திருக்கதைகள்
Published:Updated:

நிறைவாகக் கிடைத்த ஆசி!

வாரியார் சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாரியார் சுவாமிகள்

திருமுருக கிருபானாந்த வாரியார் சுவாமிகள்

மகான்களின் ஆசி எப்போதும் நம்மைக் காத்து நிற்கும்.

வாரியார் சுவாமிகள்
வாரியார் சுவாமிகள்

30 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த சம்பவம் இது. நான் பணி புரிந்துவந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது நிர்வாகம். அதன்பொருட்டு புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது. பயிற்சி முடிந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.

விமானத்தில் ஏறி அமர்ந்ததும் வயதான சாமியார் ஒருவர் என் அருகில் சோர்வுடன் இருக்கையில் சாய்ந்து படுத்திருந்தார். அவர் அருகிலிருந்த அம்மாவிடன் அவர் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அவர்தான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்றும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்புவதாகவும் தெரிவித்தார். தாம் அவரின் சகோதரி என்றும் தெரிவித்தார்.

நான், அதுவரை சுவாமிகளை நேரில் பார்த்ததில்லை. ஆகையால் சட்டென்று அடையாளம் காண இயல வில்லை எனக்கு. அந்த அம்மையார் விவரம் சொன்னதும், தமிழகமே கொண்டாடும் அந்த மாமனிதரை எழுந்து நின்று வணங்கினேன். அவரும் அந்த நிலையிலும் கைகளை உயர்த்தி என்னை ஆசிர்வதித்தார். பிறகு அவர் சீட்டையும் என் சீட்டையும் இணைத்து அவரை வசதியாகப் படுக்கச்செய்தேன். நான் விமானத்தின் கடைசிச் சீட்டில் அமர்ந்துகொண்டேன். மனதுக்குள் அவர் பூரண நலன் பெற பிரார்த்தித்தும் கொண்டேன்.

முருகப்பெருமானின் திருவருள் வேறாக இருந்தது போலும். சுவாமிகள் விருப்பப்படி வானத்திலேயே, மயில் மீது வந்து முருகப்பெருமான் அவரை ஆட்கொண்டு விட்டான். ஆம், இந்திய மண்ணை விமானம் தொடும் முன்னரே சுவாமிகளின் ஆன்மா முருகனின் திருவடிகளை அடைந்து விட்டது. சுவாமிகளை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த வடபழநி சிவனடியார்கள், விஷயம் அறிந்து தவித்துப் போய் மாலை மரியாதைகளுடன் அவரை ராஜமரியாதையோடு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன (1993 நவம்பர் 7) ஒவ்வொரு ஆண்டும் அந்த தெய்வ மனிதரை எண்ணி சிலிர்த்துப் போகிறேன். அவர் நிறைவாக எனக்கு அளித்த ஆசீர்வாதமே எனது இந்த 80 வயதிலும் நிறைவான வாழ்வை அளித்திருக்கிறது என்று பூரணமாக நம்புகிறேன். மகான்களின் ஆசி நம்மை எப்போதும் காத்து வரும் என்பதற்கு நானே நல்ல சாட்சி என்பேன்.

- பி.எஸ்.ராமஸ்வாமி, பெங்களூரு