Published:Updated:

ஏரிக்கரையில் கொற்றவை சிற்பம்!

கொற்றவை
பிரீமியம் ஸ்டோரி
News
கொற்றவை

ஆறகளூர் பொன்.வெங்கடேசன்

தமிழ் மண்ணின் தொன்மையான வழிபாடுகளில் கொற்றவை வழிபாடும் ஒன்று. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள், கானமர்ச் செல்வி, பாய்கலைப் பாவை, காடு கிழாள் ஆகிய பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.

கொற்றவை தேவியின் திருவுருவ அமைப்பைச் சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம் - மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில், கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.

கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச்செல்லும் முன், வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டி கொற்றவையை வழிபட்டுச் சென்றுள்ளனர். அதேபோல், மன்னர்கள் போருக்குச் செல்லும் முன், கொற்றவைக்கு வீரர்கள் நவகண்டம் கொடுக்கும் வழக்கமும் இருந்துள்ளது.

பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. கொற்றவை தேவி பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறாள். பிற்காலத்தில் துர்கை, காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றம் அடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

ஏரிக்கரையில் கொற்றவை  சிற்பம்!

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக் குறிச்சியிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள சின்னசேலத்தில் ஏரிக்கரைப் பகுதியில், சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் ஒன்றைக் கண்டறிந்தோம். சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், சின்னசேலம் ஏரிப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்தோம். இந்த நிலையில், ஏரியின் கிழக்குக் கரையில் ஒரு கொற்றவை சிற்பம் இருப்பதைக் கண்டோம்.

இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13-ம் நூற்றாண்டில், இந்தப் பகுதியானது மகதை நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர், இப்பகுதியை ஆண்டு வந்தார். அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதைக் கருதலாம். பல்லவர் கால பாணியை பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் உயரம் 83 செ.மீ.; அகலம் 73 செ.மீ. ஆகும். எட்டு கரங்களுடன் திகழும் இந்த தேவி நீண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், கழுத்தில் சரபளி, சவடி போன்ற அணிகலன்கள் துலங்கக் காட்சி தருகிறாள்.

வலது பின்கரங்களில் பிரயோகச் சக்கரம், நீண்ட வாள், அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளன. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு, வில், கேடயம் போன்றவை திகழ்கின்றன. இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது.

வழக்கமாக கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும். ஆனால் இதில் சற்று பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரை ஆடையும் ஆடை முடிச்சும் உள்ளன. வலது கால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.

இந்தச் சிற்பத்தில் மானும் சிங்கமும் இடம் பெற்றுள்ளன. மான் சிற்பம் பெரிதாக - தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. 10-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்பங்களில்தான், இப்படியான நிலையில் மான் காட்டப்படுவது வழக்கம். இடது புறத்தில் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது.

கொற்றவையின் பாதத்திற்கு கீழுள்ள பகுதி மண்ணில் புதைந்துள்ளதால், காலுக்குக் கீழ் காட்டப்படும் எருமைத் தலையும், நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரனும், வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்குத் தெரிய வில்லை.

இந்தப் பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும்பல வரலாற் றுத் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.