக ஆனான். அவன் பெயராலேயே சோமவாரம் என்ற நாளும் (திங்கட்கிழமை) உண்டானது.

சந்திரன் தோன்றியது, அவன் சிவபெருமானை வழிபட்டது, கிருத யுகம் தோன்றியது, சந்திரன் சிவபெருமானின் திருமுடியில் இடம்பெற்றது - இவை எல்லாம் கார்த்திகை மாத சோம வாரங்களில்தான் நிகழ்ந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“சிவபெருமானே, கார்த்திகை சோமவார தினத்தன்று விரதமிருந்து உங்களை பூஜை செய்பவர்களின் எல்லாவிதமான பாவங்களும் நீங்க வேண்டும். எந்தவிதமான நோயும் அவர்களுக்கு வரக் கூடாது. என் பெயரால் எனது கிழமையில் இந்த விரதம் பிரபலமாக வேண்டும்” என்று சந்திரன் சிவபெருமானிடம் வேண்டி, வரம் பெற்றான். இதனாலேயே கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடும் பழக்கம் உண்டாது.

இப்படி, சந்திரன் சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்ற தலங்கள் பல உள்ளன. அவற்றுள் முதன்மையான தலம், மதுரை.

சொக்கநாதா சோமசுந்தரா
சொக்கநாதா சோமசுந்தரா

சிவத்தலங்களுள் 16 மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி மற்றும் திருவாலவாய் ஆகிய நான்கு தலங்கள் குறிப்பிடத் தக்கவை. ‘திருவாலவாய்’ மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப்பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே முக்தி தரும் தலம் என்பதால், சிவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும் சிவராஜதானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டது மதுரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், அதனால் உண்டான கொலை பாவம் நீங்கும் பொருட்டு சிவ வழிபாடு செய்ய நினைத்தான். பூலோகத்தில் கடம்ப வனத்தை அவன் அடைந்ததும் தனது பாவம் காணாமல்போனது தெரிந்தது. ஆச்சர்யம் அடைந்தவன், அந்த இடத்தில் ஏதோ புனிதம் இருக்கிறது என உணர்ந்தான். தேடினான். அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டான். திசை யானைகளை அழைத்தான். எட்டுத் திசைகளிலும் நின்று, சிவனாருடைய பெருமையைப் பறைசாற்றும்படி ஆணையிட்டான். எட்டு யானைகள் புடைசூழ, சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்தான்.

திசை யானைகள் புடைசூழ இங்கே இறைவனுக்கு வழிபாடு நடந்தது என்பதாலேயே, இப்போதும் ஸ்வாமி கருவறை விமானத்தில், எட்டு யானைகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒருநாள் தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனம் சென்றபோது லிங்கம் அவன் கண்களுக்குத் தென்பட்டது. அப்போது மணவூரை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னரிடம், இந்தத் தகவலைக் கூறினான். அரசன் கடம்ப வனத்துக்கு வந்து ஈசனை தரிசித்து வணங்கினான்.

இரவு அங்கேயே தங்கிய மன்னனின் கனவில் இறைவன் தோன்றினார். கடம்ப வனத்தை அழித்து நகர் உண்டாக்கும்படி ஆணையிட்டார். இறைவனின் ஆணையை ஏற்ற மன்னன், அவ்வாறே செய்யத் தொடங்கினான். ஆனாலும், நகரை அமைக்கும்போது நடைமுறைச் சிக்கல்கள் உண்டாயின. அமைப்பு சரியாகப் புரியவில்லை. மன்னனுடைய குழப்பத்தைத் தீர்த்துவைப்பதற்காகச் சித்தர் ஒருவர் வந்தார். சிவலிங்கமும் இந்திர விமானமும் உள்ள இடத்தை மையமாக வைக்கச் சொன்னார். ‘அந்தப் பகுதி, தாமரை மலரின் உள்மொட்டு போல...’ என்றார். நகரின் மற்ற இடங்களை, மொட்டைச் சுற்றிய இதழ்கள் என்று குறிப்பிட்டார். அவர் சொன்ன அமைப்பிலேயே நகரத்தை நிர்மாணித்த மன்னன், சித்தரே சிவனார் என்பதை உணர்ந்து மகிழ்ந்தான்.

சிவனாரும் அந்த நகருக்கு மகத்துவம் அளிக்க விழைந்தார். தனது ஜடாமுடியில் உள்ள சந்திர கலையில் இருந்து மதுரமான அமிர்தத்தை கங்கா ஜலத்துடன் கலந்து அந்த நகரின் மீது தெளித்தார். ஜடாமுடியில் இருந்து அமிர்தம் அந்த நகரில் விழுந்ததால், மதுரமான அமுதம் சிந்தியதால் அவ்வூருக்கு மதுரை என்று பெயர் ஏற்பட்டது என்கின்றன புராணங்கள். ஆக, சந்திரகலை நிரம்பிய மதுரையம்பதிக்குச் சென்று கார்த்திகை சோமவாரமாம் திங்கட்கிழமைகளில் வழிபடுவதால், மனோ சக்தி கூடும்; மகத்துவங்கள் உண்டாகும். சந்திரனுக்கு மட்டுமல்ல; சுந்தரேஸ்வரர், புதன் கிரகத்துக்கும் அதிபதி. இவருக்கு புதன்கிழமை தேனபிஷேகம் செய்தால், குரல் வளம் பெருகும் என்பது ஐதிகம்.

அருள்மிகு சொக்கேசரான சுந்தரேஸ்வரர்; லிங்கத் திருமேனி. சொக்க நாதர், சொக்கலிங்கம், சோமசுந்தரம், மீனாட்சி சுந்தரர், கல்யாணசுந்தரர், செண்பகசுந்தரர், அடியார்க்குநல்லார், அதிரவீசி விளையாடுவார், அபிஷேக சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவன சொக்கர், கடம் பவனேஸ்வரர், கற்பகச் சொக்கர், மதுரேஸ்வரர், இறையனார், பேராலவாயர், ஆலவாய் அண்ணல் என்றெல்லாம் திருநாமங்கள் இந்த இறையனாருக்கு.

மூர்த்தி நாயனார், சந்தனக் கட்டை கிடைக்காத தால் அதற்குப் பதிலாக தன் முழங்கையை சந்தனம் தேய்க்கும் கல்லில் வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். இறைவன் அவரைத் தடுத்து, அரசனாக்கி அருள்புரிந்தார். மூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த அந்தக் கல், மீனாட்சியம்மன் சந்நிதியில் இன்றும் இருக்கிறது.

சொக்கநாதா சோமசுந்தரா
சொக்கநாதா சோமசுந்தரா

சிவபக்தர் பாணபத்திரரது வறுமையைத் தீர்க்க, சோமசுந்தரர் கடிதம் ஒன்றை தந்து, அதை சேரமான் பெருமாள் நாயனாரிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். அதனால் சேரமான், தனது செல்வம் மொத்தத்தையும் பாணபத்திரருக்கு சமர்ப்பித்தார். பாண பத்திரர் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு, சேரமானிடமே மீதியைத் தந்து விட்டார்.

‘வேதியா வேத கீதா விண்ணவர்

அண்ணா என்று என்(று)

ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி

நின் கழல்கள் காணப்

பாதியோர் பெண்ணை வைத்தாய்

படர்சடை மதியம் சூடும்

ஆதியே ஆலவாயில்

அப்பனே அருள்செய்வாயே...’

என்று போற்றுகிறார் அப்பர். நாமும் கார்த்திகை மாதத்தில் ஏதேனும் ஒரு திங்கட்கிழமையில் மதுரையம் பதிக்குச் சென்று மதிசூடிய மகேசனை - ஆலவாய் நாயகனை வழிபட்டு வரம்பெற்று வருவோம்.