Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன் தொகுப்பு: பிரேமா நாராயணன்

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன் தொகுப்பு: பிரேமா நாராயணன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

நேர்மறை எண்ணங்கள் மற்றும் சூழல்கள் தரும் ‘பாசிடிவ் வைப்ரேஷன்’ பற்றிச் சென்ற இதழில் சொன்னேன் அல்லவா? அதைப் போல ஒரு சில சகுனங்களைக்கூட ‘நல்ல லட்சுமிகடாட்சமா இருக்கு, ஐஸ்வர்யமா இருக்கு’ என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஒரு நல்ல சகுனம்(சம்பவம்)தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ முதல் நாள் படப்பிடிப்பில் நடந்தது. அதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.

லட்சுமி கடாட்சம்!

முதல் நாள் படப்பிடிப்பு என்பதால், அனைவரும் ஒரு பரபரப்பில் இருந்தோம். ஏவிஎம் ஸ்டூடியோவில் அந்தப் படத்துக்காகவே ஏவிஎம் சரவணன் சார் கட்டிக்கொடுத்த புது வீடு. விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை போட்டாயிற்று. அந்தப் புது வீட்டின் பின்புறம் ‘கியா கியா’ என்று ஏதோ சத்தம் கேட்டு, வேகமாகப் போன இயக்குநர் விசு முகமெல்லாம் சந்தோஷமாக, வாயெல்லாம் சிரிப்பாக திரும்பி வந்தார்.

``நல்ல சகுனம்’’ என்றார் மலர்ச்சியுடன்.

``நல்ல சகுனமா? என்ன விசு!’’ என்றேன்.

``இங்கே வந்து பாருங்களேன் லக்ஷ்மி’’ என அழைத்தார்.

அங்கே எங்கள் அனைவரின் மனங்களையும் மலரவைத்த அந்தக் காட்சி... ஒரு பூனை நாலைந்து குட்டி போட்டிருந்தது.

பூனை என்றாலும் அதுவும் ஓர் உயிர்தானே! ஒரு தாய்தானே!

அதையே நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் பணியாற்ற ஆரம்பித்தோம். அந்தப் படத்தின் வெற்றிக்கான ‘லக்ஷ்மி கடாட்சமே’ அதுதானோ! படம் முடியும்வரை ‘இது ஒரு நல்ல செட். நல்ல சகுனம் அமைஞ்சிருக்கு’ என்ற எண்ணத்துடனேயே வேலை செய்தோம். அந்த ‘பாசிட்டிவ்’ எண்ணம்கூட காரணமாக இருக்கலாம்... எங்கள் உழைப்பு வெற்றி பெற்றதற்கும் படம் பெரிய லெவலில் ஹிட் ஆனதற்கும்!

இன்றும் அந்தப் படம் பேசப்படுவதற்குப் பூனை குட்டி போட்டது மட்டும்தானா காரணம்? இல்லை... அது ஒரு நல்ல சகுனம். அவ்வளவுதான். `நல்லதே நடக்கும்’ என்பதை ஆண்டவன் இதுபோன்ற குறிப்பால் உணர்த்துகிறார் போலும்! இதற்குமேல் இதுபற்றி பேசத் தெரியவில்லை.

ஆனால், நல்ல நேர்மறை எண்ணத்துடன், முதல் நாளே ஒரு நல்ல சகுனமாக அமைந்தது பூனை குட்டி போட்ட நிகழ்வு. அதன் பிறகு எந்தத் தடங்கலும் இல்லை; நல்ல வெயில் காலம் என்றாலும் யாரும் களைப்படையவில்லை; ஜெனரேட்டர் ‘சட்’டென்று ஆஃப் ஆகவில்லை; எந்தப் பிரச்னையுமே இல்லை. அந்த செட்டிலேயே மடமடவென்று படத்தை முடித்துவிட்டோம். அவுட்டோரும் முடித்தோம்.

அதில் அவுட்டோர் ஷூட்டிங்கில் ஒரு பாடல் காட்சி வரும். எல்லோரும் உட்கார்ந்து விளையாடுவது போல ஒரு காட்சி. அன்றுதான் சென்னையில் முதல்முறையாக 109 டிகிரி வெயில். ஆனால் எங்கள் மனதில் அந்த வெயில் உறைக்கவேயில்லை. காரணம் அது ஒரு நல்ல டீம்.

மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அந்த மனதில் நாம் பல நல்ல எண்ணங்களை விதைத்துவிட்டோம் என்றால், அதன் பிறகு எல்லா உறவுகளுமே நன்கு அமைந்துவிடும். எல்லா காரியங்களும் நன்றாக நடந்தேறும். இதை அடிக்கடி என் கணவர் கூறிக்கொண்டே இருப்பார்.

அவரிடம் நான் கேட்பேன், ``ஏங்க... லக்ஷ்மி கடாட்சம், ஐஸ்வர்யமாக இருப்பது இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன?’’ என்று.

``நம்ம வீட்ல லக்ஷ்மியும் இருக்கு; ஐஸ்வர்யாவும் இருக்கு’’ என்று முதலில் கிண்டல் அடித்தவர் பிறகு சொன்னார்...

``லக்ஷ்மி கடாட்சம் என்பது நேர்மறை எண்ணங்கள். அவை இருக்கும்போது, சுற்றிலும் அவற்றின் அதிர்வலைகளும் இருக்கும். வீடுகளில் கணவன், மனைவியில் தொடங்கி பிள்ளைகள் வரை அனைவருமே நேர்மறை எண்ணங்களுடன் இருந்துவிட்டால், அந்த வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் அந்த ‘பாசிட்டிவ் வைப்ரேஷன்’ ஒட்டிக்கொள்ளும்’’ என்றார்.

அது உண்மைதான்!

லட்சுமி கடாட்சம்!

ஒரு வீட்டில் இல்லத்தரசி காலையிலிருந்தே ஏதோ கோபம், எரிச்சல், டென்ஷனுடன் இருக்கும்போது... அந்த வீட்டில் வேலை செய்யும் அம்மா வந்ததும் சட்டென்று புத்துணர்ச்சி பெற்றுவிடுவார். இவருக்குத் தேவையான ‘பாசிட்டிவ் வைப்ரேஷனை’ அந்த அம்மா கொண்டு வருவார். அவர் ஒன்றும் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வரவில்லை. அதனுடனேயே வளர்ந்திருக்கிறார்.

நாமும் அப்படித்தான். எதிர்மறை எண்ணங்களே நம் முன்னோரிடம் இருந்ததில்லை. எந்தத் தாயும் தன் பிள்ளையை நெகட்டிவ் எண்ணங் களுடன் வளர்ப்பதில்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தாயோ, தந்தையோ பிள்ளை மேல் கோபப்பட்டால், பிள்ளை உடனடியாக எதிர்வினை புரிகிறது.

‘`ஹ்ம்... அதெப்படி என்னைப் போய் சொல்லலாம்!’’ என்று கோபப்படுகிறது. காரணம்... அவன்/அவள் மனதில் ஒரு சின்ன அகந்தை எட்டிப் பார்க்கிறது. அகந்தை வரும்போது எல்லா ஐஸ்வர்யங்களும் உடைந்துபோய்விடுகின்றன.

நீங்கள் வாழ்க்கையில் மேலே வரவேண்டும், முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில், அகந்தை வந்து தலையில் அமர்ந்தால், அந்த பாரமே நம்மை எழ விடாமல் அழுத்திவிடும்.

பாரம் அழுத்தும்போது என்ன ஆகும்?

அடுத்த இதழில் சொல்கிறேன்!

- கடாட்சம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism