Published:Updated:

சஷ்டியுடன்கூடிய விசேஷ கிருத்திகை... விரதமிருந்து முருகனை வழிபட உகந்த தினம்!

நாளை கிருத்திகை நட்சத்திரமும் சஷ்டி திதியும் சேர்ந்து வருவதால் முருகக்கடவுளை வழிபட உகந்த தினம். கிருத்திகை விரதம் இருப்பவர்கள் நாளை அந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

Murugan
Murugan

எல்லா நாள்களும் இறைவனை வழிபட உகந்த நாள்களே. ஆனாலும், சில குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குவதன் மூலம் மேலதிகமான புண்ணியபலன்களைப் பெறமுடியும்.

Murugan
Murugan

ஒரு மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் சிவ பெருமானுக்கும் சதுர்த்தி தினங்கள் விநாயகருக்கும் பௌர்ணமி அம்பிகைக்கும் உரிய வழிபாட்டுத் தினங்கள். இந்தத் தினங்களில் விரதமிருந்து வழிபடுவது மிகவும் விசேஷமானது. அதேபோன்று முருகக் கடவுளை வழிபட சஷ்டி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் மிகவும் உகந்த தினங்கள்.

கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய சுடர்களைப் பொற்றாமரைக் குளத்திலிருந்த ஆறு தாமரை மலர்களிலிட்டபோது அவை ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்களே வளர்த்து ஆளாக்கினர். எனவேதான் முருகனுக்கு உகந்த நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரம் விளங்குகின்றது.

Murugan
Murugan

கிருத்திகை நட்சத்திரம் என்று ஒரு நட்சத்திரம்போலச் சொன்னாலும் அது 6 நட்சத்திரங்களின் கூட்டங்களையே குறிக்கும். ஜோதிடப்படி கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும் மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமையும். பொதுவாகக் கிருத்திகை நட்சத்திரத்தை அக்னி ரூபமாகவே கருதுவர். அக்னியில் தோன்றியவர் முருகக் கடவுள் என்பதால் கிருத்திகை அவருக்கு உகந்தது என்கிறார்கள். மேலும், இந்த நட்சத்திரத்தின் ராசிநாதன் செவ்வாய் மற்றும் சுக்கிரன். அதிபதி சூரியன். இவை அனைத்தும் முருகப் பெருமானின் பக்தர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் கிரகங்கள். இத்தகைய சிறப்புகளையுடைய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகக் கடவுளுக்கு விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

நாளை (19.9.2019) கிருத்திகை நட்சத்திர தினம். மேலும், இந்த நாளின் மாலையில் சஷ்டி திதியும் சேர்கிறது. எனவே, நாளை நாள் முழுவதும் முருகப்பெருமானை வழிபடுவது விசேஷம். குறிப்பாக, கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பவர்கள் நாளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து கிருத்திகை விரதம் இருப்பதன் மூலம் தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்; கல்வியில் மேன்மை ஏற்படும்; செவ்வாயால் தடைப்பட்டுவரும் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் கைகூடும் என்பது ஐதிகம்.

Murugan
Murugan

எனவே, நாளை தவறாமல் கிருத்திகை விரதமிருந்தும் ஆலயங்களுக்குச் சென்றும் முருகப் பெருமானை தரிசனம் செய்து இறையருளைப் பெறுவோம்.