
காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவர் கோயில் அருகில் விற்கும் கறுப்புக் கயிற்றை வாங்கி இங்குள்ள பைரவர்க்குச் சமர்ப் பிப்பார்கள்.
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார் என்கிறது புராணம்.
இன்னொரு கதையும் சொல்வர். திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்ன பட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார்.
ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்!
இதில் சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு பண்ணினார். ‘பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி’ என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்தா ராம் பைரவர். மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், ‘`முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அளித்தீர். இப்போது நீரே நான்முகனாக்கி விட்டீர். எனவே அவனை மன்னியுங்கள்!’’ என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டாராம்.

பைரவ மூர்த்தியை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது, தடைகளும், தோஷங்களும், தீவினைகளால் உண்டான பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பைரவரைப் போற்றும் தலங்கள் பல உண்டு எனினும் காசிக்குத் தனிச் சிறப்பு உண்டு. காசியில் விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து வடக்கில் சுமார் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது கால பைரவர் சந்நிதி.
நாய் வாகனம் கொண்ட இவரே காசி நகரின் காவற்காரர். காசி தரிசனம் முடித்த பக்தர்கள் இந்த கால பைரவரை வணங்கி அவரிடம் கணக்குச் சொல்லிய பிறகே அங்கிருந்து கிளம்ப வேண் டும் என்பது சம்பிரதாயம். காசியில் தங்கத்தாலான கால பைரவர் உற்சவ விக்கிரகம் உள்ளது. தீபாவளி அன்று இந்த உற்சவர் பவனி வருகிறார்.
காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவர் கோயில் அருகில் விற்கும் கறுப்புக் கயிற்றை வாங்கி இங்குள்ள பைரவர்க்குச் சமர்ப் பிப்பார்கள். பிறகு அதை பைரவரது பிரசாதமாகப் பெற்றுக் கட்டிக் கொண்டால் கால பைரவர் காப்பார் என்பது நம்பிக்கை.
- எஸ்.கண்ணன், சென்னை-55

அன்னபூரணியே அருள்வாய்!
`கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிக்ஷை இடு’ என்கிறார் ஆதிசங்கரர். ஆம் அவளால் மட்டும்தான் உலகில் அன்னம் செழித்திருக்க அருள்புரிய முடியும். சிவனாருக்கே படியளந்தவள் ஆயிற்றே அவள்!
தைத்ரீய உபநிஷதத்தின் ஆனந்தவல்லி சொல்கிறது... ‘அன்னம் பஹுகுர்வீத’ அதாவது, ‘அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்’ என்று! அதுவே நம் தீபாவளி பிரார்த்தனையாகவும் இருக்கட்டும்.
அற்புதமான தீபாவளித் திருநாளில் நாமும் ஆதிசங்கரரின் வழியில், அன்னபூரணியின் கருணையை வேண்டி வழிபடுவோம். அவர் அருளிய அன்னபூரணி துதி சொல்லி, நல்ல மழை பெய்து, உணவுப் பொருள்கள் நன்கு விளைந்து, யாருக்கும் உணவுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று, பொதுநலப் பிரார்த்தனையை முன்வைப்போம்.
நித்ய ஆனந்தகரீ வர அபய கரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ |
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேச்வரீ ||
கருத்து: ஆனந்தம் தருபவள்; அபய, வரத கரங்கள் கொண்டவள்; அழகுக் கடல்; நம் பாவத் தொகுப்புகளை நாசம் செய்பவள்; மஹேஸ்வரீ; ஹிமவான் வம்சத்தை தூய்மையாக்குபவள்; காசி நாயகி; பக்தர்களுக்கு கிருபை புரிபவளான அன்னபூரணித் தாயே... எங்களுக்கு பிட்சை இடு!

`உலகம் க்ஷேமமாக இருக்கவேண்டும்’
கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். ஆகவே, தீபாவளியை, ‘பகவத் கீதையின் தம்பி’ என்பார் காஞ்சி மகா ஸ்வாமிகள்.
கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. ‘என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ‘`நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்’ எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்’’ என்பது காஞ்சி மகா சுவாமிகளின் அருள்வாக்கு!
தொகுப்பு: சக்திதர்