திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

வணக்கம்.

நான் உங்கள் லக்ஷ்மி.

சக்தி விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து ‘ஒரு தொடர் எழுதுங்க மேடம்’ என்று சென்ற மாதம் ஓர் அன்புக் கட்டளை! சட்டுனு ‘ஒரு தொடர் எழுதுங்க’ என்று என்னிடம் சொன்னால்... யம்மாடி! எவ்வளவு பெரிய விஷயம்... அது அவ்வளவு சுலபம் இல்லையே. எத்தனையோ ஆயிரம்பேருக்குச் சென்று சேரும் செய்தி அல்லவா? அதைச் சீராக, சிறப்பாக, சுவையாகச் செய்ய வேண்டுமே என்ற பதைபதைப்பு உள்ளுக்குள்!

லட்சுமி கடாட்சம்!

சொல்லப்போனால்... எழுத்தே இப்போதெல்லாம் மறந்துபோய் விட்டது. தினமும் கம்ப்யூட்டரில் டைப் செய்து, மொபைலில் டெக்ஸ்ட் செய்து... எழுதுவது என்ற செயலையே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போய்விட்டோம்... உண்மைதானே!

இன்னும் சொல்லப் போனால், மொபைலில்கூட டைப் செய்ய சோம்பல்பட்டு, வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறோம். எழுதுவது அவ்வளவு அந்நியம் ஆகிவிட்டது. ஒருமாதிரி வெட்கமாகக் கூட இருக்கிறது. லெட்டர்... ஏன் டயரி கூட நாம் எழுதுவது இல்லை இப்போது! சாதாரணமாக நான்கு வரி எழுதுவதற்கே ஆயாசிக்கும் இச்சூழலில், இந்தத் தொடர் எழுதுவது மிகவும் பெரிய விஷயம்தான்.

அதிலும் நம்முடைய அனுபவங்கள் மட்டும் இல்லாமல், பலருடைய அனுபவங்களையும் சேர்த்து, அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களையும் சொல்லவேண்டிய தொடர் இது.

உண்மையைச் சொல்லப்போனால் ‘the fag end of my life’ அதாவது என் வாழ்வின் கடைசிக் கட்டம் என்று சொல்லலாமா? 65 வயது தாண்டியபிறகு அப்படித்தானே சொல்லுவோம்! எனக்கு அனுபவங்கள் இருக்கின்றனவா, அவற்றிலிருந்து நான் பாடங்கள் கற்றுக் கொண்டேனா... தெரியவில்லை.

லட்சுமி கடாட்சம்!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஓர் இறை சக்தி, ஏதோ ஒரு கை என்னை அணைத்து, முன்னால் போய் விழுந்துவிடாமல் என்னைத் தடுத்து நிறுத்தி, பின்னால் என் முதுகைத் தடவிக் கொடுத்து, தட்டிக்கொடுத்து ‘போ போ’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. அது என்ன என்று ஒவ்வொரு முறையும் நான் யோசிப்பேன்.

இன்று காலையில் 4 மணிக்கே எழுந்து பிரார்த்தனை செய்யும் போதும் அதைத்தான் யோசித்தேன். எப்படி வந்தது, ஏன் வந்தது, எல்லோருக்குமே வருகிறதா... இந்த மாதிரி தெய்விக எண்ணங்களை நாம்தான் வலிய வரவழைத்துக் கொள்கிறோமா... அல்லது இதுபோன்ற அனுபவமும் உணர்வும் நம்முடைய பயமோ இல்லை நம்பிக்கையா... தெரியவில்லை!

ஏனென்றால் மனிதனுக்கு... ‘The clock is ticking’என்று சொல்வார்கள். 50 வயதுக்கு பிறகு அல்ல; மனிதன் பிறந்ததில் இருந்தே அந்தக் கடிகாரம் ‘டிக் டிக்’ என மரணம் எனும் அனுபவத்தை நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது!

ஆக, பிறப்புக்கும் மரணத்துக்கும் இடையில், நமக்குக் கிடைக்கும் தெய்விக அனுபவங்களை மாத்திரமே வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன்.

ஷ்டங்கள் எல்லோருக்கும் வரும். கஷ்டங்களே இல்லை என்றால் வாழ்க்கை போரடிக்கும். எப்போதுமே இனிப்பையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் போரடிக்கும் அல்லவா! இடையில் சுருக்கென்று ஒரு காரம் போல அந்தக் கஷ்டங்கள் தேவை. அப்போதுதான் நமக்கு ‘ஓ இதுதான் காரமா’ என்று தோன்றும்.

அறுசுவையும் நமக்கு தெரியவேண்டும். இந்த அறுசுவையும் தெரியும்போது, ‘ ஓ இறைவா.. இதுவும் ஒரு சுவையா?’ என மனம் இறைவனை நினைக்கும். நம்மையும் அறியாமல் ‘இறைவா’ என்ற வார்த்தையைச் சொல்லி அவரைத் துணைக்கு அழைப்போம்.

அந்த இறைவனுடன் நமக்கு ஏற்படும் அனுபவங்கள், அந்த இறைசக்தியின் மகிமை, அதனால் நமக்கும் பிறருக்கும் ஏற்படும் அற்புதங்கள், அவ்வப்போது தோன்றும் ‘இறைவன் இருக்கிறாரா?’ என்ற கேள்வி, ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தெய்வத்தைச் சொல்கிறதே.. அப்படியானால் இது என்ன, அது என்ன... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கவில்லை.

பல காலமாக தேடித் தேடி அலுத்துப்போய் பதில் வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். காரணம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவனிடம் சரணாகதி அடைந்துவிட்டேன்.

நான் வணங்கும் உருவம், என்னுடைய குருதேவன், என்னுடைய தாய், என்னுடைய தகப்பன்... எல்லாமே என்னுடைய பாபா! அவர் குறித்தும் இன்னும்பல ஆன்மிக அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

லட்சுமி கடாட்சம்!

‘லட்சுமி கடாட்சம்’... வீட்டைப் பெருக்கி, மெழுகி, பளிச்சென்று கோலமிட்டு, விளக்கேற்றி வைத்துவிட்டால் போதுமா... நம் இல்லம் மட்டுமல்ல, உள்ளமும் பளிச்சென இருக்கவேண்டும். அதுதான் லக்ஷ்மி கடாட்சம்.

பண வளம் மட்டுமல்ல மனவளமும்தான் லட்சுமி கடாட்சம். மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள ஆலய தரிசனம், குரு வழிபாடு, பிரார்த்தனைகள், யாத்திரைகள், நாம ஜபம், இறைவனைப் போற்றும் துதிகள், அன்னதானம், பண்டிகைகள்... இப்படி பல விஷயங்கள் நம் சாஸ்திரங்களில் உள்ளன.

நம் முன்னோர்கள் இவற்றை எல்லாம் பின்பற்றி மிக வளமாக லட்சுமிகடாட்சத்துடன் வாழ்ந்துள்ளனர்.

இவை மட்டுமல்ல... எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் கிடைத்த உதவி, நல்ல நட்பு, பாசிடிவான ஒரு பதில்... இப்படி நேர்மறையான அதிர்வலைகள் கொண்ட எல்லா விஷயங்களையுமே லட்சுமிகடாட்சமாகவே நான் பார்க்கிறேன்.

இந்தத் தலைப்பின் கீழ் எழுத எத்தனையோ விஷயங்கள்... ஏராளமான அனுபவங்கள்...

‘பாசிடிவ் வைப்ரேஷன்’ பற்றிச் சொல்லும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தின் முதல் நாள் படப் பிடிப்பின் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பவம் அது!

எங்கள் அனைவரின் மனங்களையும் மலர வைத்த அந்தச் சம்பவம் குறித்து அடுத்த இதழில் பகிர்ந்துகொள்கிறேன்.

- கடாட்சம் பெருகும்...