Published:Updated:

லட்சுமி கடாட்சம்!

எஸ்.பி.பி
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.பி லக்ஷ்மி சிவச்சந்திரன்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்!

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
எஸ்.பி.பி
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.பி லக்ஷ்மி சிவச்சந்திரன்

சில கேள்விகளுக்கு நம்மிடம் பதிலே இல்லை. இதைச் சொல்லும் போது மனதின் அடிஆழத்தில் அதிகமான வலியை உணர்கிறேன். இந்த ஜன்மம் முடியும் வரை அந்த வேதனை எனக்கு இருக்கும் என நினைக்கிறேன். அப்படி உணர வைத்ததற்கான சம்பவத்தையும் சொல்கிறேன்.

லட்சுமி கடாட்சம்!

வருடன் பல படங்களில் இணைந்து ஒன்றாக நடித்திருக்கிறேன். தெலுங்கு, கன்னடத்தில்தான் அதிகமான படங்கள் சேர்ந்து நடித் திருக்கிறோம். சின்ன வயதிலிருந்தே அவர் பாடலை அனைவருமே கேட்டிருக்கிறோம். நான் இந்த இண்டஸ்ட்ரிக்குள் வரும்போதே இங்கே இருந்தவர் அவர். எனக்கு 2, 3 வருடங்களுக்கு முன்பே பாட வந்துவிட்டவர். ‘ஆயிரம் நிலவே வா’ என்று அழைத்துவிட்டு, அந்த நிலவைத் தேடிக்கொண்டு போய்விட்டாரோ என நினைக்கும் அளவுக்கு அப்படி ஒரு வேதனை, அதைப் பற்றிப் பேசும்போதும் மனதில் மண்டுகிறது.

யாரென்று புரிந்திருக்குமே! சிறு வயதிலிருந்து ஒரு தாய் போல இசை அவரை வரித்துக்கொண்டாலும், இறுதியில் கொரோனா எனும் கொடுங்காலன் அவரை வரித்துக்கொள்வதில் வெற்றிபெற்றுவிட்டானே!

ஆம்! எஸ்.பி.பி. என நாம் அன்புடன் அழைத்த பாலு சாரைப் பற்றித்தான் பேசுகிறேன். அருமையான அந்த மனிதரைப் பற்றி நான் பேசவேண்டும். இந்தத் தொடருக்கும் அந்த மனிதருக்கும் சம்பந்தம் உண்டா என்று நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

முதல் முறையாக அவரைச் சந்தித்ததில் தொடங்கி எத்தனை சம்பவங்கள்... எத்தனை படங்கள்... அவற்றுள் பல வெற்றிப் படங்கள்! 2012-ல் நாங்கள் ‘மிதுனம்’ என்று ஒரு படத்தில் நடித்தோம். அந்தப் படத்தில் நானும் அவருமாக இரண்டே கதாபாத்திரங்கள்தான். ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. மிக வித்தியாசமான, தனித்து வமான கதை. பாதிப் படம் முடிந்திருந்தபோது அவர் சொல்கிறார்...

“நீ சொன்னியே லக்ஷ்மி... `இந்தப் படத்தில் ரெண்டே காரக்டர்கள்... 65 வயசு அம்மா; 72 வயசு அப்பா... இப்படி ரெண்டு பேருக்குள் நடக்கிற சந்தோஷமான வாழ்க்கை... பிள்ளைகள் வேண்டாம்னு கிராமத்தில் வந்து தங்கியிருக்காங்களே’ன்னு... உண்மையிலேயே அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால், சந்தோஷமாகத் தான் இருக்கும்!” என்றார்.

பல வருடங்கள்அவருடன் பழகி இருந்தாலும், ‘மிதுனம்’ பட அனுபவம் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கி.மு., கி.பி. மாதிரி ‘மிதுனத்துக்கு முன்’, ‘மிதுனத்துக்குப் பின்’ என்று சொல்லும் அளவுக்கு அனுபவங்கள்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று நான் கேட்டேன்.

“மனசுக்கு ஏதோ தோணித்து... அதான் சொல்றேன்!” என்றார்.

படம் முடிந்து வெற்றியும் பெற்றது. வெற்றி விழா மேடைகளிலும் அதையே சொன்னார். அந்தப் படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பில் ஒரு நாள்... க்ளைமாக்ஸுக்கு முன்னர் அந்தத் தயாரிப்பாளரிடம் பாலு சார் சொல்கிறார்...

லட்சுமி கடாட்சம்!

“இந்தப் பிசாசு இருக்கே...இதுகூட என்னை நடிக்க வைக்காதீங்கோ. டயலாக் எதுவும் இல்லாமலேயே, கண்ணை உருட்டியே அப்படியே கவுத்துடுவா” என்று சிரித்துக்கொண்டே அவர் சொல்ல, “என்ன ஆச்சு.. ரெண்டு மூணு நாளாவே நீங்க சரியாவே இல்லையே!” என்று நான் கேட்டேன்.

“ஒண்ணும் இல்ல லக்ஷ்மி...”

“இல்ல... உங்க வாய்தான் விளையாட்டுத்தனமா ஜோக் அடிக்குது. ஆனா மனசு வேற எதிலோ உழண்டுட்டு இருக்கற மாதிரித் தோணுதே!”

“இந்தக் கிராமத்தையும் வயல்- வரப்பு வாய்க்காலையும் பார்க்கிறப்ப எல்லாம் நான் சட்டுன்னு என் இளவயசு ஞாபகத்துக்குப் போயிடறேன். பலபேருக்குத் தெரியாத விஷயம்... என் வீட்டுக்கு, நண்பர்களுக்குன்னு யாருக்குமே தெரியாத விஷயம்... உன்கிட்ட இன்றைக்குப் பகிர்ந்துக்கப் போறேன்...”

“சொல்லுங்க சார்!”

இது அவர் வாயால், அவர் பகிர்ந்துகொண்ட விஷயம். ‘நான்’என்று சொல்லாமல், ‘குழந்தை’ என்று தன்னைக் குறிப்பிட்டு, அவர் சொன்ன நடையிலேயே நானும் சொல்கிறேன்.. .

``7 வயது குழந்தை. பள்ளிக்குச் செல்லும்போது, ஒரு சிறிய ஓடையைத் தாண்டித்தான் போக வேண்டும். நெல்லூரில் வீடு. (என் தகப்பனாருக்கும் அங்கே ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்குப் பின் தெருவில்தான் பாலு சார் வீடும் இருந்திருக்கிறது. தினமும் எங்கள் அப்பா வீடு, தாத்தா வீட்டை எல்லாம் பார்த்துக்கொண்டே போவாராம். பின்னாட்களில் பேசும்போது சொல்லியிருக்கிறார்.) தினமும் அந்தக் குழந்தை அந்த ஓடையைத் தாண்டிப் போகும்போது, அதில் போட்டிருக்கும் மரத்தாலான சிறிய ஒற்றைப் பாலத்தைக் கடந்துதான் போகவேண்டும். பள்ளி செல்லும் எல்லா குழந்தைகளுமே அதில்தான் போயாக வேண்டும்.

பெரியவர்கள் சில நேரங்களில் ஓடைக்குள் இறங்கி நடந்தே போய்விடுவார்கள். அந்தக் குழந்தை ஒரு நாள் என்ன செய்தது தெரியுமா? திடீரென காலை 11 மணிக்கு ‘நான் வீட்டுக்குப் போறேன்!’ என்று சொல்லி விட்டு பள்ளியிலிருந்து கிளம்பி வந்துவிடுகிறது. நெல்லூர் போன்ற சிறிய ஊர்களில் அப்போதெல் லாம் யாரும் ஏன், என்ன என்றெல்லாம் காரணம் கேட்கமாட்டார்கள்.

வீட்டுக்கு நடந்து வரும் வழியில் அந்த ஓடையைப் பார்த்ததும் குழந்தைக்கு ஓர் ஆசை... ‘பாலத்தில் போகாமல், ஓடைக்குள் இறங்கி நடந்தால் என்ன!’ என்று.

எண்ணியதும் தண்ணீருக்குள் இறங்கிவிட்டது. கழுத்தளவுக்குத் தண்ணீர். நீச்சல் தெரியாது. புத்தகப் பையைத் தலைக்கு மேலே தூக்கி வைத்துக்கொண்டு, பரிதவித்துக்கொண்டு தண்ணீருக்குள் நிற்கிறது அந்தக் குழந்தை. வேகமாக ஓடும் தண்ணீருக்குள் நடக்கத் தெரியாமல் தத்தளிக்கிறது.

லட்சுமி கடாட்சம்!

அப்போது திடீரென ஒரு பெரியவர் அங்கே பிரசன்னமாகிறார். பஞ்சகச்சம் கட்டி, பூணூல் போட்டிருக்கிறார். உடல் மொத்தமும் நாமங்கள். ராம பக்தராக இருப்பாரோ என்று பின்னாட்களில் அடிக்கடி யோசித்திருக்கிறேன் லக்ஷ்மி.

அவர் அப்படியே சட்டையோடு பிடித்து அந்தக் குழந்தையைத் தூக்கிக் கரையில் விட்டு, `இனிமேல் பெரியவங்க சொல்றதை மீறி நடக்காத... தெரிஞ்சுதா!’ என்று கண்டிப்பான ஒரு பார்வை பார்க்க, அந்தக் கண்களையும் முகத்தையும் பார்த்ததும் அந்தக் குழந்தைக்கு ஒருமாதிரி ஆகிவிட, ‘பொத்’தென அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தது குழந்தை.

`போ... `ராமா ராமா'ன்னு சொல்லிட்டே வீட்டுக்குப் போ!’ என்று சொல்லிவிட்டு, ‘எங்கே, யார்’ என்று பார்ப்பதற்குள் மறைந்துவிட்டார் அந்தப் பெரியவர்!’’

எஸ்.பி.பி. சொல்கிறார்...

“சத்தியம் லக்ஷ்மி இது. நான் நினைக்கிறேன்... எங்க வீட்டில் அப்பா, அம்மா எல்லாம் ராமர் - ஆஞ்சநேயர் பக்தர்கள். அன்னிக்கு என்னைக் காப்பாத்தினது ஆஞ்சநேய சுவாமிதான். இப்போதுகூட சொல்லும்போது புல்லரிக்குது. அதுக்கப்புறம் அந்தச் சம்பவம் என் மனசை விட்டுப் போகவே இல்லை. இன்னைக்கு என்னமோ உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு!”

நான் கேட்கிறேன்... கொரோனா அரக்கன் பாலு சாரைக் கூட்டிக்கொண்டு போய்விட்டதே... அந்தச் நேரத்திலும் ஏன் அந்த ‑ராம பக்த ஆஞ்சநேயர் வந்து, பாலு சாரைக் காப்பாற்றி நம்மிடம் திருப்பிக்கொடுக்கவில்லை? கொடுத்திருக்கலாம் இல்லையா! ‘போகாத பாலு’ என்று தடுத்திருக்கலாமே! அன்று காப்பாற்றியது, இத்தனை பாடல்கள் பாடி, இத்தனை படங்கள் நடித்த பிறகு கூட்டிக்கொண்டு போவதற்காகவா?

இந்த செப்டம்பர் 25-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் மறக்க முடியாமல், அடிஆழத்தில் மனதில் வலிக்கிறதே!

அன்றே கூட்டிக்கொண்டு போயிருந்தால், ஒரு குடும்பத்தின் வேதனையோடு போயிருக்குமே! இன்று உலகில் எத்தனையோ கோடிக்கணக்கான நெஞ்சங்களை அழவைத்துவிட்டு அழைத்துச் சென்றுவிட்டீர்களே!

இப்போதும் அவரைக் காப்பாற்றியிருக்கலாமே ஆஞ்சநேயா... ஏன் செய்யவில்லை?

விடை தெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று!

- கடாட்சம் பெருகும்...

`சுகபிரம்மமும் ஜனகரும்!'

ற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்று விட்டால், உங்களுக்கு நன்மையோ, தீமையோ எதுவும் இல்லை. ஆன்மா தன் சுதந்திரத்தை இழக்காதவரை எந்த ஆற்றலும் மனித ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது.

பிரம்ம ஞானத்தைக் கற்பதற்காக ஜனகரை நாடிச் சென்றார் சுகபிரம்மர். ஜனகர் அவருக்குப் பல்வெறு சோதனை களை நிகழ்த்தினார். நிறைவில், இசையும் நடனமும் நிறைந்த தன் சபைக்கு சுகபிரம்மரை வரவழைத்தார். ஒரு கிண்ணத்தில் விளிம்பைத் தொடும் அளவு பாலை ஊற்றிக் கொடுத்து, அதில் ஒரு துளி கூடச் சிந்தாமல் அந்தச் சபையை ஏழு முறை சுற்றி வருமாறு கூறினார்.

இசையும், இனிய முகங்களும் அலைமோதும் அந்தச் சபையை வலம் வரத் தொடங்கினார் சுகர். ஏழு முறை சுற்றி வந்தார். ஒரு துளி பால்கூடச் சிந்தவில்லை.காரணம், சுகர் தன் ஆன்மாவை அறிந்தவர்; அவர் அனுமதிக்காமல் உலகின் எதுவும் அவரது மனத்தை பாதிக்க முடியாது அல்லவா?. கிண்ணத்தை அவர் ஜனகரிடம் கொடுத்தார். ஜனகர் அவரிடம், ``நீ உண்மையை அறிந்து விட்டாய், வீடு செல்!’’ என்றார்.

- சுவாமி விவேகானந்தர்