Published:Updated:

குறள் அமிர்தம்!

குறள் அமிர்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
குறள் அமிர்தம்

தமிழர் மெய்யியல் அடிப்படையில் திருக்குறள் உரை

மாணிக்கவாசகர் இறைவனைப் பற்றிச் சொல்லும்போது, `முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே' என்பார். அதாவது பழைமைக்கும் பழைமை, இந்த உலகில் இனி தோன்றப்போகும் புதுமைக்கும் புதுமை என்பதுதான் அதன் பொருள்.

குறள் அமிர்தம்!

இறைவனுக்கான அந்த விளக்கத்தையே நல்ல நூல்களுக்குமான விளக்கமாகக் கொண் டால், அது மிகையில்லை. எந்த நூல் காலத்தால் பிற்பட்டதாக இருந்தாலும் கணந்தோறும் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறதோ அதுவே சிறந்த நூல் அல்லது மெய்நூல் என்று சொல்லலாம். அப்படி ஒரு நூல்தான் திருக்குறள்.

திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்தே சமூகத்தில் தன் செல்வாக்கைச் செலுத்திவரும் நூல். திருக்குறளுக்குப் பல்வேறு அறிஞர்களும் உரை செய்திருக்கிறார்கள். பரிமேழலகர் முதல் சாலமன் பாப்பையா வரை பொருள்பொதிந்த உரைகள் பல அதற்கு உண்டு. திருக்குறள் அவற்றுக்கு இடம் கொடுக்கிறது. அதுவே அதன் பெருமை. அத்தகைய பொக்கிஷத்துக்கு அண்மையில் சேர்ந்திருக்கும் குறிப்பிடத்தக்க உரை `குறள் அமிர்தம்.'

கோ. திருமுருகன் எழுதியிருக்கும் இந்நூல், மிகவும் முக்கியமானது என்று சொல்லலாம். காரணம் தமிழ், தமிழர் மெய்யியல் குறித்த அண்மைக்கால ஆய்வுநூல்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்னும் குறையைத் தீர்க்கும் வண்ணம் உருவாகியிருக்கிறது, `குறள் அமிர்தம்' எனும் இந்நூல்.

திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று பிரித்துப் பார்ப்பது அறிஞர் வழக்கம். ஆனால் திருமுருகனோ, `மணி, மந்திரம், ஔஷதம்' ஆகிய மூன்றும் கலந்ததே இந்த முப்பால் என்று எடுத்துரைக்கிறார். உலகப் பொதுமறை என்னும் திருக்குறளுக்கு இப்படி ஒரு விளக்கம் என்பது மிகவும் உற்று நோக்கத் தக்கது.

இந்த உரையின் தீவிரம், கடவுள் வாழ்த்து தொடங்கி கடைசி அத்தியாயமான ஊடலுவகை வரை குன்றாமல் உள்ளது. திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் இரண்டாம் குறள்

`கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்' என்பதாகும்

இந்தக் குறளுக்கு மு.வரதராசன், `தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?' என்றும் பரிமேலழகர், `எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?' என்றும் உரை சொல்வார்கள். குறள் அமிர்தத்தில் கோ.திருமுருகன், மிகவும் நுட்பமான ஓர் விளக்கத்தை வழங்குகிறார்.

`நாம் கற்கின்ற கல்வியானது பயனுள்ள வகையில் இருத்தல் வேண்டும். பயனற்ற கல்வியைப் படித்து போலியான ஞானத்தை மெய்யனக் கொண்டோர், வால் எனும் வாலையை அறிவதில்லை. மரணமில்லாப் பெருவாழ்வெனும் சாகாக் கல்வியை அடைய வாலையை (காற்றை) அறிந்தவனே வாலறிவன் ஆவான். அத்தகைய வாலை அன்னையான நற்றாளைத் தொழுது முறையே பயன்படுத்த க்கூடியவர்கள் மட்டுமே, இறைவனை எந்த நேரமும் தொழுது கொண்டே இருப்பர்' என்கிறார்.

இந்த விளக்கம், சித்தர் மரபிலிருந்து பிறக்கிறது. சித்தர்கள் ஜகன்மாதாவை வாலை யாக வழிபடுகிறார்கள். வாலை என்பதற்கு மூச்சுக் காற்று எனும் பொருளும் உண்டும். யோக சூத்திரமும் ஞான சூத்திரமும் இணையும் நிலையே சித்தர் நிலை. வள்ளுவனை சித்தராகக் கண்டு அவரின் சொற்களை உரை சொல்லும் இந்த விளக்கம், மிகவும் முக்கியமானதும் மாறுபட்டதும் ஆகும்.

அறம், பொருள் பாற்களில் மட்டுமல்ல காமத்துப்பாலுக்கு உரை எழுதும்போதும் இதேபோன்ற மெய்ஞ்ஞான சூத்திரத்தையே முன்வைக்கிறார் என்பதுதான் இந்த நூலின் சுவாரஸ்யம்.

`கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு'
எனும் குறளுக்கு `முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கிறது' என்பது போன்ற விளக்கத்தைத்தான் பெரும்பாலான வர்கள் வழங்கியிருக்க, திருமுருகனோ கொஞ்சம் வித்தியாசப்படுகிறார்.

`மெய்ஞ்ஞானிகள், கூடுதுறை என்னும் இவ்வுடம்பில் சீவனை ஒருங்கே இணைப்பர். ஆனால் பஞ்சபூதங்களோ, இவ்வுடம்பை மாயையான ஆடுதுறையாக்கி எதிர்க்கும். அதனால் சீவனைப் பேணும் இறைவரவு தடைப்பட்டு, உள்நீரும் சுருங்கிப் போகும். மெய்ஞ்ஞானிகள் உள்நீரைப் பெருக்கி, யோகத்தில் நிற்பர். அதனால், அவர்களின் விலா எலும்புகளில் ஞான ஒளி வீசும், நெஞ்சில் அந்த ஒளியானது, கோடு கோடாய்க் காட்சி அளிக்கும்...' எனும்படி விளக்குகிறார்.

இவை இரு உதாரணங்கள் மட்டுமே. இதேபோன்று 1,330 குறளுக்கும் மெய்ஞ்ஞான சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே திருமுருகன் உரை செய்திருக்கிறார். இந்த நூலை முழுமையாக வாசித்துவிட்டால் சித்த மரபின் சில வேர்களை அறிந்து கொண்டு விடலாம். தமிழர் மெய்யியலின் பிரமாண்டத் தைக் கற்பனை செய்யலாம்.

நூல் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, தயாரிப்பிலும் மிகுந்த சிரத்தையோடு செய்யப் பட்டிருக்கிறது. அருமையான கெட்டி அட்டையோடு இதழ் வடிவத்தில் மிக நேர்த்தி யாக அமைந்த இந்த நூல் தமிழர்கள் அனை வரின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். தமிழ் கூறும் நல்லுலகிற்கு இந்த நூல் ஓர் அற்புதமான ஆன்மிகப் பொக்கிஷம் என்பதில் சந்தேகம் இல்லை.

நூல் விலை 800
பக்கங்கள் : 572
ஜீவ அமிர்தம்
11/6, தரைத்தளம், பாரதி நகர் 4 வது தெரு
வடக்கு உஸ்மான் சாலை. தி. நகர். சென்னை- 17
தொடர்புக்கு: 91765 64723; 73973 94174