Published:Updated:

மங்கல மணவாழ்க்கை தருவாள் சர்வாங்க சுந்தரி!

சர்வாங்க சுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
சர்வாங்க சுந்தரி

சர்வாங்க சுந்தரி

மங்கல மணவாழ்க்கை தருவாள் சர்வாங்க சுந்தரி!

சர்வாங்க சுந்தரி

Published:Updated:
சர்வாங்க சுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
சர்வாங்க சுந்தரி

`மாய பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி’ என்று பரமேஸ்வரனை வேண்டித் துதிப்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள். ஆம், பிறப்பை அறுத்து மோட்சப்பேறு பெறுவதையே உயர்ந்த லட்சியமாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

சர்வாங்க சுந்தரி
சர்வாங்க சுந்தரி


ஞானியரும் தவசீலர்களும் பெரும்பாடுபட்டு பெற்றுய்யும் இந்தப் பெரும்பேற்றினை, எளியோராகிய நாமும் பெற அருள்செய்யும் தலம் ஒன்று உண்டு. பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 63-வது தலம் அது. சிவபெருமான் கொடுகொட்டி எனும் பெரும் கூத்தினை நிகழ்த்திய க்ஷேத்திரம் அது.

அதன் திருப்பெயர் கருவிலி. பிரசித்திபெற்ற கோனேரிராஜபுரம் எனும் ஊருக்கு அருகிலுள்ளது. மீண்டும் எந்தவொரு கருவிலும் தோன்றாத வகையில் அருள்செய்யும் பதி என்பதால் கருவிலி என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றன புராணங்கள். தற்போது பேச்சு வழக்கில் ‘கருவேலி’ என்றழைக்கப்படுகிறது.

இங்கே, சர்வாங்க சுந்தரி அம்மையுடன் சர்க்குணநாதராகக் கோயில் கொண்டுள்ளார் ஈசன்.

உலகமும் உயிர்களும் உய்வடையும் பொருட்டு சிவபிரான் ஆடிய கூத்துகளில் முக்கியமானது, கொட்டிட்டை எனப்படும் கொட்டிடைக் கூத்து. போரின் முடிவில் வெற்றிக்களிப்பில் நிகழ்த்தப்படும் கூத்து இது என்பார்கள். அம்பாள் மிக வியப்புடன் `சீர்’ எனும் தாளத்தைக் கொட்டிட, திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்தபிறகு, ஈசன் கைகொட்டி ஆடிய கூத்து இது என்கின்றன புராணங்கள். இதைக் கொட்டிடை சேதம் என்றும் சொல்வார்கள். இந்தக் கூத்து நிகழ்ந்த தலம் ஆதலால் இவ்வூரைக் ‘கருவிலிக் கொட்டிடை’ என்றும் சிறப்பிக்கின்றன புராண நூல்கள்.

சர்குணன் என்ற மன்னன் ஒருவன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு, மனக்குறைகள் நீங்கப்பெற்று முக்திபெற்றான். அவன் பெயரால் இத்தலத்துக்குச் சர்குணேஸ்வரபுரம் என்றும், இறைவனுக்குச் சர்குணேஸ்வரர் என்றும் பெயர் வந்ததாகச் சொல்கிறது தலபுராணம். மன்னன் சர்குணனே இங்கே ஆலயம் எழுப்பியதாகவும் ஒரு தகவல் உண்டு.

சர்குணேஸ்வரர்
சர்குணேஸ்வரர்
விநாயகர்
விநாயகர்
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி


சோழர்களில் மூன்றாம் குலோத்துங்கன் இங்கு திருப்பணி செய்ததாக சரித்திரம் சொல்கிறது. இதற்கு சாட்சியாக அவரின் கல் திருமேனி ஒன்றும் கோயில் வளாகத்தில் உள்ளது.

மிகச் சாந்நித்தியத்துடன் திகழ்கிறது சர்குணேஸ்வரர் ஆலயம். நீண்டதொரு நடைபாதையில் நந்தி மண்டபத்தைக் கடந்து செல்லும் போதே மூலவரை தரிசித்துவிட முடிகிறது. கிழக்கு நோக்கி அருள்கிறார் சர்குணேஸ்வரர். அம்பிகை, இந்திரன், யமன் மற்றும் உருத்திரபல்கணத்தவர் இந்த ஈசனை வழிபட்டு அருள் பெற்றார்களாம். மூலவரின் லிங்கத் திருமேனி, உலோகக் காப்புடன் திகழ்வது சிறப்பு.

தரிசித்த கணத்திலேயே மன நிம்மதியை அருளும் ஈசன் இவர் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள். நாமும் அனுப வத்தில் உணர்ந்து சிலிர்த்தோம். தீபங்களினூடே சிவச்சூரியராய் ஒளிரும் பெரும் சோதியரை சர்குணேஸ்வரரை தரிசித்த நிமிடத்தில், சொல்ல இயலாத பெரும் சிலிர்ப்பும் ஆனந்தமும் நமக்குள்!

கோஷ்டாதி திருமேனிகளும் அழகு மிளிரக் காட்சித் தருகின்றன.தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்ரமணியர், துர்கை, பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வந்து, மூலவரை மீண்டும் தரிசித்து வழிபட்டுவிட்டு, இடப்பக்கம் உள்ள வாயிற்புறம் வழியாக அம்மன் சந்நிதியை அடைந்துவிடலாம்.

ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டுமே கிழக்கு நோக்கி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சம். அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் பளிங்குக் கல்லால் ஆன சிம்மவாஹினியை அமைத்திருக்கிறார்கள்.

தட்சனின் மகளாய்ப் பிறந்து, யாகத்தீயில் வீழ்ந்து தாட்சாயினியின் அவதாரம் நிறைவுற்றபிறகு, மீண்டும் இமவான் மகளாய் அவதரித்த அம்மை சிவபெருமானை அடையும் பொருட்டு பெரும் தவம் இயற்றினாள். அவ்வாறு அவள் தவம் செய்தது இந்தப் பகுதியில்தான் என்கின்றன புராணங்கள். அவள் தவம் செய்த இடம் தற்போது அம்பாட்சிபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தவக் காலத்தில், பிரபஞ்சத்தின் அனைத்து லட்சணங்களும் ஒன்றாக உருவெடுத்து வந்ததுபோன்று அழகு மிளிரத் திகழ்ந்தாளாம், ஆகவே அம்பிகைகைக்கு, சர்வாங்க சுந்தரி என்று திருப்பெயர் வந்ததாம்!

பெயருக்கேற்ப, அதீத செளந்தர்யத்துடன் அருள்பாலிக்கிறாள் அம்பிகை. தன்னை நாடிவரும் அன்பர்களின் வாழ்வைச் செழிக்க வைத்து, அவர்களின் இல்லறம் நல்லறமாகத் திகழ அருள்பாலிக்கிறாள் இந்தச் சர்வாங்கசுந்தரி.

இந்தக் கோயிலில் விசேஷ தினங்களில் விளக்கு பூஜை, பௌர்ணமி தினங்களில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் சிறப்புற நடைபெறுகின்றன.

திருக்கடவூரில் சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட யமதருமன், சிவனருளால் மீண்டும் சுயஅதிகாரம் பெற்றபிறகு, பல தலங்களில் சிவவழிபாடு செய்தானாம். அவற்றுள் கருவிலியும் ஒன்று. லிங்கத் திருமேனியின் மீது பாசக்கயிறு வீசியதால் ஏற்பட்ட தோஷத்தினைப் போக்கிக்கொள்ள யமன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகச் சொல்கிறது தலவரலாறு. கோயிலுக்கு எதிரில், யமன் உருவாக்கிய யமதீர்த்தம் அமைந்துள்ளது. இதில் நீராடி வழிபடும் அன்பர்களுக்கு யமபயம் நீங்கும் என்பது ஐதிகம்.

ஒருகாலத்தில் மிகப்பெரிதாகப் பொலிவுடன் விளங்கிய கருவிலி சிவாலயம், பிற்காலத்தில் அந்நிய படையெடுப்பாலும் இயற்கைச் சீற்றத்தாலும் சிதிலமுற்றுப்போனதாம். பின்னர், தனியார் டிரஸ்ட் ஒன்றின் மூலம் திருப்பணிகள் செய்யப்பட்டு, தற்போது பொலிவுடன் பராமரிக்கப்படுகிறது.

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமாறு

உணர்த்த லாம் இது கேண்மின்

உருத்திர கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்

குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே

என்று இத்தலத்தையும் இவ்வூர் ஈசனையும் பாடிப்பரவுகிறார் திருநாவுக்கரசர்.

அவர் வழியில் நீங்களும், தக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு குடும்பத்துடன் ஒருமுறை இவ்வூருக்குச் சென்று சர்குணேஸ்வரரையும் சர்வாங்க சுந்தரியையும் வழிபட்டு வாருங்கள். அவர்களின் திருவருளால் உங்கள் வாழ்வு சிறக்கும், உங்கள் சந்ததியின் எதிர்காலம் மேன்மையுறும்!

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - ஆடுதுறை - எஸ்.புதூர் மார்க்கத்தில் உள்ளது கோனேரிராஜபுரம். இவ்வூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது கருவேலி திருத்தலம். கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் மற்றும் எரவாஞ்சேரி செல்லும் பேருந்துகளில் ஏறிப் பயணித்தால் கூந்தலூரில் இறங்கி, அங்கிருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம்.

குங்கும வழிபாடு!
குங்கும வழிபாடு!

குங்கும வழிபாடு!

பெளர்ணமி தினங்களில் இந்த அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி, குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட் டால், சிறப்பான மணவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. விபத்து அல்லது பிணிகளால் உடல் தோற்றத்தில் - முக அழகில் பங்கம் ஏற்பட்டு அதனால் வருந்தும் அன்பர்கள், இந்த அம்பிகையை வழிபட்டால் மீண்டும் உருவில் பொலிவு பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.