திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கிருஷ்ண தரிசனம்!

அலங்கார கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
அலங்கார கண்ணன்

படங்கள்: கே.எஸ்.இளங்கோவன்

ண்ணன் எனும் பெயரைக் கேட்டாலே நம் கவலைகள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடிவிடும் என்பார்கள் பெரியோர்கள். எனில் அவன் தரிசனம் கிடைத்தால்?

மண்ணை உண்ட வாயில் மண்டலத்தைக் காட்டியது, வெண்ணெய் திருடி உண்டது, காளிங்கமர்த்தனம், கோவர்த்தனகிரி அற்புதம்... என கண்ணன் செய்த லீலைகள் ஒவ்வொன்றையும் நேரில் தரிசித்து அனுபவித்த கோகுலவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்தான்!


அப்படியான பாக்கியம் நமக்கும் வேண்டாமா?

இதோ, அழகுக் கண்ணனின் அற்புத கோலங்களும் அபூர்வ தகவல்களும் இங்கே உங்களுக்காக!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டையிலிருந்து சுமாா் ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, பாடூர் ஸ்ரீஅலா்மேலுமங்கா நாயகி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். இங்கு அலங்கார நாயகனாக அருளும் இந்தக் கண்ணனை வணங்கி வழிபட, திருமணத் தடை நீங்கி விவாஹ ப்ராப்தி ஏற்படும்; தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகுமாம்!

குழலூதும் கோபாலன்
குழலூதும் கோபாலன்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 16 கி.மீ. தூரத்தில் உள்ளது T. புதுப்பாக்கம் எனும் கிராமம். இங்குள்ள ராதா - ருக்மிணி சமேத ஸ்ரீநவநீத வேணு கோபால சுவாமி கோயிலில் குழலூதும் கோபாலனாக அருள்கிறார் கண்ணன். மகப்பேறு அளிப்பதில் சிறந்த வரப்ரசாதி இந்த மாயவன். துலாபார வேண்டுதல் இங்கே விசேஷம்!

அருமாகடலமுதன்
அருமாகடலமுதன்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சிறுபுலியூரில், பெருமாள் `அருமாகடலமுதன்' எனும் திருநாமத் துடன், அரிய திருக்காட்சியாக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளாா். தாயார் திருமாமகள் நாச்சியாா். உற்சவர் கிருபாசமுத்திரப் பெருமாள்.

இங்கு ஆதிசேஷன் குடை பிடிக்க, இடது கரத்தால் வலது திருப் பாதத்தைப் பற்றி, கட்டை விரலைத் தன் திருப்பவளச் செவ்வாய்க்கு அருகில் வைத்த நிலையில் குழந்தைக் கண்ணன் அருள்கிறாா். குழந்தைப் பேறு வேண்டியும், மாங்கல்ய தோஷம் நீங்கவும், பாலாரிஷ்ட தோஷம் நீங்கவும் இங்கு பக்தா்கள் வழிபடுகிறார்கள்.

வாசுதேவன்
வாசுதேவன்

சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் உள்ளது மீஞ்சூா். இங்குள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் பிரசித்தி பெற்றது. காலையில் காஞ்சி வரதரையும் மாலையில் மீஞ்சூர் வரதரையும் தரிசிப்பது மிகவும் விசேஷம். இங்கு அழகுக் கோலத்தில் அருளும் கண்ணனை தரிசித்து தீபமேற்றி வழிபட்டால், வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள்.

கிருஷ்ணா்
கிருஷ்ணா்

தங்காலமலை என்ற திருத்தங்கல் நகரில் தெய்வீக வாசுதேவன், நின்ற நாராயணன் என்ற திருநாமங்களுடன் பெருமாளும், அருணகமல மகாலட்சுமி, ஸ்ரீசெங்கமலத் தாயாரும் அருள்பாலிக்கின்றனா். இத்தலத்தில் பாணாசுரனின் அகந்தையை அடக்க மகாலட்சுமி தவம் இருந்ததாக வரலாறு. தங்கால மலை என்ற சிறிய மலையில் அமைந்திருக்கும் கோயிலில், கிருஷ்ணா் இரு கரங்களிலும் வெண்ணெய் உருண்டையை வைத்துக் கொண்டு நின்ற கோலத்தில் அருள்கிறார். இருபுறமும் சர்ப்ப விக்கிரகங்கள். இவரை தரிசித்து வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் முதலான சகல தொஷங்களும் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சம்மோஹன கிருஷ்ணன்
சம்மோஹன கிருஷ்ணன்

நாமக்கல்லிலிருந்து 17 கி.மி. தூரத்தில் உள்ளது மோகனூர். இங்குள்ள கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலிலில் மட்டுமே சம்மோஹன கிருஷ்ணன் விக்ரகம் வழிபாட்டில் உள்ளது. மண வாழ்க்கையில் பிரச்னைகளை அனுபவித்து வரும் தம்பதியினா், இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட, தம்பதி ஒற்றுமை ஏற்படும்; இல்லறம் நல்லறமாகும் என்பது நம்பிக்கை.

வேணுகோபால ஸ்வாமி
வேணுகோபால ஸ்வாமி

கர்நாடக மாநிலம், பெங்களூரு- மல்லேஸ்வரத்தில் உள்ள வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில், தவழும் திருக்கோலத்தில் அருள்கிறார் கண்ணன்.
தொட்டமளூா் நவநீதகிருஷ்ணனைப் போன்றே திருக்காட்சி தரும் மல்லேஸ்வரம் கிருஷ்ணரை வழிபட்டால், சயன தோஷம் நீங்கி மழலைப் பேறு ஏற்படும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது. தங்களது பிராா்த்தனை நிறைவேறியதும் இத் தலத்திற்கு வந்து நோ்த்திக்கடனாக துலாபாரம் செலுத்துவது அன்பா்களின் வழக்கமாக உள்ளது.

அஷ்டபுஜ  வேணுகோபாலன்
அஷ்டபுஜ வேணுகோபாலன்

திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூா் செல்லும் சாலையில், 10 கி.மீ. தூரத்தில் உள்ளது தாடிக்கொம்பு. இங்குள்ள செளந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில், அஷ்டபுஜங்களுடன் ருக்மிணி-சத்யபாமா சமேதராக அருள்கிறாா் வேணுகோபாலன். இங்கு மழலைப்பேறு இல்லாத அன்பா்களுக்காக ரோஹிணி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்போது, உற்சவரான நவநீதகிருஷ்ணனை தம்பதிகளின் மடியில் தவழச் செய்து, ஸ்வாமிக்கு அா்ச்சனை செய்து வெண்ணெய், அவல் மற்றும் நாட்டு சா்க்கரை கலந்த பிரசாதம் தருகின்றனா். இந்தப் பிரசாதம் பிள்ளை வரம் அருளும் அருமருந்து என்கிறார்கள் பக்தர்கள்.

குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி அருகிலுள்ள வெங்கடாம்பேட்டை எனும் தலத்தில் சுமாா் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில்... மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற கரங்களில் புல்லாங்குழலை ஏந்தியும், வலது காலை சற்றே ஒய்யாரமாக வளைத்து வைத்து எழில் கோலம் காட்டுகிறார், கண்ணன்.இந்த வேணுகோபாலனை வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கும் சகல ஐஸ்வா்யங்களும் கைகூடும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

திருமயம்
திருமயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற திருமெய்யம் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசத்தியகிரி நாதப் பெருமாள் கோயில், இங்கு அருளும் கண்ணன் விசேஷ கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

வெண்ணெய்யைத் திருடி கண்ணன் செய்த லீலைகளை நினைவுகூரும் விதமாகவே, திருக்கரத்தில் வெண்ணெய் உருண்டையுடன் அருள்கிறாராம். இவரை தரிசித்து வழிபட்டால், நம் துன்பங்களும் வெண்ணெய் போன்று உருகிவிடும்!