Published:Updated:

மலைப்பயணம் மகேசன் தரிசனம்!

தொப்பேஸ்வர்
பிரீமியம் ஸ்டோரி
தொப்பேஸ்வர்

தொப்பேஸ்வர்

மலைப்பயணம் மகேசன் தரிசனம்!

தொப்பேஸ்வர்

Published:Updated:
தொப்பேஸ்வர்
பிரீமியம் ஸ்டோரி
தொப்பேஸ்வர்

மலைத் தலங்களுக்கு எப்போதுமே மகத்துவம் அதிகம். உடல் பலம், ஆன்மபலம் இரண்டையும் ஒருங்கே தரும் இடங்கள் அவை. ஆகவேதான் ஞானியரும் சித்தர்பெருமக்களும் மலைத் தலங்களை நாடிச் சென்றார்கள். தங்களின் தவத்துக்கும் தேடலுக்கும் அவையே உகந்த இடங்கள் என்று தீர்மானித்து மலை தீரங்களை உறைவிடம் ஆக்கிக்கொண்டார்கள்.

தொப்பையசாமி மலை
தொப்பையசாமி மலை


இன்றைக்கும் சில மலைத்தலங்களில் ஆதிகாலச் சித்தர்கள் பலரும் சூட்சும உருவில் வசிப்பதாக நம்பிக்கை உண்டு. அவ்வகையில், இறைச் சாந்நித்தியம் நிரம்பி வழியும் அபூர்வமான ஒரு மலைத் தலம் குறித்த விவரத்தை. ஆன்மிக அன்பரும் சிவபக்தருமான பாலசுப்ரமணி பகிர்ந்துகொண்டார்.

சுமார் 3,000 அடி உயரத்தில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் மலை. கரூர் - திண்டுக்கல் மாவட்டங்களுக்கு எல்லையாக அமைந்திருக்கும் மலை அது. தொப்பையசாமி மலை என்று பெயர். விரைவில் செல்லவுள்ளோம். நீங்களும் வருகிறீர்களா...’’ எனக் கேட்டார்.

உடனே ஒப்புக்கொண்டோம். பயண ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற, பரவசத்தோடு ஓர் ஆன்மிகப் பயணத்துக்குத் தயாரானோம். ஏற்கெனவே மலைகளில் வாகனங்களில் பயணித்த அனுபவம் உண்டு. என்றாலும், கரடுமுரடாகவும் நெட்டுக்குத்தாகவும் திகழும் கடினமான மலைப்பாதையில் நடைபயணமாகச் செல்வது இதுதான் முதல் முறை.

மலைக்குமேல் தொப்பேஸ்வர் எனும் திருப்பெயரில் ஈசன் கோயில் உள்ளது என்று நண்பர் கூறியிருந்தார். அந்த ஈசன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு மலையேற்றத்துக்கு ஆயத்தமானோம்.

கரூருக்குத் தெற்கு எல்லையில் உள்ளது கடவூர். இதன் அருகில் உள்ள தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் நண்பர் பாலசுப்ரமணி. பயண நாளில் அவரின் தாயார், எல்லோருக்கும் மதிய உணவுக்காக மிக அருமையாகக் கட்டுச்சோறு தயாரித்துக் தூக்குவாளியில் கொடுத்தனுப்பினார். மலையேற்றத்தின்போது அதிகம் தாகம் எடுக்கும் என்பதால் தேவையான அளவு குடிநீரும் பாட்டில்களில் எடுத்துக்கொண்டோம்.

வாசுதேவன்
வாசுதேவன்
சுப்ரமணி
சுப்ரமணி
வெள்ளைச்சாமி
வெள்ளைச்சாமி


`எக்காரணம் கொண்டும் பாட்டில்களை மலைப்புறத்தில் ஆங்காங்கே வீசியெறிய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார் நண்பர். அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, வாசுதேவன், சுப்ரமணி ஆகியோரும் துணையாக வரும்படி ஏற்பாடு செய்திருந்தார் பாலசுப்ரமணி. இவர்களோடு நம் புகைப்படக்காரரும் சேர்ந்துகொள்ள ஐவராகப் புறப்பட்டோம்.

தொப்பையசாமி மலை
தொப்பையசாமி மலை

தொப்பையசாமி மலைக்குச் செல்ல கரூர் மாவட்டத்திலிருந்து செல்லும்படியான வழி ஒன்று; திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒன்று என இரண்டு பாதைகள் உண்டு. பயணத்துக்கு தலைமை ஏற்றிருந்த வெள்ளைச்சாமி, கரூர் மாவட்டத்தில் உள்ள `ஆண்டி ஊத்து’ வழியாக செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

சுமார் 9:30 மணியளவில் அடிவாரத்தை அடைந்தோம். சற்று இளைப்பாறி விட்டு, மலையேறத் தொடங்கினோம். ஒற்றையடி பாதைதான். ஓர் ஒழுங்கின்றி... சரளைக் கற்களும், பாறைத் திட்டுகளும், ஆங்காங்கே வழுக்குப் பாறைகளுமாக அந்தப் பாதை நீண்டது. ஒவ்வோர் அடியையும் மிகக் கவனமாக - மிக அழுத்தமாக ஊன்றியபடி நகரவேண்டி இருந்தது.

தொப்பையசாமி மலை
தொப்பையசாமி மலை

சுமார் 300 அடி ஏறுவதற்குள் மூச்சுத் திணறியது நமக்கு. உடம்பெங்கும் வியர்வை பெருக்கெடுத்தது. துணையாக வந்த நண்பர்களுக்குப் பிரச்னை இல்லை. அவர்களுக்கு இந்த மலையேற்றம் பழகிவிட்டிருந்தது போலும். அருகில் தோதான ஓரிடத்தில் மரத்தடியில் அமர்ந்து மூச்சு வாங்கினோம். தாகம் தீர தண்ணீர் பருகினோம். ``அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டாம்; மலையேறுவது கடினமாகிவிடும்’’ என்று கேட்டுக்கொண்டார் வெள்ளைச்சாமி.

சற்று ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சி உண்டாக, மீண்டும் பயணித்தோம். ஆங்காங்கே பாதையே இல்லாதபடி ஒழுங்கற்று இருந்தது. அப்படியான இடங்களில்... சிறு பாறை முகடுகளிலும் மரங்களிலும் பெயிண்டால் வரையப்பட்டிருந்த அம்புக் குறிகளே எங்களுக்கு வழிகாட்டின. அம்புக்குறிகளின் உதவியோடு பாறைகளில் ஏறி இறங்கியும் மரங்களைச் சுற்றியும் புதர்களை அகற்றிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.

மகேசன் தரிசனம்
மகேசன் தரிசனம்

மலைக்கு வரும் புதியவர்கள் தக்க வழிகாட்டிகளோடு வருவது நல்லது. இல்லையெனில் அதீத சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். உடன் வந்த வெள்ளைச்சாமி அவ்வப்போது நம்மை உற்சாகப்படுத்தி பயணிக்கவைத்தார். ``எவ்வளவு தூரம் கடந்திருப்போம்?’’ என்று நான் கேட்க, ``பத்தில் ஒரு பங்கு தூரத்தைக்கூட நாம் கடக்கவில்லை’’ என்றார் வெள்ளைச்சாமி. எங்களுக்கு மயக்கம் வராத குறைதான்!

எனினும் `தொப்பேஸ்வரரை தரிசிக்கப்போகிறோம்’ என்ற எண்ணம் எங்களுக்குள் உந்துதலை அளித்தது. ஓரளவு வேகத்தைக் கூட்டினோம். சுமார் 800 அடிகள் ஏறியிருந்த நிலையில், சுனை ஒன்றைக் காட்டினார் வெள்ளைச்சாமி. தண்ணீர் காலியாகியிருந்த பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டோம். நாங்களும் சிறிது நீர் பருகினோம். அற்புதமான தித்திப்பு.

கொண்டு வந்த பாட்டில்கள் சிலவற்றை அங்கிருந்த ஓரிடத்தில் புதர்களுக்கு இடையே வைத்து விட்டு, மீண்டும் அந்த இடத்தை தெரிந்துகொள்ள வசதியாக அடையாளமிட்டார் வாசுதேவன். ``கீழே இறங்கும்போது வழியில் தண்ணீர் தேவைப்படுமே... அதற்காக இந்த ஏற்பாடு’’ என்றார். மட்டுமன்றி சுமை குறைவதால் மேற்கொண்டு மேலே ஏறுவது எளிது என்றும் நண்பர்கள் விளக்கினார்கள். அதேபோல், மலைத் தலங்களுக்குச் செல்லும்போது ஒரே மூச்சாக ஏறுவதற்கு முயலக்கூடாது. ஆங்காங்கே இளைப்பாறிச் செல்வதே எளிது என்று விளக்கினார் வெள்ளைச்சாமி.

புதர்
புதர்


நாங்களும் ஆங்காங்கே சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாறிய படி மேலே ஏறினோம். அந்தத் தருணங்களிலும் சரி, மலையேறும் போதும் பல ஆன்மிக - புராணக் கதைகளைச் சொல்லியபடியே வந்தார் வெள்ளைச்சாமி. வாசுதேவனும், சுப்ரமணியும் மலையில் இருக்கும் மூலிகைகளின் மகத்துவத்தை விவரித்தார்கள். அவற்றின் பயனாக அடிவாரத்தில் வசிக்கும் மக்களும் கால்நடைகளும் அவ்வளவு எளிதில் பிணிப் பாதிப்புகளால் சிரமப்படுவதில்லை என்றும் தகவல் சொன்னார்கள். `கொடுத்து வைத்தவர்கள்... அற்புதமான வாழ்க்கை’ என்று மனதில் நினைத்துக்கொண்டோம்.

ஒருகட்டத்தில் மூவருமாக இணைந்து ஏககாலத்தில் ``இங்குள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் காரணம் மலையின்மீது இருக்கும் ஈசனேயன்றி வேறேது?’’ என்று சொன்னபோது, தொப்பேஸ்வரர் மீது அவர்களுக்கு உள்ள பக்தியை உணர்ந்து சிலிர்த்தோம். வெயில் அதிகம்தான் என்றாலும் மலைக்காற்று வெம்மையைத் தணித்தது.

வழியில்... பெரும்பாறையில் பெரிதாக எழுதப்பட்டிருந்த ஓம் எனும் பிரணவ மந்திரம், நாம் நாசியைத் துளைக்கும் பச்சிலைகளின் மணம், நம்மைப்போலவே பயணத்துக்கு வந்திருந்த... அதேநேரம் நம்மைக்காட்டிலும் உற்சாகத் துள்ளலுடன் கடந்து செல்லும் யாத்திரிகர்கள், மேய்ச்சலில் கவனம் செலுத்தும் ஆவினங்கள் என மனதுக்கு இதமாக இருந்தது அந்த அனுபவம்.

ஒருவழியாக, 2,000 அடி தூரத்தைக் கடந்தோம். அந்த இடத்தில் பாறையில் கரூர், திண்டுக்கல் என்று எழுதி அம்புக்குறி இட்டிருந்தார்கள். அம்புக்குறி காட்டும் பாதைகளில் ஒன்று நாங்கள் வந்தது. மற்றொன்று இரண்டாம் பாதை என்பது புரிந்தது. அங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஏறத் தொடங்கி 500 அடி தூரம் கடந்ததும் தொப்பேஸ்வரர் கோயிலின் தீபஸ்தம்பம் தெரிந்தது. நம்மையும் அறியாமல் சிவசிவா என்று வாய் முணுமுணுக்க மனதுக்குள் இனம்புரியாத பரவசம்!

``இன்னும் சிறிது தூரம்தான்... கோயில் வந்துவிடும்’’ என்றார் வெள்ளைச்சாமி. எங்கள் நடையில் எங்களையும் அறியாமல் வேகம் கூடியது. குறிப்பிட்ட ஓரிடத்தில் புதர் ஒன்று இடைமறிக்க, உள்ளே நுழைந்து புதரைக் கடந்து மறைந்தார் வெள்ளைச்சாமி. மற்றவர்களும் பின்தொடர்ந்தோம். புதரைக் கடந்ததும் சமதளமாகத் திகழ்ந்த பாறையின் பரப்பைக் கண்டோம். அதில் இரண்டு குழிகள்.

சிவனுக்குப் படைப்பதற்காக, தினையைப் போட்டு இடிக்க ஏதுவாக அந்தக் குழிகள் அமைக்கப்பட்டதாக நண்பர்கள் சொன் னார்கள். அந்தப் பாறைப் பரப்பிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே மலையுச்சியை எட்டிவிடமுடிகிறது. ஆம்! மதியம் சுமார் ஒன்றரை மணி அளவில் தொப்பேஸ்வரர் சந்நிதியை அடைந்திருந்தோம்.

கோயில் போன்ற கட்டட அமைப்பெல்லாம் இல்லை. சிறு பாறையே சுயம்புலிங்கமாக தோன்றியது போன்று தொப்பேஸ்வரர் காட்சி தருகிறார். சுற்றிலும் மலைக்கற்களையே அரண்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆதியந்தம் இல்லாத அந்தச் சிவப் பரம்பொருள் வானமே கூரையாக அருள்பாலிக்கிறார். பாறை லிங்கத்தில் பசுவின் கால்குளம்பு பதிந்ததுபோன்ற தடம் உள்ளது.

அதேபோல் ஆங்காங்கே சிறு சிறு கற்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது ஒருவகை வேண்டுதலாம்! சிவனார் சந்நிதிக்கு அருகிலேயே இரண்டு கற்சிலைகளையும் காண முடிந்தது. தொப்பேஸ்வரரின் கோபத்துக்குக் காரணமான அன்பர்கள் இருவர், தங்களின் தவறுக்குப் பிராயச்சித்தமாக தாங்களே வேண்டிக்கொண்டு இப்படிக் கற்சிலைகளாக மாறிப் போனார்களாம்!

அது என்ன திருக்கதை?

ஏகாந்தமான இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து தொப்பேஸ்வரர் கோயில்கொள்ள காரணம் என்ன?

அடுத்த இதழில் காண்போம்...

தொப்பேஸ்வர்
தொப்பேஸ்வர்

எப்படிச் செல்வது?

கரூர் மாவட்டம், கடவூர் சென்று அங்கிருந்து மலைக்குச் செல்லலாம். ஆண்டி ஊத்து வழி, கோட்டைக்கரை வழி என இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆண்டிஊத்து வழி சற்றுக் கடினமானது. வயதானவர்கள் கோட்டைக்கரை வழியைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள பிள்ளைக்காபட்டி வழி, கோம்பை வழியாக செல்லும் வழி என இரண்டு வழிகளைப் பயன்படுத்தலாம்.

காலை ஆறு மணிக்கெல்லாம் மலையேறத் தொடங்குவது போன்று பயணத்திட்டத்தை அமைக்கவேண்டும். தேவையான உணவு, தண்ணீரை எடுத்துச் செல்வதும் தகுந்த வழிகாட்டிகளைத் துணைக்கு அழைத்துச் செல்வதும் மிகவும் அவசியம்!

தொடர்புக்கு: சரவணன், 97878 74627

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism