Published:Updated:

சிலைகளாய் மாறிய பக்தர்கள்

தொப்பேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
தொப்பேஸ்வரர்

தொப்பேஸ்வரர் தரிசனம் - சென்ற இதழ் தொடர்ச்சி

சிலைகளாய் மாறிய பக்தர்கள்

தொப்பேஸ்வரர் தரிசனம் - சென்ற இதழ் தொடர்ச்சி

Published:Updated:
தொப்பேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
தொப்பேஸ்வரர்

தொப்பையசாமி மலையின் உச்சியில் சிறு பாறையே சுயம்பு லிங்கமாகத் தோன்றியது போன்று, கிழக்குமுகமாகக் காட்சி தருகிறார் அருள்மிகு தொப்பேஸ்வரர். கோயில் போன்ற கட்டட அமைப்பெல்லாம் இல்லை. சுற்றிலும் மலைக்கற்களையே அரண் போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

லிங்கத் திருமேனிக்குச் செம்பினால் கவசம் செய்து அணிவித் திருக்கிறார்கள். உற்று நோக்கினால் லிங்க மேனியில் பசுவின் கால்குளம்பு பதிந்ததுபோன்ற தடத்தைக் காணலாம். சந்நிதியின் எதிரில் தீப ஸ்தம்பமும் சிறியளவிலான நந்தி சிலையும் உள்ளன. அருகிலேயே உள்ள மரத்தில், வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் கட்டிவைத்தத் தொட்டில்கள் தொங்குகின்றன. அதேபோல், ஆங்காங்கே சிறு சிறு கற்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள். இதுவும் ஒருவகை வேண்டுதல் முறையாம்.

ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் ஓர் இறக்கத்தில், மூன்று பக்கமும் கற்களை அடுக்கி சுவர் அமைத்து, தகரக் கொட்டகையுடன் கூடிய ஓர் அறையை அமைத்திருக்கிறார்கள். பக்தர்கள் வெயிலுக்கு இளைப்பாறவும், மழைக்கு ஒதுங்கவும் உதவியாக உள்ளது இந்த அறை. தொப்பேஸ்வரர் சந்நிதியில் சுவர் அமைப்புக் கற்களின் இடுக்குகளில்தான் பூஜைப் பொருள்களை வைத்திருக்கிறார்கள்.

தொப்பேஸ்வரருக்குப் பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். அன்பர் வெள்ளைச்சாமி பக்திச் சிலிர்ப்புடன் பதிகம் ஒன்றைப் பாட, வாசுதேவன் கற்பூர ஆரத்தி காட்டினார். தென்னாடுடைய சிவபிரானை அருள்நிறை தொப்பேஸ்வரரைக் கண்ணார தரிசித்து மெய்யுருக வணங்கிப் பணிந்தோம்.

வழிபாட்டுக்குப் பிறகு, தகரக்கொட்டகை அறையில் கட்டுச் சோற்றைப் பிரித்து உணவு அருந்தினோம். தொப்பேஸ்வரர் தரிசனத்தால் மனம் நிறைந்ததால், சகலமும் நிறைவாகவே பட்டது நமக்கு. அந்தப் பொழுதில் நாங்கள் உண்ட உணவும் அமிர்தமானது!

உணவுக்குப் பிறகு இந்த ஈஸ்வரனின் மகிமையை வெள்ளைச்சாமி, வாசுதேவன், சுப்ரமணி ஆகிய மூவரும் பகிர்ந்துகொண்டார்கள்.

“உங்களுக்கு ஒரு தகவல் வியப்பை அளிக்கும். ஆமாம்... ஸ்வாமி சந்நிதி இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லை. எதிரில் ஒன்றரை மீட்டர் தூரத்தில் - தீபஸ்தம்பமும் நந்தியும் இருக்கும் இடம் கரூர் மாவட்ட எல்லை. ஆக இரண்டு மாவட்டங்களில் எல்லையில் தொப்பேஸ்வரர் குடியிருக்கிறார்!’’

சுவாரஸ்யமான தகவலோடு ஆரம்பமானது உரையாடல்.

ஆரம்பத்தில் இந்தப் பகுதிக்கு ஆள்கள் வருவது மிகவும் அபூர்வம். ஆடு-மாடு மேய்ப்பவர்கள் மட்டுமே இந்த மலை வரைக் கும் வருவார்கள். இந்த தொப்பேஸ்வரரை வணங்கினால் கால்நடைச் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மற்றபடி சிவராத்திரி நாளில் நான்கைந்துபேர் வந்து வழிபடுவார்கள்.

கடந்த பத்து வருடங்களாக இந்தக் கோயில் பலருக்கும் தெரிய வர, சிவராத்திரி பெளர்ணமி தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். சிவராத்திரி தினத்தில் இரவில் மலையேறுவார்கள். நள்ளிரவு வரை நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு, இரவில் இங்கேயே தங்கியிருந்து, விடிந்ததும் கீழே இறங்குவார்கள்.

கால்நடைச் செல்வம் மட்டுமல்ல இந்த ஈஸ்வரரை வழிபட்டால் தொழில் அபிவிருத்தி, பிள்ளைச்செல்வம் எல்லாமும் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். அருகில் மரத்தில் தொட்டில்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இப்படித் தொட்டில் கட்டி வேண்டுதல் செய்தால் விரைவில் குழந்தைப்பேறு ஸித்திக்குமாம். அதேபோல் சிறு கற்களை அடுக்கிவைத்தும் சிவனாரை வேண்டிச் செல்கிறார்கள். இதனால் வீடு கட்டுவது மனை வாங்குவதில் உள்ள தடைகள் நீங்குமாம்.’’

நண்பர் ஒருவர் சொல்லிமுடிக்க, ``ஸ்வாமி இங்கே குடிகொண்ட கதையைச் சொல்லுங் களேன்’’ என்று கேட்டோம். அதற்கு, ``மலையை விட்டு இறங்கியதும் கோயில் பூசாரி மல்லைய நாயக்கரைச் சந்திப்போம். அவர் விரிவாகச் சொல்வார்’’ என்றனர்.

பிற்பகல் மூன்று மணியளவில் தொப்பேஸ் வரரை மீண்டும் ஒருமுறை தரிசித்து வணங்கி விட்டு, மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தோம். இறங்கும்போது சிரமம் ஏதுமில்லை. எல்லாம் இறைவனின் திருவருளே!

கோயில் பூசாரி மல்லைய நாயக்கர், பிள்ளைக்காபட்டியைச் சேர்ந்தவர். அவரைச் சந்தித்தபோது தொப்பேஸ்வரர் மலைமீது கோயில் கொண்ட கதையை விவரித்தார்.

“ஏழெட்டுத் தலைமுறைக்கு முன்னாடி நடந்த கதை இது. எங்கள் முன்னோர்களில் ஒருவரான மல்லைய நாயக்கர், மலைப்பகுதிக்கு ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்வார். ஒருமுறை வீட்டுக்கு வந்து மாடுகளைக் கொட்டடியில் அடைக்கும்போதுதான் கவனித்தார்... கன்று ஈனாத பசு ஒன்றைமட்டும் காணவில்லை. விடிந்ததும் தேடிப்பார்க்கவேண்டும் என்ற முடிவோடு படுக்கச் சென்றுவிட்டார்.

ஆனால், விடிந்ததும் பார்த்தால் கொட்டடியில் அந்தப் பசு படுத்திருந்தது. இதே சம்பவம் அடுத்தடுத்த நாளும் தொடர்ந்ததாம். ஒருநாள் மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது, கூட்டத்திலிருந்து நழுவிய பசுவைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்தப் பசு மலையடிவாரத்தில் ஓரிடத்தில் சூரப்புதர் அருகே சென்று, தாமாகவே பால் சொறிந்ததாம். கன்று ஈனாத பசு பால் சொறிவதைக் கண்டு மல்லைய நாயக்கர் திகைத்துப் போனார். அருகில் சென்று பார்க்கலாம் என்று அவர் நெருங்கிய போது, ஆள் அரவம் கேட்டு மிரண்ட பசு காலை ஒருமுறை உதைத்தபடி அங்கிருந்து விலகி ஓடியதாம்.புதரை நெருங்கிய மல்லைய நாயக்கர், புதரின் மையத்தில் ஒரு லிங்கத்தைக் கண்டார். அதன் மீதுதான் பசு பால் சொறிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆனால், பால் முழுவதையும் தன்னுள் உறிஞ்சியிருந்தது அந்தச் சிவலிங்கம். மட்டுமன்றி பசு உதைத்துவிட்டுச் சென்றது அல்லவா? லிங்க மேனியில் பசுவின் காலடிக் குளம்பு பட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்ததாம். அத்துடன், `என்னையே கோபப்படுத்துகிறாயா...’ என்றொரு குரல் கேட்டதாம்.

மட்டுமன்றி அந்த லிங்கம் அங்கிருந்து விலகி மலையின் உச்சிக்குச் சென்றதாக உணர்ந்தார் மல்லைய நாயக்கர். பதற்றமும் பயமும் சேர்ந்து கொள்ள, தன் தம்பி இளைய மல்லைய நாயக்கரை அழைத்துக்கொண்டு உச்சிக்குச் சென்றார்.

அங்கே அந்த லிங்கத் திருமேனியைக் கண்டனர். சாமிக்குற்றம் ஆகிவிட்டதே என்று மருகிய மூத்தவர் `எங்களை மன்னித்துவிடும். நாங்கள் இனி கீழே இறங்கப்போவதில்லை. உம்மைக் கோபப்படுத்திய பாவத்துக்குப் பிராயச்சித்தமா எங்களையும் இங்கே கல்லா சமைச்சுடும்’ என்று வேண்டிக்கொண்டாராம். அதன்படியே அந்தச் சகோதரர்கள் இருவரும் அங்கேயே கல்லாக மாறிப் போனார்களாம்.

பின்னர், இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உறவுக்காரர்கள் வெள்ளிக்கவசம் செய்து எடுத்துச் சென்று லிங்கத்திருமேனிக்குச் சாத்தினார்களாம். அத்துடன் சிவனாரின் கோபத்தைத் தணிக்க, எங்கள் முன்னோரான மல்லைய நாயக்கர் வழிவந்தவர்கள் பூசாரியாக இருந்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரையிலும் நான் பூசாரியாக இருந்தேன். வயதாகி விட்டதால், இப்போது என் தம்பி மகன் சரவணன் பூசாரியாக இருக்கிறான்.சிவராத்திரி தினத்தில் இரவு பூஜை சிறப்பாக இருக்கும்.

பாலில் அவித்த பயிர் வகைகளை சிவனுக்குப் படைப்போம். அன்றும் மறுநாளும் எங்கள் மாவட்டத்தில் கோம்பை, கோயிலூர் பகுதிகளிலும் கரூர் மாவட்டத்தில் கடவூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்னதானம் நடக்கும். சுவாமி கோபம் கொண்டு எங்கள் ஊர் வழியாகத்தான் மலைமீது போய் அமர்ந்தார். ஆகவே அந்த வழியாகவே மலையேறிச் சென்று சிவனாரைப் பூஜிப்போம்.

சிவராத்திரி தினத்தில், கல்லாக சமைந்து போன எங்கள் முன்னோர் வாழ்ந்த வீட்டில் பூஜை செய்துவிட்டே மலையேறுவோம். அதேபோல், சிவராத்திரி பூஜையையொட்டி தொப்பேஸ்வரர் சந்நிதி அருகில் உள்ள எங்கள் முன்னோரான பெரிய மல்லைய நாயக்கர், சின்ன மல்லைய நாயக்கர் சிலை களுக்கும் பூஜை செய்வோம். எங்கள் தொப்பேஸ்வரர் கரூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கும் அவர்களின் கால்நடைச் செல்வங்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறார்” என்றார்.

மண் மணக்கும் கதை, மகிமைமிகு மலைத் தலம், அற்புத வரங்களை அருளும் சிவபிரான்... நீங்களும் ஒருமுறை தொப்பைய சாமி மலைக்குச் சென்று தொப்பேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; அந்த ஈசனின் அருளால் சகல சுகபோகங்களும் வந்துசேரும்; உங்கள் எதிர்காலம் சிறக்கும்!

எப்படிச் செல்வது?

கரூர் மாவட்டம், கடவூர் சென்று அங்கிருந்து மலைக்குச் செல்லலாம். ஆண்டி ஊத்து வழி, கோட்டைக்கரை வழி என இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆண்டிஊத்து வழி சற்றுக் கடினமானது. வயதானவர்கள் கோட்டைக்கரை வழியைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள பிள்ளைக்காபட்டி வழி, கோம்பை வழியாக செல்லும் வழி என இரண்டு வழிகளைப் பயன்படுத்தலாம்.

காலை ஆறு மணிக்கெல்லாம் மலையேறத் தொடங்குவது போன்று பயணத்திட்டத்தை அமைக்கவேண்டும். தேவையான உணவு, தண்ணீரை எடுத்துச் செல்வதும் தகுந்த வழிகாட்டிகளைத் துணைக்கு அழைத்துச் செல்வதும் மிகவும் அவசியம்!

தொடர்புக்கு: சரவணன் (97878 74627)

கடல் அலை அடைத்த பெருமாள்!

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினக் கடற்கரை பரிகாரத் தலமாக விளங்குவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இங்கு ராமபிரான் கடலில் நவகிரக பிரதிஷ்டை செய்தார் என ராமாயணம் கூறுகிறது. இந்த கடற்கரையில் நவகிரகங்கள் எதிரே உள்ள பெருமாள் கோயிலுக்கும் சென்று வணங்கினால் தான் முழுப்பலனும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

ராமர்
ராமர்

ராமபிரான் சீதையைத் தேடிக்கொண்டு இங்கு வந்தபோது, நவகிரக தோஷங்கள் தன்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் என்று அறிந்து, கடலில் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்ய முயன்றார். ஆனால் வேகமான கடல் அலைகளால் அவரது முயற்சி வீணானது. இதனால் ராமபிரான், பெருமாளை வேண்டினார். பெருமாளும் இங்கு தோன்றி, கடல் அலைகளைத் தடுத்தார்.

இதனால் இங்கு உள்ள பெருமாள், `கடல் அலை அடைத்த பெருமாள்' என்றும் `கடலடைத்த பெருமாள்' என்றும் வணங்கப்படுகிறார். இன்றளவும் தேவிப்பட்டினம் கடலில் வேகமாக அலைகள் வீசுவதில்லை என்பது வியப்பானது.

- பாலா, திருவாரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism