Published:Updated:

`நாராயணனே நமக்கே பறை தருவான்..!' கண்ணனைப் போற்றிப்பாட அழைக்கிறாள் கோதை - திருப்பாவை - 1

திருப்பாவை 1
திருப்பாவை 1

இறைவன் எப்போது நம்முள் வருவான் என்பதை நாம் அறியாதபோது நாம் அவனுக்காக எந்நேரமும் காத்திருக்க வேண்டும்தானே? அப்படியில்லாமல் அசட்டையாய் அவனை உள்ளத்தில் ஏற்கத் தயாராக இல்லாமல் இருந்தால் அவன் கடந்து போய்விடமாட்டானா? அதனால்தான் எம் பெண்கள் நேரிழையீராக எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

திருமலை வேங்கடவன்
திருமலை வேங்கடவன்

அவருக்கு அது கனவா இல்லை நனவா என்று தெரியவில்லை. அந்த வேங்கடவன் சர்வ அலங்கார பூஷணனாக இருந்தான். அவனுடைய அழகிய உதடுகளைத் திறந்து தேனினும் இனிமையான தன் குரலால் பேசினான். அவன் பேச்சில் குழலுக்கு மயங்கிக் கண்ணன் முன் நிற்கும் பசுவைப் போல ஓர் எல்லையில்லா ஆனந்தம் அவருக்கு.

"இந்த உலகில் பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்தாள் ஒருத்தி. மானுடராய்ப் பிறந்தும் என் திருவடிகளில் இரண்டறக் கலக்க முடியும் என்று நிரூபித்தாள். வேதம் அனைத்தையும் தன் தண்டமிழ் பாசுரங்களுக்குள் வைத்து மக்களுக்கு அளித்தாள். அதன் பலனாகவே இன்றும் என் கோயில்களில் எல்லாம் தவறாமல் கொலுவீற்றிருக்கிறாள். அவள்தான் கோதை... அவளின் புகழை நீ சுந்தரத் தெலுங்கினில் பாடு... அவளின் திவ்ய சரித்திரத்தைப் போற்றி ஒரு காவியம் செய். அதுவே எனக்குப் பிரியமான நிவேதனம்" என்று சொன்ன மாலவனின் சொற்கள் அவர் காதுகளில் விழுந்து எதிரொலித்த வண்ணம் இருந்தன.

கிருஷ்ண தேவராயர் தன் வாழ்வின் கடமை எது என்பதை முடிவு செய்துவிட்டார். வில்லிபுத்தூர் கோதையின் திவ்ய சரிதத்தை அறிந்துகொண்டு அதை நூலாக்குவதே காலம் முழுவதும் தன் பெயரை நிலை நிறுத்தும் என்று தெரிந்துகொண்டார். தன் அவை ஞானிகளைக் கூப்பிட்டு ஆண்டாள் சரிதத்தைச் சொல்லும்படிக் கேட்டார்.

ஐயனே, ஊர்களில் எல்லாம் புகழ்மிக்க ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். அதுவே கோதை பிறந்த ஊர். அந்த கோவிந்தன் வடபத்ர சாயியாக வாழும் ஊர், நான் மறைகளும் ஓதும் ஊர். அங்குதான் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதையின் திருமொழிகள் தோன்றின.

கோதை
கோதை

விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கி வல்லப தேவன் என்னும் பாண்டிய மன்னன் நிகழ்த்திய வித்வத் சதஸில் (தர்க்க சபை) வைணவமே உயர்ந்த நெறி என்றும் அந்த மகாவிஷ்ணுவே உயர்ந்த தெய்வம் என்றும் நிறுவிய விஷ்ணு சித்தர், ஒரு பிருந்தாவனம் அமைத்து அந்த வட பத்ர சாயிக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். அவரது பிருந்தாவனத்தில் இருந்த துளசிச் செடிகளுக்கு நடுவிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

விஷ்ணு சித்தர் ஓடிச் சென்று பார்த்தார். மகாலட்சுமித் தாயாரே, குழந்தையாய் அவதரித்தாளோ என்னும் அளவுக்கு எழில் தோற்றம் அவரை வசீகரித்தது. மலர்கள் அனைத்தையும் விட அழகிய தோற்றம் கொண்டவளான அவளுக்குப் பூங்கோதை என்று பெயரிட்டு அந்த நாராயணனின் நாமத்தைத் தாலாட்டாக உபதேசம் செய்து வளர்த்தார் விஷ்ணு சித்தர்.

இதோ மார்கழி மாதம் பிறந்துவிட்டது. அந்த மாயவன் , `மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லியிருக்கிறானே... அப்படிப்பட்ட பெருமை மிகுந்த மார்கழி அல்லவா! இன்னும் விடிய நேரமிருக்கிறது. நிறைந்த நிலவும் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்தக் கண்ணன் மீதான பக்தி தூங்கவிடாமல் செய்கிறது. இது பிரம்ம முகூர்த்தம். தேவர்களும் ரிஷிகளும் நீராடும் பொழுது. இந்தப் பொழுதில் அவனைத் துதித்து நீராடத் தொடங்கிவிடுவார்கள். மார்கழி மாதத்தில் ஆயர்பாடியில் கோபியர்கள் சேர்ந்து கூடி மகிழ்ந்து அவனைப் போற்றி வழிபட்டதாலேயே அவனது திவ்ய தரிசனத்தையும் பிரசாதத்தையும் பெற்றனர். நான் என்ன செய்யப் போகிறேன்...

ஆண்டாள்
ஆண்டாள்
Vikatan

இதுதான் ஆயர்பாடி. என் தோழியர்தான் ஆய்ச்சியர்கள்,  கண்ணனின் வரவுக்காகக் காத்திருக்கும் கோபியர்கள். இதோ அவர்களை அழைத்துக்கொண்டு இந்த மாதத்துக்கான பாவை நோன்பை நோற்போம்.

மாடு என்றால் செல்வம். இந்த ஆயர்பாடியில் எல்லா வீடுகளும் செல்வம் நிறைந்த வீடுகளே. அப்படிச் செல்வம் நிறைந்த வீடுகளில் வாழும் செல்வச் சிறுமியர்களே, வாருங்கள் நாம் அனைவரும் நீராடலாம் நேரிழையீர்களே. நேரிழையீர் என்றால் நல்ல அழகான அணிகலன்களை அணிந்து அலங்கரித்துக் கொண்டிருப்பவர்கள் என்று பொருள். கோபிகைகள் எப்போதும் நேரிழையீரே.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
மருந்தாகும் வெட்டிவேர் பிரசாதம்... ஆரோக்கியம் அருளும் திருஊட்டத்தூர் நடராஜர் மார்கழி தரிசனம்!

கண்ணன் கூட இருக்கும்போது கோபியர்கள், நல்ல ஆபரணங்களை அணிந்துகொண்டு அழகு செய்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கண்ணன் அருகில் இல்லாதபோதும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருத்தி கோபியர் ஒருத்தியிடம் கேட்டாளாம். அதற்கு அந்த கோபிகை, ``கண்ணன் எப்போது வருவான் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவன் வரும்போது நாங்கள் அவனோடு விளையாடவும் அவனை வழிபடவும் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நலிவுற்றிருந்தால் அவன் மனம் வருந்தமாட்டானா என்ன?" என்று பதில் சொன்னாளாம்.

இறைவன் எப்போது நம்முள் வருவான் என்பதை நாம் அறியாதபோது நாம் அவனுக்காக எந்நேரமும் காத்திருக்க வேண்டும்தானே? அப்படியில்லாமல் அசட்டையாய் அவனை உள்ளத்தில் ஏற்கத் தயாராக இல்லாமல் இருந்தால் அவன் கடந்து போய்விடமாட்டானா என்ன? அதனால்தான் எம் பெண்கள் நேரிழையீராக எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

கூர்மையான வேலினைக் கொண்டு கோகுலத்தைக் காத்துவருபவன் நந்தகோபன். அவனது குமாரனான கண்ணனைத்தான் நாம் துதிக்கப் போகிறோம். அவனின் தாய் யசோதை தன் மகனின் கம்பீரத்தைக் கண்டு வியக்கிறாள். அவள் பார்வையில் அவன் ஒரு சிங்கம். அதுவும் நந்தகோபன் என்னும் பெரிய சிங்கத்தின் மகனாகப் பீடு நடைபோடும் இளஞ்சிங்கம் அவன்.

கண்ணன்
கண்ணன்

அவன் உடல் கருமையான மேகம் போன்றது. அவனது கண்களோ சிவப்பாகத் தாமரை மலர்போல் காட்சியளிக்கும். ஒளி வீசும் அவன் முகத்தைக் கதிரவன் என்போமோ அல்லது அதிலிருந்து பிறக்கும் ஒளி மதியைப் போலக் குளுமையாக இருப்பதால் நிலவு என்போமோ... எப்படியாயினும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டியது நம் கடமை.

குறையொன்றுமில்லாத அந்த கோவிந்தனை நம் சிறுமதியால் பாடிப் புகழ்ந்திட முடியுமா என்ன? அவனைப் புகழவும் அவனேதான் பறை தரவேண்டும். பறை என்றால் வலிமை. பறை என்றால் வீரம். அதை நாராயணன் நமக்கு வழங்கி நாம் அவனைப் பாடுமாறு பணிப்பான். அவன் புகழைப் பாடிப் பணிகொண்டு இந்தப் பாவை நோன்பை நோற்போம்.

திருப்பாவை- 1 மார்கழி திங்கள்...#Thirupavai #Spiritual

Posted by Vikatan EMagazine on Monday, December 16, 2019
மாத ராசிபலன்
ஆண்டாள் தன் தோழிகளை இவ்வாறெல்லாம் பாடி மார்கழி நீராட அழைப்பாள். ஒரு பாடலிலேயே ஓடிவந்துவிட அத்தனை பக்குவமானவையா ஜீவாத்மாக்கள்... அல்லது அப்படி வந்துவிட்டால் ஆண்டாளின் அழகுதமிழில் இத்தனை பாசுரங்கள் கிடைத்திருக்குமா என்ன? ஆண்டாள் தமிழில் அற்புதமான பாசுரங்களைத் தொடர்ந்து பாடலானாள்.
அடுத்த கட்டுரைக்கு