Published:Updated:

பொதிகை சிவாலயம் குற்றாலம் கோமுகம்

திருக்கோயில் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
News
திருக்கோயில் திருவுலா

திருக்கோயில் திருவுலா

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் எனும் முப்பெரும் தேவர்களும் மூன்று சிகரங்களாக வீற்றிருக்கும் குற்றால மலை, திரிகூட மலை என்றும் அழைக்கப் படும். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் என்று சைவம் போற்றும்.

 குறுகிய ஆலமரங்கள் அடர்ந்த தலம் என்பதால் குற்றாலம் என்றானது. இங்கு குறும்பலா மரத்தினடியே சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவர் குறும்பலா ஈசர் எனும் குற்றாலநாதர். `கு’ என்றால் பிறவி, `தாலம்’ என்றால் தீர்ப்பது என்றும் பொருள் உண்டு.

 உடலின் ராஜ உள் உறுப்புகளில் இந்த தலம் `பித்தப் பை'யைக் குறிப்பது என்பர். பித்த நீரின் அளவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கட்டுப் படுத்துகிறது என்பார்கள். பித்தநீர் ரத்தத்தில் கலந்து விட்டால், அது ஆபத்து என்கிறது மருத்துவம். பிறப்பிலிருந்து மட்டுமல்ல, இறப்பிலிருந்து காப்பவனும் குற்றாலக் கூத்தனே என்கிறது சைவம். இங்கு வந்து வழிபட்டு குற்றாலத்தில் குளித்தால் பித்து தெளிந்து குணமாவதை இன்றும் காணலாம்.

குற்றாலம்
குற்றாலம்


 பொதிகை மலைகளை மாபெரும் சிவாலயமாக அகத்தியர் உருவகப்படுத்தி வணங்கி வந்தார். அதில் குற்றாலம் கோமுகமாக விளங்கி வந்துள்ளது. ஆலயத்தில் அதிகம் சாந்நித்யம் நிறைந்த இடம் கோமுகமே. ஆண்டவனைத் தழுவி வரும் அத்தனை நிர்மால்யங்களும் வந்து சேருவது கோமுகத்தில்தான். அதனால்தான் அங்கு தியானத்தில் அமர்ந்துள்ளார் சண்டேசர். கருவறை மூர்த்தமும் கோமுகத் தீர்த்தமும் ஒன்றுதான் என்பது சைவத்தின் தெளிவு.

 குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என பல்வேறு திருநாமங்களில் இங்கே சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 இடைவிடாத அருவியின் ஓசையாலும் குளிர்ந்த நீர் கொட்டுவதாலும் சுவாமிக்கு தலைவலி உண்டாகும் என்று அன்றாடம் காலையில் நடக்கும் பூஜையில், லிங்க பாணத் தின் மீது விசேஷ தைலம் தடவுகின்றனர். இரவு பூஜையில் 'கடுக்காய் கஷாயம்' படைக் கின்றனர்.

 குழல்வாய் மொழியம்மை, பராசக்தி என இரு அம்பிக்கைகள் இங்கே அருள்பாலிக் கின்றனர். 64 சக்தி பீடங்களில் இது பராசக்தி பீடம் என்றும் தரணி பீடம் என்றும் போற்றப் படுகிறது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இங்குள்ள பராசக்தி இருப்பதால் பெளர்ணமி இரவில் நவசக்தி பூஜை நடைபெறுகிறது.

 பராசக்தியின் உக்கிரம் தணிக்க காமகோடீஸ்வரர் என்ற சிவமூர்த்தம் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆலய தீர்த்தம். 'பித்தம் தெளிய சித்ரா நதி' என்பது முதுமொழி. இத்தலத்தில் உள்ள பலா மரம், லிங்க வடிவிலான பலாச் சுளைகளைக் காய்க்கிறது. ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டிருக்கும் இந்த பலாக்களை யாரும் பறிப்பதில்லை.

 இங்குள்ள முருகப்பெருமான், கையில் வில்லேந்தியபடி வேடனாகக் காட்சி தருகிறார். இவருடன் வள்ளியம்மை, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தபடி அருள்கின்றனர். இது தமிழகத்திலேயே பழைமையான வடிவம் எனப்படுகிறது.

சித்திர சபை
சித்திர சபை


 குற்றால அருவியின் நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முற்கால பாண்டியர்கள் ஏழு பேர், மிக மிக சூட்சுமமாக சிவலிங்கத்தின் மீது அருவி நீர் எப்போதும் கொட்டும்படி பாறைகளில் செதுக்கி உள்ளனர் என்றும் இதை தரிசித்தால், அங்கு குளித்தால் நோய்கள் தீரும் என்பதும் ஐதீகம்.

 அகத்தியர் ஈசனின் திருமணக் கோலத்தை தரிசித்த தலம் என்பதால் இங்கு அவருக்கும் சந்நிதி உண்டு. அகத்தியருக்கு எதிரில் அவரின் சீடர், சிவாலய முனிவருக்கும் சந்நிதி உள்ளது. நவகோடி சித்தர்களும் அன்றும் இன்றும் அரூபமாக உலவும் இடம் திருக்குற்றாலம் எனப்படுகிறது.

 குற்றாநாதர் ஆலயம் சங்கு வடிவில் அமைந்து பிரணவ ஒலியை எழுப்பியபடி உள்ளதாம். நான்கு வேதங்களும் 4 வாயிலா கவும், ஈசனின் ஆனந்த தாண்டவம் காண பிலவேந்தன் என்பவர் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் இங்கு உள்ளது.

 அர்ஜுனன், தான் பூஜித்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை ஒருமுறை தொலைத்துவிட்டான். அதைத் தேடி அலைந்து இங்கு வந்தபோது, கண்டெடுத்தான். ஆனால் சம்புடத்தை எடுக்க முடியாமல் போனதால் இங்கேயே பூஜித்துவிட்டுச் சென்றான். அந்த லிங்கம் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் உள்ளது. பொருளைத் தொலைத்தவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, அவை மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள்.

குற்றாலம்
குற்றாலம்
தாண்டவ தீபாராதனை
தாண்டவ தீபாராதனை
சித்திர சபை
சித்திர சபை


 இவரது சந்நிதிக்கு அருகிலிருந்தபடி இந்த லிங்க மூர்த்தியையும் மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.

 கோயில் பிராகாரத்தில் மணக்கோலநாதர் சந்நிதி உள்ளது. ஈசன்-உமையாள் திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மா, தாரை வார்க்கும் திருமால், திருமகள், திருமணக் கோலத்தை தரிசிக்கும் அகத்தியர், பிருங்கி மகரிஷி ஆகியோரும் உடன் இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமைய, இந்த ஏழு மூர்த்தங்களுக்கும் மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து, வாசனை மலர்கள் சாத்தி வழிபட்டால், விரைவில் பலன் பெறுவர்.

 குறிஞ்சி நிலத்தின் பெருமையைக் கூறும் இலக்கியம் குறவஞ்சி. இதில் குற்றாலத்தின் பெருமை கூறும் குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடத்தக்கது. குற்றாலநாதரைப் பாடி 64 நூல்கள் எழுதப்பட்டுள்ளனவாம். மாணிக்கவாசகர், அப்பர், திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கபிலர், அருணகிரிநாதர், திரிகூடராசப்ப கவிராயர்...என இந்த ஆலயத் தைப் பற்றி எழுதியவர்கள் அநேகம் பேர்.

 குற்றாலம் என்றால் தாண்டவ தீபாராதனை விசேஷம். மார்கழி திருவாதிரை விழா, தேரோட்டத்துடன் 10 நாள்கள் நடைபெறும். அப்போது காலை, மாலையில் நடராஜருக்குச் செய்யப்படும் தீபாராதனை நடராஜரின் நடனத்தைப் போல, தாண்டவ பாவனையில் நடைபெறுவது சிறப்பு. இதுவே தாண்டவ தீபாராதனை. இவ்விழாவில் நடராஜருக்கு `வெள்ளை சாத்தி', `பச்சை சாத்தி' என இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படும். சித்திரை பிரம்மோற்சவத்திலும் தாண்டவ தீபாராதனை உண்டு.

 இமயத்தினும் பெருமை கொண்ட மலை குற்றாலம், கங்கையினும் பெருமை கொண்ட தீர்த்தம் குற்றால தீர்த்தம். அதனால் தான் 'குளிச்சா குத்தாலம், கும்பிட்டா பரமசிவம்!' என்ற பழமொழி வந்தது.

 குற்றாலத்தைச் சுற்றி 10 அருவிகள், மலைகள் எங்கும் 2000-த்துக்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகள். சித்தர்களின் தரிசனம் என ஆன்மிகமும் அமானுஷ்யமும் நிரம்பியது இத்தலம். 1811-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு மருத்துவக்குழு அமைத்து இந்த மலைகளை ஆய்வு செய்து, இங்கு கிடைக்காத மூலிகைகளே இல்லை என்று அறிவித்ததுடன், ஏறத்தாழ 1200-க்கும் மேற்பட்ட மூலிகைகளையும் பதிவு செய்தது.

 அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, கயிராகப் பயன்பட்ட வாசுகிக்கு ஈசன் வரம் அளிக்க முன் வந்தார். அப்போது `ஐயனே உங்கள் அற்புதத் தாண்டவத்தைக் காண வேண்டும்.' என்றது வாசுகி. 'திருக்குற்றாலம் சென்று தவம் இயற்று' என்றார் ஈசன். பொதிகை மலைச் சாரலில், சித்ரா நதிக்கரையில் வாசுகி தவமியற்றியது. சகல தேவர்களும் புடை சூழ ஈசன் சித்திர சபையில் தாண்டவமாடினார். பிரம்மன் தாண்டவ கோலங்களைச் சித்திர மாக வரைந்தார். குற்றாலத்தில் ஐந்தாவது சபையான சித்திர சபை உருவாயிற்று. இன்றும் தவக்கோல வாசுகி கோயில் சுற்றுப் பிராகாரத்தில் காணப்படுகிறது.

 குற்றாலநாதர் கோயிலிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் சித்திர சபை அமைந்திருக்கிறது. இதன் எதிரே அழகிய தெப்பக்குளம் உள்ளது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையில், காலத்தால் முந்தைய இயற்கை வர்ணங்களுடன் கூடிய அழகிய சித்திரங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக நர்த்தன மாடுகிறார்.

 `வினையில் பாதியைத் தீர்த்தான் பாப நாசன், குறையையும் தீர்த்தான் குற்றாலநாதன்' என்பது பழமொழி. பொதிகைப் பகுதியில் சிறப்பான தலமாக விளங்குவது குற்றாலமே. ஆரோக்கியம், ஆன்மிகம் இரண்டும் செழிக்கும் இடம் குற்றாலம்.

 குற்றாலம் சங்க கால நகரங்களில் ஒன்றாக இருந்து ஆய் ஆண்டிரன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சோழமன்னன் கோச்செங்கண்ணனால் தலவிருட்சம் உருவாக்கப்பட்டது. சங்கப்புலவர் கபிலரால் எழுதப்பட்ட சிவபெருமான் திருவந்தாதி என்னும் நூல், `கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம், கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது.

 திருக்குற்றாலநாதர் கோயிலில் 89 கல்வெட்டுகள் வடிக்கப்பட்டுள்ளன. பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்தில் எழுதப்பட்ட 10 கல்வெட்டுகள் `திருக்குற்றாலப் பெருமாள்' என்று குற்றாலத் துறை ஈசனைக் கூறுகிறது. வேறுசில கல்வெட்டுகள் ‘குற்றாலத்தேவன்’ ‘மாதேவன்’ என்று குறிக்கின்றன. 3-ம் நூற்றாண்டில் `பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்துள்ளது என வரலாறு கூறுகிறது.

 பிதுர் கண்டம் தீர்த்தபுரம், சிவத் துரோகம் தீர்த்தபுரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம் என 108 திருநாமங்கள் கொண்ட ஊர் இது.

 ஒரு மனிதன் மறைவதற்குள் தரிசிக்க வேண்டிய தலம் இது என்கிறது சைவம். இதையே பட்டினத்தார்...

`காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுன் கடைவாய்படு முன்னே - மேல் வீழ்ந்து

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானையே கூறு'
என்று எச்சரிக்கிறார்.