Published:Updated:

குட மல்லிகா வனத்தில் கல்யாண வரம் தரும் ஈஸ்வரன்!

திருவந்தீஸ்வரர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருவந்தீஸ்வரர் கோயில்

வாசகர் ஆன்மிகம் - குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் திருக்கோயில்!

குட மல்லிகா வனத்தில் கல்யாண வரம் தரும் ஈஸ்வரன்!

வாசகர் ஆன்மிகம் - குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் திருக்கோயில்!

Published:Updated:
திருவந்தீஸ்வரர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருவந்தீஸ்வரர் கோயில்

நித்யகல்யாணி, பெங்களூரு

புண்ணிய விரதங்களில் மிகச் சிறப்பானது மகா சிவராத்திரி விரதம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை பூஜிப்பதால், நாம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும். அவ்வகையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று மிக அற்புதமான சிவாலயத்தை தரிசித்து வழிபடும் பெரும்பேறு கிடைத்தது.

குடிமல்லூர் கோயில்
குடிமல்லூர் கோயில்


எங்களின் குடும்ப நண்பர் ராஜசேகர் பஞ்சாட்சரம். வாலாஜாபேட்டை அருகில் குடிமல்லூரில் உள்ள அவருடைய பூர்வீக சிவன் கோயிலுக்கு - சிவராத்திரி பூஜைக்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்.

நாங்களும் குடும்பத்துடன் சென்றோம். அங்கு சென்றபிறகுதான், அந்தச் சிவாலய தலம், ஷடாராண்ய தலங்களில் ஒன்று என்பதை அறிந்தேன். ஷடாரண்ய தலங்களின் மகிமையை ஞானநூல்கள் போற்றுகின்றன.

காஞ்சியில் சிவ-பார்வதி திருமணம் நடந்தது. அந்தத் திருக்கல்யாணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் மற்றும் ஏனையோரும் அங்கே கூடினர்.அகத்தியர், கௌதமர், பரத்வாஜர், காசியபர், அத்ரி, வசிஷ்டர், வால்மீகி ஆகிய சப்த முனிவர்களும் வந்திருந்தனர்.

கல்யாணக் கூட்டத்தால் காஞ்சி மாநகரமே நிரம்பி வழிந்தது. முனிவர்கள் எழுவரும் தங்களின் நித்திய கடமைகளை இடையூறின்றி நிறைவேற்ற வேண்டி, அருகிலிருந்த வனப் பகுதிகளுக்குச் சென்றனர். அந்த எழுவரில் 6 முனிவர்கள் வணங்கிய இடங்கள், ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் (ஆறு காடுகள்) என்று சிறப்புப்பெற்றன. அவர்களில் அத்ரி முனிவர் தவம் இருந்த இடம்தான் குடிமல்லூர்.

குடிமல்லூர் வாலாஜாவில் இருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி, ஒரு காலத்தில் குடமல்லிகை நிறைந்த காடாக இருந்ததால் ‘குடமல்லிகா வனம்’ என்று அழைக்கப்பட்டதாம்.இப்போது குடிமல்லூர் என்றாகிவிட்டது.

அம்பாள் திரிபுரசுந்தரி
அம்பாள் திரிபுரசுந்தரி
தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி
திருவந்தீஸ்வரர் கோயில்
திருவந்தீஸ்வரர் கோயில்
நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்


இங்கே அம்பாள் திரிபுரசுந்தரியுடன் அழகுற கோயில் கொண்டுள்ளார் திருவந்தீஸ்வரர். அத்ரி வழிபட்டதால் அத்திரீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது இந்தக் கோயிலின் அறங்காவலர்கள் பஞ்சாட்சரம், அம்பிகாபதி இருவரும் இதன் மகிமைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

சுமார் 120 வருடங்களுக்கு முன்பு, இவர்களின் முன்னோர்களான தியாகராஜ ஐயரும் அவரின் சகோதர் முனிரத்தின ஐயரும் சிவாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள், கட்டுமானப் பணிக் காக பாலாற்றங்கரையில் மணல் கொண்டு வர சென்றபோது, அங்கே சுயம்பு வடிவாய் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம், புராணக் காலத்தில் அத்ரி முனிவரால் பூஜிக்கப்பட்டது என்பதை அறிந்து, அந்த லிங்க மூர்த்தத்தை தாங்கள் கட்டிவந்த கோயிலில் எழுந்தருளச் செய்தார்களாம்.

அத்ரி மகரிஷி அமர்ந்த நிலையில் இருந்து சிவனை பல காலம் பூஜித்ததால், அவருக்குச் சிவனருள் கைகூடியதம. இதையொட்டி இந்த ஆலயத்தில், அமர்ந்த நிலையில் உள்ள அத்ரி முனிவரின் திருமேனியை, கருவறைக்கு எதிரே இறைவனை நோக்கி ஸ்தாபித்துள்ளனர். அவர்கள் 1898-99-ம் வருடம் கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு செய்துள்ளனர்.

இந்த விவரங்களை கருவறைக்கு வெளியே மேற்கூரையில் உள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். பிற்காலத்தில் 1978, 1998 ஆகிய வருடங்களில் மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது, இந்த வருடம் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

ஆலய நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் மேற்குப்புறத்தில் சிவன், பார்வதி, விநாயகர் திருமேனிகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் இடப்புறம் கல்யாண மண்டபமும், விநாயகர் சந்நிதியும் உள்ளன. வலம் வரும்போது கொடி மரம், பலிபீடம், நந்திதேவரை தரிசிக்கலாம். பிரமாண்ட மதில் சுவரில் அடிகொன்றாக அகல் விளக்குகள் பதிக்கப்பட்டுள்ளன.

உள் பிராகாரத்தில் கருவறையில் ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையின் வெளிபுற சுவர்களில் வண்ண ஓவியங்கள் அழகூட்டுகின்றன. அம்பாள் திரிபுரசுந்தரி தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்கிறாள்.

நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, முருகப் பெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், மற்றும் நாக மூர்த்தங்களையும் இங்கே தரிசிக்கலாம். நவகிரகங்களுக்கும் தனிச் சந்நிதி உண்டு.

இங்கு வந்து அம்பாள் மற்றும் திருவந்தீஸ் வரர் சந்நிதியில் தீபங்கள் ஏற்றிவைத்து, மனதார வணங்கி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் மகா சிவராத்திரி திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதோஷம், சோமவாரம் முதலான சிவ பெருமானுக்கு உகந்த நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிவனாரை மும்முறை வலம் வந்து மனமுருகிப் பிரார்த்தித்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்; வேண்டிய வரம் கிடைக்கும். அத்ரி முனிவரும் இங்கு அருள்கிறார் அல்லவா? ஆகவே, நீங்களும் குடும்பத்துடன் சென்று குருவரு ளோடு திருவருளையும் பெற்று வாருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism