ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

முன்பெல்லாம் நாங்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்துகொண்டு, கபாலி கோயிலில் நடைபெறும் எல்லா விசேஷங்களுக்கும் போவது வழக்கம். எல்லா சந்நிதிகளிலும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, முருகன் சந்நிதிக்கு வருவோம். அங்கே சற்றுக் கூடுதல் நேரம் இருப்போம். அதற்குக் காரணம் இருக்கிறது. இன்றும்கூட, என் தோழிகள் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுவதுண்டு.

அப்போது எங்களுக்கு 10, 12 வயது இருக்கும். முருகன் சந்நிதியில் ஒருவரைத் தினமும் பார்ப்போம். அவர் பெயர் வரதன் என்று நினைக்கிறேன். மலையாளி. சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர். அவருக்குப் பேச்சு வராது.

‘கபாலி கோயிலில் முருகன் சந்நிதியில் நின்று முருகா முருகான்னு சொல்லிக்கிட்டே இரு; பேச்சு வரும்!’ என்று யாரோ அவரிடம் சொல்லியிருக் கிறார்கள். நீங்கள் நம்பமாட்டீர்கள்... காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் அவர் அங்கே நிற்பார். நாங்கள் பார்க்கும்போதெல்லாம், கைகளைக் கூப்பி முருகனை நோக்கியபடி நின்றுகொண்டிருப்பார்.

அவருடைய வாய் அசைந்து கொண்டிருக்கும். ‘முருகா’ என்று சொல்ல முயற்சி செய்கிறார் போலும் என நாங்கள் நினைத்தபடி அவரைக் கடந்துவிடுவோம்.

சில நாள்களில் அவர் ‘மு…கா’, ‘மு...கா’ என்று வாய்விட்டு அரைகுறையாகச் சொல்லத் தொடங்கியிருந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். இரண்டு, மூன்று வருடங்கள் சென்றிருக்கும். ‘முருகா... எல்லாரையும் காப்பாத்து!’ என்று அவர் தெளிவாகப் பேசியதை நாங்கள் காதால் கேட்டுப் பிரமித்துப் போய் நின்றோம்.

எது அவரைப் பேசச் செய்தது? அவருடைய அபாரமான பக்தியா அல்லது அசைக்க முடியாத, உறுதியான நம்பிக்கையா?!

இந்தச் சம்பவம் எங்கள் இறைநம்பிக்கையை இன்னும் அதிகரிக் கச் செய்தது. இப்போதும் கபாலி கோயிலில் முருகன் சந்நிதிக்குப் போனால், எனக்கு அந்த அதிசயம்தான் நினைவுக்கு வரும். கூடுதலாகச் சில நிமிடங்கள் அங்கே நிற்கத் தோன்றும்.

‘முருகா, முருகா என்று சொல்லச் சொல்ல நமக்குக் கெடுதல் எது வந்தாலும் நீங்கிவிடும். ஆண்டவன் பெயரைச் சொல்லச் சொல்ல நம் குறைகள் எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கை ஆழமாக வேர்விட்ட காலகட்டம் அதுதான்.

லட்சுமி கடாட்சம்
KOYEL SARKAR

ஆயிரம் சொல்லலாம்... ஸ்பீச் தெரபி, `உங்களுக்குள் இருக்கும் சக்தியை வெளியே கொண்டு வருகிறோம்’ என்று அளிக்கப்படும் சைக்கலாஜிகல் தெரபி என்று எவ்வளவோ இருக்கலாம். ‘விஞ்ஞான கண ரூபிண்யை நமஹ!’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு வரி வரும். அதாவது, ‘விஞ்ஞானமும் நீதான்... மெய்ஞானமும் நீதான்... எல்லாமே நீதான் தாயே!’ என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லக் கூடிய அந்த வரிகளின் அர்த்தம் பின்னாட்களில் புரிந்தது.

அந்த பக்தர் அனுதினமும் இரண்டு மணி நேரம் ‘முருகா, முருகா’ என்று சொல்லிச் சொல்லி, அதன் பயனால் அவரால் தெளி வாகப் பேசவே முடிந்தது என்றால், அது மெய்ஞ்ஞான அதிசயம் அல்லவா!

அதன் பின்னர் ஒரு சஷ்டி விரத தருணத் தில்... எனக்கு 15, 16 வயதிருக்கலாம்... கபாலி கோயிலுக்குச் சென்றோம். முருகன் சந்நிதிக்கு வரும் கூட்டத்தை முறைப்படுத்தி, ‘வரிசையில் நில்லுங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்த நபர், சாட்சாத் அந்த முருக பக்தரேதான். ‘பளிச்’சென அவ்வளவு தெளி வாகப் பேசினார் மனிதர். இவரா பேச்சு வராமல் இருந்தார்... சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்... அவ்வளவு திருத்தமான மொழி - உச்சரிப்பு!

கோயிலில் கிருபானந்த வாரியாரின் பிரசங்கம் கேட்க நாங்கள் எல்லாம் போன போது, அங்கேயும் அவர்தான். ‘எல்லாரும் அப்படி உட்காருங்க, இப்படி உட்காருங்க’ என்று சொல்லிக்கொன்டிருந்தார். இப்போது வரையிலும் கபாலி கோயில் முருகன் சந்நிதி என்றாலே, எனக்கு அவர் நினைவும் சேர்ந்து வரும்.

லட்சுமி கடாட்சம்


இவையெல்லாமே என்னுடைய நம்பிக்கைக்கு உரம் போட்ட நிகழ்வுகள். எந்த காலகட்டத்திலுமே ‘என்னை இறைசக்தி காக்கும். நான் அந்த இறைசக்தியை விடமாட்டேன்’ என்கிற ஒரு நம்பிக்கையை நான் வளர்த்துக்கொண்டுதான் வந்திருக் கிறேன். கபாலி கோயில் பக்தருக்கு மட்டுமல்ல; என் வாழ்விலும் அந்த இறைசக்தி நிகழ்த்திய அதிசயங்கள் உண்டு,

பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. நாங்கள் இப்போது வசிக்கும் ஶ்ரீநகர் காலனி இல்லம் எனக்குக் கிடைத்தது பெரிய வரம் என்றுதான் சொல்வேன்.

இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னால் நான் சீத்தம்மாள் சாலையில் வசித்து வந்தேன். அமைதியான ஒரு ஏரியாவில் வீடு அமைய வேண்டும் என்பது என் பிரார்த்தனையாக இருந்தது.

ஏனெனில், சீத்தம்மாள் காலனி வீட்டில், இரவு ஷூட்டிங் முடிந்து வந்து படுத்தால், சாலையில் ஸ்கூட்டர், கார் போகும் சத்தம், ஆட்கள் பேசும் சத்தம் என ஒரே ஆரவாரமாக இருக்கும்; அமைதி இருக்காது. ஆகவே, ‘சத்தம் இல்லாத இடத்தில் வீடு கிடைக்கணும் பகவானே’ என்று ஆன்டவனைத்தான் வேண்டிக்கொண்டிருந்தேன்.

எனக்கு ஒரு பழக்கம்... நாளிதழ் வந்ததும் வீடு வாடகைக்கு, விற்பனைக்கு என்ற பகுதியை எல்லாம் சும்மாவாவது பார்ப்பேன். அதை எதற்குப் பார்க்கிறேன் என்றே தெரியாது. அதேபோல `காலமானார்’ பகுதியைப் பார்த்துவிட்டு, அவர்களுக்காக பிரார்த் திப்பேன்.

ஒரு நாள் வழக்கம்போல வீடு விற்பனைக்கு எனும் பகுதியைப் பார்த்தபோதுதான்... இப்போது நாங்கள் இருக்கும் இந்த வீடு விற்பனைக்கு என்று போட்டிருந்தது. வீட்டைப் பார்த்து வரலாம் என்றால், ‘ஐயோ... ஊருக்கு வெளியில் அவ்வளவு தூரத் திலேயா! கிண்டி ராஜ்பவன் பக்கத்திலன்னு போட்டிருக்கு!’ என்றார்கள் (1978-ல்) என்னைச் சேர்ந்தவர்கள்.

லட்சுமி கடாட்சம்
embar

‘பரவாயில்ல.. எனக்கு அமைதியான இடமாகத்தான் வேணும்’ என்று சொல்லி விட்டு, வீட்டைப் பார்ப்போம் என்று கிளம்பிச் சென்றோம்.

பகல் நேரத்தில் 11 மணிக்கு ரோட்டில் மான் குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது. அதுவே மனதைக் கவர்ந்துவிட்டது. ‘அடடா.. காலை நேரத்தில் மான் எல்லாம் ஓடுதுன்னா இது எவ்வளவு கொயட்டான ஏரியாவாக இருக்கும்!’ என நினைத்த படியே, வீட்டைப் பார்த்தோம்.

உள்ளே நுழையும்போதே, துளசி வனமாகத் தான் இருந்தது. வேறு எந்தச் செடிகளும் இல்லை. அதுவும் மனதுக்கு மிகவும் பிடித் திருந்தது. பேசி முடிவு செய்தபிறகுதான் தெரிந்தது, ‘கலைமகள்’ ராமரத்னம் ஐயாவின் தங்கை பாலாம்பாள் அம்மாவின் வீடு இது என்று.

‘ஓ.. பரவாயில்லையே’ என மீண்டும் தோன்றியது. எல்லாம் பேசி முடித்து வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்த போது, அந்த அம்மாள் மெதுவாக, “கொஞ்சம் நியம நிஷ்டையுடன் இருந்தா தேவலை!” என்றார்.

“விவரமா சொல்லுங்கோ...” என்றேன்.

அப்போது அவர் சொன்ன செய்தி... நான் எதிர்பார்த்திராத மாபெரும் இன்ப அதிர்ச்சி!

- கடாட்சம் பெருகும்...பக்தர் அனுதினமும் இரண்டு மணி நேரம் ‘முருகா, முருகா’ என்று சொல்லிச் சொல்லி, அதன் பயனால் அவரால் தெளிவாகப் பேசவே முடிந்தது என்றால், அது மெய்ஞ்ஞான அதிசயம் அல்லவா!