Published:Updated:

கல்வியறிவு அருளும் எழுத்தறிநாதர்! - அட்சராப்யாசம் செய்ய உகந்த திருஇன்னம்பூர்

எழுத்தறிநாதர்
எழுத்தறிநாதர்

அகத்தியருக்கே, தமிழ் இலக்கணத்தை போதித்த எழுத்தறிநாதர் கும்பகோணம் அருகே திருஇன்னம்பூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

'அட்சரம்' என்றால் 'எழுத்து' என வடமொழியில் பொருட்படுவதால் 'அட்சரபுரீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான இந்திரனின் யானை ஐராவதம், இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால் இத்தல இறைவனுக்கு 'ஐராவதேஸ்வரர்' என்று பெயரும் உண்டு.

எழுத்தறிநாதர்
எழுத்தறிநாதர்

`இனன்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்டு ஒளிமிக பெற்ற ஊர் என்பதால் இனன்நம்பூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி `இன்னம்பூர்’ என்றாகியிருக்கிறது. சூரியன் ஒவ்வோர் ஆண்டும் ஆவணி 31-ம் தேதி, புரட்டாசி 12-ம் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், இங்குள்ள எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய ஒளிக்கதிர்களை வீசி வழிபடுவதால் இந்த நாள்களில் சூரிய பூஜை, இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் மூலவர் எழுத்தறிநாதருடன், கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்கை ஆகியோரும் உள்ளனர். முருகப்பெருமான், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள். சுதன்மன் என்ற சிவபக்தரின் வேண்டுதலுக்காக, சுதன்மன் வேடம்பூண்டு இத்தலத்து ஈசனே அரசன் முன் இன்னாம்பூர் கோயில் கணக்குகளை ஒப்படைத்து திருவிளையாடல் நடத்தினார் என்பது தலவரலாறு.

எழுத்தறிநாதர்
எழுத்தறிநாதர்

பூர்வ ஜென்ம பாவ நிவர்த்தித் தலமான இங்கு, பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமி நாள்களில் அபிஷேகம் செய்வதுடன், நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாய் பேச முடியாத குழந்தைகள், கல்வியில் பின் தங்கியவர்கள் இத்தலத்தில் நெல் அட்சரமிட்டு எழுதுவதன் மூலம் நன்கு பேசும் ஆற்றலும் அறிவுக் கூர்மையும் பெறுவர் என்பது ஐதிகம்.

நித்ய கல்யாணி என்னும் சௌந்தரநாயகி அம்பிகையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழத்தில் தீபமேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகி திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

இத்தல எழுத்தறிநாதரை 27 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவோர் கல்வி, அறிவு, ஞானம் பெற்றுத் திகழ்வார்கள் என்பது திண்ணம்.

இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் நடைபெறுவது போலவே, இங்கும் கல்வி பயிலத் தொடங்கும் குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்து, தாம்பாளத்தில் பரப்பிய நெல்லில் `ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ’ என்று குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். வித்யாரம்பம் என்றழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் குறிப்பாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாள்களில் நிறைய குழந்தைகளை பங்கேற்க வைக்கிறார்கள்.

எழுத்தறிநாதர்
எழுத்தறிநாதர்

ஆகவே, இந்நாள்களில் இன்னம்பூர் எழுத்தறிநாதரை குடும்பத்துடன் வழிபட்டு, குழந்தைகளின் கல்வியறிவைத் தொடங்கி வைப்பதுடன், நாமும் வாழ்வில் வளம் பெறலாம்.

எப்படிச் செல்வது ? :

கும்பகோணம்- சுவாமிமலை மார்க்கத்தில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் இன்னம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தூரமுள்ள இன்னம்பூருக்கு நெ.6 நகரப் பேருந்தில் செல்லலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

அடுத்த கட்டுரைக்கு