Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
லக்ஷ்மி சிவச்சந்திரன்

நான்கைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த விழா கொஞ்சம் வித்தியாசமானது. எங்கள் பள்ளியில் படித்து, இப்போது பிரபலங் களாக உள்ள பழைய மாணவிகளை அழைத்துக் கௌரவிக்கும் விழா அது. எங்களை எல்லாம் அவர்களே வந்து அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்று பார்த்தால்...

லட்சுமி கடாட்சம்!

டாக்டர் சாந்தா இருந்தார். எவ்வளவு பெரிய பெண்மணி... அவர் எங்கள் பள்ளி மாணவியா?! எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது. ‘அவங்க படிச்ச ஸ்கூலில் நான் படிச்சேனா’ என்று மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அதே மேடையில் வாணி ஜெயராம் இருந்தார். இன்று வரை எனக்கு மிகவும் நெருங்கிய தோழி. அடுத்ததாக நான். இன்னும் பலர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விருந்தினராக வந்திருந்தார். மிகப்பெரிய விழாவாக நடத்தி எங்களை எல்லாம் கௌரவித்தபோது, உலகத்திலேயே மிகப் பெரிய விருது பெற்றது போல பூரிப்பாக இருந்தது.

இந்தத் தமிழ்நாடு... இந்தத் தென்னிந்தியா... ஏன், இந்த மண் எனக்கு பலப்பல விருதுகளை அளித்துள்ளன. ஆனால், அத்தனை விருதுகளுக்கும் மூலகாரணம் எது? என்னைப் பள்ளியில் ஊக்குவித்து என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த என் ஆசிரியைகள்! அத்தனைபேரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.

இன்று நான் தெள்ளத் தெளிவாகத் தமிழ் பேசுகிறேன் என்றால், அன்று எனக்கு தமிழாசிரியையாக இருந்த பத்மாவதி டீச்சர்தான் காரணம். சொல்லப்போனால், நான் 8-ம் வகுப்பு வரையிலும் வேறு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தேன். 9-ம் வகுப்புக்குத்தான் லேடி சிவசாமி பள்ளியில் சேர்ந்தேன். தமிழ் அவ்வளவாக வரவில்லை என்றாலும் நான் வெட்கப்படவில்லை.

முதல் டெர்ம் தேர்வில் தமிழில் 8 மார்க்தான் வாங்கினேன். அதுவே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. காமாசோமா என்று எழுதியிருந்த என் விடைத்தாளைப் பார்த்துக் குழம்பிப் போன எங்கள் தமிழாசிரியை பத்மாவதி டீச்சர், ‘வேங்கடலட்சுமி இங்கே வா’ என்று கூப்பிட்டார். அவர் ‘வேங்கடலட்சுமி’ என்று என் முழுப் பெயரையும் சொல்லிக் கூப்பிடுவது, இப்போதும் என் காதிலேயே ஒலிக்கிறது.

“வேங்கடலட்சுமி... ஏன் படிக்கவில்லையா? எழுத வரவில்லையா? எதனால் இப்படி ஒரு குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறாய்?” என்று பத்மாவதி டீச்சர் சுத்தத் தமிழில் கேட்க, நான் அவரையே ‘ஙே’ என்று வாயைத் திறந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

“என்ன.. என்னையே நோக்கி நிற்கிறாய்?” என்றார் மீண்டும். எனக்கு அதெல்லாம் மண்டையில் உறைக்கவில்லை.

‘ஹை... எவ்வளவு அழகாகப் பேசுறாங்க இல்ல!’ என்று அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

உடனே என் புத்தி ‘ஏதாவது தமிழ் டிராமா பண்ணினா இப்படித்தான் வசனம் பேசணும்’ என்று போகும். பாருங்கள்… அடிப்படையில் அதுதான் என் தலையெழுத்து! ‘நடிக்கணும்’ என்பதுதான் என் தலையில் எழுதி வைத்திருக்கிறது போல.

லட்சுமி கடாட்சம்!

தமிழ் பீரியடுக்கு வருவோம்...

டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து, ‘நீ இதையெல்லாம் படி... இப்படியெல்லாம் படி...’ என்று என்னை அன்றிலிருந்து ஊக்குவித்து, வழிநடத்தினார். காலாண்டு வந்தது... அரையாண்டு போனது... முழு ஆண்டுத் தேர்வும் கடந்தது. அப்படியே என் தமிழார்வம் வளர்ந்து, வளர்ந்து தமிழ்ப் பாடல்கள், தமிழ் வசனம் என்று பிய்த்து உதற ஆரம்பித்தேன்.

‘அவ எப்படிப் பேசுறா பாரு கணீர்னு... பாடுறா பாரு பளிச்னு’ என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு வந்து, இன்றும்கூட ‘லக்ஷ்மி பேசுற தமிழ்’ என்று பாராட்டும் அளவுக்கு வந்திருப்பதை நான் கர்வமாகச் சொல்லவில்லை; பெருமிதப்படுகிறேன். என்னை ஊக்குவித்து இந்தளவுக்குக் கொண்டு வந்திருப்பது யாருங்க? ஒரு தெய்வம், இரண்டு தெய்வம் இல்லை... பல தெய்வங்கள்! என்னுடைய பள்ளித் தெய்வங்கள். அதை இன்றைக்கும் நாங்கள் மறக்கவில்லை.

நாங்கள் ஒரு 40 பேர் வாட்ஸ்ஆப்பில் நட்புக் கூட்டமாக இருக்கிறோம். பள்ளி நாள்களையும் ஆசிரியைகளையும் பற்றிப் பேசுகிறோம். புளகாங்கிதம் அடைகிறோம். அது மட்டுமல்ல, மிக அழகான பல விஷயங்களை அதில் பகிர்ந்துகொள்கிறோம். குறிப்பாக இறை நம்பிக்கைகள். கோயில்களுக்கு எப்படிப் போவது, வருவது... எது நியாயம், எது அநியாயம்... எது தர்மம், எது அதர்மம்... இப்படி எல்லாவற்றையும் பேசுகிறோம். அதையும் மிக அழகாக, விட்டுக்கொடுத்துப் பேசுகிறோம். அதுதான் அங்கே முக்கியம்.

ஒரு குடும்பத்தில் ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்தால், ஒரு பத்து நாள் அல்லது ஒரு மாதம் ஓடுமா! அப்புறம் ஒரு சண்டை வரும் பாருங்க. பயங்கரமாக இருக்கும். ‘நீ என்ன சொன்ன... நான் என்ன சொன்னேன்... அதெல்லாம் தப்பாச்சே... அப்படி இப்படி’ என்று குரூப்பிலேயே அடித்துக்கொள்வார்கள். ஈகோவினால் அடிபட்டுக் கலைந்து போன பல குரூப்களை நான் பார்த்துவிட்டேன். ஆனால் எங்கள் குரூப் இன்னும் ஸ்டெடியாகப் போய்க் கொண் டிருக்கிறது என்றால், எங்கள் யாருக்கும் ஈகோ இல்லை; ‘நான்’ என்கிற அகந்தை இல்லை.

எத்தனையோ பெரிய படிப்புகளைப் படித்து டாக்டர்ஸ், ஆங்க்காலஜிஸ்ட்ஸ், புரஃபசர்ஸ் என எல்லாருமே இருக்கிறார்கள். அவர்களுள் படிக்காத மக்கு என்றால் அது நான்தான். ஏதோ சினிமாவில் நடித்ததால் ஒரு பெரிய ஆள் போல வந்துவிட்டேன். அதனால் என்னைக் குழந்தை போல தட்டிக்கொடுத்துக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

இந்த மனப்பான்மை, இந்த எண்ணம் என்னுடைய தோழிகளுக்கெல்லாம் எப்படி வந்தது? பின்புலமாக இருப்பது எனது பள்ளியும் அங்கே ஆசிரியைகளாக இருந்த தெய்வங்களும்தான். ஆம்! இன்றைக்கும் ஏதாவது நல்ல தமிழ் வசனம் வந்தால், என் கமலா டீச்சரையும் பத்மாவதி டீச்சரையும் நினைத்துக்கொள்வேன்.

மிகக் கடினமான அல்லது நீளமான வசனம் பேசும்போது ‘இந்த டயலாக் கரெக்டா வந்துருச்சா மேடம்... நான் தமிழைச் சரியாக உச்சரிக்கிறேனா?’ என்று மானசீகமாகக் கேட்டுக்கொள்வேன். ஏதாவது எழுதும்போதும், ‘இடையினம் மெல்லினம் சரியாகப் போட்டிருக்கிறேனா’ என்று பார்க்கும்போதே மேடத்தை நினைத்துக்கொள்வேன். அவர்கள் இன்று இல்லை இந்த மண்ணில். ஆனாலும் அவர்களுடைய ஆசீர்வாதத்தால்தான் நான் இவ்வளவு திருத்தமாக தமிழ் பேசுகிறேன்.

கமலா மேடம் மற்றும் பாமா டீச்சர் ஆசீர்‑வாதத்தால்தான் நான் நன்றாக நடிக்கிறேன். ஒவ்வொரு டீச்சரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும் என்றால் சக்தி விகடன் 100 இதழ்களில் எழுதினாலும் போதாது.

என்னுடைய இன்றைய வாழ்க்கை அவர்களால்தான். குருவருள் இல்லாமல் நான் இல்லை. குரு கடாட்சம்... லட்சுமி கடாட்சம்!

- கடாட்சம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism