சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

லட்சுமி கடாட்சம்-27

லட்சுமி கடாட்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

வாழ்வில் நாம் சந்திக்கும் சில சம்பவங்கள் புதிராகவே இருக் கும். அப்படியான இரண்டு சம்பவங்களைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

10 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை புனேவுக்குப் போயிருந்தோம். எனக்கு அங்கே ஒரு சிறிய ஷூட்டிங் இருந்தது. நான், என் உதவியாளர்கள் இருவர், என் கணவர், மகள் சம்யுக்தா எல்லோருமே போயிருந்தோம். அங்கிருந்து ஷீர்டி பக்கம்தானே! கோயிலுக்குப் போகலாம் என்று கிளம்பிப்போனோம்.

ஷீர்டியில் கூட்டம் அதிகம் இல்லை. அங்கே தெரிந்த ஒருவ ரிடம் சொன்னால், சுவாமிக்கு அருகிலேயே அழைத்துச் சென்று தரிசிக்கவைப்பார்கள் என்றார்கள். என் கணவரோ, ‘தேவையே இல்லை. கூட்டம் கம்மியாதானே இருக்கு. க்யூவிலேயே போயிடலாம்’ என்றார். வரிசையில் நின்றோம்.

‘கொஞ்சம் பேர்தானே இருக்காங்க. இதோ போயிடலாம்’ என்று நினைத்தபடி நகர்ந்துகொண்டிருந்தோம்.

அப்போது வயதான மூதாட்டி ஒருவரை ‘வெளியே போ... வெளியே போ...’ என்று பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த ஊழியர்கள். தலையில் முக்காடு போட்டிருந்த அந்தப் பெண்மணி, மராட்டியில் ஏதோ சொன்னார். அப்படியும், ‘போ வெளியே... இங்கே இருக் காதே போ...’ என்று தள்ளிவிட்டார்கள்.

அந்த அம்மா ஏதோ கெஞ்சினார். அப்போ தும் அவர்கள் மனம் இரங்கவில்லை.

‘ஐயோ பாவமே... ஏன் இப்படி விரட்டுறாங்க... அந்த அம்மாவும் சாமி கும்பிடத்தானே வந்திருக்கு’ என்று நினைத்துக்கொண்டு நாங்கள் நகர்ந்தோம். வரிசையில் போகும்போது திரும்பிப் பார்த்தேன். ஒரு மூலையில் முக்காடை இழுத்துவிட்டபடி பரிதாபமாக உட்கார்ந்திருந்தார் அந்த அம்மா.

“நம்மகூட கூட்டிட்டுப் போவோமா?” என்று இவர் கேட்டார்.

“அவங்க யார்ன்னு தெரியலயே... ரெகுலரா வர்றவங்க போல... இவங்க வேற பிடிச்சுத் தள்ளி வெளியே கொண்டுபோய் விடறாங்களே... நாம கூட்டிட்டுப் போனா நம்மைத் திட்டப் போறாங்க...” என்றேன்.

லக்ஷ்மி சிவச்சந்திரன்
லக்ஷ்மி சிவச்சந்திரன்

வரிசை நகர்ந்தது. கொஞ்சதூரம் முன்னால் போய்விட்டோம்.

ஷீர்டியில் பாபாவின் அருகில் போகும்போது பார்த்தால் தெரியும்... அமைச்சர்கள் மற்றும் பெரிய வி.ஐ.பி-கள் வந்தால் உட்கார வைப்பதற்கென்று, இடது பக்கமாக ஒரு பெஞ்ச் போட்டு வைத்திருப்பார்கள். நாங்கள் பாபாவின் அருகில் போகும்போது, எங்களை ஒருவர் கேட்டார்...

``இப்படி பெஞ்சில் உட்கார்ந்துக்கிறீங்களா? பூஜையை நல்லா பார்க்கலாம்...” என்றார்.

“இல்லங்க வேணாம்... இப்படியே நின்னுட்டு ஸ்வாமியைப் பார்த்துட்டுக் கிளம்பிடறோம்...” என்று அவரிடம் கூறிவிட்டுத் திரும்பினேன். பார்த்தால்... வயதான அந்த அம்மா நடந்து வந்து கொண்டிருந்தார். யாரோ அன்பர் ஒருவர் அவரை அழைத்து வந்தார். வெறொரு வாசல் வழியாகக் கூட்டிச் சென்றுவிட்டார்.

‘பாவம்... ஏன் இந்த அம்மாவை இப்படி அலைக்கழிக்கிறாங்க? சரி... பாபா பார்த்துப்பார்!’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஸ்வாமியின் அருகே போகப் போக... அங்கே ஒரு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. வி.ஐ.பிகள் எல்லாம் கீழே ஒரு பக்கமாக அமர்ந்திருக்க, அந்த மூதாட்டி பாபாவின் பாதத்துக்குக் கீழே அமர்ந்திருந்தார். அந்தச் சந்நிதியில் அமர்ந்தபடி பாபாவையே பார்த் துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவருக்குத் தெரியும் அல்லவா? யாரை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதை ஸ்வாமி அறிவாரே?!

ஆனால், கடைசி வரையிலும் அந்த அம்மா யார் என்பதும், முதலில் ஏன் அவரை விரட்டினார்கள் என்பதும், பின்னர் எப்படி அவர் பாபாவின் பாதத்தின் அடியில் உட்காரவைக்கப்பட்டார் என்பதும் புரியவேயில்லை. ஒரு புதிர் போலத்தான் இருந்தது.

இன்னொரு சம்பவம்..

80-களில் இயக்குநர் ஐ.வி.சசி இயக்கிய ஒரு மலையாளப் படத்துக்காக நேபாளத்துக்குப் போயிருந்தோம். முதல் முறையாகப் போவதால்... அங்கே என்ன கோயில், எங்கே இருக்கிறது என்ற விவரம் எல்லாம் தெரியாது. அப்போதுதான் கூகுள் எல்லாம் இல்லையே!

ஒரு நாள், குறிப்பிட்ட ஒரு கோயிலில்தான் ஷூட்டிங். அங்கே மகாவிஷ்ணு நீரில் சயனித்திருக்கிறார். இப்போதெல்லாம் நமக்கு எல்லாமே வாட்ஸ் ஆப்பில் வந்துவிடுகின்றன; நாமும் பார்த்து விடுகிறோம். அந்தக் காலத்தில் எல்லாம் இதுபோன்ற இடங்கள், கோயில்களை சினிமாவில்தானே பார்க்க முடியும். அந்தக் கோயிலில் நின்று நான் நடனமாடுவது போல காட்சியமைப்பு!

``அந்த சைடுல நில்லுங்க... இப்படி வாங்க... காலை இங்கே வைங்க...’’ என்றெல்லாம் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார் நடன இயக்குநர் ரகு மாஸ்டர்.

“ஏங்க... ஸ்வாமி படுத்துட்டிருக்கார்... இங்கே போய் காலெல்லாம் வைக்கச் சொல்றீங்களே” என்றேன்.

“நீங்க இப்படி சைடில் வரலாம் லக்ஷ்மி... ஒண்ணும் பிரச்னை இல்ல” என்றார் அவர்.

அந்த இடத்துக்கு வருபவர்கள் தோல் சம்பந்தமான பொருள்களை அணிந்திருக்கக் கூடாது என்பது கோயில் விதி. உதாரணத்துக்கு பெல்ட், லெதர் வாட்ச் ஸ்டிராப் போன்றவை. நானும் குழுவினரும் பரத நாட்டிய உடைதான் அணிந்திருந்தோம். அந்தத் தண்ணீர் அருகே போய், ஒரு நிமிஷம் அதில் காலை வைத்து சுற்றிவிட்டு வரவேண்டும் என்பது டான்ஸ் ஸ்டெப்.

நமக்கு இறை நம்பிக்கை அதிகமாக இருப்ப தால், ‘ஐயோ... சாமி சயனக் கோலத்தில் இருக் கார்... நாம காலை வைக்கிறோமே’ என்று கொஞ்சம் யோசனையாகவே இருந்தது.

‘இருந்தாலும்... மாஸ்டர் சொல்வது போல லேசாகத் தண்ணீரில் வைத்துவிட்டு, சைடில் போய்விடலாம்’ என்று நினைத்தபடியே, காலை லேசாகத் தண்ணீரில் வைத்ததுதான் தாமதம்... ஒரு ஷாக் அடித்தது போல ‘கிர்ர்’ என உணர்ந்தேன். பயந்துபோய் பின்வாங்கி, “ஐயய்யோ... ஷாக் அடிக்குதுங்க” என்றேன் பதற்றமாக.

குழுவினர் சிரித்தனர். ``ஏன் மேடம்... அங்கே என்ன எலெக்ட்ரிசிட்டியா இருக்கு, ஷாக் அடிக்கிறதுக்கு?’’ என்று பரிகாசம் வேறு.

“இல்லைங்க... நான் கால் வைக்கமாட்டேன்’’ என்றேன் நான்.

‘`அட... சும்மா வைங்க...” என்று அனைவரும் மாற்றி மாற்றிச் சொல்ல, ‘ஒருவேளை அது நம்ம பிரமையாகக்கூட இருக்கலாம்’ என்று எண்ணிய நான், மீண்டும் சிறிது நேரம் கழித்து, அங்கேயே வேறொரு மூலைக்குச் சென்று காலை வைத்தேன்.

என்ன அதிசயம்... அங்கேயும் அதே நிலை; ஷாக் அடித்தது போல சுர்ரென்றது. இரண்டு தடவையும் அதேபோல் இருந்ததும் நான் பயந்ததைப் பார்த்து, அங்கே இருந்த ஹீரோ ரத்தீஷ் வந்தார்.

“நான் வெச்சுப் பார்க்கிறேன் காலை” என்று வைக்கப் போனார்.

“இதெல்லாம் விளையாட்டு இல்லைங்க... ஏதோ ஒரு சக்தி! அவங்க பூஜை பண்ற இடம்... எல்லோரும் ‘நான் காலை வெச்சுப் பார்க்கிறேன்’னு சொல்லிப் பரிசோதிக்கிற இடம் இல்லை...” என்று நான் கொஞ்சம் கோபமாகவே சொன்னதும் அவர் போய்விட்டார். இயக்குநர் ஐ.வி.சசி, “நான் தண்ணில கையை வெச்சுப் பார்க் கிறேன்” என்று சொல்லி, அவரு டைய வலது கையை நீருக்குள் விட்டார். ஒன்றுமே ஆகவில்லை.

“ஒண்ணும் செய்யலியேம்மா” என்றார்.

நானும் கையை வைத்துப் பார்த்தேன். அந்த ஷாக் அடிக்கும் உணர்வெல்லாம் இல்லை, எதுவுமே ஆகவில்லை.

“கையை வெச்சா ஒண்ணும் பண்ணல சசி... ஆனா காலை வெச்சா ஷாக் அடிக்குது!” என்றதும், அவர் ஷூவைக் கழற்றிவிட்டு காலை நனைத்தார். அவருக்கும் அதே ‘விர்ர்’! படக்கென்று காலை வெளியே இழுத்தார்.

இருவருக்குமே அது நடந்தது. ஆனால் அங்கே சென்ற வேறு யாருமே அப்படி ஷாக் அடித்ததாகக் கூறி இன்று வரை நான் கேட்டதில்லை. இந்தக் கணம் வரை அதுவுமே புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

- கடாட்சம் பெருகும்...