Published:Updated:

கருவறை தரிசனம்!

தென்னாங்கூர் பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
தென்னாங்கூர் பாண்டுரங்கன்

`சுதந்திர ஐயப்பன் திருக்கோயில்’ என்று பெயர்பெற்ற ஆலயம்; பக்தர்கள் தாங்களே ஐயன் ஐயப்பனைத் தொட்டு வணங்கும் சிறப்பு பெற்ற கோயில் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு.

கருவறை தரிசனம்!

`சுதந்திர ஐயப்பன் திருக்கோயில்’ என்று பெயர்பெற்ற ஆலயம்; பக்தர்கள் தாங்களே ஐயன் ஐயப்பனைத் தொட்டு வணங்கும் சிறப்பு பெற்ற கோயில் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு.

Published:Updated:
தென்னாங்கூர் பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
தென்னாங்கூர் பாண்டுரங்கன்

கற்பக விநாயகர்

கற்பகப் பிள்ளையார், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், வரத கணபதி, கற்பகக் களிறு, கணேசன், கணேச புரேசன், தேசி விநாயகப் பிள்ளையார், மருதங்கூர் அரசு, மருதங்கூர் ஈசன்… இப்படி, பத்துப் பெயர்கள் கொண்ட பிள்ளையார் ஒருவர் உண்டு. அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்!

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்துள்ளது பிள்ளையார்பட்டி. இங்கே இரண்டு கரங்களுடன், அங்குச-பாசம் இல்லாமல், துதிக்கையை வலம் சுழித்து விசேஷ திருக்கோலம் காட்டுகிறார் விநாயகர்.

கற்பக விநாயகர்
கற்பக விநாயகர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கோயில், பல்லவர் காலக் குடைவரை. கி.பி 642-க்கு மேல் 688-க்குள் இந்தக் கோயில் உருவாகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில், வடதிசை நோக்கி எழுந்தருளியுள்ள ஆனைமுகத்தோனை, ‘தேசி விநாயகப் பிள்ளையார்’ என்று குறிப்பிடுகிறது, இந்தக் கோயில் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டு.

இந்தக் கல்வெட்டில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விநாயகருக்குக் கருப்பட்டிப் பணியாரமும், பிட்டும் நைவேத்தியம் செய்வதற்காக, எந்தவித வரியும் செலுத்த வேண்டாத ஒரு நிலம் கொடுத்த செய்தி காணப்படுகிறது.

கற்பக விநாயகர் கோயிலில், திருவீசர் எனும் ஸ்ரீதிருவீங்கைக்குடி மகாதேவர், ஸ்ரீசிவகாமியம்மனுடன் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்குச் சிறிது வடமேற்கில், ஒரு கற்றளி இருந்திருக்கிறது. அங்கு எழுந்தருளிய ஈஸ்வரனுக்கு ஸ்ரீமருதீசர் என்று பெயர்.

தினமும் விழாக்கோலத்துடன் திகழும் பிள்ளையார்பட்டியில், விநாயக சதுர்த்தியன்று விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியைக் கொண்டு, கொழுக்கட்டை தயாரிக்கிறார்கள். 18 படி அரிசி மாவு, எள், கடலைப்பருப்பு, தேங்காய், பசுநெய், வெல்லம், ஏலக்காய் முதலியன கொண்டு பிரசாதம் தயாரித்து விநாயகருக்குப் படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்தத் தலத்தை அர்ஜுன வனத் திருத்தலம் என்றும் குறிப்பிடுகின்றனர். பிள்ளையார்பட்டி விநாயகர் சிவ பூஜை செய்யும் கோலத்தோடு வீற்றிருப்பதால், இந்தச் சந்நிதியில் மந்திர தீட்சை பெறலாம் என்றும், மந்த்ரோபதேச பலனை விரைவில் அருள்பவர் ஸ்ரீகற்பக விநாயகர் என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். நகரத்தார் பராமரிப்பில் அற்புதமாகத் திகழும் இந்த ஆலயம், அனைவரும் தரிசித்து அருள்பெற வேண்டிய தலம்!

பெருவுடையார்!

தஞ்சைத் தரணியின் புகழ் போற்றும் அற்புதம், பெரிய கோயில். காஞ்சியம்பதியில், ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஸ்ரீகயிலாச நாதர் கோயிலில் மனதைப் பறிகொடுத்தான் ராஜராஜன்; ‘கச்சிப்பேட்டு பெரிய தளி’ எனப் போற்றி மகிழ்ந்தான். அந்த ஆலயத்தின் தாக்கத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சைப் பெரியகோயில் என்பார்கள்.

தஞ்சைப் பெரிய கோயில் அமைந்துள்ள பகுதியை ‘ராஜராஜீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளான் ராஜராஜன். அடுத்து வந்த ராஜேந்திர சோழன், ‘ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்’ என பிரகதீஸ்வரரைக் குறிப்பிடு கிறான். தட்சிணமேருவாக அமைக்க எண்ணியதாலும் சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டிருந்ததாலும் பிரமாண்டமாக லிங்கத் திருமேனியை வடிவமைத்தான் ராஜராஜ சோழன். 13 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் பெருவுடையார். ஒரே கல்லால் ஆன லிங்கம் இது. இங்கே மகுடாகம அடிப்படையில் வழிபாடு அமைந்துள்ளது.

பெருவுடையார்
பெருவுடையார்
படம்: ம.அரவிந்த்

சுமார் 216 அடி உயரம் கொண்ட விமானமே பெரும் சாதனை; அதிலும் பொன்வேய்ந்து அழகு பார்த்திருக்கிறான். இதைத் தெரிவிக்கும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவபெருமான் குடிகொண்டிருக்கும் மேரு பர்வதம் எப்படிப் பொன்மலையாகத் தகதகக்குமோ... அதேபோல், தட்சிணமேருவாம் தஞ்சைக் கோயிலும் பொன்மலையாகவே விளங்கியுள்ளது. கருவூர்ப் புராணம் ‘பொற்கிரி’ என்றே போற்றுகிறது.

இந்தக் கோயில் சிறப்புற விளங்க, 196 பணியாளர்களை நியமித்தான் மன்னன். நிலம் மற்றும் தொழில் நிமித்தமாக அதிகாரிகளையும், கருவூலதாரர்களாக இரண்டு அந்தணர்களையும், ஏழு கணக்கர்களையும், எட்டுத் துணைக் கணக்கர்களையும் நியமித்தவன், 178 பிரம்மச்சாரிகளை மாணியக்காரர்களாக அமர்த்தியிருக்கிறான். தவிர, 400 ஆடல் மகளிரையும் உடுக்கை, வீணை, மத்தளம் முதலான வாத்தியங்களை வாசிக்க 258 இசைக் கலைஞர்களையும் நியமித்தான்.

பெருவுடையார், பிரஹன்நாயகி மற்றுமுள்ள தெய்வங்களுக்கு, 39925 (179 கிலோ) கழஞ்சு பொன் ஆபரணங்களைக் கொடையாக அளித்தானாம். அதுமட்டுமா? மாமல்லபுரம் தொடங்கி கேரளம் வரை, தான் கையகப் படுத்திய ஊர்களில் இருந்தெல்லாம் பெரிய கோயிலுக்கு நிதி தந்த ராஜராஜ சோழன், பெரியகோயில் எனும் அந்தச் சிற்பக் களஞ்சியத்தையே பெரும் நிதியாக நமக்குத் தந்து சென்றிருக்கிறான்!

புற்று மண்ணில் உருவானாள்!

சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது, நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டு தேவியர்களைக் காவல் தெய்வமாக வைத்தார்கள் என்கிறார்கள், சரித்திர ஆசிரியர்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்கிறது ‘சோழசம்பு’ எனும் நூல்.

அன்னை புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய தலம் இது எனும் தகவலும் உண்டு. தஞ்சையை ஆண்ட அரசர்கள் மட்டுமல்ல, பிற்காலத்தில் ஆண்ட ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் பல திருவிளையாடல்கள் மூலம் தன்னுடைய மகிமையை உணர்த்திப் பெரும்பேறு பெற்றவள், புன்னைநல்லூர் மாரியம்மன்.

மகான் சதாசிவ பிரம்மேந்திரரே புற்றாக இருந்த இந்த அம்மனைத் திருவடிவாகச் செய்தார். சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில், பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவானவர், இந்த மூல மூர்த்தியான அம்மன் என்கிறார்கள். அதனால், இந்த அம்மன் இயற்கையிலேயே நோய் தீர்க்கும் திருமேனியள் ஆவாள்.

புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூர் மாரியம்மன்

அம்மன் புற்று வடிவத்தினள் என்பதால், இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு மட்டுமே செய்யப் படுகிறது. அம்மனுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மண்டல தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் கோடைக்காலத்தில் அம்மனுக்கு வியர்வை பூக்கும் அதிசயம் நிகழ்கிறது புன்னைநல்லூரில். ஆடி மாதம் அம்மனுக்கு நடைபெறும் பல்லக்கு உற்சவம் பிரசித்திபெற்றது. சரபோஜி மன்னர் இந்த அம்மனின் தீவிர பக்தர். அதனால், இந்த ஆலயத்தின் கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் போன்றவற்றைக் கட்டி திருப்பணி செய்தார். மராட்டிய மன்னரான சிவாஜி காலத்தில், இக்கோயிலுக்கு 3-வது திருச்சுற்று மதில் கட்டப்பட்டது என்கிறார்கள்.

ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் என்பவர், உணவுக்கூடம் மற்றும் வெளிமண்டபம் ஆகியவற்றைக் கட்டினார் என்கிறது தலபுராணம். ஆங்கிலேயே அதிகாரிகள் பலரும் இந்த அம்மனுக்குக் காணிக்கையாகப் பல அணிகலன்களை அளித்துள்ளனர்.

இங்கு வேப்பமரமே தல விருட்சமாக விளங்குகிறது. இங்குவந்து அம்மனை வேண்டிக்கொண்டால், தீராத பிணிகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கண் குறைபாடுகள் - பிணிகள் உள்ளோர் இங்கு வந்து தங்கியிருந்து குணம் அடைந்து செல்கிறார்கள்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன்

சத்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளின் சீடர் பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள். இவர் தம்முடைய குருநாதரின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் விஜயம் செய்து, நாமசங்கீர்த்தனத்தால் எண்ணற்ற மக்களை ஆன்மிகத்தின்பால் திருப்பும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

ஒருமுறை ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் கனவில் தோன்றிய குருநாதர், அவரைப் பண்டரிபுரம் செல்லுமாறும், அங்கே பாண்டுரங்கன் ஆலயத்தில் அவருக்குப் பாண்டுரங்கனின் விக்கிரகம் ஒன்று கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல், பாண்டுரங்கன் கோயில் பண்டா (அர்ச்சகர்) கனவிலும் தோன்றிய குருநாதர், கோயிலுக்கு வரும் தம்முடைய சீடரிடம் பாண்டுரங்கனின் விக்கிரகத்தைத் தருமாறு உத்தரவிட்டார்.

பண்டரிபுரத்தில் இருந்து பாண்டுரங்கனின் விக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு, நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு நாம சங்கீர்த்தனம் செய்து வந்தார் ஹரிதாஸ்கிரி சுவாமிகள்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன்
தென்னாங்கூர் பாண்டுரங்கன்

தம்முடைய குருநாதர் ஸித்தியான பிறகு, தென்னாங்கூரில் தம்முடைய குருநாதரை வழிபடுவதற்காக ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தையும், அங்கே குருநாதருக்கு ஒரு பிருந்தாவனமும் ஏற்படுத்தினார். மேலும், குருநாதரின் உத்தரவுப்படி, அங்கே ரகுமாயி சமேதராக ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சந்நிதி ஏற்படுத்தினார். பண்டரிபுரத்தில் தனக்குக் கிடைத்த விக்கிரகத்தையும் வைத்து வழிபாடுகளும் நாமசங்கீர்த்தனமும் நடைபெற வழிவகை செய்தார்.

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது தென்னாங்கூர். இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்தக் கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தைத் தரும். இந்தப் பீடத்தில் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கனின் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தைத் தரும்.

இந்தப் பீடத்தில் பாண்டுரங்கன் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுராபுரி ஆளும் மன்னனின் அலங்காரத்திலும், வியாழன் அன்று பக்தர்களுக்கு ஸ்ரீபாத தரிசனம் அருளும் வகையில் எளிய அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக் கவசம் அணிந்தும், சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளைப் போலவும் தரிசனம் அருள்கிறார்.

யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். இறைவனுக்கு நாமசங்கீர்த்தனம் (பக்திப் பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுவது, இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம்.

சிந்தை மேவும் முருகன்!

தருமமிகு சென்னை என்று ஞானநூல்கள் போற்றும் தமிழகத் தலைநகர்ப் பகுதியில் கந்தகோட்டம், வடபழநி முருகன் கோயில் போன்ற பிரசித்திபெற்ற ஆலயங்கள் உண்டு என்பதை அறிவோம். அதேபோல், சென்னைச் சிந்தாதிரிப்பேட்டையிலும் மிக அற்புதமான முருகன் கோயில் ஒன்று உள்ளது.

சிறிய தறிகள் நிறைந்த பேட்டை என்பதுதான் சின்னதறிப்பேட்டை என்றாகி, சிந்தாதிரிப்பேட்டை என்று மருவியதாகக் கூறுகிறார்கள். இங்கு கோயில் கொண்டிருக்கும் முருகனை `சிந்தை முருகன்’ என்று பக்தர்கள் சிறப்பிக்கிறார்கள். கோயிலின் கருவறையில் வேழமங்கை தெய்வானை தேவியுடனும், வேட மங்கையாம் வள்ளிக்குறத்தியுடனும் வேல் விநோதன் முருகப்பெருமான் அருட்பிரவாகமாக நம்மை ஈர்க்கிறார்.

ஆதிசங்கரர் வழிகாட்டியபடி, அறுவகை சமய வழிபாடும் நடைபெறும் அழகுத் திருக்கோயில் இது. அபிராமி சமேத அமிர்தகடேசர், வேங்கட மலையான், கனகதுர்கை, காயத்ரிதேவி, ஐயப்பன், ஆஞ்சநேயர், கால பைரவர் மற்றும் நவகிரகங்களுக்கும் இங்கே சந்நிதிகள் அமைந்துள்ளன. அத்துடன் அருணகிரிநாத முனீந்திரர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஷீர்டி சாயிபாபா, ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் முதலான அருட்செல்வர்களும் காட்சியளிக்கிறார்கள்.

முருகன்
முருகன்

சென்னை கந்தகோட்டம் என வழங்கும் கந்தசாமி கோயிலை தரிசித்து, அங்கு அருளும் முத்துக்குமாரசுவாமியைப் பதிகம் பாடி வழிபட்ட பாம்பன் சுவாமிகள், சிந்தாதிரிப்பேட்டை முருகன் கோயிலையும் தரிசித்து வணங்கி வழிபட்டிருக்கலாம் என்கிறார்கள் முருகபக்தர்கள்.

ஐயா முதலி தெரு (மார்க்கெட் பின்புறம்) அமைந்துள்ள இந்த முருகவேள் திருக்கோயிலில் அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘ஞான வேல்’ ஒன்றை அவர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், அவர் திருக்கரங்களால் கடம்ப மரக்கன்று ஒன்று நடப்பட்டதாகவும் தகவல் சொல்கிறார்கள்.

கடம்ப மலர் முருகனுக்கு மிகவும் உகந்த மலர் அல்லவா! அந்த ஞான வேலுக்குத் திருநீற்று அபிஷேகம் செய்து, அடியார்களுக்கு அருட் பிரசாதமாக இன்றும் வழங்கப்படுகிறது. அந்த ஞானவேல் பிரசாதம் அன்பர்களது மனக்கவலைகளை நீக்கி, நோய் தீர்த்து, மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரியார் சுவாமிகளும் வழிபட்டுப் போற்றிய ஆலயம் இது. கந்தசஷ்டிப் பெருவிழா இங்கே விசேஷம்!

சுதந்திர ஐயப்பன்!

`சுதந்திர ஐயப்பன் திருக்கோயில்’ என்று பெயர்பெற்ற ஆலயம்; பக்தர்கள் தாங்களே ஐயன் ஐயப்பனைத் தொட்டு வணங்கும் சிறப்பு பெற்ற கோயில் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு.

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது, சாம்பவர்வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.

குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன் கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் ஐயனாகவும், சபரிமலையில் யோகியாகவும் இருக்கும் பகவான், இங்கே குடும்ப நலனைக் காக்கும் காப்பாளனாகச் சங்கல்பிக்கப் பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தக் கோயிலில் இருமுடி இல்லாமல், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டாம் படி ஏறி ஐயனை வழிபடலாம். இது ஆகம முறைகள், தாந்த்ரீக முறைகளுக்கு உட்பட்டதா என்றால், இல்லைதான். அதனால்தானோ என்னமோ இந்தக் கோயிலுக்குச் சுதந்திர திருக்கோயில் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

சுதந்திர ஐயப்பன்
சுதந்திர ஐயப்பன்

அதேநேரம், இந்த வழிமுறைகள் தேவ பிரச்னம் மூலம் பகவானிடம் உத்தரவு கேட்கப்பட்டு, அதன் பின்னரே நிர்ணயிக்கப்பட்டன என்று ஆலய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

அதன்படி, பக்தரானவர் தன் தாய் தந்தை, மனைவி மக்களுடன் குடும்ப சமேதராகப் பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

அதேநேரம், மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும். தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதி களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இப்படியான விரத நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஐயனை தரிசித்து வந்தால், சகல நன்மைகளும் கைகூடும்; வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும் என்பது நம்பிக்கை!