பிரீமியம் ஸ்டோரி

‘தூய பெருநீர் யமுனைத் துறைவனை’ என்று கண்ணனோடு யமுனையையும் சேர்த்துப் போற்றுகிறாள் ஆண்டாள். அதர்மங்களை அழித்து புவனம் காக்க வந்த கிருஷ்ண கடவுள், அவதாரக் காலத்தில் தன் தோழர்களுடனான விளையாடல்களையும், யதுகுலத்தவருடனான தம்முடைய அருளாடல்களையும் நிகழ்த்தியது, யமுனையின் கரையில் அல்லவா! ஆகவே, கோதை நாச்சியார் இந்த நதிப் பெண்ணாளையும் சேர்த்து போற்றியது மிகப்பொருத்தம்தான்!

இப்படியான மகிமையைப் பெறுவதற்கு யமுனை நதியாள் அந்தப் புருஷோத்தமனை எவ்வாறெல்லாம் வேண்டியிருப்பாள்!

சற்றே புறக்கண்களை மூடி, மனக் கண்ணைத் திறந்துவைத்துக்கொள்ளுங்கள். சிந்தனைக்கலம் ஏறி பின்னோக்கிப் பயணித்து யுகங்களைக் கடப்போம். யமுனை தீரத்தில் பயணிப்போம்.

அதோ, நுங்கும்நுரையுமாக பொங்கிப் பாய்கிறாள் பாருங்கள் யமுனை. ஆரவாரத்துடன்கூடிய அவளின் ஆர்ப்பரிப்பைக் கூர்ந்துகவனித்தால் கேட்கும், அவளின் பிரார்த்தனைப் புலம்பல்கள்! செவிமடுப்போமா...

‘கிருஷ்ண எனும் பதத்துக்குக் கறுப்பு என்று பொருள் சொல்கிறார்கள் ஞானிகள். ஆனால், நீயோ நீலவான வண்ணத்தினன். பிறகு ஏன், இப்படியொரு பெயரும் பொருளும்!

ஓ! முதலும் முடிவுமற்ற இந்த அண்டப் பேரண்டம் கறுப்பு. அதன் கருப்பொருளான நீயும் ஆதியந்தம் இல்லாதவன். இந்த அளவற்ற அளவை - ஒரு வரையறைக்குள் அடங்கிவிடாத உனது பிரமாண்டத்தை, பேரண்டத்துடன் ஒப்பிட நினைத்து, `கிருஷ்ணன்' எனும் திருநாமம் தந்தார்களோ... எனில், நீ எவ்வளவு பெரியவன்!

அன்றொரு நாள், நீ திரிவிக்கிரமனாய் வளர்ந்து விண்ணளந்தபோது, பிரம்மன் தனது கமண்டல நீரால் உன் திருப்பாதத்தைக் கழுவி பூஜித்தான். இறைவா, உன் திருப்பாதக் கமலங்களை ஸ்பரிசித்த புண்ணியத்தால் பிரம்மக் கமண்டலத்தின் நீர், ஆகாய கங்கையாய் அல்லவா பொங்கிப் பிரவாகித்தது. அதைச் சடாமகுடதாரியான பரமேஸ்வரன் தன் திருமுடியில் தாங்கியல்லவா கொண்டாடினார். கொடுத்துவைத்தது கங்கை.

கண்ணன் வந்தான்!

எனக்கும் உன் பாதம் தழுவும் பாக்கியம் கிடைக்காதா?

பூதலத்தில் திருவெஃகா என்றொரு திருத்தலம். அங்கே, தன்னை விடுத்து நான்முகன் தனியே யாகம் செய்கிறான் என அறிந்த நாமகள் கோபம் கொண்டாள். வேகவதி எனும் நதியாக மாறி மிக வேகமாகப் பாய்ந்துவந்தாள், யாகத்தை அழிக்க. அப்போது, அவள் வரும் வழியில் பாம்பணை மீது பள்ளிகொண்டு, அணையாக மாறி அவளைத் தடுத்தாட்கொள்ளவில்லையா!

கங்கைக்கும் சரஸ்வதிக்கும் கிடைத்த திருவருள் எனக்கும் கிடைக்காதா?

மாலவா! உனது எழிலுருவைப் பாதாதிகேசமாய் தரிசிக்க ஆசை. ஆகவே, உனது பேருருவைச் சுருக்கிக் கொள். ஒரு குழந்தையாய் கொஞ்சி தவழ்ந்து வா. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் திகழும்... உன் பொற்பாதங்களின் விரல்கள் பத்தையும் பற்றி கண்களில் ஒற்றி மகிழும் பெரும் பாக்கியத்தை எனக்குத் தா!’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யமுனா வேண்டுவதைக் கேட்டீர்களா! இந்த நதிப்பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஏக்கம்? சமுத்திரத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட முடியுமா? முடியாதுதான். ஆனால், யமுனையின் இந்த ஏக்கமும் ஆவலும் பக்தியால் விளைந்தது. அதனால் பகவானும் அவளுக்கு வசப்பட்டான். எப்போது தெரியுமா? துவாபரயுகத்தில் - மதுசூதனன், யதுகுல நாயகனாய் அவதரித்துவந்தபோது!

அதுபற்றி அறியும் முன், எம்பெருமான் உதித்த யதுகுலத்தின் மாண்புகளை அறிவோம்.

கண்ணன் வந்தான்!

சந்திர வம்ச அரசர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் பெருமைகளைப் பரீட்சித்துவுக்கு சுகபிரம்மர் கூறியதாக விவரிக்கிறது ஸ்ரீமத் பாகவதம். அதன்படி, சந்திர வம்சத்து அரசர்களில் மிகவும் புகழுடன் திகழ்ந்தவர் புரூருவன். இவரு டைய மகன் ஆயு. அவருக்கு ஐந்து புத்திரர்கள். அவர்களில் மூத்தவன் நகுஷன்.

பாட்டனாரைப் போன்றே புகழ்பெற்ற நகுஷனுக்கு, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியதி, கிருதி ஆகியோரே அந்த ஆறு பேர். இவர்களில் மூத்தவனான யதிக்குப் பட்டாபிஷேகம் சூட்ட விரும்பினார் நகுஷன். ஆனால், ராஜ்ஜியம் வேண்டாம் என மறுத்துவிட்டான் யதி. எனவே, அவனுக்கு அடுத்தவனான யயாதிக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்துவிட்டு கானகம் சென்றார் நகுஷன்.

யயாதி, சுக்ராச்சார்யரின் மகள் தேவயானியை யும் அசுர வேந்தனின் மகளான சர்மிஷ்டை என்பவளையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வஸு என்று இரண்டு மகன்கள். சர்மிஷ்டைக்கு த்ருஷ்யன், அனு, பூரு ஆகிய மூன்று மகன்கள். இவர்களில் யயாதி - தேவயானி தம்பதியின் மூத்த மகனான யதுவிடமிருந்து தொடங்குகிறது, பகவான் கிருஷ்ணன் அவதரித்த யது வம்ச சரித்திரம். பரிசுத்தமான இந்த யது வம்ச சரித்திரத்தைக் கேட்டால், சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்கிறது பாகவதம்.

கண்ணன் வந்தான்!

யதுவின் மூத்த மைந்தன் ஸகஸ்ரஜித். இவன் மகன் சதஜித். இந்த சதஜித்தின் வம்சத்தில் வந்தவர்களே யாதவர், விருஷ்ணிகள், மாதவர்கள் எனப் பல பிரிவுகளாய் இருந்தனர்.

யதுவின் இரண்டாவது மகன் க்ரோஷ்டு. இவன் பிள்ளை விருஜினவான். இவன் குலத்தில் பிறந்தவர்கள் போஜர்கள், சாத்வதர்கள் என அழைக்கப்பட்டனர். இப்படியாக யதுகுலத்தில் தோன்றிய பல தலைமுறைகளுக்குப் பிறகு தேவமீடன் என்பவன் பிறந்தான். இவன் மகன் பெயர் சூரன். இவருக்குப் பிறந்தவரே, நம் கண்ணனின் தந்தை வசுதேவர். அவருக்கு ஆனகதுந்துபி என்று இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? வசுதேவர் பிறந்தபோது, தேவதுந்துபியும் ஆனக வாத்தியங்களும் முழங்கினவாம். ஆகையால் இப்படியொரு விசேஷ நாமகரணம்! வசுதேவருக்கு ஏழு மனைவியர். அவர்களில் கடைசியானவளே, நம் தேவகி தாயார்.

வசுதேவர்- தேவகிக்குக் கோலாகலமாக திருமணம் நடந்த கதையும், மணமக்கள் இருவரை யும் ரதத்தில் அமர்த்தி, இளவரசனான கம்சன் தேரை செலுத்த முற்பட்டபோது அசரீரி ஒலித்து, ‘இந்தத் தம்பதிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது மகனால் உனக்கு அழிவு நிச்சயம்’ என்று கம்சனை எச்சரித்த சம்பவமும் நாமறிந்ததே.

இதனைத் தொடர்ந்து கம்சன் தேவகியைக் கொல்ல முற்பட்டதையும், வசுதேவரின் வேண்டு தலுக்கு இணங்கி அவர்களைக் கொல்லாமல் சிறையில் அடைத்த கதையையும், அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் கொன்றுவிட, ஏழாவது கரு யோக மாயாவின் மூலம் ரோகிணியின் மணிவயிற்றை அடைந்து பலராமனாகப் பிறந்ததையும் நாம் அறிவோம்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? இறை சித்தத்தின்படி யோக மாயா, நந்தகோபரின் மனைவி யசோதாவின் மணிவயிற்றில் கருவாகி, பெண் குழந்தையாய் பிறந்தாள். இங்கே சிறையில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.

எங்கும் சகல சுபசகுனங்களும் நிறைந்து மங்கலம் சூழ, தெளிவான வானில் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, கிரகங்கள் யாவும் நல்லதொரு நிலைக்கு நகர்ந்து நிற்க, ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரத்தில்... பூமழை பொழிய, தேவ துந்துபிகள் முழங்க மதுசூதனன் பிறந்தான்; நம் கவலைகள் நீங்க கண்ணன் வந்தான்!

எவ்வளவு அழகு பாருங்கள்..!

நீலமேனியில் பீதாம்பரம் ஒளிவீச, மார்பில் ஸ்ரீவத்சமாகிய மரு, கழுத்தில் கௌஸ்துப மணி, கைகளில் கங்கணம், தோள்வளை துலங்க சங்கு, சக்கரம், கதாயுதம் முதலான ஆயுதங்களுடன் சதுர்புஜ நாயகனாய் அந்தத் தெய்வக்குழந்தை தவழ்வதைக் காணக் கண்கோடி வேண்டும்!

தொடர்ந்து... கோகுலத்தில் யசோதாவிடம் தன்னைச் சேர்த்துவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சிறைக் கொட்டடிக்கு எடுத்துவரும்படி தெய்வக்கட்டளை பிறந்தது.மறுகணம் வசுதேவரின் விலங்குகள் அறுபட, சிறைக்கதவுகளும் தானாகத் திறந்துகொள்ள, குழந்தையைக் கூடையில் சுமந்தபடி புறப்பட்டார் வசுதேவர். பெரும் மழை கொட்டித் தீர்த்தது.

வழியில் ஆர்ப்பரிப்புடன் குறுக்கிட்டாள் யமுனை நதியாள். இந்த தருணத்துக்காகத்தானே அவள் காத்திருந்தாள். கண்ணனின் பாதக் கமலங்களை ஸ்பரிசிக்க, சிவந்து திகழும் அந்தத் தாமரைப் பாதங்களின் சிற்றிதழ்களாகத் திகழும் சிறுவிரல்களைப் பற்றிக்கொள்ள பரபரத்தாள்.

ஆஹா, அந்தத் தெய்வக்குழந்தையின் பாதங்கள் தான் எவ்வளவு அழகு. ஒரு பாதத்தில் சங்கு; மற்றொன்றில் சக்கரக் குறி!

‘இறைவா! உன் பாதம் பணிகிறேன்; அந்தப் புனிதக்குறிகளை என் தலையில் பதித்துவிடு; பெரும்பேறு அடைவேன்’ என அரற்றுகிறாளோ அந்த நதிப்பெண்ணாள்... யமுனையின் இரைச்சல் இன்னும் அதிகமானது!

ஆனந்தக் கூச்சலுடன் பொங்கி எழுந்து நீர்த்திவலைகளை அள்ளி வீசி, கண்ணனை அபிஷேகிக்க முற்பட்டாள். வசுதேவரின் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது. அவரது நாசியைத் தொட்டுச் சென்றது யமுனையின் நீர்மட்டம். திக்குமுக்காடிப் போனார் கண்ணனின் தந்தை!

கிருஷ்ணக் குழந்தையும் அதைப் புரிந்து கொண்டது. மெள்ள தனது பிஞ்சுப் பாதத்தை குடலைக்கு வெளியே நீட்டி, நீர்ப்பரப்பில் போட்டது. அவ்வளவுதான்... கொதிக்கும் உலையில் நீரூற்றியது போன்று, யமுனையின் ஆரவாரம் அடங்கி அமைதியானது.

பேரமைதி பூரணத்துவத்தின் அடையாளம்.

எத்தகையதொரு கொடுப்பினை யமுனைக்கு! மிகப் புனிதம் பெற்று விட்டாள் யமுனா. யமுனா நதி மட்டுமா, ஒட்டுமொத்த பூமியும் அல்லவா புனிதம் அடைந்தது, கிருஷ்ணாவதாரத்தால்.

நாமும், வரும் கோகுலாஷ்டமியில் அந்த அவதார நாயகனை அன்போடு நம் வீட்டுக்கு அழைப்போம்; அருளோடும் பொருளோடும் கண்ணன் வருவான்; நம் கவலைகளைத் தீர்ப்பான்!

பானைக்குள் பூதம்!

யர்பாடியில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளைக் கதை கதையாய்ப் பாடி வைத்திருக்கிறார்கள் அடியார்கள். தயிர் கடையும் அம்மாவிடம் வெண்ணெய் வேண்டி வருவான்.

‘`அம்மா அதென்ன பானைக்குள் ‘கர்... புர்...’ என்று சத்தம்’ எனக் கேட்பான்.

கண்ணன் வந்தான்!

யசோதைக்கு அவன் திட்டம் தெரியும் என்பதால், அவனை பயம்காட்ட ‘`பானைக்குள் பூதம்’’ என்பாள்.

கண்ணன் லேசுப்பட்டவனா?! ‘`அப்படியா! அந்தப் பூதத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்; ஒரு கை பார்க்கிறேன்’’ என்றபடி திரண்டு நிற்கும் வெண்ணெயைக் கைகொள்ளாமல் எடுத்துக்கொண்டு ஓடி ஒளிவான். யசோதைக்கே இப்படியென்றால், ஆயர்பாடியின் மற்ற ஆய்ச்சியர்கள் பாடுகளைச் சொல்லி மாளாது! அந்தக் கதையை பெரியாழ்வார் மிக அழகாக விவரிக்கிறார்.

வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை

வெற்பிடை இட்டு அதன்ஓசை கேட்கும்

கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்

காக்க கில்லோம் உன்மகனைக் காவாய்

புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை

புரைபுரையால் இவைச் செய்யவல்ல

அண்ணற்கு கண்ணான் ஓர்மகனைப் பெற்ற

அசோதை நங்காய் உன் மகனைக் காவாய்

கருத்து: ‘வெண்ணெய் திருடுகிறான். அதாவது பரவாயில்லை. வெண்ணெய் காலியானதும் வெறும் கலத்தை மலைப் பாறைகளில் போட்டு உடைத்து, அந்தச் சத்தத்தில் மகிழ்கிறான்!

இந்த சேஷ்டைகளை எல்லாம் எங்கிருந்து கற்றானோ தெரியவில்லை. பலராமனுக்கு தம்பியா இவன். புண்ணில் புளியைக் கரைத்து ஊற்றியது போல் இருக்கிறது உன் பிள்ளையின் சேஷ்டை. அவனைக் கொஞ்சம் அடக்கி வை’

சீடை, முறுக்கு ஏன்?

கிருஷ்ண ஜயந்தியன்று வீடுகளில் சீடை, முறுக்கு என்று நிவேதனம் செய்கிறோமே... இதற்கு என்ன காரணம்?

கண்ணன் வந்தான்!

கிருஷ்ண பகவான், நள்ளிரவு வேளையில் சிறையில் அவதரித்தார். இந்தத் தகவல் கம்சனுக்குத் தெரிந்தால் ஆபத்தாயிற்றே!

எனவே, கண்ணன் பிறந்ததும் மேளதாளம் உள்ளிட்ட மங்கல ஓசை எதுவும் எழுப்பப்படவில்லை. அதேநேரம், துர்ச்சொப்பனம் ஒன்று கண்டான் கம்சன். அதன் காரணமாக தூக்கத்திலேயே பற்களை நறநறவென்று கடித்தான். அந்தச் சத்தமே பகவான் கண்ணன் அவதரித்ததற்கான மங்கல ஒலியானதாம்!

இதை உணர்த்தவே... கடித்தால் நறநறவென்று சத்தம் கேட்கும் சீடை, முறுக்கு முதலான பட்சணங்களைக் கிருஷ்ண ஜயந்தியன்று நிவேதனம் செய்கிறோம்.

- டி. பூபதிராவ், காஞ்சிபுரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு