Published:Updated:

லட்சுமி கடாட்சம்! - 8

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்! - 8

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

`துளசி வெறும் செடி அல்ல' என்று சென்ற இதழில் சொன்னேன் அல்லவா. அது வெறும் வார்த்தை அல்ல... எனக்கு அவள் துளசி மாதா! வாசலில் வாழும் தாய் அவள்! வருபவர்களை எல்லாம் காப்பாற்றும் வர லட்சுமி அந்த அன்னை. அப்படியே குட்டிக் குட்டியாக விதை விழுந்து, அவளைச் சுற்றிலும், வீட்டைச் சுற்றிலும் பல இடங்களில் அவளுடைய சாம்ராஜ்ஜியம்தான்.

லட்சுமி கடாட்சம்! - 8

துளசி இருக்கும் இடமெல்லாம் ஆக்ஸிஜன் நிறைய இருக்கும். அதுதானே விஞ்ஞானம்! துளசியைப் பார்த்ததும் மங்கலகரமாக இருக்கும். அதன் மணம், சுவை எல்லாமே தெய்விகம். அதேபோலதான் சிலரைப் பார்த்ததும் துளசி மாதாவைப் பார்ப்பதுபோல மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.நாம் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம்... மிகவும் சாதாரணமாக இருப்பார்கள்.

அவர்களைப் பார்க்கும்போது மனசுக்கு நிறைவான ஓர் உணர்வு இருக்கும். ஆனால் அப்படியான தோற்றத்தை இன்று பலபேரிடம் பார்க்க முடியவில்லை.

ஒரு 10, 15 வருஷங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். வெள்ளி, செவ்வாயில் கண்டிப்பாக மஞ்சள் பூசியிருப்பார்கள். பெரிய பொட்டு வைத்து, சாதாரண நூல் புடவை கட்டியிருப்பார்கள். கழுத்தில் ஒரு மஞ்சள் கயிற்றைத் தவிர வேறு பெரிய நகையோ, அலங்காரமோ இருக்காது. காலையில் தெருவில் நாம் இறங்கிப் போகும்போது, இப்படி ஓர் எளிய தோற்றத்தில் யாராவது வந்தாலே, ‘அப்ப்பா... எவ்வளவு லட்சணமாக வந்திருக்காங்க’ என்று தோன்றும்.

சில நேரங்களில் அவர் குளிக்காமல்கூட இருக்கலாம். காலையில் எழுந்து கடகடவென்று கிளம்பி, வேலைக்குப் போகும் அவசரம் அல்லவா? அவருடைய குடும்பக் கஷ்டம் அவருக்கு. வேலைக்கெல்லாம் போய்விட்டு வந்து, தன் வீட்டு வேலை களையும் பார்த்துவிட்டு, சாயந்திரமாகத் தண்ணீர் காயவைத்து, ‘அக்கடா’ என்று குளிப்பார்கள். பாவமாக இருக்கும். ஆனாலும் ஏதோ ஒரு சுத்தம் அவர்களிடம் நமக்குத் தெரியும். ‘பளிச்’சென்ற அந்த முகம்... அவர்களின் சிரிப்பு... பேச்சு... ஏதோ ஒன்று!

ஆனால், இப்போதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... பல பெண்கள் சாதாரணமாக ‘நைட்டி’ (அது ‘டேட்டி’ Dayty ஆகி பல காலம் ஆகிவிட்டது) என்று சொல்லப்படும் ஓர் உடையை அணிந்து கொள்ள வேண்டியது. மேலே ஒரு துப்பட்டாவைப் போட்டுக்கொள்ள வேண்டியது அல்லது ஒரு துண்டைத் தூக்கிப் போட்டுக்கொண்டு அப்படியே கடைக்கு வந்துவிடுகிறார்கள். சில பெண்கள் அப்படியே டூ வீலரில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். முன்னேயெல்லாம் இதே பெண்களின்... அதாவது இவர்களின் அம்மாக்களோ, சித்திகளோ சாதாரணமான கைத்தறி புடவையைக் கட்டிக்கொண்டு லட்சணமாக வருவார்கள்.

லட்சுமி கடாட்சம்! - 8
Sujay Govindaraj

“அவங்களை எல்லாம் பார்த்தால் கடன் கொடுக்கத் தோணும். வாயாடத் தோணாது. ஆனா இப்ப வர்றவங்களையெல்லாம் பார்த்தால், வாயாடத்தான் தோணுது. கடன் கொடுக்கணும்னு தோணல!” இதை நான் சொல்லவில்லை மக்களே! எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு வியாபாரி சொல்கிறார்.

“ஏம்மா... காலங்கார்த்தால இப்படி வர்றவங்க மூஞ்சியைப் பார்த்து வியாபாரம் பண்ணினா லட்சுமி கடாட்சமே இருக்காதும்மா” என்றார். அவருடைய கருத்தைத் தெரிந்துகொள்வதற்காகவே சும்மா அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“அப்படீன்னா என்னங்க அர்த்தம்?” என்றேன்.

“ஐயய்யோ... உங்க பேரைச் சொல்லிட்டேன். மன்னிச்சுக்குங்க..” என்று பதறினார்.

“அதனால பரவால்ல”

“இல்லம்மா..பெரியவங்க பேரைச் சொல்லக்கூடாது!”

“உங்களுக்கு என்ன வயசாச்சுங்க?”

“எனக்கு நாப்பதாச்சும்மா”

“அப்போ என் புள்ள வயசுதான..?”

“நாங்கள்லாம் தெக்கத்திப் பக்கம்மா... ராமநாதபுரம்... அங்கேயெல்லாம் பெரியவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதும்மா!” என்றார்.

“இன்னுமா சென்னையில் இந்தப் பழக்கமெல்லாம் இருக்கு?” – வியப்பின் விளிம்பில் நான்.

“சென்னைக்கு வந்து எல்லாம் கெட்டுப் போச்சும்மா” என்றவரிடம், அவர் ஆரம்பத்தில் சொன்ன விஷயத்தைப் பற்றிக் கேட்டேன்.

“ஆமா.. இவங்களையெல்லாம் பார்த்தா ஏன் வியாபாரம் நடக்காது?”

“அவங்கள்லாம் காலையில் பல்லு தேய்க்குறாங்களா... இல்ல ராத்திரி படுத்த நைட்டியோடயே வர்றாங்களா... இந்தத் துணியைத் தோய்க்கிறாங்களா என்னன்னுகூட தெரியல. அப்படியே... தலையை மட்டும் தூக்கிக் கட்டி ஒரு கிளிப்பைப் போட்டுகிட்டு வர்றாங்க. இன்னும் சிலரைப் பார்த்தீங்கன்னா காலையிலேயே லிப்ஸ்டிக்கை வேற அப்பிக்கிட்டு வர்றாங்க..!”

“அதிலென்ன தப்பு?”

“தப்பெல்லாம் ஒண்ணும் இல்லம்மா. ஒரு கவுனைப் போட்டுகிட்டு அப்படியே வந்துடறாங்க... பார்க்கும்போதே ஒரு மரியாதை வர வேணாமா?''

மரியாதைதான் லட்சுமி கடாட்சமோ என்று தோன்றியது.

ஆமாம்! நீங்கள் சுத்தமாய் - லட்சணமாய் இருந்தாலே, உங்களைப் பார்ப்பவர்கள் ‘அடடே லட்சுமி கடாட்சமா இருக்காங்களே...' என்று நினைக்கும்போதே அங்கே ஒரு நல்ல அதிர்வலை உண்டா கிறது. வியாபாரம் செய்யும் இடத்தில்கூட... வியாபாரிக்கும் நமக்கும் இடையில் வரும் அந்த ஒரு புரிதலும், நம்மைப் பார்த்ததும் ‘ஹப்பா.. காலையில் வந்து முதலில் வியாபாரம் செய்யுறாங்க இந்த அம்மா. ரொம்ப சந்தோஷம். நல்லாருக்கணும் இந்த அம்மா... நல்லாருக்கணும் இந்த ஐயா..!’ என்று அவர்களுக்கு ஏற்படும் நேர்மறை எண்ணமும் லட்சுமி கடாட்சத்தின் அம்சங்களே!

- கடாட்சம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism