புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

காசியும் தமிழகமும்!

காசி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காசி தரிசனம்

காசி தரிசனம்

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் காசி. காசி என்றால் ஒளிரும் நகரம் என்று பொருள். உண்மையிலேயே 24 மணி நேரமும் ஒளிரும் நகரம்தான் காசி. 5,000 கால வரலாற்றுச் சிறப்பு கொண்ட இந்த மாநகரம் எல்லாப் புராணங்களிலும் போற்றப்படுகிறது.

காசி
காசி

ஏழு புண்ணிய நகரங்களில் மூத்தது காசி. காசிக்கு அடையாளம் கங்கை. பரந்துவிரிந்து ஓடும் கங்கைத் தாய் சகலரின் பாவங்களையும் தான் ஏற்றுக் கொள்பவள். வருணா, அசி என்ற இரு ஆறுகள் ஓடுவதால் இது வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது.

 காசி வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல, அது நம்முள் ஆன்மிக விழிப்பை ஏற்படுத்தும் ஒரு உன்னதத் தலம். அங்கு நம்ப முடியாத பல ஆச்சர்யங்கள் உள்ளன. அங்கு எப்போதும் சிவசக்தி அதிர்வுகள் வெளியாகிக் கொண்டே இருப்பதால் தியானமும் யோகமும் எளிதில் வசப்படும் என்கிறார்கள்.

 ஈசனே வடிவமைத்த காசியில் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள் செயல்படுகின்றன. நம் உடலில் உள்ள 108 ஆதாரப் புள்ளிகளையும் செயல்படுத்த இங்கே 108 பீடங்கள் அமைந்துள்ளன. அவை 54 சிவத்தலங்களாகவும் 54 சக்தி தலங்களாகவும் உள்ளன.

 காசியில் செய்யப்படும் சப்தரிஷி பூஜை ஈசனால் கற்பிக்கப்பட்டது. இது முன்பு காசியில் உள்ள 468 கோயில்களிலும் செய்யப்பட்டதாம்.

 ரிக் வேதம் காசியை அறிவு தரத்தக்க நகரம் என்கிறது. ஸ்காந்த புராணம் மூவுலகும் காசிக்கு இணையாகாது என்கிறது. ராமாயண, மகாபாரதக் காலம் முதற்கொண்டு தமிழகமும் காசியும் இணைக்கப்பட்டு இருந்ததை புராணங்களின் வழியே காணலாம்.

 மயிலாப்பூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தனுஷ்கோடி எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகள் ராமாயணத்தில் வருகின்றன. அதேபோல மகாபாரதத்தில் அரவான், பொன்னுருவி, ஆரவல்லி-சூரவல்லி பாத்திரங்கள் யாவும் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. வாரணாசி மடம் என்ற பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அனுமன் படித்துறை
அனுமன் படித்துறை
ராம ஜன்ம பூமி
ராம ஜன்ம பூமி
கங்கா ஆரத்தி
கங்கா ஆரத்தி
அயோத்தி சரயு நதி
அயோத்தி சரயு நதி


 அதிவீரராம பாண்டியர், பராக்கிரம பாண்டியர், குமரகுருபரர், தஞ்சை சரபோஜி மன்னர், கோடகநல்லூர் சுந்தர சாமிகள், காஞ்சி மகாபெரியவா, முத்துசாமி தீக்ஷிதர், பாரதியார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல ஞானியரோடுத் தொடர்பு கொண்டது காசி.

 காசி விஸ்வநாதர் கோயிலில் நகரத்தார்களுக்கென்றே தினசரி பூஜையில் இரண்டு வேளை கட்டளை உண்டாம். இன்னமும் காசியில் உள்ள பல ஆலயங்கள் நகரத்தார் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

 அந்த காலங்களில் காசிக்குச் சென்று தரிசனம் செய்வது என்பது எளிதல்ல. எனவே காசிக்குச் செல்வதில் சிரமம் இருந்த காரணத்தால் பாண்டியர் அதிவீரராம பாண்டியர், 'தென்காசி' என்று தலத்தை உருவாக்கி அங்கே விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தார்.

பிரயாகை வழிபாடு
பிரயாகை வழிபாடு
சாரநாத் புத்தர் கோயில்
சாரநாத் புத்தர் கோயில்
சாரநாத் புத்த விகாரை
சாரநாத் புத்த விகாரை
காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்

அதேபோல 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன், காசிக்குச் செல்ல விரும்பி பின் ஈசனின் ஆணைப்படி, 'சிவகாசி' என்ற தலத்தை உருவாக்கி அங்கு காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தான் என்கிறது வரலாறு.

 சங்க இலக்கியங்களில் காசி நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தேவாரங்களில் காசி வைப்புத் தலமாக உள்ளது. 'மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என்கிறது தேவாரம்.

 காசியில் இறப்பது புண்ணியம் என்ற காரணத்தால் வயதான காலத்தில் அங்கு சென்று வாழ்வது நம்மவர்களின் விருப்பமாக இருந்தது. 'மயான பூமி' என்று போற்றப்படும் இந்த நகரில் கடந்த 3,000 ஆண்டுகளாக எப்போதும் இடைவிடாமல் ஒரு சவம் எரிந்து கொண்டே இருப்பதுவும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

 முதியவர்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகவிருக்கும் மாப்பிள்ளை கூட கோபித்துக் கொண்டால் போக நினைப்பது காசிக்குத்தான் என்பதை இன்றைய திருமணங்களில் நடைபெறும் காசி யாத்திரை சடங்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

காசி தமிழ் சங்கமம்... சில துளிகள்!

 நவம்பர் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கிவைத்தார். தமிழகம் மற்றும் காசிக்கு இடையிலான பழங்காலத் தொடர்புகளைக் கொண்டாடவதுவே இதன் நோக்கம்.

 தமிழகத்திலிருந்து 12 குழுக்கள் தொடர்ச்சியாக இந்த காசி தமிழ் சங்கமம் விழாவில் கலந்து கொண்டன. நவம்பர் 22-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட குழுவில் சக்தி விகடனும் இணைந்தது. இதோ அந்த நிகழ்வின் சில துளிகள். .

 நவம்பர் 24-ம் தேதி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி, காலபைரவர் கோயில்களை தரிசித்தோம். ஒவ்வொரு ஆலயத்திலும் விசேஷ வரவேற்பு வழங்கப்பட்டது.

 மறுநாள் 25-ம் தேதி அதிகாலையிலேயே அனுமன் படித்துறைக்குச் சென்று கங்கையில் நீராடினோம். பிறகு பாரதி வாழ்ந்த இல்லம், சங்கர மடம் சென்று அந்த மாபெரும் புண்ணிய மூர்த்திகளின் நினைவு கூர்ந்தோம்.

 அன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டோம்.

 விழாவுக்கு தலைமை ஏற்றார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.

 தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன இசைக்கப்பட்டன. புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழிசையே பாடினார். பின்பு அவர் உரையாற்றும் போது பாரதிக்கும் காசிக்கும் உள்ள தொடர்பைப் பல சுவாரசிய சம்பவங்களோடு விளக்கிக் கூறினார். புதுவையில் பாரதிக்கு பிரமாண்ட சிலை எழுப்ப வேண்டும் என்னும் தன் கனவைப் பகிர்ந்துகொண்டார்

 புத்தர் முதன் முதலில் தன் போதனையைத் தொடங்கிய சாரநாத்துக்குச் சென்றோம். மாமன்னர் அசோகர் எழுப்பிய பல பிரமாண்ட ஸ்தூபிகளைக் கண்டு வியந்தோம்.

 இரவு மீண்டும் காசி தமிழ் சங்கம விழாவில் கலந்து கொண்டோம். அங்கு தமிழர்களின் கிராமியக் கலைகள் யாவும் நடத்தப்பட்டன.

 நவம்பர் 26 : பிரயாகையை நோக்கிப் பயணித்தோம். கங்கா-யமுனா-சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில புனித நீராடினோம். பின்பு அங்கிருந்து அயோத்தி நோக்கி பயணித்தோம்.

 நவம்பர் 27 : அயோத்தி அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம். ராம ஜன்ம பூமியை தரிசனம் செய்தோம். அங்கிருந்த வரலாற்று ஆய்வாளர்கள் ராமரின் ஜன்ம பூமியின் புகழையும் வரலாற்று செய்திகளையும் விளக்கிக் கூறினர்.

 புண்ணிய நதியாம் சரயு நதியை தரிசித்தபின் அன்று இரவே காசி சென்று ரயில் ஏறி சென்னை நோக்கித் திரும்பினோம்.

 முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழர் பெருமைகளை காசி மக்களுக்கு எடுத்துச் சொன்ன கலாசார விழாவாகவே காசி தமிழ்ச்சங்கம் திகழ்ந்தது. காசி மக்களின் அன்பும் விருந்தோம்பலும் சிலிர்க்க வைத்தது. இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய பாரதப் பிரதமருக்கு கலந்துகொண்டவர்கள் மனதார நன்றியைத் தெரிவித்தனர்.