திருக்கதைகள்
Published:Updated:

பெருஞ்சோறு படைத்த சேரன்!

புறநானூற்றில்...
பிரீமியம் ஸ்டோரி
News
புறநானூற்றில்...

புறநானூற்றில் மகாபாரதம்!

சங்க இலக்கியத்தின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களில் நம் தேசத்தின் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை குறித்த செய்திகள் பல காணக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, `அலங்குளைப் புரவி ஐவரோடு' என்று வரும் புறநானூற் றின் இரண்டாம் பாடல்.

பெருஞ்சோறு படைத்த சேரன்!

ந்தப் பாடல் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயரால் பெருங்சோற்றுதியஞ் சேரனைப் பாராட்டும் பாடலாக பாடாண் திணையில் பாடப்பட்டுள்ளது.

பாடாண்திணை என்றால் பாடப்படும் ஆண்மகனின் வீரத்தைப் பாடும் திணை என்று பொருள். சேர மன்னனின் வீரத்தைப் பாட, 'மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்...' என்று தொடங்கிப் பாடும் முடிநாகராயரின் பாடலில் பின்வரும் வரிகள் வருகின்றன.

அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

`அலைந்தாடுகின்ற பிடரி மயிருடைய குதிரைகளை உரிமையாகக் கோண்ட ஐவருடன் (ஐவர் என்பது பஞ்ச பாண்டவர்களைக் குறிக்கும்) சினங்கொண்டெழுந்து, அவரிடமிருந்து நாட்டைக் கைகொண்டு, பொன்னாலான அழகிய தும்பை மலர் சூடிப் போர்க்கெழுந்த நூற்றுவரும் (நூறு பேர் கொண்ட கௌரவர்கள்) போரிட்டுப் போர்க்களத்திலே அழிவுற்ற நேரத்தில், இரு சார்பினருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசன் நீ' என்று சேர மன்னனைப் புகழ்கிறது இந்தப் பாடல் என்பர்.

இதற்குப் பொருள் கூறும்போது, பேராசிரியர் ரா.ராகவையங்கார், இப்பாடல் மகாபாரதக் காலத்தது. எனவேதான் போரில் உணவு வழங்கியதைக் கண்ட புலவர் இதைப் பாடியிருக்கிறார் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், `உதியஞ்சேரல் பெருஞ் சோறு கொடுத்தது மகாபாரதக் காலத்தில் இல்லை. அவர்கள் நினைவாக நீத்தார் கடன் செய்ததையே இப்புறப்பாடல் சுட்டுகிறது. எனவே, இப்பாடல் கடைச்சங்ககாலப் பாடலே' என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. இப்போரில் `பெருஞ்சோறு கொடுத்தான்' என்பதன் கருத்து, ஐவராகிய பாண்டவர்களுக்குத் துணையா கப் படையை அனுப்பினான் என்பதையே குறிக்கும் என்கிறார் வ.சுப.மாணிக்கம்.

எப்படிப் பார்த்தாலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா கவே தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் புகழ்பெற்று விளங்கியிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.