Published:Updated:

சுவாமிநாதன் சரிசெய்வான்...!

சுவாமிநாதன் மீதான பக்தியும் நம்பிக்கையும் அவரை வாழ்வாங்கு வாழவைக்கும்

பிரீமியம் ஸ்டோரி

றைவனின் திருப்பணியில் ஈடுபடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவனருளால் முன்வினைப் பயன்கள் நீங்கி நல்வினைகள் தோன்றும்போது, மனத்தில் இறைப்பணிகளின் மீது ஈடுபாடு பிறக்கும். லௌகிக இன்பங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் சலித்துவிடும். ஆனால், இறைவனுக்கான திருப்பணிகளோ திகட்டாதவை. ஒரு முறை ஈடுபட்டு மனம் லயித்துவிட்டால், அதிலேயே எப்போதும் ஈடுபட விரும்புகிற பேரின்பமாக இருக்கும். அப்படி இறைவன் பால் பற்றுவைத்து நீண்ட காலமாக இறைப்பணி செய்துவரும் அன்பர், சென்னை, கொளத்தூர் கணேசன். ‘ஸ்ரீஷண்முகானந்த சபா’ என்ற ஒன்றைத் தொடங்கி இன்றுவரை பல்வேறு திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திவருபவர்.

‘`இந்த ஷண்முகானந்த சபாவை அந்தச் சுவாமிமலை சுவாமி நாதனோட சொந்த வீடாகத்தான் நினைக்கிறேன். அவன்தான் இத்தனை நாளும் வழிநடத்துறான்” என்று சொல்லும் கணேசனுக்கு வயது 72. இரண்டு மாதங்களுக்கு முன்பாக ‘சக்தி விகடன்’ சார்பாக, கொளத்தூர் பாலவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘வேல்மாறல் பாராயண நிகழ்ச்சி’க்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சுவாமிநாதன் சரிசெய்வான்...!

நிகழ்ச்சிக்குச் சரியாக 10 நாள்களுக்கு முன்பாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதுகுப்பகுதியில் ஓர் எலும்பு உடைந்து போனது. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது. ‘வேல்மாறல் பாராயண நிகழ்ச்சியைப் பின்பு ஒரு நாளுக்கு ஒத்திவைத்து விடலாமா’ என்று கேட்டபோது, ‘`வேண்டவே வேண்டாம், அந்தச் சுவாமிநாதன் எல்லாவற்றையும் சரிசெய்வான். நானே வந்து கலந்துகொள்வேன்'’ என்று வைராக்கியமாகச் சொன்னார்.

“இத்தனை பெரிய ஆபரேஷனுக்குப் பின் 10 நாள்களில் எழுந்து உட்காரவாவது முடியுமா...’ என்று எல்லோரும் கவலைப்பட்டுக்க்கொண்டிருக்க, அவரோ எழுந்து மெள்ள நடந்து, விழா அன்று கோயிலுக்கே வந்து கலந்துகொண்டார்! அந்தச் சுவாமிநாதனின் திருவருள்தான் அவரைத் தாங்கி வழிநடத்தியது என்பதில், அவருக்கும் அவரின் சபா நண்பர்களுக்கும் சந்தேகமேயில்லை.

அத்தனை பக்தியும் வைராக்கியமும் கொண்ட கணேசன் ஐயாவிடம் `ஸ்ரீஷண்முகானந்த சபா' குறித்து கேட்டோம். கண்மூடி ஒருகணம் சுவாமி நாதனைத் துதித்துவிட்டு நம்மோடு பேசத்தொடங்கினார்.

“முன்னாடியெல்லாம் எங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் திருப்பதிக்குப் பாதயாத்திரை போற வழக்கமிருந்தது. நான், ஷங்கரன், ஸ்ரீநிவாஸன் ஆகிய மூணுபேரும் இன்னிக்குக் கிளம்பினா மூணே நாள்ல திருப்பதி போய்டுவோம். 1990-ம் வருஷம், ‘நாம ஏன் சுவாமிமலைக்கு ஒருமுறை போகக்கூடாது’ன்னு உள்ளூரத் தோணுச்சு. சுவாமிமலைக்குப் போய் சும்மா தரிசனம் பண்ணிட்டு வராம, அப்படியே அபிஷேக கைங்கர்யமும் பண்ணலாம்னு யோசனை.

சுவாமிநாதன் சரிசெய்வான்...!

அப்போதெல்லாம் அபிஷேகத்துக்கு 750 ரூபாய் கட்டணம். சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தோம். அப்போதான் மகா பெரியவாளை தரிசனம் பண்ற பாக்கியம் கிடைச்சது.அவர் மகான் இல்லையா நம்ம மனசுல இருக்கிறதைப் படிச்சிட்டார். ‘நீ 1,000 ரூபாய்க்குக் கைங்கர்யம் பண்ணலாம்னு நினைச்சா, அவா அவா 100, 200, 500 தருவா. ஆனா, நீ 1,000 பேர்கிட்ட ஒரு ரூபாய் வாங்கி, அந்தக் கைங்கர்ய பாக்கியத்தை எல்லாருக்கும் பகிர்ந்துகொடு’ன்னு சொன்னார். அவர் சொன்னது ஒரு தாரக மந்திரம் மாதிரி எங்களுக்குள் பதிஞ்சு போச்சு. அப்போ உண்மையிலேயே சபா ஆரம்பிக்கிற யோசனை எல்லாம் இல்லை. ஆனா, சுவாமிநாதனை தரிசனம் பண்ணிட்டு வர்றப்போ அவன் காட்டின சகுனமும் பெரியவா வாக்கும் சேர்ந்து இந்தச் சபாவைத் தொடங்க வெச்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுவாமிமலைக்குப் போக திரட்டின பணம் 1,200 ரூபாய். சுவாமிநாதனுக்கு அபிஷேகமும் மலைவாழைப்பழத்தால பஞ்சாமிர்தமும் செஞ்சு, சமர்ப்பிச்சோம். எல்லாம் முடிச்சு இறங்கிவர்றப்போ, அங்க திருவாவடுதுறை ஆதினம் சார்பா மகாருத்ர ஹோமம் நடந்துகிட்டு இருக்கு. நாங்க அதுல கலந்துகிறப்போ, ‘வசூர்தாரை’ ஆறது. வசூர்தாரைன்னா சமகம் சொல்லி பண்ற யக்ஞம். சமகம் முழுக்கவே லோக க்ஷேமத்துக்காகச் சொல்லப்படுவது. அப்போதான் இது முருகன் நமக்குக் காட்டுற சகுனம்னு உள்ளுக்குள்ள தோணிச்சு. அப்போ முடிவானதுதான் ஸ்ரீஷண்முகானந்த சபா” என்றார்.

ஸ்ரீஷண்முகானந்த சபா தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளாகின்றன. ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் சுவாமிமலைக்குப் பயணப்படுகிறார்கள், இந்தச் சபாவினர்; சுவாமிநாத சுவாமி உறையும் அந்தத் தலத்தில் பல்வேறு கைங்கர்யங்கள் செய்கிறார்கள்.

சுவாமிநாதன் சரிசெய்வான்...!

“ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 30-ம் தேதி சுவாமிமலைக்குப் போயிடு வோம். அங்கு ஒரு சத்திரத்தில் தங்கி, முதல்ல கணபதி ஹோமம். அப்புறம் திருப்புகழ் பஜனை நடக்கும். ‘திருப்புகழ் அமுதன்’ வலையப்பேட்டை கிருஷ்ணன், அவரோட குழுவினரோட வந்து அந்த பஜனையைப் பண்ணுவார். பிறகு, சுவாமிமலை அடிவாரத்துக்குச் சென்று ஆண்டு முழுவதும் அடியவர்களின் பாதங்களைத் தாங்கும் படிகளுக்குப் பூஜை செய்வோம். கீழ்ப்பிராகாரத்திலிருந்து நடுப் பிராகாரம் வரை 32 படிகள். நடுப்பிராகாரத்தில் இருந்து மேலே வரை 28 படிகள். ஒவ்வொரு படியையும் கழுவி, மஞ்சள் சந்தனம் இட்டு, வஸ்திரம் சாத்தி, மலர்கள் சூட்டி அலங்கரிப்போம்.

ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ். வலையப் பேட்டை கிருஷ்ணன் திருப்புகழ் பாடி முடித்ததும் அந்தப்படிக்கு ஆரத்தி எடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், நைவேத்தியம் செய்வோம். இப்படி ஒவ்வொரு படிக்கும் பூஜைகள் நடக்கும். அதன்பின் கந்தர் அனுபூதி பாடி முடித்ததும், சுவாமிநாதனுக்கு ஷண்முகார்ச்சனை செய்வோம். ஆறுமுகனுக்கு ஆறுவிதமான பழங்கள், பூக்கள், நைவேத்தியங்களைச் சமர்ப்பிப்போம். சுவாமிநாத சுவாமிக்கு நடைபெறும் ஆரத்தியைக் கண்டு வழிபட்டுவிட்டு, பிறகு பட்டீஸ்வரம் சென்று துர்கையை வழிபடுவோம்.

அன்னிக்கு மாலை திரும்பவும் சுவாமிமலை வந்து தங்கரதம் இழுத்து வழிபடுவோம். மறுநாள் காலை நல்லா விஸ்தாரமா அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தங்கக் கவசம், வைரவேல் சகிதமா தீபாராதனை செய்து, `சத்ரு சம்ஹார திருசதி' செய்து கண்ணாரக் கண்டு திரும்புவோம். இதுல பிரதானமான விஷயம் அன்னதானம். இரண்டு நாளும் நிறைய அன்னதானம் செய்வோம்” என்றார்.

சுவாமிநாத சுவாமி என்று ஒவ்வொருமுறை சொல்லும்போதும் கணேசனின் முகத்தில் பூரிப்பும் பரவசமும் பொங்குவதைக் காணமுடிகிறது. சுவாமிநாதனிடம் இத்தனை பக்தியும் உரிமையும் எப்படிப் பெருகியது?

“சுவாமிநாத சுவாமி மத்த சுவாமிமாதிரி இல்லை. உரிமை எடுத்துண்டு அவன்கிட்ட பேசணும். அவன்கிட்ட கேக்காம எதுவும் செய்யக்கூடாது. அவன் சந்நிதியில ஒருதடவை கவலையை முன்வெச்சாச்சுன்னா. திரும்ப அதைப் பத்திக் கவலைப்படக்கூடாது. அவன் எல்லாத்தையும் சரிசெய்வான். நோய்ல இருந்து விடுவிச்சிருக்கான், குடும்பத்துல இருந்த பிரச்னைகளைத் தீர்த்து வெச்சிருக்கான். குழந்தை வரம், திருமண பாக்கியம்னு அவன்கிட்ட வேண்டி நிறைவேறாததேயில்லை. குறிப்பா... அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்களில் குழந்தைபாக்கியம் பெறுவதற்கான சிறப்புத் தலமா அவர் பாடியிருப்பது, சுவாமி மலையைத்தான். எவ்வளவோ வைத்தியம் செஞ்சும் பலன் இல்லாம அவன்கிட்ட வந்து சரணடைந்த பலருக்கும் அவன் அருள் செய்திருக்கான். அந்த அளவுக்கு சக்திவாய்ந்த தெய்வம் சுவாமிநாதன்.

எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவருக்கு ரெண்டு பெண்கள். அதுல ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ஆனா, குழந்தை பாக்கியம் இல்லை. மூணு முறைக்கு மேல கரு கலைஞ்சிடுச்சி. பட்டகால்லேயே படும்னு சொல்றதில்லையா, அப்படி அவரோட ரெண்டாவது பொண்ணுக்குத் திருமணம் நிச்சயமாச்சு. யாருமே எதிர்பாராதவிதமா, அவங்க சொந்தக்காரப் பையனே அந்தப் பொண்ணைக் கடத்திக்கொண்டுபோய் கொலையே பண்ணிட் டான். இதுல போலீஸ் நிச்சயம் பண்ணின பையனை சந்தேகத்தின் பேர்ல கைது பண்ணிட்டாங்க. அவங்க வீட்டிலேர்ந்து வந்து இவங்களைப் பேசாத பேச்சில்லை. மனது உடைஞ்சு போனா உடம்பு மட்டும் எப்படி சரியா இருக்கும்! பெரியவருக்கும் உடம்பு ரொம்ப முடியாமப்போச்சு.

அவங்களுக்குத் தெரிஞ்ச வயதான பெண் மணி ஒருவர் என்னைப் பாக்க வந்தாங்க. இதையெல்லாத்தையும் அவங்க சொல்லும் போதே கண்ணீர் வந்துடுத்து. நான் சொன்னேன், ‘போதும்மா, அந்தச் சுவாமிமலை முருகன் இதைக் கேட்டுக்கிட்டுதான் இருக்கான். சீக்கிரம் எல்லாத்தையும் சரி செய்வான்’னு சொன்னேன்.

கூட்டுப்பிரார்த்தனைல அவங்களுக்காக வேண்டிக்கிட்டோம். சரியா ஒரு வருஷத்துக்குள்ள போலீஸ் விசாரணையில அந்தச் சொந்தக்காரப் பையன்தான் குற்றவாளின்னு கண்டுபிடிச்சு கைது செஞ்சு, அந்த மாப்பிள்ளைப் பையனை விடுதலை செஞ்சாங்க. அந்தப் பெரியவர் தன் உடல்நிலை தேறி ஆரோக்கியமானார்.

இந்த நிலையில் அவரோட மூத்தப்பொண்ணு கர்ப்பம் தரித்தாள். அவளுக்கு ரெட்டைக் குழந்தைகள்னு ஸ்கேன்ல தெரிஞ்சது. ஒன்பது மாசம் ஆச்சு. ரெண்டு குழந்தைகள்ல ஒரு குழந்தை வயத்துக்குள்ளையே இறந்துபோச்சு. அதனால இன்னொரு குழந்தைக்கும் ஆபத்து.

`இது என்னடா சோதனை'ன்னு சுவாமி நாதனையே வேண்டிக்கிட்டோம். சேலம் பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரியில அந்தப் பொண்ணை சேர்த்தாங்க. சிசேரியன் பண்ணி எடுத்தாங்க. முருகன் அருளால அந்தக் குழந்தை ஆரோக்கியமா பிறந்தது. தாயும் சேயும் இப்பவும் நலமா இருக்காங்க. இதெல்லாம் முருகனோட கருணையில்லாம வேறென்ன...” என்று சொல்லும்போது அவரின் கண்களில் நீர் ததும்பியிருந்தது.

சுவாமிநாதன் மீதான பக்தியும் நம்பிக்கையும் அவரை வாழ்வாங்கு வாழவைக்கும்; இறை சார்ந்த அவரின் அறப்பணிகள் மென்மேலும் தொடர வழிநடத்தும்!

முருகா சரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு