
திருநாவலூரில் அருளும் ஈஸ்வரன் பக்த ஜனேஸ்வரர். அம்பாள் மனோன்மணி அம்பிகை. தியான மார்க்கத்தைக் கைக்கொண்டு, மனத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, இறைவனை அடைவதற்கான முறையை அம்பிகை இங்கே கைக்கொண்டதால், அம்பிகைக்கு ‘மனோன்மணி’ என்பது திருநாமம்.
திருநாவலூர் - சுந்தரர் போற்றிய திருத்தலம். கடலூர்- உளுந்தூர் பேட்டை மார்க்கத்தில் உள்ளது இவ்வூர். விழுப்புரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரம். நடுநாட்டின் தேவாரத் தலங்களில் 8-வது தலமான இது, கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளே, கெடில நதியாக உருவானது என்கிறது பாதிரிப்புலியூர் புராணம். ஆனால், கருடன் உருவாக்கிய நதி- கருட நதியாகி, கெடில நதியாகப் பெயர் மாற்றம் பெற்று விட்டதாக திருநாவலூர் புராணம் கூறுகிறது.
வைகுண்டத்தில் அன்றொரு ஏகாந்த வேளை. சிவனை நெஞ்சில் நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார் திருமால். யோகாக்னியின் வெப்பம் ஏற ஏற, அதைத் தாங்கமுடியாத ஆதிசேஷன், விஷத்தைக் கக்கினார். காற்றெங்கும் நஞ்சு பரவ, அங்கு வந்த கருடன் மீதும் நச்சுக் காற்று படர... பொன்னொளி கருடன், கன்னங்கரேலென்று ஆனான். தன் கருமையைப் போக்க வழி தேடிய கருடனுக்கு சிவனாரே வழி சொன்னார்.
பாற்கடலில் உண்டான ஆலகால நஞ்சினை ஆலால சுந்தரர் சிறு உருண்டையாக்கி எடுத்துவர, பரமனார் அதை விழுங்கி னார். சிவபெருமானுடைய தொண்டையில் அந்த விஷத்தை நிறுத்திய போது, அதன் ஒருதுளி, நாவலங்காட்டின் மரத்தில் நாவல் பழமாகக் கனிந்துவிட்டது.
‘அந்தப் பழம் எப்போது மிகக் கனிந்து, சாம்பூநத வாவியில் விழுகிறதோ, அப்போது, அதன் நச்சுத்தன்மை நீங்கும். அது மட்டுமா? அந்த தீர்த்தத்தில் நீராடினால், கருடனுடைய உடல் மீண்டும் பொன்னென ஒளிரும்’ என்று மொழிந்தார் இறைவன். அதன்படி, திருநாவலுருக்கு வந்து தீர்த்தமாடி வழிபட்டு, மேனியில் கறுமை நிறம் நீங்கி வெண்ணிறம் பெற்றாராம் கருடன். அத்துடன், பூமியில் அம்பு செலுத்தி தீர்த்தமும் உண்டாக்கினார்; அவ்வாறு உருவான கருட தீர்த்தமே, கருட நதியாகப் பாய்ந்து, பின்னர் பேச்சுவழக்கில் கெடிலமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
திருநாவலூரில் அருளும் ஈஸ்வரன் பக்த ஜனேஸ்வரர். அம்பாள் மனோன்மணி அம்பிகை. தியான மார்க்கத்தைக் கைக்கொண்டு, மனத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, இறைவனை அடைவதற்கான முறையை அம்பிகை இங்கே கைக்கொண்டதால், அம்பிகைக்கு ‘மனோன்மணி’ என்பது திருநாமம்.
அவளின் வேண்டுகோளுக்கு இணங்கவே சிவபெருமான் இங்கே பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம் அருளும் தேவனாக- பக்த ஜனேஸ்வரராக அருள்பாலிக்கிறாராம்.
இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், சகல காரியங்களும் எண்ணியபடி நிறைவேறும்; வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.