திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பிணிகளும் வறுமையும் பரவாமல் தடுக்கும் ஈசன்!

கருங்காடு 
ஶ்ரீபரவா எல்லை நாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
கருங்காடு ஶ்ரீபரவா எல்லை நாதர்

சிவலிங்க வடிவில் கோரக்கர் தரிசனம் தரும் கருங்காடு சிவாலயம் - முத்தாலங்குறிச்சி காமராசு -

நெல்லுக்கு வேலியிட்டு ஈசன் திருவிளையாடல் புரிந்த தீரம் நெல்லைச் சீமை. இங்கு தாமிரபரணியின் அருளால் செழித்தோங்கித் திகழ்ந்த கிராமங்கள் பலவும், ஆதிகாலத்தில் ஒருமுறை கடும் பஞ்சத்தில் சிக்கித் தவித்தன. எங்கும் எப்போதும் வெம்மை தகித்தது; மழை பொய்த்தது.

காரணம் புரியாது கலங்கிய மக்கள் அத்ரி மலைக்கு ஓடினர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கோரக்கரைச் சரணடைந்து விமோசனத்துக்கு வழி கூற வேண்டினர். அந்த சித்தப் புருஷர் கண்மூடி தியானித்தார். ஞான திருஷ்டியில் ஓர் உண்மையை அறிந்தார். எல்லாம் தட்சனின் யாகத்தால் வந்த வினை என்பது அவருக்குப் புரிந்தது.

பிணிகளும் வறுமையும் 
பரவாமல் தடுக்கும் ஈசன்!

ம், தாட்சாயினியாய் பிறப்பெடுத்திருந்த உமையவள் சிவனாரையே மனத்தில் வரித்துப் பூஜித்து, அதன் பலனாக அவரையே மணாள னாகக் கைத்தலம் பற்றினாள். இதனால் சிவபெருமான் மீது கோபம் கொண்டான் தட்சன். அவரை அழைக்காமலும் அவருக்கு உரிய அவிர்பாகத்தை அளிக்காமலும் மாபெரும் யாகம் நடத்தினான்.

அதனால் கடும் சீற்றத்துக்கு ஆளான சிவபெருமான் தட்சனையும் யாகத்தையும் அழித்தார். யாகத்தில் கலந்துகொண்டோரும் தண்டனைக்கு ஆளானார்கள். அக்னி பகவானும் அவருடைய ஆட்டு வாகனமும்கூட தண்டனையிலிருந்து தப்ப இயலவில்லை.

தட்ச யாகம் அழிந்தும் சினம் தணியாத ஈஸ்வரன், பரதக் கண்டத்தின் தென்பகுதியில் - நெல்லைச் சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள மேலநத்தம் எனும் தலத்தை அடைந்து உக்கிரத்துடன் அமர்ந்தார். அவருடைய உக்கிர வெம்மை தாமிரபரணியின் மறுகரையில் உள்ள கருங்காடு வரை வீசியது. ஆகவேதான் மேலநத்தம், கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் முதலான கிராமங்களில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன.

இங்ஙனம் சிவனார் மேலநத்தத்தில் அக்னீஸ் வரராக இருப்பதை அறிந்த கோரக்கர், அவரைச் சாந்தப்படுத்த முயன்றார். மேலநத்தத்துக்கு நேர் எதிரேயுள்ள கருப்பந்துறையில், கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அந்த இறைவன் `அழியாபதி ஈஸ்வரர்’ என்று திருப்பெயர் கொண்டார்.

ஶ்ரீபரவா எல்லை நாதர்
ஶ்ரீபரவா எல்லை நாதர்

அதேபோல், சித்தர்கள் அனைவரும் பெளர்ணமி தினத்தில் ஒன்றுகூடி மேலநத்தம் அக்னீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் நடத்தினர். அக்னீஸ்வரர் சாந்தமானார். இன்றும் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்கும் ஸ்வாமியாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அக்னிதேவன் இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. இதையொட்டி, மேலநத்தம் தலத்தில் அக்னி பகவானின் வாகனமான ஆட்டுத் தலையுடன் காட்சி தருகிறாராம் நந்தி பகவான்.

இங்ஙனம், சிவபெருமானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையிலான முயற்சியில் இறங்கிய சித்தர்களும் முனிவர்களும் கருங்காடு கிராமத்திலும் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். வெம்மையைப் பரவ விடாமல் தடுக்கும் வேண்டுதலோடு எழுந்தருள் செய்யப்பட்ட அந்த ஸ்வாமி, `பரவா எல்லை நாதர்’ என்று திருநாமம் கொண்டார். தற்போதும் இவர் வெம்மை - வறட்சியை மட்டுமல்ல, பெருந்தொற்று போன்ற கொடும் பிணிகளும் அதிகம் பரவாமல் அருள்செய்து வருகிறார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

கோரக்கர் லிங்கம்
கோரக்கர் லிங்கம்

இந்தக் கோயிலில் லிங்க வடிவில் கோரக்கரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார். இவரை வணங்கி வழிபட்டால் சகல இன்னல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பார். தாமிரபரணியின் நீர்ப்போக்கு இவ்வூர் எல்லையில் சிறப்புடன் அமைந்துள்ளது.

இவ்வூரில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் தாமிரபரணி நதிப்பெண், இவ்வூரின் முடிவில் இடப்பக்கம் திசைமாறி தெற்கு வடக்காகப் பாய்கிறாள். இவ்வூரைச் சுற்றி ஏறக்குறைய ஓர் ஆரம் போன்று இந்த நதி பாய்வது விசேஷ அம்சமாகும். தன்னுடைய தீரத்தில் வேறெந்த தலத்திலும் இப்படியான விசேஷ அமைப்புடன் தாமிரபரணி பாயவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் கரையில் கிழக்கு நோக்கி அமைந் திருக்கிறது அருள்மிகு பரவா எல்லை நாதரின் ஆலயம். ஒரு காலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த இந்த ஆலயம், வெள்ளப் பெருக்கில் சிதைந்துபோனதாம். பிற்காலத்தில் உள்ளூர் சிவனடியார்கள் ஒன்றிணைந்து தற்போதுள்ள கோயிலைப் பராமரித்து வழிபாடுகள், விழா வைபவங்களைச் சிறப்புற நடத்தி வருகிறார்கள்.

இடைப்பட்ட காலத்தில் நீண்ட நாள் திருமணம் ஆகாத தன் மகளுக்கு விரைவில் மணப்பேறு வாய்க்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், பிரமுகர் ஒருவர் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்தார்.

விரைவிலேயே அவரின் வேண்டுதல் பலித்தது; அவரின் மகளுக்குத் திருமணம் விமரிசை யாக நடந்தேறியது. ஆகவே, கல்யாணப் பரிகாரம் வேண்டியும் இந்தக் கோயிலுக்கு அநேக பக்தர்கள் வருகிறார்கள்.

பிணிகளும் வறுமையும் 
பரவாமல் தடுக்கும் ஈசன்!
ஶ்ரீவிசாலாக்ஷி
ஶ்ரீவிசாலாக்ஷி

காசிக்கு நிகரான தலம் இது எனப் போற்றும் அன்பர்கள், இவ்வூர் இறைவனை காசி விஸ்வநாதர் என்றும் அம்பாளை விசாலாக்ஷி என்றும் அழைத்து வழிபடுகிறார்கள். ஆக, காசிப் புண்ணியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது இவ்வூர்.

``வறுமையில் வாடும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஸ்வாமியை வழிபட்டால், விரைவில் வறுமை நீங்கும்; இல்லத்தில் செல்வம் செழிக்கும். விவசாயத்தில் நட்டம் ஏற்படுபவர்கள் எங்கள் ஈசனை வழிபட்டால் பாதிப்புகள் நீங்கி நல்ல மகசூல் பெறலாம். பிணிகள் தீரவும் அருள்புரியும் மகேசன் இவர்’’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

தற்போது வெளிப்புறச் சுவர் சிதிலமுற்றுத் திகழ்கிறது. தாமிரபரணிக் கரையில் கோரக்கர் தனிச் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயம் இது மட்டுமே. ஆகவே, பக்தர்கள் இந்த ஆலயத்தைப் பெரிதாகக் கட்டும் முயற்சியில் உள்ளார்கள்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி - பேட்டை எனும் ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கருங்காடு சிவன் கோயில் உள்ளது. கோபால சமுத்திரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணத்தால் இவ்வூரை அடையலாம். தினமும் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் கோயில் நடைதிறந்திருக்கும்.

பழநி முருகன்
பழநி முருகன்

பெருந்தொற்று கரும்பூஞ்சை பயம் வேண்டாம்!

போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட மூர்த்தியாய் அருளும் பழநி முருகன், நம்முடைய மனப் பிணி, உடற்பிணி தீர்க்கும் தெய்வம் ஆவார். அருணகிரியார் இந்த முருகனைப் பலவாறு போற்றிப் பாடியுள்ளார்.

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி யணுகாதே-

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

சரியும்வய துக்கேது தாரீர்சொ

லீரெனவும் விதியாதே...

- பழநி மலை தண்டாயுதபாணி ஸ்வாமியைப் போற்றி, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மாலை பாடல் இது. மனத்தில் தூய பக்தியுடன் இந்தப் பாடலைப் பாடி முருகனை வழிபட, தலைவலி, காமாலை, கண் நோய் உட்பட பிணிகள் அனைத்தும் அகலும்.